செவ்வாய், 15 செப்டம்பர், 2015

அண்ணாவின் பிறப்புப் பற்றித் தரம் தாழ்ந்து எழுதியவன்...!






அண்ணா... நீர் பெரியார்!




அண்ணா-
காஞ்சியில்
காவியத் தலைமகனாய்ப் பிறந்தாய்...!
அரசியல்...
அரிச்சுவடியைக் கற்றுத் தந்தாய்...!


தமிழனின்-
கிழிந்து கிடந்த மானத்தைத்
தன்மானத் தறிபூட்டி...                    
வெகுமானப் பட்டாடை
நெய்துகொடுத்த நெசவாளன்!




நீ-
குறளைப்போலக் குட்டையானவன்...
குரலிலோ கட்டையானவன்...
உடுத்தும் சட்டையைப் போல்
உள்ளம் வெள்ளையானவன்....
ஏளனப் பேச்சைச் சட்டை செய்யாதவன்...!



திராவிடக் கழகத்தின்-
பெரியாரைத் தலைவராகக் கொண்டவன்...
திராவிட முன்னேற்றக் கழகத்தின்-             
தலைவனானாலும் அந்த நாற்காலியைத்
தலைவருக்காகக் காலியாக வைத்திருந்த
அண்ணா... நீர் பெரியார்!

தமிழன் தாளாமல் – யாரையும்
தாழ்த்தாமல் – எவரையும்
சுரண்டாமல் – எவராலும்
சுரண்டப்படாமல் – யாருக்கும்
எசமானனாக இல்லாமல்- அவனியில்
எவர்க்கும் அடிமையாக இல்லாமல்              
வாழ வழிகாட்டிய
கொள்கைக் கலங்கரை விளக்கம்!


நீ-
முதல் அமைச்சரானாய்...! 
தமிழ் தனக்கே மகுடம் சூட்டிக் கொண்டது.
முதன் முறையாக...                           
தாய்க்கு மகன் பெயர் சூட்டும்
அதிசய நிகழ்வு நிகழ்ந்தது.
ஆமாம்...
‘தமிழ்நாடு’  எனப் பெயரிட்டு மகிழ்ந்தாய்!

இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கி-
தமிழனுக்கு வருகின்ற
இழிவைத் தடுத்திட்டாய்!
சுயமரியாதைத் திருமணம்-
சட்டப்படி செல்லுமெனச்                       
சட்டத்தையே திருத்திக்
கலப்புமணம் பெருக – நல்ல
காரியம் செய்தாய்.


கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டைக்
கண்ணெனக் காத்திட்டுக்
கழகம் வளர்த்தாய்.
நீ-
தலைமையமைச்சராய் இருந்த பொழுது
வெளிநாடு செல்வதற்காக                    
எஸ்.எஸ்.ஆர். இடம் இரவலாகப்
பழைய கோட் கேட்டுச் சென்றாயாமே...!
இப்பொழுதெல்லாம்...
இந்தியத் தலைமையமைச்சர்-பத்து
இலட்ச ரூபாய்க்கு மேல்...                                                                   
மேல் கோட் போட்டுத்தான்
கோலோச்சுகிறார்கள்.


நீ-
காலணிகூட
சாலையோரக் கடைகளில் வாங்கி
சாமானியனுக்கு வாழ்வு கொடுத்தாய்...!
ஆள்பவர்கள் ஆயிரம் ஜோடிகளுக்கு மேல்
காலணி ஆதிக்கம் செலுத்துகின்றனரே!                           
ஓ.... இதுதான்.... காலனி ஆதிக்கமோ?


மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணம் உண்டென்று     
மாற்றானை மதிக்கும்
நாகரிக நந்தவனம் வளர்த்தாய்!


நீ-
காஞ்சியில் போட்டியிட்ட போது...
காங்கிரசுக்காரர்...
உன் பிறப்புப் பற்றித் தரம் தாழ்ந்து
எழுதியிருப்பதைக் கண்டு சகித்து...
இரவிலும் படிக்க
பெட்ரோமாக்ஸ் விளக்கை
வைத்திட்ட ஒளிவிளக்கு!
கத்தியைத் தீட்டாமல்...
புத்தியைத் தீட்டப்
புத்தி புகட்டிய பண்பாளன்.


எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்
எதை எதையெல்லாமோ தாங்கிக் கொள்கின்றோம்.
வதைபடுவது – உதைபடுவது – உயிர்விடுவது
தமிழன் எதையும் தாங்கிக்கொண்டு இருக்கின்றான்!
                                                                                                               

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்;  இனி
நடப்பவை நல்லவையாக இருக்கட்டுமென்றாய்...
நடப்பவை நல்லவையாக இருக்குமென்ற
நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கின்றோம்!


(இன்று அண்ணா அவர்களின்  107 ஆவது  பிறந்தநாள்)


-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

28 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாருக்கு,

      தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சாதனைகளை நினைவுகூர்ந்து பதிவாக்கியமாக்கியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வணக்கம்,
    நலம்தனே ஐயா?
    தங்கள் தொகுப்பு அருமை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      இன்னும் பூரண குணம் அடையவில்லை. ஒரு கையில் தட்டச்சு செய்வதே பழகிவிட்டது. ஒரு சில வேளைகளில் தட்டச்சுப் பிழை ஏற்பட்டு விடுகிறது. ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது தப்பும் தவறுமாகவாவது செய்வோமே என்று எதையாவது எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
      தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஆகா அருமையான கவிதை. அண்ணாவின் எளிமையையும், அவரின் பொறுமையையும் அழகாக இயம்பியுள்ளீர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      வணக்கம். தங்களின் வருகைக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அவரைப் பற்றி படைத்துள்ள கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      வணக்கம். தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அறிஞர் அண்ணாவைப் பற்றி அற்புதமான
    பாடற் பதிவு ஐயா!
    மிக அழகாகச் சுருக்கமாகக் கவிதையாகவே படித்துவிட்டீர்கள்!

    மனம் லயித்துப் போனது!

    வாழ்த்துக்கள் ஐயா!
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      இது ஒரு பக்கம் இருக்க அன்புச் சகோதரி இளமதி ஒரு பெரும் தொகை (இதுவரை வந்த வரவுகளிலேயே பெரிய வரவு!) ஒன்றை அனுப்பி குழுவினரை மூச்சடைக்க செய்துவிட்டார் என்று தோழர் மது அய்யா எழுதியிருந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.

      சகோதரி திருமதி. இளமதியாரின் துணைவரைத் தூக்கி நிறுத்த பெரும் போரை நடத்திக் கொண்டிருக்கின்ற நீண்ட நெடிய போராட்டத்தில்... எதிர்பாராமல் திடீரென இவரையே நோய்ச் சூறாவளி புயலின் வேகத்தில் தாக்க,,, அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு வந்த அவரின் நலம் வாழ என்னோட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.

      பெரும்தொகை கொடுத்து விழா சிறக்க உதவியதற்கு நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  8. அருமையான கவிதை மணவையாரே வாழ்த்துகள்...
    தமிழ் மணம் நூற்றி ஏழுக்கு 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. தமிழ் மணத்தை நூற்று நெய்துகொடுத்த நெசவாளர் தேவகோட்டையாருக்கு பத்து இலட்ச ரூபாய்க்கு மேல் மேல் கோட் போட்டுவிட ஆசைதான்...! மனம் இருக்கிறது....!


      நீக்கு
  9. அண்ணாவுக்கு அருமையாக அஞ்சலி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.


      நீக்கு
  10. உங்களால் தான் இப்பேற்பட்ட படைப்பை படைக்க முயலும்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

      தங்களின் மேலான வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  11. அறிஞர் அண்ணா போன்ற தலைவரை தமிழகம் பெற்றதற்கும் தமிழர்கள் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அண்ணா மட்டும் இன்னும் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகள் கூடுதலாக தமிழகத்தை ஆட்சி செய்திருந்தால் தமிழகத்தின் வளர்ச்சி எங்கோ போயிருக்கும், தமிழகத்தின் தலையெழுத்தே முற்றாக மாறியிருக்கும் என்பதே உண்மை. எம்மை போன்ற இளம் தலைமுறையினர் மத்தியிலும் அண்ணாவிற்கான இடம் என்றுமே குறைந்ததில்லை. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. அண்ணாவும் அந்த ஆதவன் போன்றவறே, ஆயிரம் அவதூறகள் பரப்பினாலும் அண்ணாவின் புகழ் குறையப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      ஆமாம்... தாங்கள் சொல்வது போல இன்னும் சில ஆண்டுகள் இருந்திருந்தால் தமிழகம் மிகவும் சிறந்து விளங்கி இருக்கும்.

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோ ! அண்ணா பற்றிக் கவிதை மூலம் அருமையான அற்புதமான விடயங்களை தொகுத்து அளித்தீர்கள். கவிதை ரொம்ப அழகாக வந்துள்ளது. ரொம்ப ரசித்தேன். நன்றி!
    வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தாங்கள் இரசித்துப் படித்ததற்கும் பாராட்டியதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அழகான கவிதை நண்பரே! அருமை! நல்ல கருத்துள்ள் கவிதை வரிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      கவிதையைப் பாராட்டியதற்கும் வாழ்த்தியதற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  14. நீ-
    காலணிகூட
    சாலையோரக் கடைகளில் வாங்கி
    சாமானியனுக்கு வாழ்வு கொடுத்தாய்...!
    ஆள்பவர்கள் ஆயிரம் ஜோடிகளுக்கு மேல்
    காலணி ஆதிக்கம் செலுத்துகின்றனரே!
    ஓ.... இதுதான்.... காலனி ஆதிக்கமோ?//

    ரசித்த வரிகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      கவிதையை இரசித்துப் படித்ததற்கு மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...