சனி, 7 மார்ச், 2020

பேராசிரியர் அன்பழகன் மறைந்தார்...!


பேராசிரியர் அன்பழகன் மறைந்தார்...!













பேராசிரியர் க.அன்பழகன் வாழ்க்கை வரலாறு

          காண ‘கிளிக்’ செய்க...                                                           https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/07035102/1151248/DMK-K-ANbazhagan-Life-History.vpf


ஸ்டாலின் எழுதிய இரங்கல் கவிதை வருமாறு:





திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது.
சங்கப் பலகை சரிந்துவிட்டது!
இனமான இமயம் உடைந்துவிட்டது.
எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்!
என்ன சொல்லித் தேற்றுவது?
எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை?
பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்!
முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்!
எனது சிறகை நான் விரிக்க வானமாய் இருந்தவர்!
என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது?

தலைவர் கலைஞர் அவர்களோ என்னை வளர்த்தார்!
பேராசிரியப் பெருந்தகையோ என்னை வார்ப்பித்தார்!
எனக்கு உயிரும் உணர்வும் தந்தவர் கலைஞர்.
எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர்.
இந்த நான்கும் தான் என்னை இந்த இடத்தில் இருத்தி வைத்துள்ளது.
'எனக்கு அக்காள் உண்டு. அண்ணன் இல்லை. பேராசிரியர் தான் என் அண்ணன்' என்றார் தலைவர் கலைஞர்!
எனக்கும் அத்தை உண்டு. பெரியப்பா இல்லை. பேராசிரியப் பெருந்தகையையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தேன்.
அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்லபெயர் வாங்குவதுதான் சிரமம்.
ஆனால் நானோ, பேராசிரியப் பெரியப்பாவினால் அதிகம் புகழப்பட்டேன்.
அவரே என்னை முதலில்,
"கலைஞருக்குப் பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர்'' என்று அறிவித்தவர்.
எனது வாழ்நாள் பெருமையை எனக்கு வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தை பிசைகிறது!
அப்பா மறைந்தபோது,
பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்.
இன்று பெரியப்பாவும் மறையும் போது
என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!
பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.
இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன்?
இனி யாரிடம் பாராட்டுப் பெறுவேன்?
என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!

பேராசிரியப் பெருந்தகையே!
நீங்கள் ஊட்டிய
இனப்பால் - மொழிப்பால் - கழகப்பால் -
இம் முப்பால் இருக்கிறது.
அப்பால் வேறு என்ன வேண்டும்?!
உங்களது அறிவொளியில்
எங்கள் பயணம் தொடரும்
பேராசிரியப் பெருந்தகையே!

கண்ணீருடன்
மு.க.ஸ்டாலின்


இளமைப் பருவம்
அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு திசம்பர் 19, 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் இராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஹனர்ஸ்) தமிழ் படித்தார். இது கலைமுதுவர் (எம்.ஏ) பட்டத்திற்கு இணையானது. படிப்பை முடித்தபின் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர்.


குடும்பம்
இவர் வெற்றிச்செல்வி என்பவரை 21-2-1945ஆம் நாள் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் சென்னையில் மணந்தார்.   இவர்களுக்கு அன்புச்செல்வன் (பிறப்பு: 17-2-1952[ ) என்னும் மகனும் இரண்டு பெண்மக்களும் பிறந்தனர். வெற்றிச்செல்வியின் மறைவிற்குப் பின்னர் சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்னும் இரு மகன்களும் ஜெயக்குமாரி என்னும் மகளும் பிறந்தனர்.  சாந்தகுமாரி 23-12-2012ஆம் நாள் மறைந்தார்.
க. அன்பழகனுக்கு புலவர் க. திருமாறன், க. அறிவழகன், க. மணிவண்ணன், க. பாலகிருட்டிணன் என்னும் நான்கு தம்பிகள் உள்ளனர். இவர்களுள் புலவர் க. திருமாறன் விருதுநகர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினர். திருமாறனுக்கும் பத்மா என்பவருக்கும் 12-9-1955ஆம் நாள் சென்னையில் மு.வரததாசன் தலைமையில் திருமணம் நடந்தது.[  மற்றொரு தம்பியான க. அறிவழகன் சென்னை தியாகராயர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவருக்கும் எழிலரசி என்பவருக்கும் குத்தாலம் ஒன்றியம் எலந்தங்குடியில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் 11-9-1957ஆம் நாள் திருமணம் நடைபெற்றது.


பொது வாழ்க்கை
தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1962 ஆண்டில் சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971 இல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1984 இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். திமுக வின் மூத்த மேடைப் பேச்சாளரும், ஈ.வெ.ரா அடியொற்றி நடப்பவரும் ஆவார். 2011 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் நின்று தோல்வியுற்றார்.
இதழாளர்
க. அன்பழகன் சென்னை புரசைவாக்கம், வெள்ளாளர் தெரு, கட்டிட எண் 10-இலிருந்து "புதுவாழ்வு" என்னும் மாத இதழை 1948 சனவரி 15ஆம் நாள் (தை முதல் நாள்) முதல் ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.
 எழுத்துப் பணி
எழுத்தாளராகப் பல தமிழ் சமூகக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். இவர் எழுதிய நூல்கள் அழகுராணி [7]
1.   இன-மொழி வாழ்வுரிமைப் போர்
2.   உரிமை வாழ்வு, 1956, பாரி நிலையம், சென்னை.
4.   தமிழினக்காவலர் கலைஞர்
5.   தமிழ்க்கடல்
6.   தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி
7.   தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்
8.   தொண்டா? துவேஷமா? 1953, பாரி நிலையம், சென்னை. (தி.மு.க. பார்ப்பனர்களைச் துவேஷிக்கிறாதா தமிழக்கத்திற்கு தொண்டுபுரிகிறதா என விளக்கும் நூல்)
9.   நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
10. வகுப்புரிமைப் போராட்டம், 1951; மக்கள் மன்றம், பவழக்காரத்தெரு, சென்னை.
11. வளரும் கிளர்ச்சி, 1953, பாரி நிலையம், சென்னை. (டாக்டர் நாயர் காலத்திலிருந்து 1953 வரை திராவிட இயக்கத்தின் வரலாறு)
12. வாழ்க திராவிடம் (ஓர் ஆராய்ச்சி நூல்), 1947, திராவிடன் பதிப்பகம், வேலூர். விடுதலைக் கவிஞர்.
13. விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு
14. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள்






என் செய்வோம் நாங்கள் இனி?


பேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு...                                திருச்சி சிவா எம்.பி. அவர்களின் இரங்கல் கவிதை!


திராவிடப் பேரியக்க வேர்
அறிவுக் களஞ்சியம்
தமிழ்க் கடல்
இலக்கிய ஊற்று
இலட்சிய வேங்கை
வெண்கலக் குரல்
கம்பீரப் பார்வை
செவ்வாய் சிரிப்பு!
இனமானச் சுடர்
தன்மானச் சூரியன்
தலைவணங்கா தகைமை
உறுதி குலையாத
கொள்கை குன்று!
உணர்வுக் கிடங்கு!
கொட்டும் அருவியென
பொதிகைத் தென்றலென!


தமிழினத்தைப்
பகை சூழும்
சிலநேரம்
புயலின் சீற்றமென
அடங்காத
கடலின் அலையென
அடுக்கடுக்காய்
சரம் சரமாய்
சொல் பிரவாகம்
இடைவெளியில்லா
கணைகளாய்
எதிரிகளின்
மார் துளைக்க!
எந்நாளுமிவர்
துவண்டதுமில்லை!
தோற்றதுமில்லை!

மாநாடுகளில்
உன் போர்ப்பறை
ஒலிக்கும்!
எங்களை உலுக்கும்!
கலைஞருக்கு
சிலிர்க்கும்!
பகைவருக்கோ
குலை நடுங்கும்!

அய்யா! உனக்கு
அறிவு பெரிது!
தமிழ்ப் புலமை
பெரிதினும் பெரிது!
நினைவாற்றல்
பெரிது!
உள்ளம் விவரிக்க
இயலா அளவு பெரிது!

எத்தனை
நீண்ட சரித்திரம்!
நீதிக்கட்சியின்
மிச்சமே!
கழகத்தின்
அறிவுக்கருவூலமே!
சுயமரியாதைச் சுடரே!
எளிமையின் இருப்பிடமே!
அடக்கத்தின் அமர்விடமே!
எங்கள் இனமானப்
பேராசிரியரே!

கொள்கை வீரர்கள்
கொடிதாங்கும்
மறவர்கள்
புடம்போட்ட
தங்கங்கள்!
பகைநுழையா
வண்ணமிங்கே
தமிழ்மண்ணின்
எல்லை காக்கும்
தீரர்கள்!

என் செய்வோம்
நாங்கள் இனி!
வலுவிழந்ததில்லை
ஒருபோதும்
எதன் பொருட்டும்!
இன்று
கலங்கித்
துடிக்கிறோம்!
கதியற்று
நிற்கிறோம்!
தெம்பிழந்து
தேம்புகிறோம்!
தேற்றுவார்
யாருண்டு எங்களுக்கு?
அய்யா!  அய்யா!
பேராசிரியரே!
எம்நிலை
யாரிடம் சொல்வோம்?
என் செய்வோம்
நாங்கள் அய்யா?

மயங்கி நின்றோமய்யா!
உன் தேனருவித்
தமிழ்கேட்டு!
இன்று
கலங்கித் தவித்து
துடித்து துவண்டு
போனோம் அய்யா!
கலைஞர் போனார்!
தாயை இழந்தோம்!
இன்று
தந்தையையும் இழந்த
நிலையில்
தளபதியும்
நாங்களும்!


-     திருச்சி சிவா.


மறைந்த தி.மு.க. கலைவர் கருணாநிதியின் உற்றதோழனாகத் திகழ்ந்தவர் அன்பழகன்  உடலநலக் குறைவின் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் 7.3.2020 இன்று சனிக்கிழமை நள்ளிரவு 1.10 மணியளவில் மரணம் அடைந்தார். 

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.

சனி, 15 பிப்ரவரி, 2020

‘சூர்யோதயம்’ பள்ளியில் நடந்த நாடகம்!

 ‘சூர்யோதயம்’  நடந்த நாடகம்!



31.01.2008 -அன்று திருச்சி,  ஆர். சி. மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் அருட்தந்தை இரா.மனோகரதாஸ் அடிகளார் அவர்கள் தலைமையில் நான் எழுதி இயக்கிய ‘சூர்யோதயம்’ நாடகம் நடந்தது.  நாடகத்தில் பங்கேற்றவர் அனைவரும்  மாணவர்கள்.  

சுனாமியால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை இழந்த மாணவர்கள் கருணை இல்லத்தில் தங்கிப் படிக்கிறார்கள்.   தங்கள் வாழ்வில் நடந்த துயரச் சம்பவத்தை எண்ணி வருந்தியும்;  சில நிகழ்வுகளில் அதையும் மறந்து ஆடிப்பாடி மகிழ்ந்தும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு விஞ்ஞானி சுனாமி வருவதை முன்கூட்டியே எச்சரித்துத் தானாகவே அறிவுறுத்தும் கருவியைக் கண்டு பிடிக்கிறார்.   அவரின் கண்டுபிடிப்பைப்  பாராட்டி முதலமைச்சர் அவருக்கு விருது வழங்குகிறார்.
























-மாறாத அன்புடன், 

 மணவை ஜேம்ஸ். 


செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

‘இதெப்படியிருக்கு... ?!’ பள்ளியில் நடந்த நாடகம்...!


‘இதெப்படியிருக்கு... ?!’ பள்ளியில் நடந்த நாடகம்...!


திருச்சி, ஆர்.சி. மேனிலைப்பள்ளி 1999 -ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழாவில்  தாளாளரும் தலைமையாசிரியருமான அருட்தந்தை. எஸ். தாமஸ் அடிகளார் அவர்கள் தலைமையில் நான் எழுதி இயக்கிய ‘இதெப்படியிருக்கு!’ நாடகம்.  நாடகத்தில் பங்கேற்றவர் அனைவரும்  மாணவர்கள்.  
வைத்தியர் கடின முயற்சி செய்து ஒரு மருந்தைக்  கண்டுபிடிக்கிறார்.  இனி இந்த மருந்தை  உட்கொண்டால் மனிதன் இறக்கவேமாட்டான் என்ற நிலையில்  அந்த மருந்தை உட்கொண்டவனைப் பற்றி ஒரு கற்பனை நாடகம்.







































-மாறாத அன்புடன், 

 மணவை ஜேம்ஸ். 






























வெள்ளி, 24 ஜனவரி, 2020

“தெருவில் ஒரு திருவிளக்கு“- நாடகம்



“தெருவில் ஒரு திருவிளக்கு”-நாடகம்  




திருச்சி, பாலக்கரை உலக மீட்பர் ஆலயத்தில் 2002 -ஆம் ஆண்டு அன்றைய பங்குத் தந்தை இன்றைய திண்டுக்கல் ஆயர் மேதகு. தாமஸ் பால்சாமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க,  அருட்தந்தை. இரா.மனோகரதாஸ் அன்றைய ஆர்.சி. மேனிலைப்பள்ளி தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் விருப்பத்தின்படி திருச்சி, ஆர்.சி. மேனிலைப்பள்ளி  ஆசிரியர்கள்  &  திரு. அருளானந்தம் அவர்களின் மகன் அருட்தந்தையாகப்போகும்  செல்வன். மாணிக்கம் அவர்களும் நடிகை திருமதி. T.R. ராஜேஸ்வரி அவர்களும் வேளாங்கன்னி மாதாவாக ஒரு மாணவி (சொரூபம் அன்று) நடித்து அரங்கேற்றம் செய்யப்பட்ட நாடகம் “தெருவில் ஒரு திருவிளக்கு!”


இலங்கையிலிருந்து அகதியாக வந்த தாயும் மகனும் வாழ வழியின்றி அல்லல்படுகிறார்கள். வேறு வழியின்றி பிச்சைக்காரியாகி வாழ்க்கையை நகர்த்தும் பொழுது ஒரு பால்காரன்  அவனது ஆசைக்கு இணங்கி அவனோடு வந்தால் பணம் தருவதாக அழைக்கிறான். ‘நான் அப்படிப்பட்டவலல்ல’ என்று கூறி அழுது புலம்பிக் கொண்டிருக்கையில்… இதைக் கவனித்த பாதிரியார் அவளது நிலையை அறிந்து அவளுக்குக் கன்னியாஸ்திரி மடத்தில் சமைக்கிற வேலை வாங்கித் தருவதாகக் கூறி உதவி செய்வதாக அழைக்கிறார். அவளுக்கு அவர் தெய்வமாகத் தெரிய… அவர்கள் புறப்படுகிறார்கள்.  அதைக்கண்ட பால்காரன் “பாருடா… நா … கூப்பிட்டு வராதவ… அவரு கூப்பிட்டவுடனே போறாள்…” என்கிறான். 

























































மேற்கண்ட நாடகம் இந்த எனது சிறுகதையிலிருந்து சிறிது மாற்றம் செய்யப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது.

தெருவில் ஒரு திருவிளக்கு...!

                     
                       
     
            “தர்மம் செய்யுங்கய்யா...  தாயே தர்மம் செய்யுங்கம்மா... அய்யா...அம்மா... ஒங்களுக்கு புண்ணியமா போகுமுங்க...’’ அண்ணா சிலைக்கருகில் பரிதாமாபமாகக் குழந்தையை இடுப்பிலும் ஈயத்தட்டைக் கையிலும் வைத்துக்கொண்டு கீறல் விழுந்த தேசிய கீதத்தைப்போலக் கத்திக் கொண்டு இருந்தாள் கண்ணகி.

           நிலவுக்கு வழிவிட்டுச் சூரியன் மறையும் அந்தி வேளை...அந்தச் சோடியம் வேப்பர் விளக்கின் வெளிச்சம்..  கண்ணகியின் மேனிக்கு மஞ்சள் பூசி அழகை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.  இன்று ஜங்ஷனுக்கு வந்து போகும் ஜனங்களின் நடமாட்டம் சற்று அதிகமாகத்தானிருந்தது.

           பிள்ளை மொழி பேசத் தெரியாததால் பசியை அழுகையால் அறிவுறுத்தியதும்...தன்னிடம் பால் இல்லையென்பதும் கண்ணகிக்குத் தெரியாத ஒன்றல்ல... தனது பசியையும் மறந்து பிள்ளையின் பசியைப் போக்க நினைத்துத்  தட்டைப்பார்த்தாள்... பால் வாங்கக்கூட பற்றாக்குறையாகத்தான் இருந்தது.

            விதியை நொந்து கொள்வதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.  பிள்ளை பசியின் கொடுமை தாங்காமல் ‘வீல்...வீல்...’ எனக் கத்த ஆரம்பித்தது.  தாய்பால் இல்லையென்றாலும் பாலைக் குழந்தைக்கு ஊட்டுவது போல் முனைந்தாள்.

             கண்காட்சியாக இதைக் கவனித்துக் கொண்டிருந்தது அங்கொரு கும்பல்,  வெறும் பால் ரப்பரைச் சப்பிக்கொண்டு  எல்லாக் குழந்தைகளைப் போலத்தான் அதுவும் தனக்கு வேண்டியது கிடைத்து விட்டது போல மகிழ்ச்சியில்  அழுகையை நிறுத்தியது.  கண்ணகிக்கோ அழுகை அழுகையாய் வந்தது.  தாய்மையின் இலக்கணமே அதுதானே...!

              அதை  நினைத்து அழுதாள்.  ‘அந்த லாரிக் காரன் குடிச்சிட்டு வண்டி ஓட்டி...பாவிப்பய... எ புருஷன் மேலயா வண்டிய விடனும்...ஆண்டவன் எ தலையில் இப்படி எழுதிட்டானே... இந்த அபலைய அம்போன்னு அனாதையா விட்டிட்டு...கட்டின ஒரு வருஷத்திலே போயிட்டியேயா... இந்த பாவி மக கையிலேஒரு புள்ளயக்கொடுத்துட்டு... இப்படி கஷ்டப்பட வச்சிட்டு போயிட்டியேய்யா...போயிட்டியேயா...’ எண்ணப்பறவை எங்கெங்கோ பறந்து கொண்டிருக்க அந்தப் பேச்சு கண்ணகிக்கு எங்கே இருகிறோம் என்று ஞபாகப்படுத்தியது.

                “டே...கருப்பானாலும் அழகுக் கருப்புடா...!”

                “மச்சி...இவளுக்கு இருபது வயசுகூட இருக்காது...மார்க்கு எம்பதுக்கு மேலே போடலாமுடா...!”

                “டே...இவ அப்படிப்பட்டவளா இருக்குமோன்னு எனக்குச் சந்தேகமா இருக்குடா...!”

                 “இதுல என்ன மச்சி சந்தேகம்...எல்லாம் அந்த கேஸ்தான்...காசு இல்லாம இதப்பத்தி பேசிப் பிரயோஜனம்...வா போகலாம்”. -கல்லூரி மாணவர்களின் பேச்சு அவளின் விழியைச் சிவப்பாக்கியது.
                                                             
                  ரோட்டுக்கரையிலே வந்து நிக்கனுமுன்னு எனக்கு மட்டும் பிரியமா... என்ன?  வேலை கேட்ட பக்கமெல்லாம் குழந்தையில்லேன்னா வேலை தர்றேங்கிறாங்க...குழந்தை இருக்கிறதனாலேதான் நான் உயிரோட இருக்கிறேங்கிறது அவுங்களுக்குத் தெரிவதற்கு நியாயமில்லதான்.  இப்போதைக்கு இதைத் தவிர வேற வழியே தெரியலை.

                  இரக்க குணம் படைத்தவர்கள் சிலர் இல்லாமல் இல்லை.  இரண்டு அம்பது பைசாவும் ஒரு ரூபாய் காசும்  சொந்தம் கொண்டாடிக் கிடந்தது .  ‘அம்மா தாயே..’.என்று வழக்கமான பல்லவியைப் பாட ஆரம்பித்தாள்.

                  ‘ஒடம்ப வளத்து வச்சிருக்கா..ஒழச்சு சாப்புட வேண்டியதுதானே... என்ன கை நொண்டியா...? காலு நொண்டியா...?  பிச்சை போட்டுப் போட்டுத்தான் நம்ம நாடு இப்படியாயிடுச்சு...’ வழிநடைப் பயணிகள் சிலர் பேசிக்கொண்டே போனார்கள்.

                    முருக்கு மீசைக்காரப் பால்காரன்... கைலியும் பனியனும் மட்டுமே மாட்டியிருந்தவன்... மீதமான பாலைச் சேதமாகாமல் சேர்த்து வைத்துக் கொண்டே... நீண்ட நேரமாகத்  தன்னையே பார்த்துக் கொண்டடிருந்தாலும், பார்க்காதவள்  போல்தான் நின்று கொண்டிருந்தாள்.

                   பால்காரன் பக்கத்தில் வருவதைப் பார்த்த கண்ணகி,  “குழந்தை பசியால துடிக்குதுங்க...என்ட்ட இருக்கிறது ரெண்டு ரூபாதாங்க...இதை வச்சிக்கிட்டு குழந்தைக்குக் கொஞ்சம் பால் கொடுத்தீங்கன்னா...“ எதிர்பார்ப்பு அவள் கண்ணில் தெரிந்தது.
                                                           
                    பீடியைப் பற்றவைத்துப் புகையை வாயிலிருந்து  வளைய வளையமாக விட்டுக்கொண்டே பேசினான், “புள்ளைக்கு பாலுதானே வேணும்...கவலைய வுடு... எனக்கு காசே வேணாம் புள்ள...எவ்வளவு காசு வேணுமுன்னாலும்  நா தர்றேன்... என்னோட வர்ரீயா...?”

                     அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலே அவள் உடலே நடுங்கியது.  அந்த வார்த்தை அந்தச் சம்பவத்தை நினைவு படுத்தியது.... இப்படித்தான்   ஒருநாள் அந்தி சாயும் நேரம் நடுத்தர வயதுள்ள ஒருவன்
‘நான் ஒன்ன அடிக்கடி கடை வீதியிலே பாக்கிறேன்...எ மனைவிக்கு ஒடம்பு சரியில்ல...வீட்டுக்கு வந்து...பாத்திரத்தச் தேச்சு கொடுத்துவிட்டுப் போயிடு...அன்னன்னிக்குப் பணம் கொடுத்திடுறேன்...எனக்கும் சுலபமா இருக்கும்...ஒனக்கும் சாப்பாட்டுக்கு வழி கிடைக்கும்...’ என்றான்.  இவளும் அவனோடு  சென்றாள்.

                      வீட்டிற்குள் நுழைந்தவள் ‘அம்மா எங்கே? ’ என்று கேட்டாள்.

                      ‘ எங்கே அம்மா இருக்காங்க...சும்மா சொன்னேன்...எல்லாம் நான்தான்...என்னோடு நீயும் சேர்ந்தால் ‘  என்று அவளைக் கட்டி அணைக்க முயன்றான்.  அவனின் முரட்டுப்பிடியில் இருந்து திமிற முடியாமல் திணறிய அவள், தனது குழந்தையின் அழுகுரல் கேட்க... அடுத்த வினாடி சுதாரித்துக் கொண்டவளாக ‘கொஞ்ச நேரம் பொறுங்கள் குழந்தையின் அழுகையை நிப்பாட்டிட்டு வர்றேன்’ என்றவாரே,   வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து... சடாரென வேகமாக  அறையைத் தாழ்ப்பாள் போட்டு விட்டு அன்றைக்கு தப்பித்து  வந்தது  நினைவுக்கு வர கண்கள் குளமாயின.

                   “என்ன புள்ள...என்னோட வர்ரியா புள்ள...”-மறுபடியும் பால்காரன் கேட்டான்.

                   “......................................................................................” அவளால் பேச முடியாமல் வார்த்தை சிக்கிக் கொண்டு வெளியில் வரத் தடுமாறியது.

                   “எங்கே கூப்புடுறேன்னு புரியலேங்கிறியா...?  வா புள்ள புரிய வைக்கிறேன்... காசுக்குக் காசு... சுகத்துக்குச் சுகம்...”

                   “......................................................................................”- விழிகளிலிருந்து நீர் ‘பொலபொல’வென வழிந்தது.

                   “மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிங்கிறத... நா மறந்தே போயிட்டேன்...” காரைப் பல்லைக்காட்டிச் சிரித்தான்.

                  “ நா வாழனுமுன்னு நெனைக்கிறேன்... எ வாழ்க்கைய அழிக்கனுமுன்னு நெனைக்கிறீங்களே... என்ன வாழவிடுங்கய்யா...ஒங்கள கை எடுத்துக் கும்புடுறேன்” என்று கெஞ்சினாள்.

                  “பொழைக்கத் தெரியாத புள்ளையா இருக்கிறீயே...“ மீசையை முறுக்கிய  பால்காரன்... பாதிரியார் பக்கத்தில் வரவே நகர ஆரம்பித்தான்.
                                                                         
                   அந்த நேரத்தில் அருகில் வந்த பாதிரியார், “உன் நிலையை பார்த்து மனம் ரொம்ப வேதனைப்படுது...உனக்கு சிஸ்டருங்க மடத்தில... கான்வென்ட்ல...  சமைக்கிற வேலை வாங்கித் தர்றேன்... என்னோடு வாரியாம்மா...” தாயன்போடு கேட்டார்.  அதுவரை நாராசமா ஒலித்த இந்த வார்த்கை இப்போது அவளுக்குத் தெய்வ வாக்காக  காதில் கேட்டது.  தெய்வமாகத் தெரிந்த பாதிரியாரைப் பார்த்து ‘சரி’ யென்பதைப் போலத் தலையசைத்து...  அவள் நம்பிக்கையுடன்  குழந்தையோடு பாதிரியாரைத் தொடர்ந்தாள்.

                    “பாருடா...நா கூப்புட்டதுக்கு  வராதவ... அவரு கூப்புட்டவுடன... போறதப் பாரு...”  பால்காரன் படு கேவலமாகவும்...  ஏளனத்துடன் பேசியது காதில் கேட்டாலும்,  பிரகாசமான கண்களோடு தனக்கு நல்ல எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கி நடைபோட்டு சென்றாள்.   எதைப்பற்றியும்  கவலைப்படாமல்  அவர்கள் நடந்தார்கள்!


                   
                                                                                                         
          -மாறாத அன்புடன்,

            மணவை ஜேம்ஸ்.
                                                   

                                                                                                     
                               

                             

வியாழன், 9 ஜனவரி, 2020

இன்று வெள்ளிவிழா காணும்... பொன்விழா நாடகம் ‘முடிவுகள் அறிமுகம்’ காணொளியில்...!


  இன்று வெள்ளிவிழா காணும்... பொன்விழா நாடகம் 

 ‘முடிவுகள் அறிமுகம்’  காணொளியில்...!


இன்று  9-1-2020

இதே தினத்தில் 9-1-1996 அன்று 25 ஆண்டுகளுக்கு முன்
திருச்சி, ஆர்.சி.மேனிலைப்பள்ளி பொன்விழாவிற்காக நான் எழுதி இயக்கிய ‘முடிவுகள் அறிமுகம்’  மேடை நாடகம் கால் நூற்றாண்டில் தடம் பதித்து... இன்று வெள்ளிவிழா காண்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

             நாடகத்தில் பங்கேற்றவர்கள்  எங்கள் பள்ளியின் ஆசிரியர் மற்றும் மாணவர்கள்.  பெண்கள் மட்டும்  தொழில்முறை நடிகைகள்.  பெண் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எங்கள் பள்ளி மேனாள் ஆசிரியர் திரு. அமிர்தம் அவர்களின் செல்வி. 

     நாடகத்தில் பங்கேற்று நடித்த அன்புள்ளங்களுக்கும் ஒத்துழைப்புத் தந்திட்ட அனைத்துள்ளங்களுக்கும் அனைத்து உதவிகளையும் செய்து நாடகம் சிறப்புற அமைய ஆவன செய்த அருட்தந்தை. S. தாமஸ் அடிகளார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.








              
கால் நூற்றாண்டில் தடம் பதித்து...
      வெள்ளிவிழா காணும்
      
  நாடகத்தைக் காணொலியில் காண ’கிளிக்’ செய்க... 
 Part - 1  


                                                                                                                                -தொடரும்...
-






  நாடகத்தைக் காணொலியில் காண ’கிளிக்’ செய்க ...
Part - 2

                   



    -நன்றி.

-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.
Related Posts Plugin for WordPress, Blogger...