ஞாயிறு, 24 ஜூலை, 2016

புதிய உடன்படிக்கை - 9 -நாடகம்



புதிய உடன்படிக்கை

 

காட்சி  9
இடம்: பூங்கா

பாத்திரங்கள்: ஜான்சன், கனகராஜ், செல்வம், சேகர்.
                                                                     
ஜான்சன்:  காந்தி பார்க்கில... நாம சுதந்திரமா பிராந்தியடிச்சிட்டு இருக்கோம்... பாத்தீங்களா...?
                                                                        



கனகராஜ்: இதுக்காகவா சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாரு... மதுவிலக்குதானே அவரு கொள்கை...

செல்வம்: நம்ம கௌவர்மென்டே... காந்தியப்பத்தி கவலைப்படலை... நாம எதுக்குக் கவலைப்படனும்...

சேகர்:  சரி... அதை வுடு... இந்த பார்க்க பராமரிக்கிறவங்கனாலும் ஒழுங்கா பராமரிக்கிறாங்களா...?

செல்வம்: ஒழுங்கா இருந்தா நாம இங்க வந்து தண்ணி அடிக்க முடியுமா...?  நீ ஒண்ணுடா வெவரம் தெரியாத ஆளா இருக்கியேடா...!

கனகராஜ்:  இப்படி இருக்கிறதுதாண்டா நமக்குச் சரி...

ஜான்சன்:  சரி... அது இருக்கட்டும்... வேற ஏதாவது வாழ்க்கைக்குப் பயனுள்ளதா ஏதாவது பேசுங்கடா...?

செல்வம்:  நமக்கும் அதே சிந்தனைதான்... ஏதாவது தொழில் செஞ்சு பெரிய ஆளா ஆகணுமுன்னு...

சேகர்:  என்ன தொழில்டா...?

செல்வம்:  அதான்டா  தெரியலை...

ஜான்சன்:  சொத்து இருக்கு...

கனகராஜ்:    சொத்த வச்சு சுட்டா திங்க முடியும்... வித்து வேணுமுன்னா செலவு செய்யலாம்... அதுக்கும் ஒங்க அப்ப விடுவாரா... என்ன...?  என்னிட்ட ஒரு நல்ல அய்டியா கைவசம் இருக்கு...!

ஜான்சன்:  என்ன அய்டியா...?  வருமானம் ஏதாவது கிடைக்குமா...?

கனகராஜ்:  கிடைக்குமாவா...?  டெய்லி நானூறு... அய்நூறு சம்பாதிக்கலாம்...!

ஜான்சன்:    நிஜமாவா...?

கனகராஜ்:  பொய்யா சொல்றேன்... கிளப் ஒன்னு... சீட்டாட ‘மனமகிழ்மன்றம்’ன்னு ஆரம்பிச்சோமின்னா போதும்... அப்புறம் பாரேன் வருமானத்தை...!

செல்வம்:  சூப்பர்டா... நான் கூட இதையேதான் நெனச்சேன்... நீ சொல்லிட்டாய்...!

ஜான்சன்:      சரி... எவ்வள செலவாகும்...?

கனகராஜ்:  என்னா... ஒரு  முப்பதாயிரம்,  நாற்பதாயிரம் வேணும்...

ஜான்சன்:  முப்பதாயிரம்... நாற்பதாயிரமுன்னு சொன்னா... பணத்துக்கு என்னடா பண்றது...  எங்க அப்பாட்ட கேக்க முடியுமா...?

கனகராஜ்:  ஒங்க அப்பாட்ட எதுக்கு கேக்கிறாய்... ஒ ‘வொய்ப்’ட்ட ஏதாவது தொழில் செய்றமுன்னு சொல்லி ஒரு நாற்பதாயிரம் பணம்... அவுங்க அப்பாக்கிட்ட இருந்து வாங்கித் தரச் சொல்லு...

செல்வம்:  என்னமோ இதுக்கு போயி... பயந்துகிட்டு... நீ மொதல்ல முதல் போடு... நாங்க ஒன்ட்ட வேலைக்கு இருக்கோம்...

ஜான்சன்:    நல்ல அய்டியாதான்... ஆனா அவள் இதைக் கேக்கனுமே...

கனகராஜ்:  கேக்க வைக்கனும்...  புருஷன் சொல்றதத்தான் பொண்டாட்டி கேக்கனும்... பொண்டாட்டி சொல்றத புருஷன் கேக்கக்கூடாது...

ஜான்சன்:  ஆமாமா... நா எப்படியும் எ பொண்டாட்டிய பணம் வாக்கி வர வச்சிடுறேன்... போதுமா...?

கனகராஜ்: அது போதுமே... அப்ப சீக்கிரம் போயி ஆக வேண்டியதப் பாருப்பா... நாங்களும் கௌம்புறோம்...

ஜான்சன்:  சரி... நானும் ஆக வேண்டியதப் பாக்கிறேன்...!


                                                                                                          


                                                                                                                                 
             

                                                                                                            தொடரும்...


-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.








































செவ்வாய், 14 ஜூன், 2016

பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 4


பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 4

பிழையான சொல் சிவப்பு வண்ணத்திலும்...

     பிழை திருத்தம் பச்சை வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


1. நல்ல சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்காது.




அஃறிணைப் பன்மையில் ‘இரா என்று முடிய வேண்டும்.

நல்ல சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இரா.


2. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் ‘காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை என்று எழுதுகிறார்கள்.
                               
                 
‘சித்திரிக்கப்பட்டவை என்று எழுதுதல் வேண்டும்.

‘சித்திரமும் கைப்பழக்கம் என்பது நினைவு கூரத்தக்கது.


3. மேசையின் மேல் உள்ள அந்தப் பழங்கள் நல்லவை இல்லை.

பழங்கள் இருக்கின்றன.  ஆனால் அவை நல்லவை அல்ல.  எனவே
‘அந்தப் பழங்கள் நல்லவை அல்ல.
தன்மைப் பொருளை உணர்த்த மட்டுமே இல்லை என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

4. வாழ்த்துகள்வாழ்த்துக்கள்




இரண்டு சொற்கள் இணையுமிடத்து வருமொழி முதலில் க, ச, த, ப என்னும் எழுத்துகளை முதலாக உடைய சொற்கள் வந்தால் அவ்வெழுத்துகள் ஒற்றுகள் மிகுதலும் உண்டு.  மிகாமல் இயல்பாதலும் உண்டு.

இங்கே ‘கள் என்பது பன்மை விகுதி.  அதனால் மிகாது.  தனிச் சொல் அன்று.  (கள் பெயர்ச்சொல் ஆயின் வேறு பொருள்)

வாழ்த்துகள் – எழுத்துகள் – படைப்புகள் என இயல்பாக நிற்றலே சரியானது.

‘கள் என்னும் விகுதி – ஒரு சொல்லில் அடங்கியதேயன்றித் தனிச்சொல் இல்லையாதலின் புணர்ச்சி விதிகளுக்கு இடமில்லை.

இனிப்புக்கள்இனிப்புச் சுவையுடைய கள் என்ற பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இனிப்புகள் – என்றெழுதுவதே சரியானது.

அவ்வாறே கருத்துகள், தலைப்புகள் என்பனவுமாம்.
                           
                         





5. பசும்பாலா?  பசுப்பாலா?
                                             
         

வாழை மரத்தினுடைய பழம் – வாழைப்பழம் என்பது போன்றே

பசுவினுடைய பால் – பசுப்பால் ஆகும்.

பசும்பால் – பசுமையான பால், பச்சையான பால் என்ற பொருளாகி விடும்.

(ஆனால் பேச்சு வழக்கில் ‘பசும்பால்  என்றே குறிப்பிடப்படுகிறது)


6. தேனீரா?  தேநீரா?
                                       
தேன்+ நீர் – தேனீர் – தேன்போன்று இனிக்கும் ‘நீர்என்று பொருள் தரும்.
                         
தேநீர் – தே+நீர் – தேயிலைத் தூளிலிருந்து எடுக்கப்படும் நீர்.  ஆதலின் ‘தேநீர் என்பதே சரியானது.


7. குடக்கூலியா?  குடிக்கூலியா?
                                     
குடக்கூலி – குடம்+கூலி – எனப்பிரித்து குடம் செய்தவர்க்குக் கூலி
                          எனப் பொருள் தரும்.

குடி+கூலி குடியிருப்பதற்கான கூலி – என்பதே சரியானது.


8. மென்மேலும்மேன்மேலும்
                                                 
மேலும் மேலும்- அடுக்குத் தொடர்.
மேலும் மேலும் என்ற சொல் மேன்மேலும் என்ற மாறியுள்ளது.  ஆதலின் மென்மேலும் என்பது பிழையானது.
‘மேன்மேலும் என்பது சரியானது.

பிழையான சொல் சிவப்பு வண்ணத்திலும்...

பிழை திருத்தம் பச்சை வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

9. ‘என்று – என்னும் சொற்கள் பயன்படுத்தும் விதம்

இவனுக்கு முருகன் என்று பெயர்.

இவனுக்கு முருகன் என்பது பெயர்.

இந்தியாவின் அருகில் நேபாளம் என்ற நாடு இருக்கிறது.


இந்தியாவின் அருகில் நேபாளம் என்னும் நாடு இருக்கிறது.

என்ற – இறந்த காலப் பெயரெச்சமென்பதால் தவறாகிறது.

பெயர்ச் சொல்லிற்கும் பெயர்ப் பதிலிக்கும் இடையே ‘என்று என்னும் சொல் வரலாம்.

(எ.கா) பாரியென்று ஒருவன் உளன்.




                                               (தொடரும்...

நன்றி: தமிழாசிரியர் முழக்கம்.

 -மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.


சனி, 11 ஜூன், 2016

புதிய உடன்படிக்கை - 8 -நாடகம்



புதிய உடன்படிக்கை

 

காட்சி  8

இடம்: மாளிகை

பாத்திரங்கள்: ஜாக்லின், ஆரோக்கியசாமி, ஞானசௌந்தர்.

(ஹாலிங் பெல் அடிக்கிறது... கதவை ஆரோக்கியசாமி திறக்கிறார்)

ஆரோக்கியசாமி: அடே...டே... வாங்க சம்மந்தி... வாங்க... வாங்க... அம்மா ஜாக்லின்...

(ஞான சௌந்தர் உள்ளே நுழைகிறார்;  ஜாக்லின் உள்ளே இருந்து குரல்)
ஜாக்லின்: என்னங்க மாமா...?

ஆரோக்கியசாமி: இங்கே வாம்மா... யாரு வந்திருக்கான்னு பாரு... ஆமா... நம்ம ஊரு பக்கம் மழைமாரி ஏதும் பெஞ்சிச்சா...

ஞானசௌந்தர்:  எங்கே பெய்யுது... பாழாப்போவுது... எழவு மானம் கண்ணு திறந்திச்சுன்னா... காட்டையாவது உழுது போடலாம்... அதுக்கும் வழியக் காணோம்... ஆமா மாப்பிள்ளைய எங்க காணோம்...

ஆரோக்கியசாமி: இப்பத்தான் வெளியே கிளம்பிப் போனான்... ஏதோ டிராக்டர் வாங்கிறதுக்கு அலையறான் போல இருக்கு...

ஞானசௌந்தர்:   அப்படியா... வாங்கட்டும்... வாங்கட்டும்...

ஆரோக்கியசாமி: என்னம்மா... ஜாக்லின்... உள்ள என்ன பண்றாய்...?

ஜாக்லின்: இதோ வந்திட்டேன் மாமா... (முந்தானையால் நெற்றியைத் துடைத்தபடி வருகிறாள்.  அப்பாவைக் கண்டு மகிழ்ச்சியுடன்) அப்பா... வாங்கப்பா... இப்பத்தான் வநதீங்களா...?  உள்ள உலை கொதிச்சிட்டு இருந்திச்சு... அதான்... கொஞ்சம் நேரமாயிடுச்சு... இப்பதானே வந்தீங்க...

ஞானசௌந்தர்: ஆமாம்மா... இப்பத்தான் வாரேன்... ஒன்ன பாக்கனும் போல இருந்திச்சு... அதான் ஓடியாந்திட்டேன்...

ஜாக்லின்: எனக்கும் ஒங்களப் பாக்கனுமுன்னு ஆசையா இருந்துச்சுப்பா... நீங்களே வந்திட்டீங்க...! கொஞ்சம் இருங்கப்பா காப்பி கொண்டு வர்றேன்...  (உள்ளே போகிறாள்)

ஆரோக்கியசாமி: இன்னும் கொஞ்ச நேரத்தில சமையல் ஆயிடும் சாப்புட்டுட்டு இருங்க சம்மந்தி... நா தோட்டத்துப் பக்கம் போயிட்டு வந்திடுறேன்...

ஞானசௌந்தர்: நீங்க பாக்க வேண்டிய வேலைய பாருங்க சம்மந்தி...

ஆரோக்கியசாமி: மகளோட பேசிட்டு இருங்க... போயிட்டு வந்திடுறேன்... (வெளியே செல்கிறார்.  சிறிது நேரத்தில் காபியுடன் வருகிறாள்)

ஜாக்லின்: இந்தாங்கப்பா... காபி...

ஞானசௌந்தர்: ஒனக்கும்மா...?
                                                         

ஜாக்லின்: நா இப்பத்தான் குடிச்சேன்... நீங்க குடிங்கப்பா...
                                                              
ஞானசௌந்தர்: எப்படீம்மா இருக்கா...? (காபி குடிக்கிறார்)  என்னம்மா ஒரே கசப்பா இருக்கு...

ஜாக்லின்: எதுப்பா...?

ஞானசௌந்தர்: காபிதாம்மா... சரிம்மா... நீ எப்படி இருக்கா...?

ஜாக்லின்: நானா...?  இருக்கேம்ப்பா...

ஞானசௌந்தர்: சந்தோசமா இருக்கியாம்மா...?

ஜாக்லின்: சந்தோசமா...? சந்... தோசமோ... என்னவோ தெரியலைப்பா...!

ஞானசௌந்தர்: (அதிர்ச்சியுடன்) அம்மா... நீ என்னம்மா சொல்றாய்...?

ஜாக்லின்: ஏம்ப்பா... என்னை இங்கு கட்டிக் கொடுத்தீங்க...?

ஞானசௌந்தர்: ஏம்மா... என்னம்மா... மாப்பிளைக்கு என்னம்மா குறை...?

ஜாக்லின்: என்னன்னு நா சொல்றதுப்பா...

ஞானசௌந்தர்: சும்மா சொல்லும்மா...

ஜாக்லின்: வேற யார்ட்டப்பா நா சொல்லுவேன்... எனக்கு யாரு இருக்கா...?  அவரு குடிகாரருப்பா... குடிகாரரு... அவருக்குப் போயி...

ஞானசௌந்தர்: என்னம்மா உண்மையாவா...?

ஜாக்லின்: ஆமாப்பா...

ஞானசௌந்தர்: ஏதோ ஒரு இதுல... குடிச்சிருப்பாரு... பொண்டாட்டி நெனச்சா புருஷன திருத்த முடியாமலா போயிடும்... இதுக்குப் போயி (ஜாக்லின் அழுகிறாள்) அட... அழாதேம்மா... (கண்ணைத் துடைத்து விடுகிறார்)  மாப்பிளை வரட்டும்... நா சொல்றேன்...

ஜாக்லின்: அய்யய்யோ... வேண்டாம்ப்பா... வேண்டாம்... நானே அவரைத் திருத்த முயற்சி பண்றேன்... நீங்க ஒன்னும் கேக்க வேணாம்...

ஞானசௌந்தர்: இல்லம்மா... நா.... நாசுக்கா சொல்றேம்மா...

ஜாக்லின்: வேண்டாம்ப்பா... நா பாத்துக்கிறேன்... சரிப்பா... வாங்க சாப்புடுங்க...

ஞானசௌந்தர்: அதுல ஒன்னும் கசப்பு இருக்காதே...

ஜாக்லின்: நா என்ன வேணுமின்னா... காபி டிகாஷன் கொஞ்சம் கூடப் போயிடுச்சு... இதுக்குப் போயி...

ஞானசௌந்தர்: அது மாதிரிதாம்மா... மாப்பிளை வேணுமுன்னா செய்யப் போறாரு... ஏதோ... அவர அறியாம... நாலு பேரோட சேந்துக்கிட்டு... இதுக்குப் போயி... அவரை நல்ல வழிக்குக் கொண்டு வர்றது ஒ கையிலதான் இருக்கு... அது ஒன்னால முடியுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கும்மா... இருக்கு... ஆமா மாப்பிளை வர்றதுக்கு எவ்வளவு நேரமாகும்...?

ஜாக்லின்: தெரியலைப்பா...

ஞானசௌந்தர்: சரிம்மா... இன்னைக்கி என்ன நாள்...?
(ஜாக்லின் யோசிக்கிறாள்) ஓ பிறந்த நாள்ம்மா... மறந்திட்டியா... இந்தாம்மா... என்னோட அன்பளிப்பு ( பார்சலை கொடுக்கிறார்)

ஜாக்லின்: தேங்யூப்பா... என்னப்பா...?

ஞானசௌந்தர்: பிரிச்சுப்பாரேன்...

ஜாக்லின்: (பிரித்துப் பார்க்கிறாள்) அய்... பட்டுச் சேலை... (தன் மேல் வைத்துப் பார்த்து சந்தோசத்துடன்)  நீங்கதான் செலக்சன் பண்ணுனீங்களா...?

ஞானசௌந்தர்: ஆமாம்... ஏன்...?

ஜாக்லின்: புடவையையெல்லாம் நல்லா செலக்சன் பண்ணியிருக்கீங்க... இதென்ன பேண்ட் சர்ட்டா...?

ஞானசௌந்தர்: ஆமாம்மா... மாப்பிளைக்கு... வந்தவுடன நா கொடுத்ததா கொடும்மா... சரிம்மா... சாப்பாடு போடும்மா... சாப்பிட்டிட்டு கௌம்புறேன்...

ஜாக்லின்: ஏம்ப்பா... இருந்திட்டு போங்கப்பா...

ஞானசௌந்தர்: இல்லம்மா... இருந்திட்டுப் போற மாதிரியா இருக்கு... வீட்ல பண்ணையாளு வேற சொல்லாம கொல்லாம ஓடிப்போயிட்டான்... வீட்ல யாருமில்ல... அங்க வேலை இருக்கு... நா உடனே போவணும்மா... சாப்பாடுகூட வேண்டாம்...  நா கிளம்புறேம்மா...

ஜாக்லின்: இல்லப்பா... வாங்க... சாப்பிட்டிட்டுப் புறப்படுங்க...
                    (உள்ளே செல்கின்றனர்)
                               
                                                       

     




                                           -தொடரும்...
                                                   
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.















































































    












Related Posts Plugin for WordPress, Blogger...