செவ்வாய், 10 மே, 2016

புதிய உடன்படிக்கை – 4 -நாடகம்





காட்சி-4
இடம்மாளிகை
பாத்திரங்கள்:  ஜான்சன், ஜாக்லின் சித்ரா, ஆரோக்கிசாமி.

(ஜாக்லின் சித்ரா, பூக்களால் தோரணம் கட்டி  அலங்கலிங்கப்பட்ட கட்டிலின்மீது உட்கார்ந்து முலங்காலின் முட்டியில் முகத்தை வைத்து, ஜன்னல் வழியே வானத்தில் தெரியும் முழு நிலைவைப் பார்த்துக் கொண்டே  கலக்கத்துடன் கணவன் ஜான்சன் வரவுக்காக காத்திருக்கிறாள்...)


ஜாக்லின்:  (பின் குரலில் மனசாட்சி)  இன்னும் அவரைக் காணோமே... புதுமாப்பிளை... முதல் இரவுன்னுகூட இல்லாம... இன்னும் என்ன பேச்சு... கொஞ்சம்கூட இங்கீதம் தெரியாத நண்பர்களா இருப்பாங்க போல இருக்கே... மணி பன்னிரண்டாகப் போவுது... ஒரு வேளை நம்மைப் பிடிக்கலையோ...?  எந்த விதத்தில கொறஞ்சு போயிட்டோம்... அழகில்லையா...?   வரட்டும்... வரட்டும்... அய்யோ... வந்ததும் வாராததுமா ஏதாவது கேட்டு கோவிச்சிக்கப் போறாரு... இல்லல்ல... என்னைப் பிடிக்கலைன்ன கல்யாணம் பண்ணியிருப்பாரா... கல்யாணத்துக்க ஏதாவது கொடுக்கல்... வாங்கல்... வேலையா இருக்கும்... ம்...ம்... வர்றப்ப வரட்டும்...!
(பெருமூச்சு விடுகிறாள்)

ஆரோக்கியசாமி:  (உள்ளே வந்து கொண்டே)  என்னம்மா... இன்னும் அவன் வரலை...?

ஜாக்லின்:  வரலைங்க மாமா...

ஆரோக்கியசாமி: நீ பயப்படாதம்மா... அவன் வந்திடுவான்... பொறுப்பில்லாம... பயலுகளோட சேந்துக்கிட்டு பொறிக்கித்தனமா... நானும் வருவான், வருவான்னு பார்த்தேன்... கல்யாண வேலையில ரொம்ப அசதியா இருக்கும்மா... தூக்கம் வருது... மொட்ட மாடியில போயி படுக்கிறேம்மா... கதவை சாத்திக்க...

ஜாக்லின்: சரிங்க மாமா...

(மாமனார் மாடிக்குச் செல்கிறார். மீண்டும் கட்டிலில் அமர்ந்து காத்திருக்கிறாள்... சிறிது நேரத்திற்குப் பிறகு ஹாலிங்பெல் அடிக்கும் சப்தம் கேட்கிறது... கதவைத் திறக்கிறாள்)

ஜான்சன்: (உள்ளே நுழைகிறான்) இன்நேரம் தூங்கி இருப்பான்னு நெனச்சேன்... தூங்கலையா...?

ஜாக்லின்: இல்ல...

ஜான்சன்: இல்ல... தூக்கம் வரலையா...?

ஜாக்லின்: எப்படிங்க வரும்... போயி எவ்வளவு நேரமாச்சு... ஏங்க இவ்வளவு நேரம்?

ஜான்சன்: ஸ்சு...ஸ்சு... சத்தம் போடாதே... அப்பா காதில விழுந்திடப் போவுது...

ஜாக்லின்: ஒங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறது... பாத்து... பாத்து கண்ணே பூத்துப் போச்சு...

ஜான்சன்:  போன எடத்துல கொஞ்சம் நேரமாயிடுச்சு...

ஜாக்லின்: சரி... (பிளாஸ்க்கில் இருந்து பாலை டம்ளரில் ஊற்றி) இந்தாங்க பால்...

ஜான்சன்: அய்யய்யோ... பாலா... எனக்கு வேண்டாம்... நீ குடிச்சிடு...

ஜாக்லின்: நீங்க குடிச்சிட்டு குடுங்க...

ஜான்சன்: எனக்கு ஆடையில்லாத பால்தான் பிடிக்கும்...  வேற ஏதாவது காட்டமா... இருந்தா குடு...

ஜாக்லின்: காட்டமாவா...?  என்ன்னங்க... எனக்கு ஒன்னும் புரியலைங்க...
ஜான்சன்: இல்ல... என்னிட்ட பாலக் காட்டாம குடுச்சிடுன்னு சொன்னே... அப்புறம் கப்புன்னு எறங்கிடும்...

ஜாக்லின்: கப்புன்னு எறங்கிடுமா...?  எதுங்க...

ஜான்சன்: இல்ல... பாலக் குடிச்சா... கப்புன்னு உள்ள இறங்கிடுமுன்னு சொன்னே...

ஜாக்லின்: சரி எனக்கும் வேண்டாம்...(டம்ளரை மேஜைமீது வைத்துவிட்டு, அவன் அருகில் வந்து காலில் விழுகிறாள்.  அவள் எழுந்திருக்கத் தோளைத் தொட்டுத் தூக்குகிறான்... அவனின் பிடியிலிந்து ஜாக்லின் தன்னை விலக்கிக் கொள்கிறாள்)
 வ்வா...வ்வா...(வாந்தி எடுப்பதைப் போலக் குமட்டுகிறாள்)  என்னங்க கெட்ட வாடையடிக்கிது... வாந்தி வர்ற மாதிரி இருக்குங்க... வ்வா...

ஜான்சன்: ஒன்னுமில்லையே... பக்கத்தில சாக்கடை ஓடுது...

ஜாக்லின்: சாக்கடை நாத்தம் தெரியாதாங்க... கோவிச்சுக்காதிங்க... குடிக்கிற பழக்கம் உண்டா...?

ஜான்சன்:  ம்... ம்... (கன்னத்தில் கைவைத்து யோசிக்கிறான்)

ஜாக்லின்: என்னங்க யோசிக்கிறீங்க...

ஜான்சன்இல்ல... இவ்வளவு கரைட்டா எப்படிக் கண்டு புடுச்சேன்னு யோசிக்கிறேன்...

ஜாகலின்: (அதிர்ச்சியுடன்) என்ன குடிக்கிற பழக்கம் உண்டா...?

ஜான்சன்: ஆமாம் உண்டு... அதுக்கு என்ன பண்ணணுங்கிறாய்...?

ஜாக்லின்: அய்யோ ஜீசஸ்...! நா என் பண்ணுவேன்... சாராயம் குடிச்சிட்டு வந்திருக்கீங்களா...?

ஜான்சன்: அடிப்போடி பைத்தியக்காரி... சாராயம் குடிப்போனா...?  சீ.... பிராந்திடி... ஒரிஜினல் பிராந்தி...!

ஜாக்லின்: எந்த சனியனா இருந்தா என்ன...?   எல்லாம் ஒன்னுதானே...!

ஜான்சன்: ஒனக்கு ஒன்னுமே தெரியலை... குதிரையும் கழுதையும் ஒன்னா...?

ஜாக்லின்: அந்த விளக்கமெல்லாம் ஒன்னும் வேண்டாம்...

ஜான்சன்: கண்ணு ஒனக்கு விளக்கம் வேணாம்... எனக்கு இந்த விளக்கு வேணாம்... (ஜாக்லினை அணைக்க நெருங்குகிறான்... அவள் விலகுகிறாள்)  வாம்மா... வாம்மாங்கிறேன்... எ கணுணுல்ல... வாடா... ஏய்... வாங்கிறேன்லே... அடச் சீ வாடீன்னா...

ஜாக்லின்: குடிச்சிட்டு என்னிட்ட நெருங்காதிங்க... ஒங்கள கையெடுத்துக் கம்பிடுறேன்... நெருங்கி வராதீங்க...

ஜான்சன்: வந்தா...?

ஜாக்லின்: இது என்னங்க கேள்வி...? பிளீல் வராதீங்க...!

ஜான்சன்: (நடக்கும் போதே கல்கள் பின்ன... கட்டிலில் உட்காருகிறான்)  அடிப்போடி..  என்னால நிக்க முடியல... படுக்கிறேன்... எதாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம்.  (படுத்த ஜான்சன் தூங்க, அருகில் இருந்த பானையில் நீரை எடுத்துக் ஜாக்லின் குடித்துவிட்டு அழுது கொண்டே இருக்கிறாள்.)  
                                                      
            


                                                     -தொடரும்...
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.












சனி, 7 மே, 2016

புதிய உடன்படிக்கை - 3 -நாடகம்



காட்சி-3
இடம்: ஹோட்டல்
பாத்திரங்கள்: ஜான்சன், நண்பர்கள் கனகராஜ், செல்வம், சேகர்.

(ஜான்சனின் வரவுக்காக காத்திருக்கின்றனர்.  ஜான்சன் உள்ளே வருகிறான்)
                                                                       

செல்வம்: என்னடா... ஜான்சன் இவ்வளவு நேரமாவா எங்கள காக்க வைக்கிறது...?

ஜான்சன்: சாரிப்பா... எ பொஷிசன்ல நீங்க இருந்தாத் தெரியும்... சரி... ஒங்களுக்கு என்ன டிரிங்ஸ் வேணுமோ வாங்கிக்கங்க... நீங்க இன்னக்கி மட்டும் எது வேணுமுனாலும்... எவ்வளவு வேணுமுனாலும் குடிக்கலாம்...

கனகராஜ்: டேஅப்போ உனக்கு...?

ஜான்சன்: எனக்கா...?  டே...! இன்னக்கி எனக்கு பஸ்ட் நைட்... தெரியுமுல்ல...

கனகராஜ்: அதுனாலதான் கேக்கிறேன்... பயமில்லாம போகணுமுல்ல...

ஜான்சன்: வொய்ப்... கண்டு பிடிச்சிட்டான்னா...?

செல்வம்:  வாடையடிக்காம வாய மாத்திக்கலாம்டா... எதுக்கு பாக்கு... பாத்தாத்துக்கு ஏலக்காய்... சோம்பு... கொய்யாக்காய் மிட்டாய் இருக்கு...    நீ எதுக்கு கவலைப்படுறாய்...?

சேகர்: ஏம்ப்பா.... மச்சியப்போட்டு ரொம்ப கம்பல் பண்றீங்க... வீட்ல... ஏடாகூடமா ஆயிடப் போவுது... லைட்டா... பீர்மட்டும் என்னாட்டம் குடிக்கட்டுமே...!

கனகராஜ்: டே! சேகர்... ஒனக்கு கலரக் குடிச்சாலே போதை வந்திடும்... ஜான்சனைப் பத்தி நீ தெரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான்... அவனுக்கு ‘பீர்வாடையே ஆகாது... அவன் எப்பவுமே... ஹாட்டிரிங்ஸதான்...

செல்வம்: டே!  நம்ம பேசிக்கிறத பாத்தா... இன்னைக்குத்தான் குடிக்க ஆரம்பிக்கிற மாதிரில்ல இருக்கு... இத்தன நாளு குடிச்சிட்டு வீட்டுக்கு போயிருக்கியே,... என்னைக்காவது தெரிஞ்சிருக்கா...? சொல்லுடா...?

ஜான்சன்: இல்ல...!

சேகர்: என்னைக்கும் மாதிரியா இன்னக்கி... விளையாடாதிங்கடா...

கனகராஜ்: நீ இல்லாம குடிக்கிறதா...?  நெனச்சா மனசுக்க ரொம்ப கஷ்டமா இருக்குடா...!

செல்வம்: லைட்டா... கம்பெனி கீப்பப் பண்ணுடா...

ஜான்சன்: ம்... ம்... (யோசித்து) சரி... ஒங்க இஷ்டப்படியே குடிக்கிறேன்... போதுமா...?  எனக்கும் நீங்க குடிக்க... நா பாத்திக்கிட்டு இருக்க... மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு...!
                                                               

கனகராஜ்: போதும்ப்பா... சரி... ஒ அளவு எவ்வளவு...?

ஜான்சன்: எ அளவா...?  இன்னைக்கி எனக்கு ‘குவாட்டர்’ போதும்...

சேகர்: என்ன குவாட்டரா...?  அது அதிகம் மாதிரி தெரியுது...

ஜான்சன்: ‘ஆஃப்அடிச்சாத்தான் எனக்கு லேசா போதை இருக்கிற மாதிரி தெரியும்... தெரியுமா...?

கனகராஜ்: அதானே... எவ்வளவு குடிச்சாலும்... குடிச்ச மாதிரியே தெரியாது... தெரியுமுல்ல... அப்புடியே ஸ்டடியா இருப்பான்...

ஜான்சன்: அதானே... நல்லா எடுத்துச் சொல்லுடா... சரி என்னனென்ன வேணுமோ...  ஆர்டர் பண்ணுங்க... அவுங்க அவுங்க... தனித்தனியா ஆர்டர் சொல்லிக்கங்க...  என்ஜாய்...சர்வர்...

(சர்வர் வர... ஆர்டர் செய்கிறார்கள்)


                                                                                                                         
                                                                                                

                                                                                                                           -தொடரும்...
                                                   
                                                
-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.                                                                                                                                                                                                       






















புதன், 4 மே, 2016

புதிய உடன்படிக்கை - 2 -நாடகம்

புதிய உடன்படிக்கை 

காட்சி – 2


இடம்மாளிகை
பாத்திரங்கள்:  ஜான்சன்,  ஜான்சனின் தந்தை ஆரோக்கியசாமி, ஜாக்லின் சித்ரா,  ஜாக்லின் சித்ராவின் தந்தை ஞானசௌந்தர், நண்பன் கனகராஜ்.

(மணமக்கள் இருவரும் சேபாவில் அமர்ந்திருக்கிறார்கள்.  மணமனின் அப்பா ஆரோக்கியசாமி அருகில் வருகிறார்.)

ஆரோக்கியசாமி: ஜான்சன்... ஜான்சன்... மாமா ஊருக்கு பேறேன்னு சொல்றாரு...
(மணமகளின் தந்தை ஞானசௌந்தர் வீட்டிற்குள்ளே இருந்து வருகிறார்)

ஜான்சன்: ஏங்க மாமா... இருந்திட்டு போலாமே...

ஆரோக்கியசாமி: என்னடா... ஒரு மரியாத இல்லாம... உக்காந்திட்டு... எழுந்திரிடா...

ஞானசௌந்தர்:  இருக்கட்டும்... இருக்ட்டும்... காலையில இருந்து கால்கடுக்க நின்னு நின்னு... பாவம்... மாப்பிள்ள நீங்க உக்காருங்க... அங்கே தலைக்கு மேல வேலையிருக்கு... அம்மா... ஜாக்லின்... நா வரட்டுமாம்மா...

ஜாக்லின்: அப்பா... (பாசத்துடன் அழுகிறாள்)

ஞானசௌந்தர்: அழாதேம்மா... (கண்ணீரைத் துடைத்து விடுறார்).  என்ன நா தூரத்திலையா இருக்கேன்... பத்து மையிலுக்கும் பக்கம்தான்... அப்புறமெதுக்கும்மா... அழறாய்... கண்ணை துடைச்சுக்க...

ஆரோக்கியசாமி: ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டு... சந்தோசமா வழி அணுப்பி வைங்க... (இருவரும் ஞானசௌந்தர் காலில் விழுகிறார்கள்)

ஞானசௌந்தர்: நல்லா... தீர்க்காயுசா... நல்லா இருக்கணும்... நீங்க நல்லா இருப்பீங்க... எழுந்திருங்க... (ஆசிர்வதித்து அவர்களை எழுந்திருக்கச் செய்கிறார்.)  ம்...ம்... இதெல்லாம் பாக்க ஜாக்லினோட அம்மா உயிரோட இல்ல...

ஆரோக்கியசாமி: இவனோட அம்மாவுக்கும்  கல்யாணத்த கண்ணுல பாக்கிற பாக்கியம்  கொடுத்து வக்கல... என்ன பண்றது நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்... பழையதெல்லாம் நெனச்சு என்ன பண்றது...?

ஞானசௌந்தர்: சரிங்க... எ...பொண்ணு ஜாக்லின் சின்னப் பொண்ணு... அவனுக்கு ஒன்னும் தெரியாது... வயசாயிடுச்சு... வளர்ந்திட்டா... டீச்சர் வேலையும் பாக்கிறா... ஆனாலும் பச்சப்புள்ளங்க... பொண்ணக் கண்ணு கலங்காம பாத்துக்கங்க... (சரியென மாப்பிள்ளை தலையசைக்கிறார்)

ஆரோக்கியசாமி: நா இருக்கேன்ல்ல... இனி ஒங்க பொண்ணு இல்ல... எ பொண்ணு... போதுமா...?

ஞானசௌந்தர்: அது போதும்... அது போதும்... நான் வர்றேன்... எல்லாத்துக்கும்... போயிட்டு வர்றேன்...

(கையெடுத்து கும்பிட்டபடி வெளியே செல்கிறார்.  சிறிது நேரத்தில் நண்பன் கனகராஜ் உள்ளே நுழைகிறான்)

ஜான்சன்:  வாடா கனகராஜ்...

கனகராஜ்: வர்றேம்ப்பா... ஜான்சன் கொஞ்சம் இப்படி வா...(ஜாக்லினைப் பார்த்து) சாரி... தப்பா நெனச்சுக்காதிங்க... (தனியாக ஜான்சனை அழைத்து) என்னடா... பொழுதும் சாய்ஞ்சிடுச்சு... பிரண்ட்ஸ் எல்லாம் எப்ப... பார்ட்டி... பாட்டீன்னு பறக்கிறாங்க...

ஜான்சன்: ஒங்க அவசரம் புரியுது... எல்லாரும் செவனா ஹோட்டலுக்கு போங்க... நா அங்கே வந்திடுறேன்... ஓ...கே...

கனகராஜ்: தேங்யுப்பா... தேங்யு... (ஜாக்லினை பார்த்து) சாரி பார் த டிஸ்டப்மெண்ட்ஸ்... அப்போ போயிட்டு வர்றேங்க...
(வெளியில் கனகராஜ் செல்கிறான்)

ஜான்சன்: (ஜாக்லின் அருகில் வந்து) கொஞ்சம் எனக்கு அவசரமா வெளியே வேலை இருக்கு... நா போயிட்டு வர்றேன்...

ஆரோக்கியசாமி:இன்னக்கி என்னடா வேலை...?

ஜான்சன்: போனவுடனே வந்திடுறேன்ப்பா...

ஆரோக்கியசாமி: எப்பவுமாதரி கண்ட கண்ட பயலுகளோட சுத்திட்டு... கால நேரம் பாக்காம வர்றத விட்டிடுடா... டே...! இனி நீ ஒன்டிக்கட்ட இல்ல... ஆமா... அதை ஞாபகத்தில வச்சுக்க... என்ன தெரியுதா...?

ஜான்சன்: சரிப்பா... கொஞ்ச நேரத்தில வந்திடுறேன்... 

(வெளியே செல்கிறான்)


                        


                                                          -தொடரும்...

-மாறாத அன்புடன்,


 மணவை ஜேம்ஸ்.                                                                                                                                                                                                      

Related Posts Plugin for WordPress, Blogger...