பிழையின்றித் தமிழில் எழுதலாம்!
பிழையான சொல் ‘சிவப்பு’ வண்ணத்திலும்...
பிழை திருத்தம் ‘பச்சை’ வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பிழை திருத்தம் ‘பச்சை’ வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
1.நீங்கள் அனுப்பிய புத்தகங்கள் ஒவ்வொன்றும்
புதுமையாக உள்ளன.
(‘ஒவ்வொன்றும்’
என்னும் ஒருமைச் சொல் ‘உள்ளன’ என்னும் பன்மை வினை
கொண்டு முடிவது பிழையாகும். எனவே ‘புதுமையாக
உள்ளது’ என
ஒருமையில் தொடர் முடிதல் வேண்டும்.)
நீங்கள் அனுப்பிய புத்தகங்கள்
ஒவ்வொன்றும் புதுமையாக உள்ளது.
2.ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள்
இருக்கின்றன.
(‘ஒவ்வொரு’
என்னும் ஒருமைச் சொல்லைத் தொடர்ந்து ‘கிராமங்கள்’ என்னும் பன்மைச்
சொல் வருவது பிழையாகும். எனவே ‘ஒவ்வொரு
கிராமத்திலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன’ எனத் தொடர் அமைதல் வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடங்கள்
இருக்கின்றன.
3. அவள் உள்ளத்தில் சந்தேகத்திற்கு
மேல் சந்தேகம் எழுந்தன.
(இரண்டாவதாக வரும் ‘சந்தேகமே’ எழுவாய். ஆதலால் ஒருமை முடிவு பெற வேண்டும்.)
அவள் உள்ளத்தில் சந்தேகத்திற்கு மேல்
சந்தேகம் எழுந்தது.
4. காய்கள் பெரியதாய் இருக்கும்.
(காய்கள் என்னும் பன்மைப்பெயர்
‘பெரியதாய் இருக்கும்’ என்னும் ஒருமை வினை கொண்டு முடிவது பிழையாகும். எனவே, ‘பெரியனவாய் இருக்கும்’ எனத் தொடர் பன்மை வினை
கொண்டு முடிதல் வேண்டும்.
காய்கள் பெரியனவாய் இருக்கும்.
5.
பிரபாகரன் கொடுத்த புத்தகம் இது அல்ல.
‘இது’ என்னும் அஃறிணை
ஒருமைப் பெயர் ‘அல்ல’ என்னும் அஃறிணைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிவது
பிழையாகும். எனவே ‘இதுவன்று’ எனத் தொடர் முடிதல்
வேண்டும்.
பிரபாகரன் கொடுத்த புத்தகம் இதுவன்று.
6.
பரிசு பெற்றவள் அவள் அல்ல.
‘பரிசு பெற்றவள்’ என்னும் உயர்திணைப்
பெண்பாற் ஒருமைப் பெயர், ‘அல்ல‘ என்னும் அஃறிணைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு
முடிவது பிழையாகும். எனவே ‘அவள் அல்லள்’ எனத் தொடர் முடிதல்
வேண்டும்.
பரிசு பெற்றவள் அவள் அல்லள்.
7.
வைகை அணைக்கட்டில் 10 அடி தண்ணீரும் மேட்டூர் அணைக்கட்டில் 50 அடி
தண்ணீரும் இருக்கின்றன.
(தண்ணீருக்குப் பன்மையில்லை ஆதலால்
ஒருமையில் இருக்கிறது எனத் தொடரை முடிக்க வேண்டும்.)
வைகை அணைக்கட்டில் 10 அடி தண்ணீரும்
மேட்டூர் அணைக்கட்டில் 50 அடி தண்ணீரும் இருக்கிறது.
8.
யானைகள் போர்க்களம் சென்றது.
(‘யானைகள்’
என்னும்அஃறிணைப் பன்மைப்பெயர் ‘சென்றது’
என்னும் அஃறிணைப் ஒருமை வினைமுற்றைக் கொண்டு முடிவது
பிழையாகும். எனவே ‘சென்றன’ எனப் பன்மையில்
தொடர் முடிதல் வேண்டும்.
யானைகள் போர்க்களம் சென்றன.
9.
தமிழ்நாடு முப்புறமும் பறவையால் சூழப்பட்டுள்ளது.
(பறவை – காக்கை குருவி போன்ற பறவை ; பரவை – கடல்)
தமிழ்நாடு முப்புறமும் பரவையால்
சூழப்பட்டுள்ளது.
10.
கடலில் கப்பல்கள் முழ்கியது.
‘கப்பல்கள் ’ என்னும் அஃறிணைப்
பன்மைப் பெயர்ச்சொல் ’மூழ்கியது’ என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிவது
பிழையாகும். எனவே ’மூழ்கின’ எனப் பன்மையில்
தொடர் முடிதல் வேண்டும்.
கடலில் கப்பல்கள் மூழ்கின.
(தொடரும்...
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.









