செவ்வாய், 30 செப்டம்பர், 2014

மணிமேகலையும் உதயகுமாரனும்

மணிமேகலையும் உதயகுமாரனும்


                                                     

தலைவன்:   கீதம்கோடி பாடும் ஜோடி இதயமே -இது
                
                         காலகாலம்   வாழும்   காதல்    உதயமே!

                         விழிகளில்   கனவுகள்    கரையட்டும்

                         இளமையின் ராகங்கள் தொடரட்டும்

வியாழன், 25 செப்டம்பர், 2014

ஊர்வலம் போகு மேகங்களே...!


பறக்கத் தெரியாத பறவைகள்...!













                       ஊர்வலம் போகும் மேகங்களே...

                       பூமழை  தூவ   வாருங்களேன்...! 

தலைவன்:அந்தி வர மனசு தந்தியானது                            

.                       சூரியனப் போகச் சொல்லியானது                         

தலைவி   : சந்திரன துணைக்கு நான் அழைத்தது

                       மோகன  ராகத்துக்கு  அடியெடுத்தது
                                                                                                                     (ஊர்வலம் ... 


தலைவன்:பூவிதழில் தேனிருக்குது

                       போதையேறும் போலிருக்குது

தலைவி    :பாதையோரம் காத்திருப்பது

                       பார்வை வரம் நீ கொடுப்பது
                                                                                                                     (ஊர்வலம்...

தலைவன்:பாவையுனை நானினைப்பது

                       தேக சுகம் நூறிருக்கிது                       

தலைவி    :வெக்கத்தில தத்தளிப்பது

                        சொர்க்கத்தில முத்தெடுப்பது

                                                                                                                 

                                                                                                                    (ஊர்வலம்...



*15.8.1988‘ பறக்கத் தெரியாத பறவைகள்’
                     மேடை நாடகத்திற்காக எழுதியது


                                                                                             -மாறாத அன்புடன்,

                                                                                               மணவை ஜேம்ஸ்.

புதன், 17 செப்டம்பர், 2014

பெரியார்... தமிழினத்தின் விடிவெள்ளி!


பெரியார்...தமிழினத்தின் விடிவெள்ளி!




ஈரோட்டில்-
வெங்கட்டரின் வித்தொன்று...
முத்தம்மாளின்
கர்ப்பக்கிரகத்திலிருந்து...
1879  செப்டம்பர் 17-இல்
இருட்டைக் கிழிக்க
எரிமலையாய்  வெடித்துக்
கிளம்பிய தீச்சுவாலை...!



ஆத்திகக் குடும்பத்தில் பிறந்த-
அந்த  நாத்திகக் குழந்தை
அய்ந்தாம் வகுப்பே படித்தது!
வளர்ந்த பின்...
வகுப்பு வாதத்தை இடித்தது...
அவர் பெரியார்!

அவர்-
நேசித்த நாகம்மையை...
பெற்றோர்-
யோசித்தபடியே மணமுடித்து...
அவளை-
வாசித்ததின் பயனாய்
பெண் மகவுக்குத் தந்தையானார்...!
ஆனால்...                                                              
அய்ந்தே மாதத்தில்-பிள்ளை                      
மாய்ந்தே போனதும்...
தேய்ந்தே போனார்!

இறை விருப்பாளராக  இருந்த...
இராமசாமி-
காசிக்கு போனார்
சாமியாராக...!
சாமியார்கள்-
ஆசாமிகளைவிட அயோக்கியராக
இருக்கக் கண்டவர்...
இறை மறுப்பாளராக மாறினார்.

பாடசாலையில் அதிகம்
படிக்காத ஞானி...
பகுத்தறிவுப் பூங்காவைச்
சுற்றித் திரிந்த தேனீ...
‘விடுதலை’ விரும்பிகளுக்கு
உன் வார்த்தைகள்தான் தீனி...
பார்ப்பனிய ஆதிக்கத்தைச்
சுட்டெரித்த தீ நீ...!

உயர்சாதியில் பிறந்து-
தாழ்ந்த சாதியின்...
உரிமைக்கப் போராடிய...
உண்மைப் போராளி!

.                                                                                            
நீ-
ஆழ்வாரையும் எதிர்த்தவன்...
ஆள்வோரையும் எதிர்த்தவன்...
தலித்தவர்...ஈழவர்-
கோவிலுக்குள் நுழையத் தடையா?  
-எனக் கொதித்தவன்...
சிறைகளையும் கடைகளையும்
 உடைத்து காலடி பதித்து-
வைக்கம் வீரரானவன்!


‘கடவுள் இல்லை’
 -என்றே  பகுத்தறிவைக் காட்டி...
மானிட அறியாமை அழுக்கை
வெளுக்க வந்த...
சமுதாயச் சலவைத் தொழிலாளி.  

மூடப்பழக்கங்களுக்கு வைக்கப்பட்ட
முதல் கொள்ளி...
தீண்டாமை கொடுமைக்கு
வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி...
ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய
அறிவுப்பள்ளி...
பெண்ணினத்தின் விடுதலைக்கு
முளைத்திட்ட பகுத்தறிவுப்பள்ளி...!


பிராமணர்களின்-
சமயச்சடங்கில் ...
சிக்கிக்கிடந்தவரின்
சிக்கலைத் தீர்த்த...
சமுதாயப் புரட்சியாளி!.

ஓலையைப் பிரித்துப் படித்து
போலி நம்பிக்கையை
வளர்ப்பவன் ஜோதிடன்...
மூளையைப் பிரித்துப் படித்து
தன்னம்பிக்கையை வளர்த்தவன்
‘பெரியார்’ என்னும் திராவிடன்!


உன்னை-
வெறுப்போடு பார்த்தவர்களைவிட
செருப்போடு பார்த்தவர்கள் அதிகம்...!


தன் மானத்தைப்-
பெரிதென மதியாமல்...
இனமானத்திற்காக
அவமானப்  படுவதை
வெகுமானமாகக் கருதிய கருத்தாளி!



காதல் மணத்தையும்-
கைம்பெண் மணத்தையும் ஆதரித்தும்...
தேவதாசி முறையை   ஒழித்தும்
பெண்கள் சரிசமமாக
வாழ வைக்க போராடியதனால்
பெண்களே-
 ‘பெரியார்’ ஆக்கிப்
 பெருமை கொண்டனர்.


நாகம்மை மறைவுக்குப் பின்
எழுபதாவது வயதில்-
முப்பது வயது...
மணியம்மையை மணந்தார்.



நீ-
தமிழ் எழுத்துகளைச்-
சீர்திருத்தி நேர்நிறுத்தினாய்..!                  
இந்தி எழுத்துகளை அழித்து...
சிறை சென்று தியாகியானாய்!.

திராவிடரின் உயர்விற்காக-
திராவிட கழகத்தை
வடித்துக் கொடுத்து சிற்பியானாய்!


தொண்ணூற்று நான்கு வயதிலும்-
சுயமரியாதைச் சுடரொளியாய்...
தன்மானமுள்ள  தமிழனாய் வாழ...        தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தே       தமிழினம் வாழ வழிகாட்டி...
விடிவெள்ளியானாய்!                  



(136-ஆவது பெரியார் பிறந்த நாளுக்காக)


                                                                                 -மாறாத அன்புடன்,
                                                                                   (மணவை ஜேம்ஸ்)













திங்கள், 15 செப்டம்பர், 2014

அண்ணா... உலக சாதனை...!



அண்ணா...உலக சாதனை!

                                                         (மணவை ஜேம்ஸ்)

அண்ணா!
‘தமிழ்நாடு’-என்று பெயர் சூட்டித்
தாழ்ந்த தமிழகத்தைத்
தலைநிமிர வைத்த
தனிப்பெரும் தலைவரே!



நடராஜனின் பேர் சொல்ல வந்த
பிள்ளை- நீ...
பங்காரு அம்மாளுக்கு என்றும்
பங்கம் நேராது திகழ்ந்த
கிள்ளை- நீ.

அண்ணா-
இருபத்து ஒன்றில்-
அண்ணி ராணியை மணந்த
திராவிடத்தின் ராஜா!

பட்டப்படிப்புப் படித்த பிறகு-
பச்சையப்பபன்
உயர்நிலைப்பள்ளியில்-
ஆங்கில ஆசிரியன்...
அப்பொழுது
அரசியலில் சிறியன்..!.

திருப்பூரில்-
பெரியாரைச் சந்தித்ததிலிருந்து...
அரசியலில் பெரியன்...
‘திராவிட நாடு’-
இதழுக்கு உரியன்...
‘திராவிட முன்னேற்ற கழகத்தை’
படைத்த பேரறிஞன்...
இந்தியை என்றும்
 எதிர்த்த நிறைஞன்...
அதனால்  தமிழகத்தில்
வெற்றியைப் பறித்த முதல்வன்!



எளிமையின் எழிழகமே!
பேச்சில் பொடிப்போட்டா
சொக்க வைத்தாய்..?
எல்லோரும் உன்னிடம்
சிக்கிக் கொண்டனரே!

நீ-
எழுதி நடித்த நாடகங்கள்...
தீட்டிய திரைப்படங்கள்தான்...
எத்தனை எத்தனை?
அத்தனையும்
சமுதாயத்திற்குச் சத்தான முத்தல்லவா?
மூடத்தனஇருளில்
மூழ்கிக் கிடந்தவர்களை
உன் வேடத்தனத்தால் விழிக்கவைத்த
உதயசூரியனல்லவா!

                                           
இதயக்கோவிலின்-  
உதய தெய்வமே...!
திராவிடத்தின் தீர்க்கதரிசியே...
உன் ஆற்றலில் மயங்கித்தானோ
புற்றுநோய்கூட
புற்றீசலாக
உனைச் சுற்றி வந்ததோ?


வெற்றிலையோடு புகையிலையையும்
மெல்லும் பழக்கத்தால்
மெல்ல நோயும் உன்னை மென்றதோ?
வெள்ளைக்காரனைப் போல்
உன்னிடம்
ஒட்டியே-
உன் உடல் நலச் சுதந்திரத்தைப்
பறித்து விட்டதே!

அதற்குக்கூட-
அடிமையாக வாழக்கூடாதென்றா
அகிலத்தை விட்டுச் சென்றாய்?
காஞ்சித்துரையே!
எப்படி மனம் வந்தது
எங்களை விட்டுச் செல்வதற்கு!

நீ-
இறப்பில் கூட-
உலக சாதனை புரிந்தவன்...
உன் இறுதி ஊர்வலத்தில் ...
15 மில்லியன் மக்களுக்கு மேல்...!  


15 செப்டம்பர் 1909இல்-
பிறந்தாய்...
பிறந்த பிறகு
நீ-
செய்ததனைத்தும்
உலக சாதனைதான்!


                                                                                        -மாறாத அன்புடன்,
                                                                                          மணவை ஜேம்ஸ்.
(அண்ணா 106ஆவது பிறந்தநாளுக்காக)

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

நிலாவே...! யாரைத் தூதுவிடப் போகிறாய்...!



நிலாவே...! யாரைத் தூதுவிடப் போகிறாய்...! 



நிலா!
உன்னைப் பாடாத கவிஞரில்லை...
உன்னைப் பாடாதவர் கவிஞரில்லை...!
நான் மட்டும்
அதிலென்ன விதிவிலக்கு?
நீயே...வீதி விளக்கு...!
ஞாலத்தின் ஒளி விளக்கு...!
ஒளிரும் ஒரே விளக்கு...!
உன்னைப் பாடாத கவிஞரில்லை...
உன்னைப் பாடாதவர் கவிஞரில்லை...!

சூரியக் காதலனை-
சுற்றிச் சுற்றி அலைந்தே...
தேய்பிறையாகிப் போன...
காதலி!

கதிரவனின் கடைக்கண்
 பார்வைப்  பட்டதினால்...                                
வளர்பிறையாய் வளர்ந்தவள்.

இரவி(யி)டம்-
வாங்கிய வெளிச்ச முத்தத்தை...
மொத்தமாய்ச் சேர்த்து...
சில்லரையாய்
நிலத்தில்...
குளிர்ச்சி விதையை விதைக்கும்
நித்தில நிலா!

முழுவுடலை முகிலால் மூடாமல்
முழுதாய்க் காட்டும்-
மணநாள்தான் பௌர்ணமியோ?
அன்றுதான்...
உனக்கு தேனிலவோ?
                                                                             
என்ன அதிசயம்?
எப்படிப் பெற்றெடுத்தாய்...
இத்தனை-
நட்சத்திரப் பிள்ளைகளை...!
அட்சயபாத்திரமாய் ஆகிப்போனதோ
உன் கருப்பை?


சூரியக்கணவனின்
எண்ண ஒளியை பிரதிபலிக்கும்
வெண்மதி பிம்பமே!
நீ... எங்கள்-
சின்னக் குழந்தைகளுக்கு...
உன்னக் கிடைத்த
பெரிய அப்பளமோ?
தமிழ்ப் பெண்ணின்
நெற்றிப் பொட்டோ?
தங்க வட்டத் தட்டோ?
செம்பொன் கேடயமோ?
காரிருளில் இலவசமாய்...
ஒளியை வழங்கும்
விலையிலா மகளோ?
இல்லை...
வேறு யாரையோ
விலைபேச தேடியலையும்
அலைமகளோ?

உன்னிடம்-
களங்கம் என்றா
பரிதிராமன்  நெருப்புச் சிதையில்
குளிக்கச் சொன்னான்
நிலாச் சீதையை..!
ஞாயிற்றிடம்-
கோபம் கொண்டு
 திங்களே ஒளிந்து...
அம்மாவாசையானாயோ?

இடி மின்னலாய்-
ஒரே சத்தச்சண்டை
உங்களுக்குள் எப்படி வந்தது?                
உண்மையைச் சொல்...
உங்களுக்குள் ஊடலா?

நிலாவே... நீ-                                                  
வானுயர் நீதிமன்றத்தில்
விவாகரத்துக் கேட்டு
வழக்குத்  தொடுக்கும்                                        
எண்ணம் ஏதும் இருக்கிறதா?


உன்னை-
விதவையாகப் பார்க்க மனமில்லை...!
உன் உள்ளத்திலே
குடியிருக்க வரலாமா?
வருவதென்றால்...
வாடகை என்ன தரவேண்டும்?
யாரைத் தூதுவிடப் போகிறாய்...?
                               
                           

                           
                                                                                    -மாறாத அன்புடன்,

                                                                                      மணவை ஜேம்ஸ்.




வியாழன், 11 செப்டம்பர், 2014

பாரதி கண்ட கனவு!


பாரதி கண்ட கனவு!




பாரதி-
பிறந்த பதினொன்றாம் தேதியிலே
இறந்தவன்...!
இறந்த சுதந்திர  உணர்வை மீட்கப்
பிறந்தவன்...!

பாட்டில் மீட்டி -  பண்
பாட்டில் வாழ்ந்தவன்...
ஏழு வயதில்
ஏட்டில் எழுதிய கவிஞனவன்.

பதினொன்றாம் வயதில்
எட்டப்ப நாயக்கரிடம்
‘பாரதி’ பட்டத்தை
எட்டிய எட்டயபுர
முண்டாசு கவிஞனவன்.


நினைத்தவுடனேயே
அனைத்தையும் பாடும்
மாசில்லா ஆசுகவிஞனவன்.

மீசை மீது-
ஆசை வைத்த அய்யனவன்...
பொன் பொருள் மீது
ஆசை வைக்காத மெய்யனவன்...
பூணூலைக் கழட்டி
சேரிக் குழந்தைக்கு மாட்டிய
புரட்சிக் கவிஞனவன்.

பதினைந்தாம் வயதில்-
பதிவிரதைச் சித்திரச்செல்லம்மாவை...
வாழ்க்கையில்  பதியம் போட்ட
சித்திரக் கவிஞனவன்.                                    

கன்னித் தமிழ் மீது-
கஞ்சத்தனமில்லாமல்...
கஞ்சாத்தனத்துடன்
கடற்கரையில் பாடிய
மதுர கவிஞனவன்.

யாருக்காகவும் காத்திராத-
காந்திக்காகக்கூடக்  காத்திராத...
சுயமரியாதைக் கவிஞனவன்.
ஆனால்...
விடுதலைக்காகக் காத்திருந்த
தேசியக் கவிஞனவன்.


விடுதலைப் பாடலை-
வீறுகொண்டு பாடிய
வித்தாரக் கவிஞனவன்.
புதுவையில்    மறைவாய்க்  காத்திருந்தவன்...
புதுப்பாட்டுகள் பாடிப்பாடிக் களித்திருந்தவன்...
வறுமையில்    வாடிவாடித்  துடித்திருந்தவன்...
வாங்கிய அரிசியைக் குருவிக்கீந்து பசித்திருந்தவன்.
                                                                 
உனக்குப் பிடிக்காத(து) மதம்...
யானைக்கும் பிடிக்காதென்று
எண்ணிவிட்டாயோ?

வெள்ளையனை எதிர்த்த
உன்னை-
எதிர்க்க மனிதர்களால் முடியாதென்றா
ஏவினான் வெள்ளையன் மத யானையை ?
‘காலா என்னருகே வாடா...
உனைக் காலா லுதைப்பேன்’
-என்ற பாரதியை துவசம் செய்துவிட்டதே!
இன்னும் இரண்டு மாதம்
இருந்து நோயையும் பார்த்தாய்...!              

நாற்பதுக்குள் நாடுகடத்த
மதம்பிடித்த யானையும்
ஒரு காரணம்தானே!
இப்பொழுதும்கூட
யானைகளுக்கு  முகாம்கள்  நடத்தப்பட்டு
மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படுகிறது...!
மனிதர்கள்தான் அகதிகளாய் முகாம்களுக்குள்...
மதிப்பும் மரியாதையும் கெடுக்கப்படுகிறது.

’ஆனந்த சுதந்திரம்-
அடைந்து விட்டோமென்று’
அப்பொழுதே தீர்க்கதரிசனமாய்க்
கனவு கண்டாய்...!
உனது கனவு நனவானது உண்மைதான்...!
சுதந்திரம் அடைந்து விட்டோம்...
ஆனால்... ஆனந்தம்...?!

                                                                                              -மாறாத அன்புடன்,

                                                                                                மணவை ஜேம்ஸ்.
((மாகவி பாரதி நினைவு நாளுக்காக)

திங்கள், 8 செப்டம்பர், 2014

ஊமையான உண்மைகள்! சிறுகதை


ஊமையான உண்மைகள்!                                      

               



          உறங்கிக் கொண்டிருந்த ஊரார்களை உசுப்பி எழுப்பியது அந்த கோவிலின் வெண்கல மணியோசை.  இந்த இரவு நேரத்தில் கோவில் மணியை அடித்தது யார்?  மணி எதற்காக அடிக்கப்பட்டது,  நல்லதுக்கும் கெட்டதுக்கும் ஊரில் மணியடித்துத் தெரிவிப்பது வழக்கம்தான்  என்றாலும் வழக்கத்திற்கு மாறாக  ஏதோ அவசர அழைப்பாகவே எண்ணத் தோன்றியது.  சிறிது நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் ஆண் பெண் பேதமின்றி ஊரார்கள் அனைவரும் கோவில் முன் வந்து கூடிவிட்டனர்.

          அங்கே ஊர் பெரியவர்களில் மணியக்காரர், கோவில்பிள்ளை வந்துவிட்ட பின்னும் ‘பெரியவர்’ என்றழைக்கப்படும்  நாட்டாண்மை மட்டும் வரவில்லை. ‘ கோவில் மணியை அடித்தது யார்?’- என்று தெரிந்துகொள்ள கோவிலுக்குள் கூட்டம் விரைவாக  நுழைந்தது.  கோவிலுக்குள்ளிளிருந்து அழுதுகொண்டே இழுத்துப் போர்த்திய சேலை முந்தானையால் கண்களைத் துடைத்தவாறு வெளியே வந்தாள் அனுசூயா. 

          அனுசூயா மஞ்சளை அரைத்துப்  பூசினாற்போன்ற நிறம்.  அவள் பெற்றெடுத்த ஆண்குழந்தைக்காக, வெளியூர் சென்று வேண்டிக்கொண்ட கோவிலில் முடிஎடுக்க  காரில் குடும்பத்துடன் சென்ற பொழுதுதான், கார் விபத்துக்ளுள்ளாகிக் கணவனும் அவளின் மாமியாரும் அதே இடத்தில் இறந்து போக இளம் வயதிலேயே விதவையானவள்.  அப்பொழுதுதான்‘ உண்மையிலேயே கடவுள் இல்லையோ?’ என்ற எண்ணம் அவளுக்குள் வந்தது.  கடவுள் இருந்திருந்தால்,  கடவுளைக்  காணத்தானே வந்தோம்?   கோவிலுக்கு வராமல் இருந்திருந்தால் வெள்ளைச் சேலையில்  இந்தக் கோலத்தை அடைந்திருக்க  மாட்டோமே!’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டவள்தான் அவள். 

          ‘‘நீயாம்மா மணியடிச்சது?’’-மணியக்காரர் கேட்க, ஆமாம் என்பதைப் போல தலையசைத்தாள் அனுசூயா.

          ‘‘எதுக்கும்மா மணியடிச்ச? ” -அனுசூயாவிடமிருந்து பதில்வராமல் கண்ணில் இருந்து நீர் வந்தது.  

          “யோவ்...கோல்காரரே...! நம்ம பெரியவர வரச்சொல்லி கையோட கூட்டிட்டு வா...”-கோவில்பிள்ளை கோல்காரரிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே‘ பெரியவர் ’என்று அழைக்கப்படும் நாட்டாண்மை வந்து சேர்ந்தார்.  அவரைக் கண்ட ஊர்மக்கள் எழுந்து நிற்க, அனைவரையும் அமரச் சொல்லிக் கையசைத்தார்.
                                 
          அறுபது வயதுக்கும் குறைவாகவே மதிக்கத்தக்க  பெரியவர்  நாட்டாண்மை இராஜ நடைபோட்டு வந்து,  அந்த அரசமரத்தடியில் உள்ள கட்டையில் அமர்ந்தவர், கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார்,  “இந்த நேரத்தில யாரு மணியடித்தது?”

           கணீரென்ற பெரியவரின் பேச்சை இடைமறித்து பேசினார் மணியக்காரர்,  “ஒங்க மருமகள்தான் மணியடிச்சது...என்னான்னு கேட்டா சொல்லாம அழுவுது...நீங்களும் வந்தாச்சு...ஊரும்  கூடியாச்சு...ஏம்மா...!அழுதுகிட்டு இருந்தா எப்படி?  என்னான்னு சொன்னாத்தானே தெரியும்?

          அனுசூயா அழுகையை அடக்கிக்கொண்டு பேசமுனைய ஊரே உற்று நோக்கியது.  “நான் தூங்கிக்கிட்டு இருந்தப்ப... இவரு என்ன கெடுக்கப்பாத்தாரு...”-இவரு என்று சுட்டிக்காட்டியது நாட்டாண்மையை!.

          ஊரே அதிர்ச்சியில் திகைத்து அசையாமல் நின்றது!.  ‘நாட்டாண்மை இப்படி நடந்து கொண்டிருப்பாரா?  தெரிந்தும் தெரியாமலும் அவர் செய்யும் தப்பு, குடிப்பதுதான்.  இப்படி நடக்கக் கூடியவரா?’-என்று ஊரார் அவர்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டனர். 

          சந்தோசத்தையும் துக்கத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாத இறுக்கமான மனிதர் நாட்டாண்மை என்பதால் ஊரார் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.  பெரியவர் எழுந்து நிற்க ஊரே எழுந்தது.  அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு  தோளில் கிடந்த அங்கவஸ்திரத்  துண்டை எடுத்து இடுப்பில் கட்டினார்.  எதிரே அனுசூயா நின்று கொண்டிருந்தாள்.  

          “குத்தம் சுமத்தப்பட்டவரு நின்னுக்கிட்டு பதில் சொல்றதுதான் வழக்கம்....  நாட்டாண்மையா நா இருக்கிறதுனால... எனக்கு மட்டும் எந்த விதிவிலக்கும் வேணாம்... நான் சொல்றத எல்லாரும் நல்லாக்   கேட்டுக்கோங்க... கொழந்தைக்குப் பால் கொடுத்தபடியே...அந்தப் பொண்ணு தூங்கிடுச்சு... பால்வாடைக்கு பூனை அந்த பொண்ணு பக்கத்தில போயிட்டு இருந்தப்ப... அந்த நேரத்தில இந்த பாவி மனுசன்...கொல்லைக்குப் போக வெளியே வந்த நேரத்தில ... எ கண்ணு அந்தப் பூனையப் பார்த்திடுச்ச... இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னா நெனக்க முடியும்?. எங்கே பூனை கடிச்சிடப் போவுதுன்னு பூனையை பிடிக்கப் போனேன்...கை தவறி மார்ல  பட்டிடிச்சு...”      -என்று பதட்டமில்லாமல் சொன்னார் நாட்டாண்மை. 

          “என்னம்மா நாட்டாண்மை சொல்ற மாதிரி கொழந்தைக்கு பால் கொடுத்திட்டே தூங்கிட்டியா...?”  -மணியக்காரர் கேட்டார்.
         
          “ஆமாங்க...ஆனா...”-அனுசூயா சொல்லி முடிக்குமுன் இடைமறித்தார் மணியக்காரர்.

          “என்னா ஆனா...ஆவன்னா...பெண்புத்தி பின்புத்திங்கிறது சரியாப் போச்சு..தூங்கிறப்ப ஜாக்கிரதையா தூங்கிறதில்லையாம்மா...என்னா புள்ள நீ..?-கோவில்பிள்ளை  மிடுக்கானக் குரலில்  பேசிவிட்டு மீசையைத் தடவிக்கொண்டார்.

          “பெரியவர்ட்ட மன்னிப்பு கேட்டிட்டு வீட்டுக்குப் போம்மா”-மணியக்காரர் தீர்ப்புக் கூறுவதைப் போல்  கூறினார்.

          தன் பேச்சு எடுபடவில்லை என்பதைவிட,  தன்னைப் பேசவே விடவில்லையே என்ற ஆதங்கம் அதிகமாக  அதிகமாக அனுசூயா  வேகமாக நடையை எட்டிவைத்து விரைந்து வந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.  தூங்கிக்கொண்டிருந்த குழந்தை எப்பொழுது விழித்ததுக் கொண்டது  என்றே தெரியவில்லை.  பசியால் ‘வீர்...வீர்...’என்று கத்திக் கொண்டிருந்தது.  அழுத குழந்தையின் வாயில் பால் ரப்பரைத் திணிக்க, அழுகை சப்தம் மெதுவாககுறைந்தது என்றாலும் இன்னும் சிறிது நேரத்தில் பாலுக்காக அழுவான் என்பது தெரியும்.
                                                             
          வேகமாக அடுக்களைக்குள் சென்று கேஸ்அடுப்பைப் பற்ற வைத்துப் பாலைச் சூடேற்றினாள்.  சிறிது நேரத்திலேயே அவளின் மனதைப் போலவே பாலும் பொங்க ஆரம்பித்தது.   அடுப்பை  அணைத்துவிட்டு பாலை நன்றாக ஆறவைத்து புட்டியில் அடைத்து,குழந்தைக்கு புகட்டினாள்.   பாலைக் குடித்துக்கொண்டே குழந்தை தூங்கிபோனது.

          நாட்டாண்மை வீட்டிற்குள் நுழையுமுன் செருப்பை வெளியில் விட்டுவிட்டு, உள்ளே நுழைந்து, பீரோவில்  வைத்திருந்த பிராந்தியை எடுத்துத் தண்ணீர் எதுவும்  கலக்காமலேயே வேகமாக கண்ணை மூடிக்கொண்டு குடித்தார்.  அனுசூயா அதைப்பார்த்துப் பயந்து உடல் லேசாக நடுங்க... அதை வெளிக்காட்டிக் கொள்ளமலிருந்தாள்.

          “ஊருக்கே நாட்டாண்மை நா...!  என்னயே பஞ்சாயத்தில நிறுத்திட்டியே..!.நல்லா தெரிஞ்சுக்க...என்ன ஒண்ணால இல்ல...வேற யாராலையும் ஒண்ணும் செய்ய முடியாது...ஏன்னா..!.இந்த ஊர்ல நான் சொல்றதுதான் வேதம்னு ...ஜனங்க நம்புறாங்க...!விதவையா ஆயிட்டா... விவேகமா நடந்துக்கத் தெரியலையே...!”

          “ஒங்கள பெரிய மனுசன்னு ஊரே நினைக்கிறப்ப...இப்படி சின்ன புத்தி இருக்குமுன்னு நான் நெனச்சுக்கூடப்  பாக்கலை...!”

          “என்ன பண்றது...நானும்தான் நெனக்கல...எல்லாம் இப்படி நடக்கனமுன்னு  விதி...நா ஆக்சிடெண்ட்ட சொல்றேன்... ம்...ம்...விதியை மாத்த யாரால முடியும்?”

          “ஆக்சிடெண்டுல  நானும் சாகாமப்  போயிட்டேமேன்னு இப்ப நெனைக்கிறேன்...”

          “அதான் சொன்னேனே...விதியை மாத்த யாரல முடியும்?  கவலைப்படாதே...இனி ஒன்ன கவனிச்சுக்க...எல்லாத்துக்கும் நான் இருக்கேன்...எல்லாமே  ஆக்சிடெண்டுதான்...எல்லாம் விதிப்படிதான் நடக்கும்“    -நாட்டாண்மைபேசிக் கொண்டே அனுசூயாவின் கையைப் பிடித்து இழுத்தார். கையை உதறிவிட்டு ஓட முனைந்தாள்.  அதற்குள் முந்தானையைப் பிடித்து இழுத்து அனுசூயாவை இறுக அணைத்தவாறே சப்தம் வெளியில் வரமல் இருக்க அங்கவஸ்திரத்தால் அவள் வாயை அடைத்தார்.  பலம் கொண்ட மட்டும் அனுசூயா போராடிப் பார்த்தாள்.    தன் சக்தி முழுக்கச் சேர்த்துப் போராடியும் இறுதியில் அந்த மனிதமிருகத்திடம்  தோற்றுப் போனாள்.
                                     
          அங்கவஸ்திரத் துண்டை உதறித் தன் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்து தோளில் போட்டுக் கொண்டு  நாட்டாண்மை தனது அறைக்குள் சென்று அறைக் கதவை உட்பக்கமாக தாழ்போட்டுக் கொண்டு கட்டிலில் சாய்ந்தார்.  சிறிது நேரத்தில் உறங்கிப் போனார்.  இரவில் எரியும் சிவப்பு விளக்கு மட்டும் அந்த அறையில் எரிந்து கொண்டு இருந்தது.

           அனுசூயாவின் விழிகள் சிவப்பாகி  கண்ணீரை இரத்தமாக வடித்துக்கொண்டிருக்க, சிலையைப் போல் கிடந்தாள்.  இனி இந்த உயிர் எதற்கு? இனி வாழ்ந்து என்ன பயன்? எண்ணிய பொழுது, குழந்தை விழித்துக் கொண்டு  மீண்டும் கத்தியது. நேரம் ஆக ஆக குழந்தை சத்தமாகவும் வேகமாகவும் கத்திக் கொண்டே இருந்தது.  ‘நாம் இல்லையென்றால் குழந்தையை யார் காப்பாற்றுவார்கள்’- என்ற எண்ணம் மனதுக்குள் எழுந்தது.  மிகவும் சிரமப்பட்டு அனுசூயா எழுந்தாள்.  குழந்தைக்கு பால் சூடேற்ற அடுக்களைக்கு  மெதுவாகச் சென்றாள்.   கேஸ்அடுப்பைப் திறந்துவிட்டு...பாலைப் பார்த்தாள்.  பாலில்லாமல் வெறும் பால் சட்டிமட்டுமே இருந்தது.  என்ன செய்வது ? ‘தாய்ப்பால் கொடுக்கலாம்’ என்று  யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே...குழந்தை கீழே விழுந்து,  அபயக் குரலில் கத்தவே...வேகமான  பதட்டத்துடன் ஓடி வந்து, குழந்தையை வாரி எடுத்தாள்..  என்ன செய்வதென்று தெரியாமலே யோசித்து யோசித்துப் பார்த்தாள்.  விடிவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம்தான் இருந்தது.  கடைசியில்  வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடலாம் என்று  எண்ணிக்  குழந்தையைத் தூக்கிக் கொண்டு  நடந்தாள்.  

              வீடு முழுக்க கேஸ் சிலிண்டலிருந்து புரப்பேன் வாயுவின்  நெடி பரவிக் கொண்டிருந்தது.  அது நாட்டாண்மையைத்         தூக்கத்திலிருந்து   எழுப்பியது. என்னவென்று தெரியாமலேயே  தட்டுத்தடுமாறி எழுந்தவர்,  என்னவென்று தெரிந்துகொள்ள மின்விளக்கைப் போட சுவிட்சை அமுக்கினார்.  மறுநொடியே வீடே தீப்பிழம்பாக பற்றி எரிந்தது.  நாட்டாண்மையின் அலறல் சத்தம் மட்டும் வெகுதூரம் கேட்டது.

          ஊரார் உடனே கூடித்  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு  வெகு நேரப் போராட்டத்திற்குப்  பின் தீயை அணைத்தனர்.  தீயில் வெ ந்து போயிருந்த  பெரியவரான நாட்டாண்மையின் உடலைத் தூக்குவதற்கு இயலாமல் இருப்பதை எண்ணி செய்வதறியாது   அனைவரும்  திகைத்து நின்றனர்.

          “பெரியவரு...சொல்லு தாங்க மாட்டாரு...! மானஸ்தர்யா..!.என்னதான் இருந்தாலும்...பெரியவரு பெரியர்வர்தான்...”-ஊரில் ஒரு சிலர் பெரியவரைப் பற்றிப் பெருமையாகப்  பேசிக்கொண்டர்கள்.

          இந்த பரபரப்பில்  அனுசூயா பற்றி நினைக்க  மறந்தனர்.  அனுசூயா இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெகு தொலைவு வந்துவிட்டாள்.  அனுசூயாவின் குழந்தை இப்பொழுது அழுகையை நிறுத்தியிருந்தது,  அவளால் இப்பொழுதும் அழுகையை நிறுத்த முடியவில்லை!
                                                                   
                                                                                   

                                                                                      .

     -மாறத அன்புடன்,

                                                              மணவை ஜேம்ஸ்.















                                                                                 



வெள்ளி, 5 செப்டம்பர், 2014

வேருக்கு விழுதின் வாழ்த்துகள்!



வேருக்கு விழுதின் வாழ்த்துகள்


ஓர் ஆசிரியனின்-
ஆசிரியர் தின வாழ்த்து...!


ஆசிரிய ஆலவிருட்சத்தின்-
வேருக்கு  நீர்வார்த்த...
நீருக்கு-
என் வாழ்த்துகள்...!

தங்களால்-
தண்நிழல் தரும்
தருவானோம்...!
மாணவ விழுதுகளை வளர்த்து
எருவானோம்...!
குருவான தங்களால்
உருவானோம்...!
பெருமதிப்பிற்குரிய
திருவானோம்...!

ஞானியாய் இருந்து
ஏணியானீர்கள்...!
ஏற்றம் பெற்றோம்...!
பலரால்
போற்றப் பெற்றோம்.

மாணவ விழுதுகளே!
எங்களை ஒடித்துத் துன்புறுத்தினாலும்
பால் தருவோம்...!
உங்களுக்கு அதுஒழுக்கத்தின்
உரமாகும்...!

உள்ளமென்ற இலையைக் கிள்ளினாலும்...
மூடச்சமுதாயத்தின் சளி நீக்கும்
நல்ல கசாயமாவோம்..!
சாதிப்பட்டை  எடுத்தால்...
பாழ்பட்ட
தீண்டாமை இரணத்தி நீக்கி...
உயிரணுக்களாகி  சமூகப் பிணி நீக்குவோம்...

இந்த-
ஆலமரக்கிளைகளில்தான்...
அனைத்து மாணவப்பறவைகளையும்
அணைத்துக் கொள்ளும்
அற்புதம் நடக்கிறது.

இங்கு-
கட்டுப்பாடில்லா பறவைகள்...
மனச்சிறகடித்து வந்து
கட்டுப்பாட்டுடன்
மகிழ்ச்சியாய் தங்கிச் செல்லும்            
வித்தியாசமான வேடந்தாங்கல்!

எந்தப் பறவையிடமும்-
வித்தியாசம் பார்க்காத...
இந்த வேடந்தாங்களில்
ஒரே ஒரு வித்தியாசம்!
மேமாதம் மட்டும்
எந்தப் பறவைகளும்
இங்கு கூடுகட்ட வருவதில்லை...!

ஆசிரிய ஆலவிருட்சத்தின்-
வேருக்கு நீர்வார்த்த...
நீருக்கு விழுதின் வாழ்த்துகள்!

                                                                                              -  மாறாத அன்புடன்,

                                                                                                  மணவை ஜேம்ஸ்.

வியாழன், 4 செப்டம்பர், 2014

விடுதலை செய்திருக்கக் கூடாது!

விடுதலை செய்திருக்கக் கூடாது!




தாயே!

உனது கருவறையில்

என்னைச் சிறை

வைத்திருந்த பொழுது

ஒரு குறையும்

இல்லாமல்...

சுதந்திரமாக

இருந்தேன்...

ஆனால்...

இப்பொழுது?




                                                                     
                                                                                       -மாறாத அன்புடன்,

                                                                                         மணவை ஜேம்ஸ்.  


                            



                                                                                        

                                                                                          

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

மனிதனுக்குள் மனிதம்!


                             மனிதனுக்குள் மனிதம்!




ஆன்மா!
அது ஆண்டவனுக்கத்தான்
சொந்தம்...
அய்ம்புலன்களையும் அடக்கி
ஆண்டவனுக்குத்தான் சொந்தம்!.

ஆன்மாவின் அஸ்திவாரமே-
மனித நேயம் தானே!
நேயமே இல்லாத
மனிதனுக்கு
ஆன்மா என்பதே இல்லையே!

சமயம் சரியில்லை...!
நான் வந்த-
சமயம் சரியில்லை...!
அன்று-
தெய்வம் மனிதனாக
அவதாரம் எடுத்ததாம்...!
இன்று
மனித முகங்களே
தெய்வங்களாகத்
தன்னைச் சித்தரித்துக்கொண்டு
அவமானப்படுகிறது. ..!


சமயம் சரியில்லை...!
நான் வந்த-
சமயம் சரியில்லை...!
அன்பு-
அணைக்கப் பிறந்தது...
சாதித்தீயை-
சுயநலத்தீயை-
அர்த்தமற்ற சமய வெறியை-
அணைக்கப் பிறந்தது.                              

                       

யானைக்குப் பிடிப்பதும்  மதம்...
இன்று-
மனிதனைப் பிடிப்பதும் மதம்...
அய்ந்தறிவுக்கும் ஆறறிவிற்கும்
எப்படி இந்த அடிப்படை ஒற்றுமை?
சமயம் சரியில்லை...
நான் வந்த
சமயம் சரியில்லை...

சமயங்கள்...
மனிதனை மனிதனாகச்
சமைக்கவே முயன்று கொண்டிருக்கின்றன!.

சமயத்தைப் பயன்படுத்தி...
ஆட்டைப் பலியிட்டு...
ஆண்டவனை வணங்குவதும்..!.
கோட்டையைப் பிடிக்க
கோயில்களை இடிப்பதும்...!
கோயில்கள் கட்ட
மனிதனையே வெட்டுவதும்...!
ஓ..!இவைகளெல்லாம்...
சமயக் கலாச்சாரங்களோ?.
சமயம் சரியில்லை...

சமயங்கள் சொல்லுவதெல்லாம்...
மனிதத்துவம்தான்!
அது-
மனித நேயமென்று
மனிதன் அறியாதது...
மடமையன்றோ?

மனிதனுக்குள்  மனிதம்...
இதுவன்றோ...
ஆன்மா நேயம்...?
இதை வளர்ப்பதுதானே
சமயங்கள்...?
சமயங்கள் சரியில்லை...!
அவனிக்கு-
நான் வந்த
சமயங்கள் சரியில்லை...!



                                                                                   -மாறாத அன்புடன்,

                                                                                     மணவை ஜேம்ஸ்.


பாரச்சுமை!

பாரச்சுமை...! 

(மணவை ஜேம்ஸ்)

அலைக்கரம் விரித்து
அழைக்கும் தேவனே...!
மனக்குறை நீக்க
மனதுவைப்பாய்...!

மனவெளி மணற்பரப்பில்-
இமைவெளிச்  சோகத்தின்  சுவடுகள்
நீர்க்கோலத்தால் நிரம்புகின்றன...!






       
         சோகத்தின் உச்சியில்
          சேகரிக்க இயலாமல்
          கண்ணீர் மாலைகள்                                        
          கனக்கத் தொடங்கின.

         விழிகள் ஈரோடையாக-
         நீரோடையாகி
        இருப்புப் பாதைகளாய்
        நீண்ட  வண்ணமிருக்க...
        பாரச்சுமைதனைப் பாதத்தில்
        இறக்கி வைக்கின்றேன்.


     
       பாவப் பிறைகோடுகள்-
       வளர்பிறையாகவல்லவா
       வளர்கிறது...!
       இது-
       தேய்பிறையாவது எப்போது?

        மன்னிப்பு ஒளியைவைத்து
        பாவநிலா
        பௌர்ணமியாகும்
        முயற்சியிலேயல்லவா...
        மும்முரம் காட்டுகிறது!

                                                                                   
        தீண்டாமைத்தீ -

         தெருவெல்லாம்...
         சூறாவளிச்
         சுற்றுப்பயணத்தை
         நடத்துகிறது.


        வரதட்சணையால்-

         வாழ்க்கையை  இழக்கும்
         பெண் மொட்டுக்கள்...
         கல்யாண மேடையேறாமலே
         காய்ந்து போகின்றன!.


        இருப்போர் இல்லாதாருக்கு...

         ஈயவேண்டுமென்றாய்..!.
        ஆனால்....
        இங்கு இருப்போரல்லவா
        இல்லையென்று கேட்கின்றனர்.


        அன்பை அவனியில்-

         ஆழ விதையுங்கள்
         என்றாயே...!
         இவர்கள்-
        விதைத்தது போதும்
        விரைவில்  அறுங்கள்
         என்கிறார்களே...!
     


         என்ன தேவனே...?

          பாரச்சிலுவையோடு
          படுத்துவிட்டாய்..!
          பாரச் சுமைதாங்காமலா...?
          சுமை சுமந்து சோர்ந்தோரே
          என்னிடம் வாருங்கள் என்றாயே!
          பாவம்...
          உன்னைப் பார்த்தால்
          பாவமாக இருக்கிறது...


          எங்கள்-

          பகுத்தறிவுவாதிகள்
          நீயே இல்லையென்று
          பறைசாற்றுகின்றனர்...!
          உன்னைப் பார்த்தால்....
          பாவமாக இருக்கிறது...!
                                                                                  -மாறாத அன்புடன்,

                                                                                    மணவை ஜேம்ஸ்.

திங்கள், 1 செப்டம்பர், 2014

மீண்டும் மகாத்மா!




                                மீண்டும் மகாத்மா!


மனிதா!
இருட்டில் இருந்துகொண்டே...
வாழ்வில்-
வசந்தம் வந்து விடாதா என்று
காத்திருக்கிறாய்...!


இருட்டில் இருக்கிறாய்...
நீ-
வெளிச்சத்திற்கு
வருவது எப்போது?                                           

பகுத்தறிவுத்  தீக்குச்சியை
உரசும் வரை
உனக்குள் வெளிச்சம் இல்லை...!

வெளிச்சம்-
வெளியே இல்லை...
உள்ளத்தின் உள்ளே உள்ளது...
உன்-
இதயம் சுடாராகும்போதுதான்
உதயம்!

சூரியன் ஒளியாலானது...
நிலையானது...
மறைவதைப் போல
உனக்குத் தெரிந்தாலும்...
உண்மையில் மறையாதது!
பூமிதானே...
சூரியனைச் சுற்றுகிறது...
‘நானா சுற்றுகிறேன்’
என்றிருக்காதே!
நீயும் பூமியில்தான் வாழ்கிறாய்!

ஒளியை நோக்க...
உனக்கு-
நோக்கமிருந்தாலும்
இருப்பதென்னவோ
இருட்டில்தானே?

மண்ணாள்பவருக்கும்....
மதவாதிகளுக்கும்...
நீ-
‘பூம்...பூம்...’மாடாகிப்போனாய்...!

காரல் மார்க்சை...
நீ-
கற்றிருந்தால்...
எதற்கும் தலையசைக்க
கற்றுக்கொண்டிருக்க மாட்டாய்...!
இராமசாமியைப் படித்திருந்தால்...
இராம சாமியை வணங்கமாட்டாய்!

நம் நாட்டு-
கவர்ச்சித் தலைமைகளிடமிருந்துதானே
கற்றுக் கொண்டாய்...                                             மடையனாய் மாடாகிப்போக!        
                                     

                                                                                         
யானை முகத்தான்-
தும்பிக்கையால்
பால் குடிக்கிறானென்றால்
நம்பிக்கை கொள்கிறாய்...!
பால் கிண்ணத்தோடு
பணிந்துருகுகிறாய்.                                            

மனிதனை-
மதத்துக்குள் பிடித்துப்போட
மதம்பிடித்தலைவது...
யானை முகத்தானோ?
இல்லையே!

மனிதனை-
இறைவன் படைத்தான்
என்பவர்கள் ஆன்மீகவாதிகள்...!
இறைவனை-
மனிதன் படைத்தான்
என்பவர்கள் பகுத்தறிவுவாதிகள்...!

ஜனநாயகம்
மதநாயகமாகி
செம்மறி ஆடுகளாய்
மக்களை மாக்களாக்கி விட்டனரே?

தர்ம தேவதையின்-                                        
சேலையை உரிந்து...
வேசியின் மானம் காக்கும்
வேடதாரிகள்தானே
இன்றைய அரசியல்வாதிகள்.

எவன் ஆண்டால் என்ன?
எமன் ஆண்டால் என்ன?
என்றிருக்காதே?
இனி-
யார் ஆண்டால்
இந்த-
பார் வாழும்
என்று எண்ணு!

மனிதா...
விழித்துக்கொள்!
மாறிவிடு...!மாற்றிவிடு...!!
பயணப்படு...
ஒளியை நோக்கி...
அதில்-
சுயநலவாதிகள் எரிந்து போகட்டும்...
உலகில் மீண்டும் மகாத்மாக்கள்
உலா வரட்டும்!





                                                                                  -மாறாத அன்புடன்,

                                                                                    மணவை ஜேம்ஸ். .