சனி, 25 ஜூலை, 2015

நான் சிக்கிய விபத்தும் சில படிப்பினைகளும்...!

நான் சிக்கிய விபத்தும் சில படிப்பினைகளும்...!



 (ஒரு கையால் தட்டச்சு செய்கிறேன்... பிழையிருப்பின் பொறுத்தருள்க!) 



வாழ்க்கையில் கடந்து  போன ஒரு நொடியை சரிப்படுத்தி விட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்துவதில் விபத்தினைப் போல வேறெதுவும் இருக்க முடியாது. எல்லோர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சிறு விபத்தாவது நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு.  ஒரு சிலர் விபத்தைச் சந்திக்காத அதிஷ்டசாலியும் இருக்கலாம்.

         ‘உண்மையெல்லாம் சொல்லவில்லையென்றாலும்...
          சொல்லியதெல்லாம்  உண்மையென்ற உத்ரவாதத்துடன்....’


 தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?   

கால்களில்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா? - இரு
கைகளில்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா?

                ‘தனக்கு வந்தால்தான் தெரியும்தலைவலியும்காய்ச்சலும்’ 
என்ற  பழமொழி நாமெல்லாம் கேள்விப்பட்ட ஒன்றுதான்.


எங்கள் ஊரான பொத்தமேட்டுப்பட்டி புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளியில் நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பொழுது நண்பன் அருள் ஜேம்ஸ் பால்ராஜுடன் (தற்பொழுது அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்) தோள்மீது கைபோட்டுக்கெண்டு பேசிக்கொண்டே செல்லும் பொழுது, எதிரே வந்த மாணவிக்காக வழிவிட வேண்டி படியில் ஸ்டைலாக இறங்கிய பொழுது கால்கள் பின்னி கீழே விழ எனது வலது கை வளைந்து பென்டாகி விட்டது.  அப்பொழுது அதைப்பார்த்த சுத்தம் டீச்சர் (நாங்கள் அப்படித்தான் அழைப்போம்) திருமதி.ரோஸ் தெரஸ் எனது கையைப் பார்த்து அழுதார்.  போன வருடம் அவர் கொலை செய்யப்பட்டு இறந்தார் என்பது மிகவும் துக்கமான கூடுதல் செய்தி.  பிறகு எனது தந்தைக்குச் செய்தி சொல்லிவிடப்பட்டு, மணப்பாறை  லெட்சுமி நாராயணன் மருத்துவமனையில் மருத்துவர் அய்யரால் மாவுக்கட்டு போடப்பட்டு... கையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டி, அதோடு பள்ளி ஆண்டு விழாவில் நாடகத்தில் கதாநாயகனாக நடித்ததும் பசுமையாக இன்னும் நினைவில் நிழலாடுகின்றன.




        மஞ்சம்பட்டி புனித அந்தோனி உயர்நிலைப்பள்ளி (பாய்ஸ் டவுன்) ஒன்பதாவது வகுப்புச் சேர்ந்தேன்.  ஒரு நாள் கணக்காசியர் திரு.சந்தியாகு தேர்வு வைத்தார்;  சரியாக தேர்வு எழுதாதவர்களைப் பிரம்பால் அடித்தார்.  எப்படி அடிப்பார் என்றால் கையில் படும்படியாக மட்டும் இல்லாமல் முழங்கையோடு சேர்த்து அடி விழும்படியாக அடிப்பார்.  நான் கையை மட்டும் நீட்டினேன்;  ஏற்கனவே கை பென்டாகி மாவுக் கட்டு போட்டதல்லவா?  ஆசிரியர் கைமுழுக்க அடிவிழும் படி முழங்கையும் சேர்த்து நீட்டச்சொல்லி அடித்தார்.  மிகவும் வலித்தது.  அடுத்தப் பிரிவேளை விளையாட்டு (P.E.TPERIOD)  நொண்டி விளையாட்டு.  நான் நொண்டியடித்துச் செல்ல வேண்டிய வேளை.  வேறு ஒருவனைப் போகச் சொன்னேன்... அவன் மறுக்கவே நான் செல்ல வேண்டிய சூழல்.  நொண்டியடித்துச் சென்று ‘ஜான்’ என்ற மாணவனைத் தொடமுயன்று, அவன் ஓட நான் கையைக் கீழே தரையில் வைத்த்துதான் தாமதம்...கை
        ஒடிந்து (‘ட’ வடிவில்எழும்பு தெரிய )மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். P.E.T. Master திரு.வியாகுலம் என்னைச் சைக்களில் உட்கார வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்..  சிறிய மேடு பள்ளத்தில் மிதிவண்டி ஏறி இறங்கினாலும் உயிர் போய் உயிர் வருவது போல இருந்தது. அந்த இரண்டு ஆசிரியர்களும் இயற்கை எய்திவிட்டனர். 

தியாகேசர் ஆலையில் மேஸ்திரியாக வேலை பார்த்துக்கொண்டு இருந்த எனது தந்தைக்கு ஒருவர் போய் விவரத்தைச் சொல்லி அழைத்து வந்தார்.
 (தற்பொழுது எனது தந்தையும் இல்லை... என்னைச் செல்லமாகவும்.. மிகுந்த பிரியமுடனும் நடத்துவார்.  “வாப்பா...போப்பா...என்னப்பா...” என்றுதான் சொல்லுவார்...“வாடா...போடா...” –என்று ஒரு நாள் கூடச் சொல்லியதில்லை.)நான் ஊசி போட்டுக்கொள்ளப் பயப்படுவேன்... அதற்காக எனக்குக் காய்ச்சல் என்றால்... திருச்சியில் தஞ்சாவூர் ரோட்டில் உள்ள Dr.கணேசன் அவர்களிடம் அழைத்துச் செல்வார்கள்.  அவர் ஊசி போடமாட்டார்)  


        மணப்பாறை  லெட்சுமி நாராயணன் நான் பிறந்த மருத்துவமனை. அங்கு சேவை செய்த மருத்துவர் அய்யர் (இயற்கை எய்துவிட்டார்) பார்த்துவிட்டு... இதை இங்க பார்க்க முடியாது... திருச்சி அமெரிக்கன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்க...(எக்ஸ்ரே வசதி அப்பொழுது அங்கு இல்லை) என்று சொல்ல... என்னை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.  ஆள் ஆளுக்கு ஒர் ஆலோசனை  கொடுத்தார்கள்.  இறுதியில் இலுப்பூருக்கு அருகிலுள்ள செங்கிப்பட்டிக்குச் சென்று ஓர் ஆசிரியர் நாட்டு வைத்தியம் பார்த்தார்;  அவரிடம் மூங்கில் டப்பைக் குச்சிய வைத்துக் கட்டுப்போட்டு வந்தோம்.  வாரவாரம் எங்கள் வீட்டிற்குச் சுவேகாவில் ஒரு சில மாதங்கள் வந்து கட்டுப்போட்டு விட்டு ‘அய்ந்து ரூபாய் வாங்கிக்கொண்டு செல்லுவார்.


           மேல்நிலைப்பள்ளி முடித்துப் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்த நேரம்... மணப்பாறைக்கருகில் உள்ள பன்னாங்கொம்பிற்குக் கலைஞர் கருணாநிதி அவர்கள் பிரச்சாரத்திற்காக இரவு வந்தார்.  டி.வி.எஸ். 50-யில் நான் ஹெல்மெட் போட்டுக்கொண்டு நண்பர் ரெங்கராஜ் நடுவில் அமர, பின்னால் நண்பர் எட்வின் அமர கூட்டத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பும் பொழுது, அது சிங்கிள் ரோடு... ஒரு வேன் எங்களை உரசிக்கொண்டு செல்வதைப்போல் வர...ரோட்டைவிட்டு கீழே வண்டியை இறக்க மணலில் வண்டி சிக்கிச்சாய, பின்னால் இருந்தவர் நடுரோட்டில் விழ...நல்ல வேளை அந்த வேன் அதற்கு முன் கடந்து சென்று விட்டது.  நடுவில் அமர்ந்திருந்தவர் என் மேல் விழுந்து என்னை அழுத்த டி.வி.எஸ். கேண்டில் பாரின் கொக்கி என் நெஞ்சில் அழுத்தி எனக்கு மயக்கம் வந்து அருகில் இருந்த முள்செடியுள்ள பள்ளத்தில் மயங்கி உருள... அருகில் இருந்த வீட்டில் நீச்சத் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு... வண்டிய பார்த்தால் ஹெட்லைட் உடைந்து விட்டிருந்தது தெரிந்தது.  வந்த இருவருக்கும் வண்டியை ஸ்டார்ட் செய்யத் தெரியவில்லை.  பிறகு நானே இருவரையும் அமரவைத்துக்கொண்டு லைட் இல்லாமலே வண்டி ஓட்டிக்கொண்டு இரவு பன்னிரண்டு மணிக்கு மருத்துவமணைக்கு வந்து மருத்துவர் ஜெயராம் அவர்களை (Dr.ஜெயராம்  விபத்தில் இறந்து விட்டார்) எழுப்பி ஊசி மருந்து போட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.






        2015 மே மாதம் மணப்பாறை இரயில்வே மேம்பாலம் நான் வழக்கமாகச் செல்லும் பாதைதான்.

நமக்கு மிகப் பரிச்சயமான பாதை. அடிக்கடி பயணிக்கும் வழித்தடம்.
நண்பர் ஒருவர் காத்திருக்கிறார் என்கிற அவசரம். மனம் முழுக்க ஆக்கிரமிந்த பல சிந்தனைகள்.
அந்த மேம்பாலத்தில் ஒரு குறுகிய திருப்பம் இருந்தது. 

 விபத்து அடிக்கடி நேருமிடம். நேரான பாலத்தில் நெருங்கத் தோன்றும் திடீர் வளைவு. மிகக்குறுகலானது.
 சமீபத்தில் அதே இடத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து, மேலே இருந்து முப்பது அடி பள்ளத்தில் விழுந்து ஸ்பாட் அவுட். பொதுவாக விபத்து நேரும் இடம் என்று அடையாளப்படுத்தப்பட்ட இடம்தான்.

தன்னிச்சையாகவே என்கை வாகனத்தின் வேகத்தை அந்தத் திருப்பத்தின் முன்னே குறைத்துவிடும். அன்று என் கவனம் பிசகியது. மனம் அழுந்திய நினைவுகள்.

எனது டி.வி.எஸ் பெப் தனது முழுவேகத்தில் இருந்தது. கொஞ்சம் பறப்பதுபோலத்தான். திடீரென்று எனக்குப் பரிச்சயப்பட்ட திருப்பம்.
வண்டியை இனிக்கட்டுப்படுத்த முடியாது என்ற ஞானோதயம் ஏற்படுவதற்குள் குறுகிய வளைவில் நான் கவிழ்ந்து வண்டி ஒரு புறமும் எனது உடல் ஒரு புறமும்.

 பாலத்தின் தடுப்புச்சுவரில் பதிக்கப்பட்டிருந்த கருங்கல் ஜல்லியில் என் விரல்கள் உரசிக்கொண்டு கட்டுப்பாடற்றுப் போவது தெரிந்தது.


        எனது செல்போன் பாலத்தின் கீழ் முப்பது அடி பள்ளத்தில் விழுந்து தெறித்தது. ( யாரோ ஒருவர் ... நல்ல மனிதர் மருத்துவமனையில் வந்து அந்தச் செல்போனை (ஒரு வாரத்திற்கு முன்புதான் வாங்கி இருந்தேன் 12,500 ரூபாய்) கொடுத்துச் சென்றாரார்)

.இரத்தச் சகதியில் நனைந்திருந்து என் இடது கை.
காலிலும் நல்ல அடி.
சட்டை கிழிந்திருந்தது.
நல்லவேளை நான் மயக்கம் அடையவில்லை.

அறிமுகமான ஒருவர் என்னைச் சட்டெனத் தூக்கித் தன் வாகனத்தின் பின் வைத்து மருத்துவமனைக்கு  இட்டுச் சென்றார்.

ஏதோ உடல் அங்கேயே கிடப்பது போலவும் வேறு யாரோ வண்டியில் சென்று கொண்டிருப்பதைப் போலவும் இருந்தது.

இருந்த G.K.M. மருத்துவமனையில் சேர்த்துவிட்டு... (108 –க்கு யாரும் போன் செய்ய வில்லை... ஆனால் ஆம்புலனஸ் வந்து சென்றதாகச் பிறகு சொன்னார்கள்) வீட்டாருக்குத் தகவல் தெரிவிக்க அனைவரும் வந்து சேர... டாக்டர் வந்து பார்த்துவிட்டு...

        “விரல் ரொம்ப டேமேஜாயிருக்கு... இரண்டு விரல எடுத்தாகனும்”- டாக்டர் சொல்ல... சற்றும் இதை எதிர் பார்க்காத நான்,

         “அப்படின்னா... திருச்சி K.M.C. கொண்டு போங்க“ -என்று சொல்ல...

         “டாக்டர் தேவையில்லாம விரலை எடுக்க மாட்டோம்... திருச்சி போற வரைக்கும் விரல் தாங்காது“

–என்று சொல்லிவிட்டார்.

... வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள... முடிந்த வரைக்கும் விரலை எடுக்காமல் மருத்துவம் செய்யுங்கள் என்று நான் மருத்துவரிடம் வேண்டிக்கொள்ள என் மனைவியை அருகிலே வைத்துக்கொண்டு ஆப்ரேசன் செய்தார்.

         என் மனைவியைப் பற்றி இந்த நேரத்தில் சொல்லியாக வேண்டும்.  எந்த இக்கட்டான நேரத்திலும் என்னைக் கடிந்தோ... திட்டியதோ கிடையாது.  இப்பொழுது மட்டுமல்ல... பல வேளைகளில் மிகவும் ஆதரவாகவும் அன்பாகவும்  இருந்திருக்கிறார்.  உண்மையில் நான் கொடுத்து வைத்தவன் என்று சொல்லிக் கொள்ளவதில் பெருமைப்படுகிறேன்.

இது போன்ற ஆபத்தான நேரத்தில்தான் நமது சுற்றத்தையும் நட்பையும் எண்ணத் தோன்றுகிறது. நாம் என்ன செய்திருக்கிறோம்..? என்ன செய்யத் தவறி இருக்கிறோம்? யார் யாரை எல்லாம் தவிர்த்தோம்? நமக்கு உடல் நிலை சரியான பிறகு எல்லாரையும் பார்க்க வேண்டும். நாம் செய்யத் தவறிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்தது.

இது ஒரு பிரசவ வைராக்கியம் போலத்தான்.

        “நீங்க சொன்னதற்காக அப்படியே வைத்துத் தைத்திருக்கிறேன்...நல்லா இருந்தாப் பார்ப்போம்... இல்லைன்னா எப்ப வேணுமுன்னாலும் விரலை எடுத்துக் கொள்ளலாம்

என்றார் டாக்டர்.  பிறகு மூண்று நாள் கழித்துக் கட்டை அவிழ்த்துப் பார்த்தார்.  விரலில் நடுவில் லேசா கருப்புத் தெரிகிறது... பார்ப்போம் என்றார்.  அடுத்த மூன்றாம் நாள் கட்டைப் பிரித்துப் பார்த்தார்... அந்தக் கருப்பு மறைந்திருந்த்து.  பரவாயில்லை கை நன்றாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன் என்றார் மருத்துவர். சுண்டு விரல் நகம்  வெட்டப்பட்டு இருக்கிறது.  இரண்டு விரல்களிலும் காயம் இன்னும் முழுமையாகக் குணம் அடையவில்லை.


        இப்போதெல்லாம் 108 ஆம்புலன்ஸ் சைரன் ஒலி எழுப்பிக்கொண்டு அவசரமாகச் செல்வதை  அடிக்கடி சாலைகளில் பார்க்கின்றபொழுது யாருக்கு என்ன ஆனதோ என்ற கவலை மனதில் வந்துதான் போகிறது. 

விபத்தில் சிக்கியவரைக் காட்டிலும் அவர் உறவுகள் படும் துன்பம் சொல்லி மாளாது.

       இந்தியாவிலேயே சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடம் என்கிறார்கள்.

        இந்தியாவில் பல்வேறு விபத்துகளின் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு 52 பேர் உயிரழந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

        தமிழ் நாட்டை பொறுத்தவரையில் 69 ஆயிரத்து 95 விபத்துகள் (கடந்த ஓராண்டில் மட்டும்) ஏற்பட்டுள்ளன.   இந்த விபத்துகளில் 77ஆயிரத்து 756 பேர் காயமடைந்துள்ளனர்.  இந்தியாவிலேயே அதிகளவு எண்ணிக்கையிலான விபத்தகள் நடைபெற்றுள்ள மாநிலங்கள் அடிப்படையில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்று பட்டியலில் இருந்து தெரியவருகிறது.

        சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 3-ஆவது இடத்தில் தமிழ்நாடு வருகிறது.  இங்கு நடந்த விபத்துகளில் 14 ஆயிரத்து 476 ஆண்களும்,  2 ஆயிரத்து 547 பெண்களும் என ஆக மொத்தம் 17 ஆயிரத்து 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

(தினத்தந்தி 19-7-2015)

        இந்த எண்ணிக்கையில் இந்த ஆண்டு நானும் ஒருவனாகச் சேர்ந்திருக்க வேண்டும்.  எப்படியோ தப்பிப் பிழைத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.


‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நாம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு


உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள்’


* வலைச்சர நண்பர் மது (திருமிகு.கஸ்தூரி ரங்கன்) திடீரென என்னைப் பார்ப்பதற்காக என் இல்லத்திற்கே வந்து என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.  அவருக்கு அன்புத்  தொல்லைகள் பல நான் கொடுத்து இருந்தாலும...அவரின் அன்பு கண்டு நெகிழ்ந்து போனேன்.  


 விடுபட்ட விபத்துகள் 


அன்பிற்கினிய தோழர் திருமிகு. மது அவர்கள்


               “இத்துணை விபத்துக்களா?” என்ற பொழுதுதான்.... 
விடுபட்ட விபத்துகள் ஞாபகம் வந்தன. 

                 நான் S.I.T, அரியமங்கலத்தில் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்த சமயம் நகரப்பேருந்தில்... அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு வருவதற்காகப் பேருந்தின் முன் படிக்கட்டுக்கருகில் நின்று கொண்டு பயணம் செய்தேன். நடத்துநர், கூட்டம் அதிகமாக இருக்கவே,“கொஞ்சம் நகர்ந்து செல்லுங்கள்” -என்று பத்துமுறையாவது சொல்லியிருப்பார். 

அவரின் நச்சரிப்பு தாங்காமல் பின்புறம் நாலடி நகர்ந்து சென்றேன்...


அரியமங்கலம் பாலத்தில் இறங்கிய பொழுது ஓட்டுநர் ‘சடன் பிரேக்’ போட்டார்...பேருந்தில் நின்றவர்களெல்லாம் கீழே சாய்ந்தோம்....‘டமார்’ என்ற பயங்கரச் சப்தம். சாலையில் நின்று கொண்டிருந்த பெட்ரோல் டேங் லாரியின் பின்னால் போய் இடித்து...முன்புறக் கண்ணாடி சுக்குசுக்காக நொறுங்கி அநேகம் பேருக்கு காயம்...ஒரே அலறல் சப்தம்... நல்ல வேளை சற்று பின்னால் நகர்ந்ததால் கீழே விழுந்ததுடன் தப்பித்தேன். நீண்ட நாட்களாகத் தோள்பட்டை வலித்துக்கொண்டே இருந்தது.

‘பிறகுதான் தெரிந்தது... ஓட்டுநர் மப்பில் இருந்தது... அவருக்கு நின்று கொண்டிருந் லாரி போய்க்கொண்டிருப்பது போல தெரிந்திருக்கிறது’. ஓட்டுநரின் கால் இடிபாடுகளில் சிக்கி மாட்டிக்கொண்டது. அவரை இருக்கையில் இருந்து வெளியே தூக்க மிகவும் சிரமப்பட்டார்கள். எனக்கு காயமேதும் இல்லை என்பதால் அடுத்த பேருந்தைப் பிடித்து புகைவண்டியைப் பிடிக்க வந்து சேர்ந்தேன்.


                   புதுக்கோட்டையில் புள்ளியியல் துறையில் வேலை பார்த்த சமயம் மணப்பாறைக்கு S.V.S. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தபடியால் ஓட்டுநருக்குப் பக்கத்தில் நின்று கொண்டு பயணம் செய்தேன். சித்தன்னவாசல் அருகில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று புறப்பட்ட சற்று நேரத்தில், ஒரு டயர் இருநூறு அடி தூரத்தில் ஓட்டுநரின் வலது புறமாக பள்ளத்தில் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பேருந்தின் மேலே இருந்த ‘ஸ்டெப்னி டயரோ ’என்று எண்ணி, சொல்லாம் என்று வாயெடுத்த பொழுதுதான்... பேருந்து தெண்டுவது தெரிந்தது... ஓட்டுநரின் கீழ் இருந்த டயர் ஜாயிண்ட் கட்டாயி டயர் கழண்று ஓடிக்கொண்டிருந்தது. நல்ல வேளை பேருந்து வேகமாகச் செல்லாததால் பெரும் விபத்திலிருந்து தப்பித்தேன்.



மேலும் திருவாளர்கள்... விஜு, கில்லர்ஜி,     தமிழ் இளங்கோ, திண்டுக்கல் தனபாலன்,  துளசிதரன், இனியா, இளமதி, கிரேஸ்  மற்றும் பலர் என்னைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்கள்.  அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.



முகமறியா நட்புகளின் இந்த அன்பு எனக்கு மிகப்பெரிய ஆறுதல்.

அலட்சியமும் கவனப்பிசகும், அதீக தன்னம்பிக்கையும், தவறான கணக்கிடலும் இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம்.

**வலைச்சர நண்பர்களுக்குப் பின்னூட்டம் இடமுடியவில்லை... பதிவு எதுவும் போட முடியவில்லை என்ற வருத்தமும் நிரம்பவே உண்டு...  வலைத்தளத்தில் முடிந்தவரை எழுத முயற்சி செய்வேன்.... விரைவில்! 
                                                            
-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

42 கருத்துகள்:

  1. உங்கள் உடல்நலம் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பதுபோல முடிந்தவரை இயல்பு நிலைக்குத் திரும்பும்வரை சற்றுக் கவனமாக இருங்கள். எழுதுவதோ, பின்னூட்டம் இடுவதோ தற்போது அவசரமில்லை. உங்களுடைய வருத்தம் விரைவில் உங்களை விட்டுப்போக வலைச்சர நண்பர்களோடு நானும் பிரார்த்திக்கின்றேன். உடல் நலனே முக்கியம். இவ்வாறான நிலையிலும் நீங்கள் எழுதியுள்ளதைப் பார்க்கும்போது உங்களின் மன வேதனையையும், பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற உங்களின் மன நிலையையும் அறியமுடிந்தது.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    தங்களின் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா

    தங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டதை அறிந்து மிக மிக வேதனைப் பட்டேன்.
    இத்தனைக்கு மத்தியிலும் உங்களின் விடா முயற்சியாக ஆங்காங்கே கருத்துப் பகிர்தலும் செய்து கொண்டு, கடந்த, நடந்து போன அவ்வளவு விடயத்தையும் தட்டச்சுச் செய்துளீர்களே..!
    என்னவெனச் சொல்வேன்?..
    அதிகமாக ஸ்ரெயின் பண்ணிக்காமல் கொஞ்சம் உடல் நலனில் அக்கறையாயிருங்கள்.
    வலையுலகம் அறியும் உங்களை!

    எல்லோருக்கும் சொல்வதுதான் ஐயா!
    வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் ஏற்றமும் இறக்கமும் ஒரு சுழற்சி!..

    விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கிறேன்!
    மனதைத் தளர விடவேண்டாம். உறுதியாய் இருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தையும் துயரத்தையும் எண்ணி எண்ணி... எப்படி இதையெல்லாம் தாங்கிக் கொண்டு உலா வருகிறீர்கள் என்று வியந்து பார்ப்பேன். திடீரென தங்களின் உடல் நிலை சரியில்லாமல் போனதை அறிந்து மனது மிகுந்த வேதனைப் பட்டது.
      தங்களுக்கு பொறந்த இடம் (தாய்நாடு) சரியில்லை... புகுந்த இடமும் (வாழும் இடத்திலும் சூழல்... உடல்நிலைகள்) சரியில்லை.

      இருந்தாலும் தங்களின் துணிச்சல் பாராட்டப்பட்வேண்டியது... சமீபத்தில் பேசியபொழுது தங்களின் குரல் தெளிவாக நன்றாக இருந்தது. உடல் நன்றாக இருந்தபொழுதுகூட இவ்வளவு தெளிவாக பேசவில்லை... இதைச் சொல்ல வேண்டும் என நினைத்தேன்.
      தங்களின் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

      இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
      ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
      பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
      மனிதன் மாறிவிட்டான்
      மதத்தில் ஏறிவிட்டான்

      வந்த நாள் முதல் இந்த நாள் வரை
      வானம் மாறவில்லை
      வான் மதியும் நீரும் கடல் காற்றும்
      மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
      மனிதன் மாறிவிட்டான்
      மதத்தில் ஏறிவிட்டான்

      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.

      நீக்கு
  4. /// வாழ்க்கையில் கடந்து போன ஒரு நொடியை சரிப்படுத்தி விட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்துவதில் விபத்தினைப் போல வேறெதுவும் இருக்க முடியாது. ///

    எல்லாமே நடந்து முடிந்த பிறகுதான் நமக்கு தோன்றுகிறது.

    கலைஞரின் தீவிர தொண்டரான உங்கள் வாழ்க்கையில், வரிசையாக உங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்களை வரிசைப்படுத்தி சொல்லி இருப்பது, உங்களுக்கு இருக்கும் எதையும் தாங்கும் இதயத்தின் வலிமையைக் காட்டுகிறது.

    ஸ்கூட்டி பெப்பில் செல்லும்போது, ஏற்பட்ட விபத்தில், எனக்கு இடது குதி காலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழு குணம் அடையவில்லை; இதனால் உங்களை நேரில் வந்து பார்க்க இயலாமல் போய் விட்டது.
    தங்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லை என்பதில் ஒரு ஆறுதல். முழு குணம் அடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் ஆர்வம் என்னை பல நேரங்களில் மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது. பணி ஓய்விற்குப் பிறகும் ஓய்வில்லாமல் உழைக்கிறீர்கள். மதுரையில் வலைப்பதிவர் சந்திப்பின் போதுதான் தங்களைச் சந்தித்தேன். பல நாள் பழக்கம் போல என்னை பலருக்கு அறிமுகப் படுத்தி வைத்தீர்கள்.

      தங்களுக்கு உடல்நலம் இல்லாமல் இருந்தும்கூட பலமுறை என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து மகிழ்ந்தீர்கள்.

      //ஸ்கூட்டி பெப்பில் செல்லும்போது, ஏற்பட்ட விபத்தில், எனக்கு இடது குதி காலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழு குணம் அடையவில்லை; இதனால் உங்களை நேரில் வந்து பார்க்க இயலாமல் போய் விட்டது.//

      தங்களின் உடல்நலம் விரைவில் குணம் அடையும்... நான் தாள் திருத்தும் பணியில் இருந்த பொழுது தங்களின் இல்லம் அருகில் இருந்ததால் வர வேண்டும் என எண்ணினேன். சி,இ.ஆக இருந்ததால் வர இயலவில்லை.

      விரைவில் சந்திப்போம்.
      -மிக்க நன்றி.

      நீக்கு
  5. தங்களின் மன வேதனையை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி தங்களுடைய வருத்தம் விரைவில் உங்களை விட்டு மறைந்து போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் அன்பிற்கும் ஆறுதலுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  6. "இது போன்ற ஆபத்தான நேரத்தில்தான் நமது சுற்றத்தையும் நட்பையும் எண்ணத் தோன்றுகிறது. நாம் என்ன செய்திருக்கிறோம்..? என்ன செய்யத் தவறி இருக்கிறோம்? யார் யாரை எல்லாம் தவிர்த்தோம்? நமக்கு உடல் நிலை சரியான பிறகு எல்லாரையும் பார்க்க வேண்டும். நாம் செய்யத் தவறிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்தது."

    நூற்றுக்கு நூறு உண்மை.

    உங்கள் பதிவைப் படிக்கையில் நெஞ்சு பதைக்கிறது. சீக்கிரம் நலம் பெற ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்.

    உங்களை விபத்துகளிலிருந்து காப்பாற்றியவர்களை இன்னமும் நன்றியறிதலோடு வைத்திருப்பது சற்று நெகிழச் செய்கிறது.

    கவலை கொள்ளவேண்டம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

    God Bless You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      வணக்கம். தங்களின் ஆறுதலான வார்த்தைக்கும் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மனதில் உள்ள உண்மையை வலியுடன் சொல்லியுள்ளீர்கள் ஐயா...

    நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் ஐயா... முழுவதும் குணமடைந்த பின் பகிர்ந்து கொள்ளலாம்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தக்கு,

      தங்களின் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் உதவியும் இருக்கும் பொழுது மனம் மகிழ்ச்சி கொள்கிறது.
      ஓய்வெடுத்துக் கொள்கிறேன் அய்யா.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  8. என்ன அய்யா சொல்கிறீர்கள்? எப்பொழுது இப்படி எல்லாம் நடந்தது? அருகில் இருந்தும் எனக்கு தெரியாமலே போயிற்றே? மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஊரில் இருக்கிறேன் வந்ததும் தங்களைக் காண வேண்டும் என மனம் அடித்துக் கொள்கிறது அய்யா. கடவுளே துணை புரிந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      மே மாதம் 22-ந் தேதி நடந்தது. பத்து நாள் மணப்பாறை G.K.M. மருத்துவ மனையில் இருந்தேன். பள்ளி தொடங்கியதும் 15நாள் மருத்துவ விடுப்பில் இருந்தேன். தனியார் பள்ளி... பத்தாம் வகுப்பு மாணவர்கள்... காரில் ஓட்டுநரை வைத்துக் கொண்டு 15 நாள் சென்று வந்தேன். ஓட்டுநர் சரிவர அமையாததால் D.C.T.C. டெப்போவில் சொல்லி பேருந்து புறப்படும் பொழுது காலையில் அங்கேயே ஏறிக்கொள்வது... மாலையில் ஏதோ ஒரு பேருந்தில் வரலாம்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்பு நண்பரே! தங்கள் வாழ்வில் இத்தனை விபத்துகளா! படிக்கவே சங்கடப் பட்டேன் எனக்கு விபத்து பற்றிய செய்தியே தெரியாது! நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வயதில்... தளராத உழைப்பில்... தமிழாசிரியர் சமுதாயத்திற்காகச் செய்த தொண்டில்...மரபுக்கவிதை யாப்பதில்...தங்களை எண்ணுகின்ற பொழுது எனக்குள் உத்வேகம் பிறக்கிறது.

      தங்களின் ஆறுதலான வார்த்தைக்கும் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      நலம் நலம்தானா முல்லை மலரே
      சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
      இளையகன்னியின் இடை மெலிந்ததோ
      எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
      வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
      வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
      அன்புள்ள மான்விழியே
      ஆசையில் ஓர் கடிதம்
      நான் எழுதுவதென்னவென்றால்
      உயிர் காதலில் ஓர் கவிதை

      நலம் நலம்தானே நீ இருந்தால்
      சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
      நலம் நலம்தானே நீ இருந்தால்
      சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
      இடை மெலிந்தது இயற்கை அல்லவா
      நடை தளர்ந்தது நாணம் அல்லவா
      வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
      வாடவைத்ததும் உண்மை அல்லவா
      அன்புள்ள மன்னவனே
      ஆசையில் ஓர் கடிதம்
      அதை கைகளில் எழுதவில்லை
      இரு கண்களில் எழுதிவந்தேன்
      அன்புள்ள மான் விழியே
      ஆசையில் ஓர் கடிதம்
      நான் எழுதுவதென்னவென்றால்
      உயிர் காதலில் ஓர் கவிதை...

      நலம் தானா? நலம்தானா?

      உடலும் உள்ளமும் நலந்தானா?

      நலம்பெற வேண்டும்

      நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு....

      -மிக்க நன்றி.

      நீக்கு
  11. இவ்வளவு நீளபதிவை ஒரு கையால் தட்டச்சு எப்படித்தான் செய்தீர்களோ ,நினைத்தால் எனக்கே வலிக்கிறதே !
    விரைவில் நீங்கள் பூரண நலம் பெற வேண்டுமென்று விழைகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      ஆமாம் அய்யா, நீண்ட நேரம் ஆனது... தங்களின் அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  12. வாகனத்தில் செல்கையில் வேறு சிந்தனைகள் வேண்டாம் ஐயா! உடல் நலம் பேணுங்கள்! பதிவுகள் பிறகு எழுதிக் கொள்ளலாம்! விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் அன்பிற்கும் ஆலோசனைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  13. வணக்கம் அய்யா,
    ஊமைக்கனவுகள் தம் பதிவில் தங்களுக்கு பதில் தரும் போது உடல் நலமில்லா நிலையிலும் தாங்கள் இப்படி வந்து கருத்திடுவது மகிழ்ச்சி ஆனால் உடல் நலன் கவனித்துக்கொள்ளுங்கள் என்பது,,,,,,,,,,,,
    இப்ப தான் புரிகிறது,,,,,,,,,,,,
    அவர் சொன்ன பதில் தான் ,
    உடல் நலனைக் கவனியுங்கள், விரைவில் நலம் பெற சிறிது ஓய்வும் தேவை உடலுக்கு,
    எனவே அதிக சிரமத்தை ஏற்காமல் ஓய்வில் இருங்கள்,

    இறைவன் தங்களுக்கு எல்லா வகையிலும் அருள்செய்ய வேண்டுகிறேன்.

    உடல் நலனைப்பார்த்துக்கொள்ளுங்கள்,

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      உடல் நலனைப்பார்த்துக்கொள்கிறேன்.
      தங்களின் அன்பிற்கும் ஆலோசனைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  14. துன்பங்கள் தொடர்கதை தான் ஒன்று போக இன்னொன்று வந்து கொண்டு தான் இருக்கும். மகிழ்ச்சியும் அது போலவே தான் இல்லையா ஆனாலும் நட்பும் உறவும் தரும் ஆதரவினாலும் மன திடத்தினாலும் காலச் சுழற்சியினாலும் அவை எல்லாம் விரைவில் காணாமல் போய் விடும். எனவே வருந்தாதீர்கள். இந்நிலையிலும் பதிவுகள் இடும் உங்கள் முயற்சி வியக்க வைக்கிறது. விரைவில் உடலும் உள்ளமும் திடமும் நலமும் பெற வேண்டி வாழ்த்துகிறேன் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      இன்பம்/துன்பம் எப்போதும் தொடர்கதைதான்
      முடிவே இல்லாதது
      எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
      இனிய கதை இது...

      வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்
      கோலத்தை நான் காண
      இளமையை நினைப்பது சுகமோ
      முதுமையை ரசிப்பது சுகமோ

      தங்களின் வாழ்த்திற்கும் அன்பிற்கும் ஆலோசனைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  15. தங்கள் உடல் நலம் மீண்டும் நன்றாக பழையபடி மாறிட பிரார்த்திக்கின்றோம் நண்பரே!

    தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விபத்து நிகழ்வும் வேதனித்தது. என்றாலும் தங்கள் குடும்பம் தங்களிடம் காடும் அந்த அன்பிற்கு ஈடு இணை எத்தனை துன்பம் வந்தாலும் தாங்கும் சக்தியைக் கொடுத்துவிடும்...இனி எந்த துன்பமும் வாராது இருப்பதற்குப் பிரார்த்தனைகள்.

    //இந்தியாவிலேயே சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடம் என்கிறார்கள்.// ஆம் உண்மையே நாங்கள் இது குறித்து பல மாதங்களுக்கு முன் இடுகை ஒன்று போட்டிருந்தோம்...

    அந்தப் பாலத்தின் விபத்துப் பகுதி என்று அறிந்திருந்தும் ஏன் நகராட்சி அதைச் சரி செய்ய அல்லது விபத்து ஏற்படாமல் என்ன செய்யலாம் என்று யோசித்து செய்வதில்லை? சாலைகள், பாலங்கள் அமைக்கும் போதெ இதை எல்லாம் யோசித்து அமைக்க மாட்டார்களா? அப்படி என்றால் பொது மக்களுக்கு என்ன உயிர் பாதுகாப்பு இருக்கின்றது...? இப்படிப் பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன...

    பதிலளிநீக்கு
  16. அன்புள்ள அய்யா,

    பாலம் கட்டியதே பெரிய சாதனை, அதில் தவறைச் சரி செய்வது இயலாத ஒன்று. வேண்டுமானல் மேலே இருந்து கீழே முப்படி பள்ளத்தில் விழாமல் இருக்க பக்கவாட்டில் உள்ள சுவரை உயரப்படுத்தலாம். அப்படி செய்திருந்தால் இரண்டு உயிர்கள் பிழைத்திருக்கும்.

    தங்களின் அன்பிற்கும் ஆலோசனைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  17. தாங்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். உடல் நலனில் கவனம் கொள்ளுங்கள் சார்

    பதிலளிநீக்கு

  18. அன்புள்ள அய்யா,

    தங்களின் ஆறுதலான வார்த்தைக்கும் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. மதிப்புக்குரிய அறிஞரே
    உடல் நலம் பேண
    ஓய்வு தேவை
    தாங்கள் நலமடைய
    இறைவனை வேண்டி நிற்கிறேன்.

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    பதிலளிநீக்கு
  20. அண்ணா , பதிவைப் படித்து வருத்தமாக உணர்ந்தாலும், விரல் நல்லபடியாக குணமாகி வருவது அறிந்து மகிழ்ச்சி. கவனித்துக் கொள்ளுங்கள் அண்ணா, நன்றாக சரியானவுடன் எழுதுங்கள். வேண்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் ஆறுதலான வார்த்தைக்கும் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  21. பதிவைப் படித்து முடிப்பதற்குள் மூச்சு முட்டிவிட்டது...
    இத்துணை விபத்துக்களா?
    விரைவில் நலம் பெருக தோழர்
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய தோழர் திருமிகு. மது அவர்கள்

      “இத்துணை விபத்துக்களா?” என்ற பொழுதுதான் விடுபட்ட விபத்துகள் ஞாபகம் வந்தன.

      நான் S.I.T, அரியமங்கலத்தில் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்த சமயம் நகரப்பேருந்தில்... அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு வருவதற்காகப் பேருந்தின் முன் படிக்கட்டுக்கருகில் நின்று கொண்டு பயணம் செய்தேன். நடத்துநர், கூட்டம் அதிகமாக இருக்கவே,
      “கொஞ்சம் நகர்ந்து செல்லுங்கள்” -என்று பத்துமுறையாவது சொல்லியிருப்பார்.
      அவரின் நச்சரிப்பு தாங்காமல் பின்புறம் நாலடி நகர்ந்து சென்றேன்... அரியமங்கலம் பாலத்தில் இறங்கிய பொழுது ஓட்டுநர் ‘சடன் பிரேக்’ போட்டார்...பேருந்தில் நின்றவர்களெல்லாம் கீழே சாய்ந்தோம்....‘டமார்’ என்ற பயங்கரச் சப்தம். சாலையில் நின்று கொண்டிருந்த பெட்ரோல் டேங் லாரியின் பின்னால் போய் இடித்து...முன்புறக் கண்ணாடி சுக்குசுக்காக நொறுங்கி அநேகம் பேருக்கு காயம்...ஒரே அலறல் சப்தம்... நல்ல வேளை சற்று பின்னால் நகர்ந்ததால் கீழே விழுந்ததுடன் தப்பித்தேன். நீண்ட நாட்களாகத் தோள்பட்டை வலித்துக்கொண்டே இருந்தது.

      ‘பிறகுதான் தெரிந்தது... ஓட்டுநர் மப்பில் இருந்தது... அவருக்கு நின்று கொண்டிருந் லாரி போய்க்கொண்டிருப்பது போல தெரிந்திருக்கிறது’. ஓட்டுநரின் கால் இடிபாடுகளில் சிக்கி மாட்டிக்கொண்டது. அவரை இருக்கையில் இருந்து வெளியே தூக்க மிகவும் சிரமப்பட்டார்கள். எனக்கு காயமேதும் இல்லை என்பதால் அடுத்த பேருந்தைப் பிடித்து புகைவண்டியைப் பிடிக்க வந்து சேர்ந்தேன்.

      புதுக்கோட்டையில் புள்ளியியல் துறையில் வேலை பார்த்த சமயம் மணப்பாறைக்கு S.V.S. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தபடியால் ஓட்டுநருக்குப் பக்கத்தில் நின்று கொண்டு பயணம் செய்தேன். சித்தன்னவாசல் அருகில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று புறப்பட்ட சற்று நேரத்தில், ஒரு டயர் இருநூறு அடி தூரத்தில் ஓட்டுநரின் வலது புறமாக பள்ளத்தில் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பேருந்தின் மேலே இருந்த ‘ஸ்டெப்னி டயரோ ’என்று எண்ணி, சொல்லாம் என்று வாயெடுத்த பொழுதுதான்... பேருந்து தெண்டுவது தெரிந்தது... ஓட்டுநரின் கீழ் இருந்த டயர் ஜாயிண்ட் கட்டாயி டயர் கழண்று ஓடிக்கொண்டிருந்தது. நல்ல பேருந்து வேகமாகச் செல்லாததால் பெரும் விபத்திலிருந்து தப்பித்தேன்.

      நன்றி.

      நீக்கு
  22. அய்யா...

    தங்களின் விபத்து செய்தியை இந்த நிமிடம்தான் அறிந்தேன்...

    இழந்தது எதையும் மீட்டெடுக்கலாம்... உடல் ஒன்றை தவிர ! உடல் நலம் மிக முக்கியம். கவனமாக ஓய்வில் இருங்கள்.

    எங்கள் வலைப்பூக்கெளெல்லாம் இங்கு தான் இருக்கும் !

    விபத்துக்கு பிறகான மன உளைச்சலும் கொடுமையானது... தவிர்த்திருக்கலாமோ என மனதின் ஓரத்தில் ஒரு குருவி கொத்திக்கொண்டே இருக்கும் !

    உங்களின் நலனுக்காக வேண்டுகிறேன்...

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,


      தங்களின் ஆறுதலான வார்த்தைக்கும் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  23. ஐயா,

    வணக்கம். என் பதிவுகளுக்கு முதல் ஆளாக வரும் தங்கள் பதிவினுக்குக் கடைசி ஆளாக வருகிறேன்.

    விபத்து நடந்த அன்று என்னை அழைத்து ஒலித்த உங்கள் குரலில் நான் இந்த அளவு பாதிப்பினைக் காணவில்லை.

    நேரில் காணும்போது விக்கித்துப் போனேன்.

    ஒரு தட்டச்சுக் கலைஞனுக்கு விரல்கள் எவ்வளவு முக்கியமானவை.

    நீங்கள் என் பதிவில் வந்து பின்னூட்டம் என்ற பெயரால் விசைப்பலகையைத் தட்டும் ஒவ்வொரு தட்டிற்கும் என் மனம் பதைத்துக் கிடக்கும்.

    நேரிலும் இது பற்றிக் கூறி இருக்கிறேன்.

    கேடிலும் உண்டோர் நன்மை என்பதைப் போல என்னைவிட, தங்களின் முகம் போலும் அறியாத இத்தனை இத்தனை உறவுகள் உங்கள் மேல் கொண்ட அன்பினைக் காண இன்னும் நெகிழ்கிறேன்.

    நலம் பெற்று மீண்டும் உங்கள் பழைய பாணி தொடர வேண்டும்.

    வாழ்த்துகள்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      விபத்து நடந்த அன்று தங்களை அழைத்து ஒலித்த எனது குரலில் நான் இந்த அளவு பாதிப்பினை அப்பொழுது உணரவில்லை என்பது உண்மைதான். ஏதோ கட்டுப்போடுவார்கள் என்றுதான் எண்ணினேன்.

      ‘ஒரு தட்டச்சுக் கலைஞனுக்கு விரல்கள் எவ்வளவு முக்கியமானவை.’ - என்பதை தற்பொழுது ஒரு கையால் தட்டச்சு செய்கையில் உணர்கிறேன். முன்பெல்லாம் நான் நினைப்பதையெல்லாம அதிகமாகத் தட்டச்சு செய்வேன்.

      தங்களின் ஊக்கமும் வழிப்படுத்தலும ஆற்றுப்படுத்துதலும் எனக்கு உந்துசக்தியாக இருக்கிறது.

      -மிக்க நன்றி.



      நீக்கு
  24. வணக்கம்

    தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...