செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மரணம் – மார்ச்சுவரி – பாதித்த நாடகம்.



இதயங்கள் சங்கமம் 

                                     
                                      
                                                                                
 ஆசிரிய நண்பர் அவர்களின் மகன் வேலையின் நிமித்தமாக சேலம் சென்றிருந்த பொழுது  தந்தையிடம் சொல்லாமலே நண்பர்களோடு  சேர்ந்து இரு சக்கர வாகனங்களில்  ஏற்காடு சென்றிருக்கிறான்.  தினந்தோறும் தந்தையிடம் அலைபேசியில் பேசுபவன் அன்றிரவு எட்டு மணிக்குப் பேசியிருக்கிறான்.
 ‘‘ அப்பா நானும் நண்பர்களும் ஏற்காட்டிற்கு வந்தோம்.  நாங்கள்  இப்பொழுது புறப்படப் போகிறோம்.   அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டாம்... டவர் சரியாகக்  கிடைக்காது....கே.” எனத் தொடர்பைத் துண்டித்தான்.

ஏற்காட்டில்தான் அவன் பிறந்தான் என்பதால்தானோ என்னவோ அந்த இடத்தைப் பார்ப்பதில் அவனுக்கு அலாதிப்பிரியம்.

காலையில் ஆசிரிய நண்பர் பள்ளிக்கு வந்து விட்டார்.  

ஆசிரியரது அலைபேசி ஒலிக்கிறது.  

சார்... ஒங்களுக்குப் பையன் யாரும் இருக்காங்களா...?!

இன்சூரன்ஸ் கம்பனியிலிருந்து பாலிஸி போடுவதற்காகத் தொந்தரவு செய்கிறார்கள் என்று  போனின் இணைப்பைத் துண்டித்துவிட்டார் ஆசிரிய நண்பர்.

சிறிது நேரத்தில் மீண்டும் அலைபேசி ஒலிக்கிறது.

சார்... கொஞ்சம் சொல்றதைக் கேளுங்க... ஒங்க பையன் ஏதும் ஏற்காட்டிற்குச் சென்றிருந்தாரா...?”

ஆமாம்... சார்...ஆமாம்... என்ன சார்...?!”

அவருக்கு  ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சு... ஒங்களுக்குத்தான் கடைசியா போன் பண்ணி பேசியிருக்காரு... அதில பேரு அப்பான்னு இருந்திச்சு... அதான்…


சார்... என்ன ஆச்சு... எப்படி இருக்கான்... பிளீஸ்... சார்... எப்படி இருக்கான்...?”

சேலம் ஜி.எச். இருக்கான்... சீக்கிரம் வாங்க.............................................”   
 அதன் பிறகு  அலைபேசியில்  என்ன பேசினார் என்பது இவருக்கு ஒன்றும் புரியவில்லை. ... மயங்கிவிட்டார்.

அவரின் அம்மாவிற்கும் எப்படியோ தகவல் தெரிந்து விட்டது.

அதன் பிறகு  ஒரு  குவாலிஸ் வண்டியை எடுத்துக்கொண்டு அவருடன் நண்பர்கள்  நாங்கள் அய்ந்து  பேரும் சேலம் புறப்பட்டோம்.

வண்டியை வேகமாகச் செலுத்தத் துரிதப்படுத்திக் கொண்டே வந்தார்.
செல்லும் வழியெங்கும் பையன் எப்படி இருக்கிறான்...?  கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கள்...” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.


பைனுக்குச்  சிகிச்சை  கொடுத்துக்கொண்டு  இருக்கிறார்கள்... பரவாயில்லையாம்...” என்று அவருக்கு ஆறுதல் வார்த்தை சொல்லிக்கொண்டே வந்தோம்.

எங்களுக்கு  முன்கூட்டியே அந்த உண்மைத் தகவல் தெரிவிக்கப் பட்டுவிட்டது,. .


சேலம் ஜி.எச். சை நெருங்கிவிட்டோம்... வண்டி உள்ளே நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் உண்மையைச் சொன்னோம்.

பையன் இறந்திட்டான்... மார்ச்சுவரியில் வைத்திருக்கிறார்களாம்...” 

அழுதார்... அழுதார்....  அழுதார்...!  

மார்ச்சுவரிக்குள் முதன்முதல் நுழைகின்றதால் எப்படி இருக்கும் என்பதில் சற்று மனதுக்குள் கலக்கம் இருந்தது என்பது உண்மைதான்.  அதற்கு முன்னால் விபத்தில் இறந்தவர்களை; போஸ்ட்மார்டம் செய்யப்பட்டு முகம்மட்டும் பார்க்கும் படி விட்டுவிட்டு வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட உடலைப் பார்த்திருக்கிறோம்.

மார்ச்சுவரியின் கதவு திறக்கப்பட்டவுடன்  உள்ளே நுழைந்தோம்.  உள்ளே இருந்த பிணங்களின் வாடை குமட்டிக்கொண்டு வரவே கர்ச்சிப்பை எடுத்து மூக்கை மூடி கொண்டோம்.

மார்ச்சுவரியில் கிடக்கும் பிணங்களில் நண்பரது மகனுடைய  உடல் எங்கே கிடத்தப்பட்டிருக்கிது என்று ஒவ்வொரு உடலாகத் தேடினோம்.  போஸ்ட்மாடம் செய்வதற்காக மேசையில் கிடத்தப்பட்டிருந்தது.  தந்தை அடையாளம் காட்டி அழுதார்.   நேற்றைய இரவில் நடந்திருந்ததால் இந்த அந்திசாயும் வேளையில் உடல் சற்று ஊதியிருந்தது.  பல்லெல்லாம் கருப்பாக மாறியிருந்தது.

அங்கிருந்த போலிஸ்காரர் சொன்னார், “பையன் கீழே இறங்குவதற்கு இன்னும் மூன்று ஹேர்பின் வளைவுதான் பாக்கி… இன்னும் சற்று நேரத்தில் கீழே இறங்கி இருக்க வேண்டியது…. மழை பெய்திருக்கிறது… கண்ணாடி அணிந்திருந்ததால் மழையில் பாதை தெரியாமல் தடுப்புச்சுவரில் பைக் மோதி தூக்கிவீசப்பட்டிருக்கிறான்.  டபுள்ஸ் வந்திருக்கிறார்கள்.  பின்னால் அமர்ந்திருந்தவனோடு இவனும்  பைக்கோடு முப்பது அடி பள்ளத்தில்  விழ மரத்தில் மோதி இவன் இறந்துவிட்டான்.  மற்றொருவன் பிழைத்துக் கொண்டான்.

டாக்டர் வந்து போஸ்ட்மாடம் செய்ய;  உடலை நன்றாகக் கட்டிக்கொடுக்கிறோம் என்று தொழிலாளர்கள் பணம் வாங்கிக்கொண்டு குவாட்டரை உள்ளே இறக்கியவுடன் மிகவும் நேர்த்தியாக  வேலையைத் துரிதமாக செய்து முடித்தார்கள்.
உடனடியாக போஸ்ட்மாடம் செய்யப்பட்ட உடல் ஆம்புலன்ஸில் ஏற்பட்டு;  திருச்சியை நோக்கிப் புறப்பட்டது

அன்று  நடுஇரவில் வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டது;  அடுத்த நாள் உடல் அடக்கம் செய்யப்பட்டது.



நாடகம் எழுதுவதற்கு மூலகாரணம் நடந்த உண்மை நிகழ்வின் தாக்கம் என்றால் அது மிகையாகாது. 

ஆண்டு விழாவிற்கு நாடகம் போடுங்கள் என்று என்னை வேண்டிய பொழுது இதன் தாக்கம் என்னை மிகவும் பாதித்ததால் உண்மையுடன் என் கற்பனையையும் சற்றுச் சேர்த்து எழுதினேன்.

*********************************************************************************


இந்த நாடகத்தில் நடித்த மாணவனில் ஒருவன் பிளஸ்டூ.... முதல்  மதிப்பெண் எடுக்கக்கூடிய நல்ல மாணவன்… குடும்பத்தில் ஏதோ காரணத்தால் ஏற்பட்ட சிறிய பிரச்சனைக்காகத்  தற்கொலை செய்து இறந்துவிட்டான்  என்பது மேலும் வேதனை தரக்கூடியதாகும்.

********************************************************************************* 

  நாடகம் அரங்கேற்றம் நடைபெற்ற  ஒரு மாதத்திற்குள்ளாகவே   மற்றொரு ஆசிரியரின் மகன்கள் – இரட்டையர்கள் . அவர்களுள்  ஒருவன்  போலியோவினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.   அவனின் அப்பா அவனை மிகுந்த சிரமப்பட்டு மருத்துவம் பார்த்து  அவனை நடக்க வைக்க  பெரும் முயற்சி எடுத்து அவனை வளர்த்தார். 

படித்து முடித்து அவன்  ஒரு மென்பொருள் நிறுவனத்தில்  வேலை பார்த்து வந்தான்.  இருசக்கர வாகனத்தில் அவனை வேலைக்கு அலுவலகத்தில் விட்டுவிட்டு, மாலையில் சென்று வீட்டிற்கு அழைத்து வந்து உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தான் நன்றாக இருந்த மற்றொரு மகன்.  

அன்று வழக்கம்போல் வீட்டிற்கு அவனை அழைத்து வருவதற்காக  பைக்கில்  மற்றொருவன்  ஏற்றிக்கொண்டு வருகின்ற பொழுது, வேறொரு பைக் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குளாகி  பைக் ஓட்டிய அவன் சாலையில் மேலே தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்தான். 

108 ஆம்புலன்ஸ் வந்த புதிது… உடனடியாக மருத்துவமனைக்கு  ஆம்புலன்ஸ் உதவியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.  இரண்டு நாள் கழித்து அவன் மூளைச்சாவு அடைந்து விட்டான் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.   வாகனத்தில் பின் அமர்ந்து வந்த மாற்றுத்திறனாளிக்கு பெரிய பாதிப்பெதுவும் இல்லை.

நம் நாட்டில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவது சிறிது சிறிதாக நடைமுறைக்கு வர முற்பட்ட காலமது. 

அவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவனின் தந்தை முற்போக்குச் சிந்தனையுடன் சம்மதிக்க அவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன


*********************************************************************
                                                                                 

********************************************************************************
                                        மேடை நாடகத்தைப் பார்க்க ‘கிளிக்’ செய்க








-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

3 கருத்துகள்:

  1. விழிப்புணர்வு ஊட்டும் கருவை மையமாய் கொண்டு நாடகத்தை எழுதி அரங்கேற்றம் கண்டதற்க்கு வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜீ.

      நீக்கு
  2. நாடக அரங்கேற்றத்திற்கு வாழ்த்துகள்.

    இப்போது இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு வண்டி வாங்கிக் கொடுக்க, அவர்களும் கட்டுப்பாடில்லாமல் ஓட்டுகிறார்கள். சமீபத்தில் தலைநகர் தில்லியில் ரேஸ் பைக் ஓட்டிச் சென்ற இளைஞன் ஒருவன் விபத்துக்குள்ளாகி இறந்த செய்தி வருத்தம் தந்தது.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...