ஞாயிறு, 10 ஜனவரி, 2016

மரங்களைப் பாடுவேன்...! - கவிப்பேரரசு வைரமுத்து.

  மரங்களைப் பாடுவேன்







-கவிப்பேரரசு வைரமுத்து



வாரும் வள்ளுவரே

மக்கட் பண்பில்லாதவரை
என்ன சொன்னீர்?

மரம் என்றீர்

மரம் என்றால் அவ்வளவு
மட்டமா?



வணக்கம் ஔவையே
நீட்டோலை வாசியான்
யாரென்றீர்?


மரம் என்றீர்

மரம் என்றால் அத்தனை இழிவா?


பக்கத்தில் யாரது
பாரதிதானே

பாஞ்சாலி மீட்காத
பாமரரை என்னவென்றீர்?

நெட்டை மரங்கள் என்றீர்

மரங்களென்றால் அவ்வளவு கேவலமா?


மரம் 
சிருஷ்டியில் ஒரு சித்திரம்

பூமியின் ஆச்சரியக்குறி

நினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம்



விண்மீனுக்குத் தூண்டில்போடும்
கிளைகள்


சிரிப்பை ஊற்றிவைத்த
இலைகள்

உயிர் ஒழுகும்
மலர்கள்

மனிதன் தரா ஞானம்
மரம் தரும் எனக்கு

மனிதன் தோன்றுமுன் 
மரம் தோன்றிற்று

மரம் நமக்கண்ணன்
அண்ணனைப் பழிக்காதீர்



மனித ஆயுள்
குமிழிக்குள் கட்டிய கூடாரம்


மரம் அப்படியா..?

வளரும் உயிர்களில்
ஆயுள் அதிகம் கொண்டது
அதுவேதான்


மனித வளர்ச்சிக்கு
முப்பது வந்தால்
முற்றுப்புள்ளி

மரம்
இருக்கும்வரை பூப்பூக்கும்
இறக்கும்வரை காய்காய்க்கும்




வெட்டி நட்டால்
கிளை மரமாகுமே
வெட்டி நட்டால்
கரம் உடம்பாகுமா?



மரத்தை அறுத்தால்
ஆண்டு வளையம்
வயது சொல்லும்


மனிதனை அறுத்தால்
உயிரின் செலவைதான்
உறுப்பு சொல்லும்


மரத்திற்கும் வழுக்கை விழும்
மறுபடி முளைக்கும்


நமக்கோ
உயிர் பிரிந்தாலும்
மயிர் உதிர்ந்தாலும்
ஒன்றென்றறிக



மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கேபோய்ச்
சலவை செய்வது?




மரங்கள் இல்லையேல்
மழைக்காக எங்கேபோய்
மனுச் செய்வது?



மரங்கள் இல்லையேல்
மண்ணின் மடிக்குள்ளே
ஏதப்பா ஏரி?


பறவைக்கும் விலங்குக்கும்
மரம்தரும் உத்தரவாதம்
மனிதர்நாம் தருவோமா?

மனிதனின் முதல் நண்பன்
மரம்

மரத்தின் முதல் எதிரி
மனிதன்

ஆயுதங்களை மனிதன்
அதிகம் பிரயோகித்தது
மரங்களின் மீதுதான்


உண்ணக்கனி - ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து - உணர்வுக்கு விருந்து
அடையக்குடில் - அடைக்கக் கதவு
அழகு வேலி - ஆடத்தூளி
தடவத் தைலம் - தாளிக்க எண்ணெய்
எழுதக் காகிதம் - எரிக்க விறகு

மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்

மறந்தான்
மறந்தான்
மனிதன் மறந்தான்


பிறந்தோம்


தொட்டில்
மரத்தின் உபயம்


நடந்தோம்

நடைவண்டி
மரத்தின் உபயம்


எழுதினோம் 

பென்சில் பலகை
மரத்தின் உபயம் 

மணந்தோம்

மாலை சந்தனம்
மரத்தின் உபயம்

புணர்ந்தோம்

கட்டில் என்பது
மரத்தின் உபயம்

துயின்றோம்

தலையணைப் பஞ்சு
மரத்தின் உபயம்

நடந்தோம்

பாதுகை ரப்பர்
மரத்தின் உபயம்
இறந்தோம்
சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்

இறந்தோம்

சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்
எரிந்தோம்

சுடலை விறகு
மரத்தின் உபயம்

மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்

மறந்தான்
மறந்தான்
மனிதன் மறந்தான்


மனிதா

மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா

ஒவ்வொரு மரமும்
போதிமரம்.



நன்றி: வைரமுத்து கவிதைகள்
                                                                         


                         காணொளி  காண ‘கிளிக்’ செய்க                            



                                                    செல்வி.  கயலின்  குரலில்


                                                                                                                                                   
                                             
-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

                                     















வியாழன், 7 ஜனவரி, 2016

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (14)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (14)


   தீயணைப்புத் துறையினர்   உயிருடன் தீக்காயங்களுடன் போராடிக் கொண்டிருந்தவர்களை எல்லாம்  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.   திருமண மண்டபத்தில்  இறந்து கிடந்தவர்களின் உடலைப் பார்த்ததும்   இதற்கு முன்பு இதுபோலக்  கோர விபத்தைக் கண்டதேயில்லை என்று மிகுந்த துயரப்பட்டனர்.
                                                                       

   ஸ்ரீரங்கம்  போலிஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உட்பட காவல் நிலையமே அங்கு வந்து இருந்தது.  போக்குவரத்தை மாற்றிவிட்டு  மக்களின்  கூட்டத்தைக்  கட்டுப்படுத்திக் கொண்டும்,  ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் காயம்பட்டவர்களை மீட்டு அனுப்புவதிலும் மும்முரமாக ஈடுபட்டனர்.
                                                                     

   சிறிது நேரத்திலே எஸ்.பி.யும்  வேகமாகத் தனது வண்டியில் வந்து இறங்கினார்;   இன்ஸ்பெக்டரிடம் விசாரணை செய்தார்.



   எஸ்.பி. வந்த சிறிது நேரத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவரும் சம்பவ இடத்திற்கு   வந்தார்.  
  
       எஸ்.பி.யிடமும் தீயணைப்பு அதிகாரியிடமும்  மாவட்ட ஆட்சித் தலைவர் நடந்தவற்றைக் கேட்டார்.  பத்திரிக்கை நிருபர் எல்லாம் கேமராவும் கையுமாகப் புகைப்படம் எடுப்பதிலும் செய்தி சேகரிப்பதிலேயுமே  மும்முரம் காட்டினர்.

   “காயம் பட்டவர்களையெல்லாம் மீட்டு  ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பியாச்சில்ல...” மாவட்ட ஆட்சியர் கேட்க, தீயணைப்பு அதிகாரி பதில் சொன்னார்.

   “பாதிக்கப்பட்ட எல்லாத்தையும்  ஜி.எச்., பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பியாச்சுங்க அய்யா...”

   “ஏ பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்புனீங்க...?” மாவட்ட ஆட்சியர் சற்று குரலை உயர்த்திக் கேட்டார்.

   “இல்லீங்க அய்யா... தீயில வெந்து காயம்பட்டவங்க நெறையப் பேரு... அதுனாலதான்... அதான் உடனே ஒங்களுக்குத் தகவல் கொடுத்தோம் ...”

   “எத்தனை  பேரு தீக்காயம் பட்டவங்க...?”

   “நூறு பேருக்கு மேல இருக்குங்கய்யா...”

   “யோவ்... என்னய்யா சொல்றா...?  ஆமா... யாரும் இறந்திருக்காங்களா...?”
பதட்டத்துடன் ஆட்சியர் கேட்டார்.  தீயணைப்பு  அதிகாரி  ஒன்றும் கூறாமல் இருந்தார்.

   “என்ன  கேக்கிறேன்ல்ல... யாரும் இறந்திருக்காங்களா...?”

   ”ஆமாங்கய்யா...”தயங்கித் தயங்கிப் பதில் சொன்னார் தீயணைப்பு அதிகாரி.

   “எத்தனை பேருய்யா...?”

   ”இனிமேல்தான் எண்ணணும்...” 

   “மொதல்ல அதப் பாருங்க... அதுக்குள்ள மேல இருந்து விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க... வந்திடுச்சு... சீக்கிரம் போங்க...  கவர்மண்ட்கு என்னய்யா பதில் சொல்லுவேன்... போங்கய்யா... போங்க...” என்று சொல்லி விட்டுத் தீயணைப்பு அதிகாரியை அவசரப்படுத்தினார்.

   “சரிங்கய்யா...” தீயணைப்பு அதிகாரி வேகமாக மாடியில் ஏறினார்.  

    தீயில் பலர் கருகிக்கிடப்பதைப் பார்த்து,  யாருக்காவது உயிர் இருக்கிறதா என்று அருகில் சென்று பார்த்தனர்.    ஆங்காங்கே பல உடல்கள் கரிக்கட்டையாகிக் பார்ப்பதற்கே அகோரமாகச் சகிக்க முடியாமல்  கிடந்தன. 

   தீயணைப்பு வீரர்கள் இறந்தவர்களின் உடல்களை எண்ணி, கணக்கெடுக்கும் வேளையில் ஈடுபட்டனர்.  இருபத்தியாறு பேர் பெண்கள், ஒரு சிறுமி, இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம்  இருபத்தொன்பது பேர் உடல்கருகி இறந்து கிடந்தனர். 

   ரெங்கராஜ்  மாடிக்குச் சென்று மாப்பிள்ளையைத் தேடினார்.  மாப்பிள்ளையோட  அப்பாவைத் தூக்கியபடியே  இறந்து  பிணமாகக்  கிடப்பதைப் பார்த்தும் மண்டபமே அதிரும்படிச் சத்தம் போட்டுக் கத்தினார்.  அவரின் அலறலைக் கேட்டு மிரண்டுபோய்த் தீயணைப்பு வீரர்கள் ஓடி வந்தனர்.

   “மாப்பிள்ளை...மாப்பிள்ளை...”  கையை நீட்டியவர் அதற்கு மேல் பேச்சு வரமால் மாப்பிள்ளையின் உடல் மீதே மயக்கிச் சாய்ந்தார்.  ரெங்கராஜின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர்.  அவரை மெதுவாகக் கீழே அழைத்து வந்தனர்.

   மாப்பிள்ளையின் அம்மா,  இறந்துகிடந்த கணவரையும் மனமகன் கோலத்தில் கிடந்த மகனின் உடலையும் மாப்பிள்ளையின் உடலையும் பார்த்துத் தரையில் உருண்டு புரண்டு அழுதாள்.

        “இவ்வளவு குறுகலான இடத்தில மண்டபம் இருக்கே... கல்யாண மண்டபத்துக்கு அனுமதி  வாங்கி இருக்காங்களா...மொதல்ல ஓனரைக் கூப்பிடுங்க...?”  எஸ்.பி.யிடம் மாவட்ட ஆட்சியர் கட்டளையிட்டார்.


    இதையெல்லாம் பார்த்துக் கொண்டு  இருந்த சசிரேகா ‘நம்முடைய திருமணத்தில் இத்தகைய கோர நிகழ்வு நடந்து விட்டதே’  என்று எண்ணியபடி மயங்கிக் கீழே பொத்தென ரோட்டிலேயே விழுந்தாள்.


      தமிழினியன் கைககள்  கட்டப்பட்டு,  பங்களாவில் அடைக்கப்பட்டிருந்தவனுக்குப்   பசிக்கு உணவு  மட்டும்  கொடுக்கப்பட்டது. அந்த இருவரும் அவனைப்  பார்த்துக்  கொண்டே இருந்தனர்.    ஞாயிற்றுக் கிழமை மதியத்திற்கு மேல்  தமிழினியனை  விட்டுவிடலாம் என்று  ரெங்கராஜ் சொல்லி இருந்தார்.  மதியம்  பன்னிரண்டைத் தாண்டவே  தமிழினியனை விடுவிக்க எண்ணிக் காரில் ஏற்றி அவனுடன் இருவரும் அமர்ந்து கொள்ள மூவரை ஏற்றிக் கொண்டு கார் திருச்சியை நோக்கிப்  பறந்தது.

   “டே... ஒ காதலிக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு... புத்தியா  பொழைக்கிற வழியப்பாருடா...  என்னா?”  இருவரில் ஒருவன் புத்தி சொல்வது போல் சொன்னான்.

   “வேற ஏதாவது செய்யணுமுன்னு நெனைச்சா...  நீ இருக்க மாட்டாய்... ஏதோ ஒனக்கு ஆயுசு கெட்டின்னு நெனக்கிறேன்...  எல்லாம் ஒ நல்லதுக்குத்தான் சொல்றேன்”  மற்றொருவன் சொல்லிக் கொண்டே தமிழினியனின் கைக்கட்டை அவிழ்த்து விட்டான்.

   தமிழினியன் மறுப்பேதும் சொல்லாமல்  அமைதியாக இருந்தான்.

   “ஒன்னப்பாத்தா பாவமா இருக்கு...  வீடு எங்கே இருக்கு...  அங்கேயே இறக்கி விட்டிடுறோம்... ஒனக்கு எங்கடா வீடு...?”

   “கருமண்டபம்...” என்று  தமிழினியன் சொல்லிய பொழுது கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் குரல் இருந்தது.

    காரை வேகமாக ஓட்டச்சொல்லி கருமண்டபம் வந்தவுடன் பஸ்ஸ்டாப்பில் தமிழினியனை இறக்கிவிட்டுக்  கார் சென்றது.

   தமிழினியனால் நடக்க முடியவில்லை;  மிகுந்த சிரமப்பட்டு நடந்து ரோஸியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

   ரோஸி தமிழினியன் வந்ததை அறிந்து  வெளியில் ஓடி வந்து  ”என்ன நடந்தது?  ஏன் தனியாக வருகிறீர்கள்?  சசிரேகா எங்கே?” கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.  தமிழினியன் நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் விவரித்துச் சொல்லி முடிப்பதற்கே நீண்ட நேரம் ஆகிவிட்டது.  அவன் சொல்லியதைக் கேட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதாள் ரோஸி.

   “சரி... அம்மா எப்படி இருக்காங்க...?”  தமிழினியன் கேட்டான்.

   அம்மா  எதுவும் சாப்பிட முடியாமல் வலியால் துடித்ததையும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதையும்,  டாக்டர் சொன்னதையும் எல்லாம் அழுகையைத் துடைத்துக் கொண்டே சொல்லி முடித்தாள்.

   “ரோஸி... நல்லா கேட்டியா... இன்னும் ஆறு மாசம்தான் அம்மா உயிரோட இருப்பாங்களா...?”

   “.  ஒங்க அம்மாவுக்கு கேன்ஸர் போர்த் ஸ்டேஜ்ங்கிறத... ஒங்கள்ட்ட     அதச் சொன்னா நீங்க ரொம்ப கவலைப்படுவீங்கன்னு...  டாக்டர் ஒங்கள்ட்ட சொல்லலையாம்...”  இதைக் கேட்ட தமிழினியன் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

   “சரி... அழாதிங்க... அழுது என்ன ஆகப் போகுது...?” ரோஸி  தமிழினியனின் கண்ணீரை அவளின் விரல்களால்  துடைத்து விட்டாள்.

   “அம்மா... எப்படி இருக்காங்க...?”

   “ஒங்களத்தான் எப்ப வருவீங்க...  எப்ப வருவீங்கன்னு...  சரியா சாப்பிடாமக்கூட   கேட்டுக்கிட்டே  இருக்காங்க...!”  என்று  ரோஸி சொல்லிக் கொண்டிருக்கம் பொழுதே அம்மாவைப் பார்க்க வீட்டிற்குள் தமிழினியன் நுழைந்தான்.  அவனைத் தொடர்ந்து ரோஸியும் வந்தாள்.

   தமிழினியனைப் பார்த்ததும் தங்கம்மாள் படுக்கையில் படுத்திருந்தவள் வேகமாக எழுந்து உட்கார்ந்து,  தாய்ப்பாசம் பொங்கக் கேட்டாள் , “வாப்பா... எ ராசா...  இந்த அம்மாவ விட்டுட்டு எங்கப்பா போயிருந்தா...?”

   “இல்லம்மா...  படிக்கிறது சம்மந்தமா  ஒரு அவசர   வேலை...  அதான் வெளியூர் போக வேண்டியதாச்சு...  இனிமே இதுபோல போக மாட்டேம்மா...!”  தங்கம்மாளின் அருகில் அமர்ந்தான்.

   “எங்கே ஒன்ன பாக்காமலே இந்த உசுரு போயிடுமோன்னுகூட நெனச்சேன்...”

   “ஏம்மா... பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க...?  அதெல்லாம் ஒங்களுக்கு ஒன்னும் ஆகாதும்மா...”

   “ஒனக்கு தெரியாதுப்பா... நீ போனப்ப எனக்கு ரொம்ப முடியாமப் போயி... இந்தப் பொண்ணுதான்  எ உசிரக் காப்பாத்துச்சு...  எனக்குத் தெரியுதுப்பா இன்னும் ரொம்ப நாளைக்கு நா இருக்கே மாட்டேம்ப்பா...”

   “அதெல்லாம் ஒன்னுமில்ல... சும்மா மனசப்போட்டு குழப்பிக்காதிங்க...”

   “இல்லடா... குழப்பமெல்லாம் ஒன்னும் இல்ல... தெளிவாத்தான் இருக்கு... ஆமா...  நமக்குன்னு யாரு இருக்கா...  ரோஸிக்கும்  நம்பள விட்டா யாரு இருக்கா...  நீ ரோஸிய கண்ணாலம் கட்டிக்கப்பா...!”

தமிழினியன் அம்மாவை அதிர்ச்சியுடன் பார்க்க  “நீ ஒன்னும் பேசாதே...” என்றாள் தங்கம்மாள்.

                                                                                                                       வ(ள)ரும்...


படிக்க  ‘கிளிக்’ செய்க 

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (10)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (11)

நீங்க நினைக்காத நெஞ்சம்...!(12)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (13)


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.




















                                                                                                                               

வியாழன், 31 டிசம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (13)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (13)


   அன்று ஞாயிற்றுக்கிழமை  சீக்கிரம்   பொழுது  புலர்ந்தது போலவே  தெரிந்தது.
                                         
                                                                           
                                                                                                           


   ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தின் அருகே ரங்கராஜபுரம் கே.வி.எஸ். தெருவில் உள்ள கலைப்பிரியா திருமண மண்டபத்தில் இரவில் எரிந்த சீரியல் லைட் இன்னும் எரிந்து கொண்டே இருந்தது.  நகரப் பேருந்துகளிலிருந்தும் இருசக்கர வாகனங்களில் இருந்தும் உறவினர்களும் நண்பர்களும்  சுற்றம் சூழ வருகை புரிய ஆரம்பித்தனர்.

           கல்யாண மண்டபத்தில் காலை டிபன் இட்லி, பொங்கல், கேசரி ரெடியாகி இருந்ததால் வருகைபுரிந்த நெருங்கிய உறவினர்களெல்லாம்  சாப்பிட்டுவிட்டு காபி குடிக்க ஆரம்பித்தனர்.

            திருமணம் முடிந்தவுடன் சாப்பிடுவதற்காகச்  சைவச் சாப்பாடு சமையல் கூடத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை  அதன் சாம்பார் வாசனை சாப்பிட்டவர்களைச் சுண்டி இழுத்தது. 


                                   

   மணமகன் கல்யாணராமனும் மணமகள் சசிரேகாவும் அலங்கரிக்கப்பட்ட காரில் வந்து இறங்கினர்.  காருக்குள் இருந்து மணமகனின் அம்மாவும் அப்பாவும் இறங்கினர்.

   “ஒம்பது முப்பதில இருந்து பத்து முப்பதுக்குள் முகூர்த்த நேரம்... இப்பவே மணி எட்டரையத்தாண்டுது... சீக்கிரம் போயி டெர்ஸ் பண்ணிட்டு ரெடியாகுங்கோ...!” என்று அவசரப் படுத்தினார் திருமண மண்டபத்தில் வரவேற்பில் நின்று கொண்டு வருகின்றவர்களையெல்லாம்  வரவேற்றுக் கொண்டு இருந்த ரெங்கராஜ்.
                                                       
   “அம்மா... நீ அப்பாவ மாடிக்குக் கையப்பிடிச்சுக் கூட்டிட்டுப் போங்க... பார்வை மட்டுங்கிறதுனால படி தெரியாம விழுந்திடப் போறாரு... கையப்பிடிச்சுக் கூட்டிட்டுப் போங்கம்மா...” என்று கல்யாணராமன் சொல்லிவிட்டுக் கீழ்த்தளத்தில் இருக்கும் மணமகன் அறைக்குச் சென்றான்.  அவனுடன் அவனது நண்பர்களும் உள்ளே சென்றனர்.

       “பட்டு வேட்டிய மட்டும் கட்டப் போறாய்... சட்டை கிடையாது...!”
நண்பன் நடராஜன் சொல்லிக்கொண்டே பட்டு வேட்டியை நீட்டினான்.

       “ஒன்னோட கட்டு மேனிய பட்டு வேட்டியோட எல்லோரும் இன்னக்கிப் பாக்கப்போறாங்க...” உடனிருந்த மற்றொருவன் கூறினான்.

        “எனக்கே அத நெனச்சா வெக்கமாத்தான் இருக்க... என்னா வழக்கம்டா... சட்டை போடாம...!” என்று மாப்பிள்ளை கல்யாணராமன் கேட்டான்.

         “கேட்டா... அதுக்கு ஏதோ ஒரு காரணம் சொல்லுவாங்கா...!  இதெல்லாம் நம்ம மரபு... அப்படி  இப்படின்னு கதை சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க... ஊரோட ஒத்துக் போக வேண்டியதுதான்...பேண்ட் சட்டையை கழட்டிட்டு பேசாம வேட்டியக் கட்டுடா...!” என்று நண்பன் நடராஜன் சொன்னான்.

          கல்யாணராமன் பட்டு வேட்டியக் கட்டிக்கொண்டு தலையைச் சீப்பால் சீவினான்.  முகத்திற்குப் பவுடர் போட்டுத் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மும்முரம் காட்டினான்.  

   சசிரேகாவை மணமகள் அறைக்குள் அலங்கரிப்பதற்காக உறவுப் பெண்கள் அழைத்துச் சென்றனர்.  

        “சிரிச்ச முகமா இரும்மா... மூஞ்சிய உம்முன்னு வச்சிருக்காத... இன்னக்கித்தான் சிரிச்சிக்கிட்டு இருக்கணும்...!” உறவுக்காரப் பெண் ஒருத்தி உரிமையுடன் சொன்னாள்.

         “இதுக்கு மேல சிரிக்க முடியாதுங்கிறியா... ஆமாமா... இன்னக்கியே சிரிச்சிக்கம்மா...!”  பேசிக்கொண்டே சசிரேகாவைப் பட்டுச்சேலையைக் கட்ட வைத்தனர்.  கழுத்தில் பெரிய நெக்லஸ், தங்கச் செயின்கள், நெத்திச் சுட்டி, இடுப்பில் ஒட்டியாணம், காலுக்குத் தங்கக் கொலுசு எல்லாம் அணிவித்தனர்.  தலையில் தலையில் மல்லிகைப் பூச்சரங்கள் சூடினர்.  உதட்டுச்சாயம் பூசச்சொல்லி வற்புறுத்தினர்.  அதெல்லாம் வேண்டாம் என சசிரேகா மறுத்து விட்டாள்.  தங்க விக்ரகம் போலச் சசிரேகா ஜொலிப்பதைப் பார்த்து பெண்களே அவளைப் பார்த்து ‘‘எங்க கண்ணே பட்டுடும் போல இருக்கு...’’   உனக்கு  திருஷ்டிதான்  சுத்திப் போடனும்  என்று மணமகள் அறைக்குள் இருந்தவர்கள் சொன்னார்கள்.  அவர்கள் எதைஎதையெல்லாமே பேசிக் கொண்டு இருந்தார்கள்.  சசிரேகா அதையெல்லாம் கேட்கின்ற மனநிலையில் இல்லை.

   ரெங்கராஜ் ‘ பி.எச்.இ.எல்.’லில்  மேனேஜராக இருப்பதால்  கம்பெனியில் இவருக்குக் கீழே பணியாற்றும்  ஊழியர்கள் கூட்டமும் அதிகமாக வரவே மண்டபம் நிரம்பி வழிந்தது.

    “திருமண மண்டபம் என்று பெயர்தானே தவிரப் பேன் வசதிகூட இல்லை... கீத்துக் கொட்டகை... ஒரு நல்ல கல்யாண மண்டபம் கிடைக்கலையா...!.” வந்தவர்களில் ஒருவர்.

   “மேனேஜர் ஏன் இங்க போயிக் கல்யாணத்த வச்சாரு... நம்ம ஏரியாவில நல்ல மண்டபம் எத்தன இருக்கு...?“

   “இல்ல...இல்ல... ரெங்கராஜ் சாருக்கு... ரெங்கநாதர் பள்ளி கொண்டுள்ள  ஸ்ரீரங்கத்தில வக்கணுமுன்னு... அவரோட விருப்பம்... பெருமாள் மேல அவ்வளவு பக்தி...!”

   “ஒங்க விருப்படியெல்லாம் கல்யாணம் வக்க முடியுமா...?  அது அவுங்களோட விருப்பம்... அத விடுங்கப்பா... மணமேடை நல்லா அலங்கரிச்சிருக்காங்க... பாத்தியா... வீடியோகாரர் நம்பள எல்லாம் படம் எடுத்திட்டு வர்றாரு... நல்லாப் போஸ் கொடுங்க...?”

   “ஆமாமா... அப்பத்தான் கல்யாணத்துக்கு நாம வந்தது தெரியும்... சும்மா சொல்லக்கூடாது... செலவு செய்ய வேண்டியதுதானே... ஓரே பொண்ணு...  அமெரிக்க மாப்பிள்ள.... இருக்கிறவன் அள்ளி முடிய வேண்டியதுதான்...” - கம்பனியில் பணி புரிபவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு மாடியில் போடப்பட்டிருந்த  சேரில் அமர்ந்திருந்தனர்.

   மணமேடையில் அய்யர் வந்து அமர்ந்து ஹோமம் வளர்க்க ஆரம்பித்தார். மந்திரங்களைச் சமஸ்கிருதத்தில் ஓத ஆரம்பித்தார்;  அவர் ஓதுவது யாருக்குப் புரியும்?  மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே நெய் வார்க்க ஆரம்பித்தார்.  லேசாகப்  புகையுடன் தீ மெல்ல எரிந்தது.  தொடர்ந்து மந்திரங்களை ஓதிக்கொண்டே இருந்தார்.  
                                         
   
   சுமார் அய்நூறுக்கும் மேல் உறவினர்களும் நண்பர்களும் அந்த மாடியில் கூடிவிட்டனர்.   காலைச் சூரியனின் வெயில் சுள்ளென அடித்தது;  கூட்டம் நிரம்பி வழிந்ததாலும் மண்டபத்தின் மாடியில் கூரை வேயப்பட்டிருந்ததால் திருமண அரங்கத்தில் இருந்தவர்களுக்கு வியர்த்துக் கொட்டியது.

   வீடியோகிராபர் இதையெல்லாம் சுற்றி வளைத்துத்  தன் கேமராவிற்குள் படமெடுத்துக்  கொண்டிருந்தார்.

   “நாழியாகுது... சீக்கிரம் மாப்பிள்ளயக் கூட்டிண்டு வாங்கோ...!” அய்யர் அவசரப்படுத்தச் சிறிது நேரத்தில் பட்டுவேட்டி கட்டிய மாப்பிள்ளையை மணமேடைக்கு  அழைத்து வந்தனர்.
                                       


   தூரத்தில்  படமெடுத்துக் கொண்டிருந்த  வீடியோகிராபர்  மணமகன் வருகை புரிந்ததை அறிந்து வேமாக ஓட்டமும் நடையுமாக  மணமேடை அருகே வந்தார்;  வந்தவர் ‘போகஸ்’  விளக்கின் பிளக்கைச் சொருகினார்.  அடுத்த நொடியே ‘டமார்’ என  போகஸ் லைட் வெடித்து, கேமராவுடன் யாகத்தீயில் விழுந்தபொழுதே, அய்யர் கையில் இருந்த நெய் சொம்பைத் தட்டிவிட்டுத் தீயில்  கவிழ்ந்தது.   ‘டமார்...டமார்...’ சப்தம் கேட்க தீச் சுவாலை மேலெழும்ப மணமேடையே ஒரே புகைமூட்டமாகிக்  கூரையில் தீ பற்றியது.   தீ மிக வேகமாகப் பரவியது.  திருமணத்துக்கு வந்து மாடியில் அமர்ந்திருந்தவர்கள் மொத்தமாக எழுந்து கீழே இறங்க ஓடினர்.  கூட்டம் முழுக்க ஒரே நேரத்தில் ஓட முனைந்ததால் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு கீழே விழுந்தனர்.

    கீழே மணப்பெண் அறையில் இருந்த சசிரேகாவை  உறவுப் பெண்கள்  சரியான நேரத்தில் மண்டபத்தைவிட்டு வெளியே அழைத்துக் கொண்டு வந்தனர்.

   மணமகன் கல்யாணராமன் வேகமாக ஓடி அவனின் அம்மாவிடம் ‘ ‘‘அப்பாவை நான் தூக்கிகொண்டு வருகிறேன்... நீங்க வெளியே போங்க...” என்று சொல்லிவிட்டு;      பார்வை சரியாகத் தெரியாத தனது அப்பாவைத் தூக்க முனைந்தான்;  அவர் கனமாக இருந்ததால் அவனால்  தூக்க முடியவில்லை.  ‘‘யாராவது அப்பாவைத் தூக்க உதவுங்கள்’’ என்று அபயக்குரல் எழுப்பினான்.  அவரவர் தப்பித்தால் போதும் என்று  ஓடுவதிலேயே மும்முரமாக இருந்தனர்.

   மாடிப் படிகள் மிகக் குறுகலாக இருந்ததால் ஓடியவர்களால்  வேகமாக வெளியேற முடியவில்லை. கூட்டம், கூட்டமாக முட்டிக் கொண்டு அவர்கள் கீழே விழுந்தனர்.  நெரிசல் மற்றும்  குழப்பத்தால் பெரும்பாலானவர்கள் மாடியைவிட்டுக் கீழே இறங்க முடியவில்லை.   மாடியில் இருந்து இறங்கும் இடத்திலும் தீப்பிடித்துக் கொண்டது. படிகளை அடையமுடியாமல் பலரும் தவித்தனர்.  தீ மிக வேகமாகப் பரவியது. தீப்பிடித்த கூரை சரிந்து விழுந்தது.    அங்கிருந்தவர்களின் உடைகளில் தீப் பற்றிக் கொண்டது.    புகையில் பலர் மயங்கி விழுந்தனர்.  மண்டபத்தின் மர ஜன்னல்கள், கதவுகளிலும் தீவேகமாகப் பரவி எரிந்தது.

   மண்டபத்தில் ‘அய்யோ...அம்மா...காப்பாத்துங்க...’ என்ற அலறல் சத்தமும் மரண ஓலமும் நீண்ட தூரத்துக்குக் கேட்டது.  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஒன்றும் செய்ய முடியாமல் செய்வதறியாமல் திகைத்து  நின்றனர்.. 


   அங்கு நின்றிருந்தவர்களில் யாரோ ஒருவர் தீயணைப்புப் படைக்குப் போன் செய்தார்..  சில நிமிடங்களில் ஒட்டு மொத்த மண்டபமும்  தீப் பந்தமாக மாறியது. 

   மண்டபம் மிகக் குறுகலான சந்துக்குள் இருந்ததால், வெளியில் இருந்தவர்களாலும் உள்ளே சென்று யாரையும்காப்பாற்ற முடியவில்லை.

   சற்று நேரத்திலேயே திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள்  விரைந்து வந்தன.  எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க வீரர்கள் பலமணி நேரம் போராடினர்.  நீண்ட போரட்டத்திற்குப் பிறகே தீ அணைக்கப்பட்டது.  அதன் பிறகே வீரர்கள் உள்ளே செல்ல முடிந்தது..  

     திருச்சியில் இருக்கும் அனைத்து ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டது.  நூற்றுக்கும் மேற்பட்ட படுகாயமடைந்தவர்களைத் தீயணைப்புப் படையினர் மீட்டு ஆம்புலன்ஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்துக் கொண்டே இருந்தனர்.  திருச்சி அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ்கள் பறந்தன. 

        “ எங்க என் மாப்பிளை எங்க என் மாப்பிள்ளை ?” என ரெங்கராஜ் கதறியபடி மாடிப்படியில் ஏறத் தொடங்கினார்.  

   
                                                                                 வ(ள)ரும்...
படிக்க  ‘கிளிக்’ செய்க 

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (10)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (11)

நீங்க நினைக்காத நெஞ்சம்...!(12)


-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.


















Related Posts Plugin for WordPress, Blogger...