ஞாயிறு, 8 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)

நீங்க நினைக்காத நெஞ்சம்...!  (4)


  காரின் கதவை அப்பா ரெங்கராஜ் வேகமாகத் திறக்க  சசிரேகா அமர்ந்ததும் கார் ‘விர்’ரெனச் சீறிப் பாய்ந்தது.  காருக்குள் யாரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவேயில்லை.  அப்பா கோபமாக இருக்கிறார் என்றால் பேசமாட்டார் என்பது சசிரேகாவுக்குத் தெரிந்ததுதான்.   பதினைந்து நிமிடத்திற்குள் வீட்டின் கார்பார்க்கில்   இடிக்கும்படி போய்க் குலுங்கிக் கார் நின்றது.

  வீட்டிற்குள் நுழைந்ததும் சட்டையைக்  கழட்டிக் கொக்கியில் மாட்டிக் கொண்டேஅப்பா ரெங்கராஜ்  கேட்டார்,  “யார் அவன்...?”

  “.....................................................................................“  சசிரேகா ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.
  “யார் அவன்னு கேட்கிறேது காதுல விழுவுதா...?”  இப்போது குரல் உயர்ந்திருந்தது.

  “என்னோட... காலேஜ்ல... படிக்கிறாருப்பா...” பயத்துடனே மெதுவாகச் சொன்னாள்.

  “அவனோட சிரிச்சுப்  பேசிட்டு வந்தியே... நா அதக் கேட்டேன்...!”

  “காலேஜ் பங்ஷனைப் பத்தி  பேசிட்டு...” -பேச்சை இடைமறித்த ரெங்கராஜின் பார்வையில் உஷ்ணம் இருந்தது.

  “நானும் காலேஜ்ல ஆடுற ஆட்டத்தப் பார்க்க  சர்ப்பரைஸா வரலாமுன்னுதான்  வந்தேன்... வர கொஞ்ச லேட்டாயிடுச்சு... சரி... அது கிடக்கட்டும்... அவனப்பத்திக் கேட்டேன்ல்ல...”

  “ பேரு தமிழினியன்... அவரு ரொம்ப நல்லவருப்பா... ”

  “அவனப் பத்தி சர்டிபிக்கட் கேக்கலை...விவரத்தச் சொல்லு...”

  “துவாக்குடியில குடியிருக்காரு... அம்மா மட்டும்தான் கூலி வேலை...”

  “அவன் எங்க இருக்கான்... அவன் குடும்பத்தியெல்லாம் கேக்கலை...”

  “வேற என்னப்பா...?” தயங்கியபடி கேட்டாள் சசிரேகா.

  “அவனக் காதல் கீதல் பண்றேன்னு சொல்லிக்கில்லித் தொலைக்க மாட்டியில்ல...”

  “.................................................................................................”

  “ஒங்க அம்மா... சாகிறப்ப.... ஒன்ன அவுங்க அண்ணன் மகனுக்கத்தான் கட்டிக் கொடுக்கனுமுன்னு என்னிட்ட சத்தியம் வாங்கிட்டு கண்ணமூடினாங்க தெரியுமில்ல...!”

  “தெரியாதுப்பா...!”

  “ஆமாமா...ஒனக்குத் தெரியாது... நீ அப்ப சின்னப் பொண்ணு...!  அமெரிக்காவில இருக்கிற மாப்பிளதான் ஒனக்குன்னு முடிவான ஒன்னு...!“

  “அப்பா....”வேகமாக எதையோ சொல்ல வந்தவள் அமைதியானாள்.

  “என்னம்மா... என்னா... ஏதோ சொல்ல வந்தியே...!”

  “......................................................................................................” தலைகுனிந்து நின்றாள்.

  “அடுத்த மாசம் மாப்பிள்ள அமெரிக்காவில இருந்து லீவுல  வர்றாரு...அப்ப ஒனக்கு கல்யாணம் செஞ்சிட வேண்டியதுதான்...”

  “கல்யாணம் எல்லாம் வேண்டாம்ப்பா...”

  “ஏம்மா.,..” பதட்டத்துடன் ரெங்கராஜ் கேட்டார்.

  “படிப்பு இன்னும் முடிக்கலைல்லப்பா...”

  “கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனையோ பேர்  படிக்கிறது இல்லையா... அது மாதரி நீயும் படி... ஒங்க மாமா மகன்தான் மாப்பிள்ளைன்னு ஆனதுக்கு அப்புறம்...லேட் எதுக்கும்மா...  நானும் இந்த வருஷத்தில ரிட்டையர் ஆகுறேன்... போஸ்டில இருக்கிறப்பவே மேரேஜ் பண்றதுதான் நம்மளுக்கும் கௌரவமா இருக்கும்...  பொண்ணும்...  மாப்பிள்ளையும்... புதுசாவா பார்க்கப் போறீங்க...?  மாப்பிளைட்ட போன்ல பேசுறேன்... மாப்பிள்ளை வந்தவுடனே அந்த வாரத்தில மேரேஜ்தான்...!  பத்திரிக்கை எல்லாம் அடிச்சிடலாம்...”

  “அப்பா...?” கெஞ்சிய குரலாய் ஒலித்தது.

  “என்னம்மா...?”

  “இந்தக் கல்யாணம் வேண்டாம்ப்பா... மாப்பிள்ளைய எனக்குப் பிடிக்கலை...!”

  “ஏம்மா... ? என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்கலாம்மா...?”

  “மாப்பிள்ளைய பிடிக்கலைன்னா... பிடிக்கலை...”

  “அதான் ஏன்னு கேட்டேன்...?”

  “அவரு குடிக்கிறாருப்பா...!”

  “அவ்வளவுதானே... ஊரு உலகத்தில யாரு குடிக்காம இருக்காங்க... ஏன் நா குடிக்கில...ஒங்க அம்மா என்னக் கட்டிக்கல... அதுவும் மாப்பிள்ள பாரின்ல்ல இருக்கார்... அங்க இதெல்லாம் சகஜம்மா... நா கூட என்னமோ ஏதோன்னு  நெனச்சுட்டேன்...!   வேற ஒன்னுமில்லல்ல...!”

  “அப்பா... அப்பா... வந்து... வந்து... நா... நா... தமிழினியன லவ் பண்றேன்...!”
எப்படியோ தட்டுத் தடுமாறி பம்மிப் பம்மி சசிரேகா சொல்லியே விட்டாள்.

  “என்னடி சொன்னே...?”  கேட்ட அடுத்த நொடி  கன்னத்தில் ‘பளார்’ என்று ஓர் அறைவிழுந்தது;  அவளின் தலைமுடியை பிடித்து இழுத்துவிட சுவற்றில் போய் மோதிய சசிரேகாவின் தலையில் இரத்தம் பிசுபிசுத்தது.

  “ நா சந்தேகப்பட்டது சரியாத்தான் போச்சு... ஏண்டி சிறிக்கி முண்ட... படிக்க அனுப்பிச்சா... ஒனக்கு ‘லவ்‘ கேக்கிதாக்கும்... கேக்குமுடி கேக்கும்... அவன் குலம் கோத்திரம்  என்னான்னாவது   தெரியுமா...?”

  “நம்ம குலமில்லப்பா...!”

  “அடி நாதாரி முண்ட... ஒனக்கு கண்ணு கிண்ணு பொட்டையாப் போச்சா...?  பொட்டக் கழுத...  போயும் போயும் ஒரு பொறம்போக்குப் பயலா...  நம்ம அந்தஸ்த்த நினச்சு பாத்தியா...?  பாரின் மாப்பிள்ள எங்கே... அனாதப் பய எங்கே?  அவனுக்கும் இவனுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது தெரியுமா? தெரியாதா...?”

  “ஒன்னும் தெரிய வேண்டாம்...எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்... படிப்ப முடிச்சுக்கிறேன்...”  தலையிலிருந்த வழிந்த இரத்தத்தை  ‘சாலில்’ துடைத்துக் கொண்டே சசிரேகா பேசினாள்.

  “படிச்சுக் கிழிச்சது போதும்...இன்னையில இருந்து காலேஜ் போறத மறந்திடு...!  அமெரிக்காவில இருந்து மாப்பிள்ளய அடுத்த மாசம் இல்ல... இந்த மாசமே உடனே வரச்சொல்றேன்... நா முடிவு பண்ணிட்டேன்... செத்துப் போன ஒங்க அம்மாவோட முடிவும் அதுதான்... ”

  “நீங்க முடிவு பண்ணினா போதுமா...? நா முடிவு பண்ணனுமுல்ல...!“

  “ஓ முடிவக் கேட்டா  ஒன்ன ஸ்கூல்ல சேத்தோம்... ஓ முடிவக் கேட்டா டான்ஸ் கிளாஸ்ல சேத்தோம்... ஓ முடிவக் கேட்டா காலேஜ்ல்ல சேத்தோம்...எதுக்காவது ஒ முடிவக் கேட்டிருக்கோமா ?”

            “இதுக்கு கேக்ணுமுல்ல...”

            “ஏன்...?”

            “இப்ப நா ஒரு மேஜர்... எ முடிவக் கேக்கணுமுல்ல... ” -என்று சசிரேகா கேட்டதும் ரெங்கராஜுக்கு கோபம் எங்கிருந்தான் வந்ததோ?

             “ஒனக்கு அந்த நெனப்பு வேறயா... ‘நெனப்புதான் பொழப்பக்  கெடுக்குமுன்னு’ சொல்வாங்க...புரியாம பேசாதே...”
   
  “நீங்கதான்  புரிஞ்சிக்காமா பேசுறீங்க...!”

  “யாரு... நா... புரியாமா பேசுறேன்னா...?  அம்மா இல்லன்னு ஒனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தது   தப்பாப்பாப் போச்சு...!  முனுக்கிங்கிறதுக்கு எல்லாம் கோபப்பட்டு... அழுது அடம்பிடிச்சு நினச்சத சாதிப்பாய்...!  ஆனா... இந்த விசயத்தில நீ நினைச்சது நடக்குமுன்னு கனவு காணாதே...!  ஆரம்பத்திலயே முடிவச் சொல்லிட்டேன்... முடிவாச் சொல்லிட்டேன்...இது நடக்காது!”

  “நானும் முடிவாச் சொல்றேன் நீங்க நெனச்சது நடக்காது...!”

  “நா நினைச்சது நடக்காதுன்னா... நீ நினைக்கிறவனத்தான் மேரேஜ் பண்ணுவேன்னு சொன்னீன்னா... அவன் உயிரோடு இருந்தாத்தானே அது நடக்கும்... கண்டம் துண்டமா வெட்டிப் பொலி போட்டிடுவேன்... ஒங்க அப்பாவ பத்தி ஒனக்கு நல்லாவே தெரியும்...!  எதை அடையனுமுன்னு இந்த ரெங்கராஜ் நினச்சானோ... அதை அடையரத்துக்கா எதையும்  செய்யத் தயங்க மாட்டான்... தெரியுமில்ல...!”

அழுது கொண்டு அவளின் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டாள்.
                                                           


                                                                                                                                வ(ள)ரும்...
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.   


25 கருத்துகள்:

 1. விறுவிறுப்பாக செல்கிறது கதையின் ஓட்டம். தொடர்கிறேன் அய்யா!
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அட எதிர்ப்பார்ப்போடு நிறுத்திட்டீங்களே..பக்குன்னு இருக்கு...அப்பாவ நினச்சா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்புள்ள வலைச்சித்தரே!

   தாங்கள் தொடர்வதற்கும் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஏதோ தெரிகின்றது யூகிக்க முடிகின்றது. இருந்தாலும் கதாசிரியர் நீங்கள் எப்படி முடிக்கப் போகின்றீர்கள் என்று ஆவலுடன்....தொடர்கின்றோம் நண்பரே..

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள அய்யா,

  தாங்கள் தொடர்வதற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. காதலுக்கு முட்டுக்கட்டை! தகர்ந்ததா என அறிய ஆவலுடன் தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் ஆவலுக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. இப்படித்தான் இருக்கும் என்பது எதிர் பார்த்ததுதான் காரணம் அவர் அப்பா தொடர்கிறேன் மணவையாரே..
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. விறுவிறுப்பு
  தொடர்கிறேன் ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள கரந்தையாருக்கு,

   தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. தாளிட்ட கதவைத் திறக்க வையுங்கள் நண்பரே! தற்கொலை கிற்கொலை என்று ஏதாவது செய்துவைக்கப் போகிறாள் அந்தப் பெண்! - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வருகைககும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. சசி.....உன் நிலைமை என்ன ஆச்சு!!! ஆவலும், எதிர்பார்ப்புமாக காத்திருக்கிறோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி,

   தங்களின் கருத்திற்கும் காத்திருப்பிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. அய்யா...

  வழக்கம் போல ஒரு நீண்ட விடுப்புக்கு பிறகு வருகிறேன்...

  தங்கள் உடல் நலமா ?

  தொடர்கதை ?!... முந்திய பகுதிகளையும் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்.

  நன்றி, விரைவில் !
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உடல் நலம் பரவாயில்லை. அடிபட்ட இரண்டு விரல்களில் மடக்க இயலாமலும் எந்தப் பணிகளும் அந்த விரல்களில் செய்ய முடியாத நிலை. செருப்பு இல்லையே என்று கவலைப்படுகிறவனுக்குக் கால் இல்லாதவனைப் பார்க்கின்ற பொழுது திருப்பதி ஏற்படும் அல்லவா?

   நன்றி.

   நீக்கு
 12. வழக்கம் போல் அப்பாவின் எதிர்ப்பு. அடுத்து என்ன நடக்கப் போகிறது... தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. அன்புள்ள அய்யா,

  தங்களின் தீபாவளி வாழ்த்திற்கு நெஞ்சார்ந்த நன்றி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. இது நாலாம் பகுதி என்பதை இப்போதுதான் கவனித்தேன் ,இதற்குள் சசி ரேகாவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்று நம்புகிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜீ,

   தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...