செவ்வாய், 2 செப்டம்பர், 2014

மனிதனுக்குள் மனிதம்!


                             மனிதனுக்குள் மனிதம்!




ஆன்மா!
அது ஆண்டவனுக்கத்தான்
சொந்தம்...
அய்ம்புலன்களையும் அடக்கி
ஆண்டவனுக்குத்தான் சொந்தம்!.

ஆன்மாவின் அஸ்திவாரமே-
மனித நேயம் தானே!
நேயமே இல்லாத
மனிதனுக்கு
ஆன்மா என்பதே இல்லையே!

சமயம் சரியில்லை...!
நான் வந்த-
சமயம் சரியில்லை...!
அன்று-
தெய்வம் மனிதனாக
அவதாரம் எடுத்ததாம்...!
இன்று
மனித முகங்களே
தெய்வங்களாகத்
தன்னைச் சித்தரித்துக்கொண்டு
அவமானப்படுகிறது. ..!


சமயம் சரியில்லை...!
நான் வந்த-
சமயம் சரியில்லை...!
அன்பு-
அணைக்கப் பிறந்தது...
சாதித்தீயை-
சுயநலத்தீயை-
அர்த்தமற்ற சமய வெறியை-
அணைக்கப் பிறந்தது.                              

                       

யானைக்குப் பிடிப்பதும்  மதம்...
இன்று-
மனிதனைப் பிடிப்பதும் மதம்...
அய்ந்தறிவுக்கும் ஆறறிவிற்கும்
எப்படி இந்த அடிப்படை ஒற்றுமை?
சமயம் சரியில்லை...
நான் வந்த
சமயம் சரியில்லை...

சமயங்கள்...
மனிதனை மனிதனாகச்
சமைக்கவே முயன்று கொண்டிருக்கின்றன!.

சமயத்தைப் பயன்படுத்தி...
ஆட்டைப் பலியிட்டு...
ஆண்டவனை வணங்குவதும்..!.
கோட்டையைப் பிடிக்க
கோயில்களை இடிப்பதும்...!
கோயில்கள் கட்ட
மனிதனையே வெட்டுவதும்...!
ஓ..!இவைகளெல்லாம்...
சமயக் கலாச்சாரங்களோ?.
சமயம் சரியில்லை...

சமயங்கள் சொல்லுவதெல்லாம்...
மனிதத்துவம்தான்!
அது-
மனித நேயமென்று
மனிதன் அறியாதது...
மடமையன்றோ?

மனிதனுக்குள்  மனிதம்...
இதுவன்றோ...
ஆன்மா நேயம்...?
இதை வளர்ப்பதுதானே
சமயங்கள்...?
சமயங்கள் சரியில்லை...!
அவனிக்கு-
நான் வந்த
சமயங்கள் சரியில்லை...!



                                                                                   -மாறாத அன்புடன்,

                                                                                     மணவை ஜேம்ஸ்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக