புதன், 23 டிசம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (11)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (11)

                                                                 
   சூர்யோதத்திற்கு முன்பே எழுந்த ரோஸி,  சசிரேகா  வீட்டைவிட்டுத் தமிழினியனுடன் சென்றிருப்பாரா?  அவள் ஒருவேளை வீட்டைவிட்டு வரவில்லை  என்றால்   இந்நேரம் தமிழினியன் இங்கு வந்திருப்பாரல்லவா...?     நிச்சயம் இருவரும் பயணப்பட்டு இருப்பார்கள்... எங்குச்  சென்று கொண்டிருப்பார்கள்  என்பதை ரோஸியால் யூகிக்க முடியவில்லை.                                                                
                               



   தேநீர் கடையில் தேநீர் வாங்கிக்கொண்டு வந்து,  தூங்கிக்கொண்டிருந்த தங்கம்மாளை எழுப்பிக் கொடுத்தாள். 

   “எங்கம்மா... தமிழ்?” -தேநீரைக் குடிப்பதற்கு முன் கேட்டாள்.

   “அவரு... காலேஜில படிப்பு சம்மந்தமா  வெளியூர் போகணுமுன்னு... அவுங்க புரபசர் கூப்பிட்டாருன்னு  போயிருக்காரு...நீங்க டீயக் குடிங்க...”என்றாள் ரோஸி.

   “என்னிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டாம்மா...”

   “அவசரமா...கூப்பிட்டதால... ஒங்கள்ட்ட சொல்லிடச் சொல்லிட்டுத்தான் போனாரு... நான்தான் மறந்திட்டேன்...”

   “அதானே பாத்தேன்... அவன் எ புள்ளயாச்சே...!”  சொல்லிக் கொண்டே தேநீரைக் குடித்தாள்;  குடித்துக் கொண்டிருக்கும் பொழுதே வாந்தி எடுத்தாள்.  இரவு உண்ட உணவுடன்,  சேர்ந்து குடித்த டீயும் வெளியே வந்து விழுந்தது.

   “அய்யய்யோ...!  வலி தாங்க முடியலையே...அய்யய்யோ... உயிர்போற மாதரி வலிக்கிதே...” தரையில் விழுந்து அழுது புரண்டாள்.

   “என்ன செய்யுது...?” பதறிப் போய்ப்  பதட்டத்துடன் ரோஸி கேட்டாள்.  தங்கம்மாளால் பேச முடியாமல் வலியால் துடித்தாள்.



“ஆஸ்பத்திரி போகலாம்... ரிக்சாவைக் கூட்டிட்டு வாரேன்...”  வெளியே ஓடி வந்த  ரோஸி ஒர்  ரிக்சாக்காரரைப்  பிடித்து வேகமாக வீட்டிற்கு அழைத்து வந்தாள்.  தங்கம்மாள் வலியால் துடித்துக் கொண்டு வயிற்றைப் பிடித்தபடி அழுதுகொண்டு “அய்யய்யோ...அய்யய்யோ...” கத்திக் கொண்டிருந்தாள்.
                                                                         
   அவசர அவசரமாச்  சேலையை எடுத்து உடுத்திக் கொண்டு,  தலையை வாரிக் கொண்டு,  பீரோவில் இருந்த பணத்தையும் தங்கம்மாளின் ‘ரிப்போர்ட்’டையும் எடுத்துப்  பேக்கில் வைத்துக் கொண்டு தங்கம்மாளைக்  கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு மெல்ல நடத்தி ரிக்சாவில் அமர வைத்தாள்;  உடனே ரிக்சா புறப்பட்டது.

   “ஜி. எச். க்குச்  சீக்கிரமாப்  போங்க...” என்று அவசரப்படுத்தினாள் ரோஸி.  வேகமாக ரிக்சாவை ஓட்டினான்.  எதிரே வந்த  கார் ரிக்சாவை இடித்துவிடுவது போல் வந்ததைப் பார்த்தவுடன்  ஆட்டோவை சடனாகத் திருப்பினான்.  நல்ல வேளை ரிக்சாவை இடிக்காமல் கார் சென்றது. 

   “ஏய்... கண்ணு  என்ன புடனியில  வச்சுட்டா  ஓட்டுறாய்... ?” என்று சத்தமாகத் திட்டிக்கொண்டே  ஓட்டினான் ரிக்சாக்காரன்.

   “பாத்துப்  போங்க... ரொம்ப அவசரம் வேண்டாம்... ”  ரோஸி சொன்ன பொழுதே...

   “நீங்க பயப்படாதீங்க... கார ஓட்டத் தெரியாதவங்கல்லாம் கார வாங்கிட்டு... கண்ணு முண்ணு தெரியாமாப்  போவானுக... இதுக்கெல்லாம் பயந்தா ரிக்சாவை  ஓட்ட முடியுமா...?” என்று சர்வ சாதரணமாகச்  சொல்லிக் கொண்டே வேகமாக  மிதித்தான். 

   அரைமணி நேரத்தில்  ரிக்சா அரசு மருத்துவமனைக்குள்  நுழைந்தது.  ரிக்சாவிற்குப்  பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு,  ரோஸி  தங்கம்மாளை அழைத்துக் கொண்டு மருத்துவர் இருக்கும் அறைக்கு வந்தாள்.  ஏற்கனவே  இவர்களுக்கு முன்பாகச் சிலர் மருத்துவருக்காகக் காத்திருந்தனர்.  மருத்துவர் அறையில் மருத்துவர் இல்லை.

   “டாக்டர்... இல்லையா...?” காத்திருந்தவர்களிடம் கேட்டாள் ரோஸி. 

   “நாங்களும் அவருக்காகத்தான் காத்திருக்கோம்... கேட்டதுக்கு இன்னும் அரை மணிநேரம் ஆகும்... ஒரு மணி நேரம் ஆகுங்கிறாங்க...!”

   “ரொம்ப வவுறு வலிக்கிதும்மா...!” என்ற  தங்கம்மாளிடம்  ரோஸி,

   “வெறும் வயிலில்ல... இங்கே இருங்க... நா போயி நாலு இட்லி வாங்கிட்டு வாரேன்...”  சரியெனத் தலையாட்டினாள் தங்கம்மாள்.

   ரோஸி ஹோட்டலுக்கு வேகமாகச் சென்று  இட்லியை வாங்கிக் கொண்டு   வந்து சேர்ந்தாள்.   இட்லிப் பொட்டணத்தைப் பிரித்துத்  தங்கம்மாளைச்  சாப்பிடச் சொன்னாள்.  தங்கம்மாள் இட்லியை எடுத்துச்  சாப்பிட்டாள்.   அவளால் இட்லியை முழுங்க முடியவில்லை;  தொண்டைக்குக் கீழே இட்லி இறங்க மறுத்தது.

   “என்னால இட்லிய முழுங்க முடியலம்மா...!  உள்ளேயே போக மாட்டேங்கிது... எனக்கு வேண்டாம்மா...! ஒனக்கு வேற செரமத்தக்  குடுத்திட்டேன்...அப்புறமா சாப்பிட முடிஞ்சாச்  சாப்பிடுறேன்...!” என்று  இட்லிப் பொட்டணத்தை மடித்து வைத்தாள்.   டாக்டரின் வருகைக்காக அங்கொரு கூட்டம் காத்திருந்தது. 

   டாக்டர் சிறிது நேரத்தில் காரில் வந்து இறங்கினார்.   தங்கம்மாளுக்கு முன்னால் வந்திருந்தவர்கள் எல்லாம் வரிசையாக டாக்டரைப் பார்த்து வந்து கொண்டிருந்தனர்.  தங்கம்மாள் வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.

   தங்கம்மாளை அழைக்க,  ரோஸியும்  உடன் சென்றாள்.    தங்கம்மாளை ஸ்டுலில் அமர வைத்து டாக்டர் விசாரிக்க,  ரோஸி அந்த ‘ரிப்போர்ட்’டை எடுத்துக் கொடுத்து விட்டு,  டாக்டரிடம் நடந்தது எல்லாவற்றையும்    விளக்கிக் கூறினாள்.  டாக்டர் கேட்டுக் கொண்டே அந்த ரிப்போர்ட்டைப் பாத்து,  தங்கம்மாளை ‘ஸ்டெத்’ வைத்துச்  சோதித்துப் பார்த்தார்.

   “நான்தான் இந்த அம்மாவை டெஸ்ட் செஞ்சது... இந்தம்மாவோட பையன் வந்தாரே... எங்கம்மா...  அவரு வர்லையா...?” டாக்டர் கேட்டார்.

   “அவரு... அவசர வேலையா வெளியூர் போயிருக்காரு...!” ரோஸி சொன்னாள்.

   “நீங்க... மகளா...?”

   “இல்ல... ரிலேசன்...”

   “ஓ...கோ...  நர்ஸ்... இவுங்களக் கூட்டிட்டுப்  போயி இந்த இன்ஜக்சனப்  போடச் சொல்லுங்க...” என்று டாக்டர் சீட்டில் எழுதி தங்கம்மாளை நர்ஸுடன் அனுப்பி வைத்தார்.

   “இவுங்களுக்குக்  கேன்சர்  இருக்கிற விஷயத்த...   அந்த அம்மாகிட்ட தெரியப்படுத்திட்டீங்களா...?” ரோஸியைப் பார்த்து டாக்டர் கேட்டார்.

   “இல்ல டாக்டர்... தெரியப்படுத்தல ...”

   “இட்லியக்கூட இவுங்களால முழுங்க முடியலைன்னு சொல்றீங்க... இதுல இருந்து என்ன தெரியுது...?”

   “ரொம்பச்  சிரமப்படுறாங்கன்னு தெரியுது டாக்டர்...” ரோஸி சொன்னவுடன்  டாக்டர்  பார்த்துச் சொன்னார்..

   “அது இல்லம்மா... இவுங்க... இன்னும் அதிகப்  பட்சம்... ஆறு  மாசம்தான் உயிரோட இருப்பாங்க...!”

   “டாக்டர்... என்ன சொல்றீஙக...” அதிர்ச்சியுடன் கேட்டார்  ரோஸி.

   “ஆமாம்... இவுங்களுக்கு நோய் ரொம்ப முத்திடுச்சு...!”

   “அன்னக்கி ஆரம்ப ஸ்டேஜ்ன்னுதான்... சொன்னீங்களாம்...”

   “ஆமா... அன்னக்கி அவுங்க பையன் இருந்த மனநிலையில  நா உணமையச் சொல்லல...!”

   “அப்ப... நீங்க... பொய் சொன்னீங்களா... பொய் சொல்றது ...?” ரோஸியின் பேச்சை இடைமறித்த  டாக்டர்,

   “ ‘பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்’னு  வள்ளுவரே சொல்லியிருக்காரு...” 

   “இதான் முடிவா...? வேற ஏதும் செய்ய முடியாதுங்களா...?”

   “இவுங்களுக்கு வந்திருக்கிற  கேன்சரை முழுமையா குணப்படுத்த முடியாது... வேலூருக்கோ... பாண்டிச்சேரிக்கோ கொண்டு போய்  ‘ஹீமோ தெரபி’ கொடுக்கலாம்... என்ன இன்னும்... கூட  ஒர் ஆறு மாசம்  அவுங்க வாழ்வை எக்ஸ்டண்  பண்ணலாம்... வயசாயிடுச்சு... உடம்பு  ஒத்துழைக்கணும்... ஹாஸ்பிட்டல்ல ஒருத்தர் கூடவே கண்டிப்பா இருக்கனும்...‘தெரபி’ கொடுத்தா முடியெல்லாம் கொட்டிட்டும்.... இப்பவே  அவுங்களால சாப்பிட முடியலைங்கிறீங்க...  இது ‘போர்த் ஸ்டேஜ்...’ இருக்கிற வரைக்கும் அவுங்க கேக்கிற நல்லது பொல்லாத வாங்கிக்கொடுத்துப்  பார்த்துக்கங்க... இல்ல வெளியூர்ல...  போயி ஹாஸ்பிட்டல்ல வச்சு ட்ரீட்மெண்ட் கொடுக்கணுமுனாலும்... கொடுங்க... அது உங்க விருப்பம்...!”

   தங்கம்மாளுக்கு ஊசியப் போட்டு,  டாக்டரின் அறைக்குள் நர்ஸ் அழைத்து வந்தார். 

   “இப்ப வலி எப்படி இருக்கு...?”

   “இப்ப வலி இல்ல டாக்டர்...!”  தங்கம்மாள் முகமலர்ச்சியுடன் சொன்னாள்.  

   “மாத்திரை... மருந்து  எழுதி இருக்கேன்... வாங்கிட்டுப்  போங்க... 
பயப்படாதிங்க...  எல்லாம் சரியாயிடும்...”  மாத்திரை சீட்டை ரோஸியிடம் கொடுத்தார்.  தங்கம்மாள் டாக்டரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

   ”அப்ப... வர்றோம் டாக்டர்...!”  ரோஸி டாக்டரிம் சொல்ல...  இருவரும் புறப்பட்டனர்.


                                                                                                                          -வ(ள)ரும்...

படிக்க  ‘கிளிக்’ செய்க 

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (10)


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.






10 கருத்துகள்:

  1. தங்கமாளின் நிலை கவலையானதே.. இது தெரியாமல் மகனின் நிலை என்னவோ அறிய காத்திருக்கின்றேன் மணவையாரே..

    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் முதல் வருகைக்கும் தங்கம்மாள் மற்றும் அவளின் மகன் பற்றிய கவலைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. தொடர் விறுவிறுப்பாக செல்கிறது. தொடர்கிறேன் அய்யா!
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தாங்கள் தொடர்வதற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இந்த நேரத்தில் தமிழுக்கு முக்கியம் தாயா ,காதலா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      தமிழ் சிந்திக்க வேண்டியதைச் சொல்லி இருக்கிறீர்கள்... தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. தொடர் விறுவிறுப்பு ஐயா
    தொடர்கிறேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாரே,

      தாங்கள் தொடர்வதற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அட! அம்மா ஒரு புறம் உடல் நலக் குறைவுடன்...பையன் என்னா ஆனான் என்பதும் தெரியாமல்...தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தாங்கள் தொடர்வதற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...