திங்கள், 17 செப்டம்பர், 2018

பெரியாரையா செருப்பால் அடித்தாய்...?!





பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா :






சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் தன்னுடைய காலணியை கழற்றி பெரியார் சிலை மீது வீசியுள்ளார்.




தாராபுரம் உடுமலை சாலை தீவுதிடல் பூங்காவில் தந்தை பெரியாரின் 6 அடி உயர வெண்கலச்சிலை அமைந்துள்ளது. விஷமிகள் சிலர்  சிலை மீது ஒரு ஜோடி காலணிகளை வைத்து அவமரியாதை செய்ததோடு, கல்லால் அடித்தும் சேதப்படுத்தியுள்ளனர்.










அந்த நாய்கள்...  நன்றியுள்ள நாய்கள்...!

செருப்பால் அடித்தாயே...!
உன் தாயிடம் கேள்...
உனக்குத் தந்தை யாரென்று...?
யாரென்று தெரியவில்லையென்றால்
அவர்தான் பெரியார்...!


வாழும்போதே...
வண்டியில் போகும்போதே
அவர்படாத செருப்படியா...?

அடியே!  அடி...!
 உனக்காக உழைத்தவர் அவர்தான்...
உனக்குத் தெரியாது...!
அவர்...
வாழும்போது -நீ
வாழ்ந்திருக்க மாட்டாய்...!
அடியே!  அடி...!


பெண்கள் உருப்படியாக-
தேவதாசிமுறையை 
ஒழிக்கப்  பாடுபட்டவருக்குச் செருப்படியா?
அவர் பட்டபாட்டிற்கு...
இன்னும் பலன் கிடைக்கவில்லை!
அடியே!  அடி...!
                                                                   






மூத்திரப்பையை இடுப்பில் கட்டிக்கொண்டு
மூடச்சாத்திரங்களை
மூடச்செய்யப்
பகுத்தறிவு விளக்கேந்தி
பாரெங்கும்  96 வயதிலும்
பம்பரமாய்ச் சுற்றிச் சுற்றிப்
போராடிய வீரனுக்கு...
வீனர்களின் விபரீதம்...!
 நீர்  பார்த்தீரா....?

இவர்களுக்காகத்தானே...
இடஒதுக்கீடு கேட்டாய்...!
இவர்கள் ஒதுங்க இடம் கொடுத்தவனுக்கு...
இவர்கள் ஒதுங்கும் இடம் பார்த்தீரா...?

நாய்கள்கூட-
தன்காலில் படாமல்
நாகரிகமாகச்  சிறுநீர்கழிக்கும்  பார்த்தீரா...?

தந்தை பெரியார்...
நாய்கள் பதினைந்துக்கும் மேல் வளர்த்தாராம்...!
அந்த நாய்கள்...
அவர்   பயணிக்கும்  வண்டியில் பயணிக்கும்...
அரங்கத்தின் கீழே அமர்ந்திருக்கும்...
அந்த நாய்கள்...
நன்றியுள்ள நாய்கள்...!

-மணவை ஜேம்ஸ்.




ஒரு சமயம் கடலூரில் கூட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு ரிக்‌ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தேன். இன்றுபோலக் கார் வைத்துக்கொள்ளாத காலம் அது, இருட்டு அதிகம் இருந்த இடத்திலிருந்து ஒருவன் என் மீது செருப்பினை வீசினான்; அது எனது ரிக்‌ஷா வின் முன் விழுந்தது. அதனை எடுக்கச்சொல்லிக் கொஞ்சம் தூரம் போனேன். பிறகு யோசனை வந்தது. செருப்பு நல்லதாக இருக்கின்றது; ஒற்றையாக இருந்தால் என்ன பிரயோசனம்! திருப்பிவிடு அந்த இடத்திற்கு இன்னொன்றையும் வீசுவான், அதையும் எடுத்துக்கொள்ளலாம் என்று ரிக்‌ஷாக்காரனிடம் கூறினேன். அவனும் ரிக்‌ஷாவைத் திருப்பிவிட்டான். குறிப்பிட்ட அந்த இடம் போனதும் இன்னொரு செருப்பையும் வீசினான். மிக்க நன்றி! இரண்டு செருப்பையும் வீசியமைக்கு என்று சொல்லிவிட்டு ஜாகைக்குத் திரும்பினேன்.” (விடுதலை-24.03.1973) 


பெரியார் ஒரு சமூகச் சீர்திருத்தவாதி மட்டும் அல்ல ஒரு போராளி ,ஆம்

 மூத்திரப் பையை இடுப்பில் கட்டிக் கொண்டு 96 வயது வரை 

பகுத்தறிவைப்  பிரச்சாரம் செய்த ஒரு போராளி !



=====================================================================




எங்கள் பெரியார் – மனு வேதம் கொளுத்திய திரியார்




கவிஞர் கவிமதி



மூடிமறைத்துப் பேச
அறியார்
மூடப் பழக்கம் எதுவும்
தெரியார்

நூலார் திமிர் அறுத்த
வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும்
வரலாறார்

நரியார் தோலுரித்த
புலியார்
நால்வகை வருணம் கலைத்த
கரியார்

எளிதாய்க் கடந்து செல்லும்
வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த
விழியார்

தெளியார் அறிவு நெய்த
தறியார்
தெளிந்தோருக்குத் தெளிவான
குறியார்

உலகத் தமிழருக்கு
உரியார்
உணர்ந்தால் விளங்கும்
மொழியார்
மனு வேதம் கொளுத்திய
திரியார்
மாதருக்குத் தெளிவான
ஒலியார்
தேடிப் படிக்க சிறந்த
நெறியார் – தூய
தாடி முளைத்த
தந்தை பெரியார்.

நன்றி- கவிமதி


‘இது புலிகளை மதிக்காத

புழுக்களின் தேசமடா


உணரத் தெரியாத 

ஊமைகளின் பூமியடா


இனி மனிதர்க்கல்ல..

நாற்சந்தியெங்கும் நாம்

நாய்களுக்குச் சிலை வைப்போம்.


நன்றி கற்கட்டும்

நம்தேசம்......‘


கவிராஜன் கதையில் கவிப்பேரரசு வைரமுத்து மகாகவி பாரதியின் இறுதி ஊர்வலம் பற்றி எழுதிய கவிதை. 

-மாறாத அன்புடன்,


 மணவை ஜேம்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...