புதன், 17 செப்டம்பர், 2014

பெரியார்... தமிழினத்தின் விடிவெள்ளி!


பெரியார்...தமிழினத்தின் விடிவெள்ளி!




ஈரோட்டில்-
வெங்கட்டரின் வித்தொன்று...
முத்தம்மாளின்
கர்ப்பக்கிரகத்திலிருந்து...
1879  செப்டம்பர் 17-இல்
இருட்டைக் கிழிக்க
எரிமலையாய்  வெடித்துக்
கிளம்பிய தீச்சுவாலை...!



ஆத்திகக் குடும்பத்தில் பிறந்த-
அந்த  நாத்திகக் குழந்தை
அய்ந்தாம் வகுப்பே படித்தது!
வளர்ந்த பின்...
வகுப்பு வாதத்தை இடித்தது...
அவர் பெரியார்!

அவர்-
நேசித்த நாகம்மையை...
பெற்றோர்-
யோசித்தபடியே மணமுடித்து...
அவளை-
வாசித்ததின் பயனாய்
பெண் மகவுக்குத் தந்தையானார்...!
ஆனால்...                                                              
அய்ந்தே மாதத்தில்-பிள்ளை                      
மாய்ந்தே போனதும்...
தேய்ந்தே போனார்!

இறை விருப்பாளராக  இருந்த...
இராமசாமி-
காசிக்கு போனார்
சாமியாராக...!
சாமியார்கள்-
ஆசாமிகளைவிட அயோக்கியராக
இருக்கக் கண்டவர்...
இறை மறுப்பாளராக மாறினார்.

பாடசாலையில் அதிகம்
படிக்காத ஞானி...
பகுத்தறிவுப் பூங்காவைச்
சுற்றித் திரிந்த தேனீ...
‘விடுதலை’ விரும்பிகளுக்கு
உன் வார்த்தைகள்தான் தீனி...
பார்ப்பனிய ஆதிக்கத்தைச்
சுட்டெரித்த தீ நீ...!

உயர்சாதியில் பிறந்து-
தாழ்ந்த சாதியின்...
உரிமைக்கப் போராடிய...
உண்மைப் போராளி!

.                                                                                            
நீ-
ஆழ்வாரையும் எதிர்த்தவன்...
ஆள்வோரையும் எதிர்த்தவன்...
தலித்தவர்...ஈழவர்-
கோவிலுக்குள் நுழையத் தடையா?  
-எனக் கொதித்தவன்...
சிறைகளையும் கடைகளையும்
 உடைத்து காலடி பதித்து-
வைக்கம் வீரரானவன்!


‘கடவுள் இல்லை’
 -என்றே  பகுத்தறிவைக் காட்டி...
மானிட அறியாமை அழுக்கை
வெளுக்க வந்த...
சமுதாயச் சலவைத் தொழிலாளி.  

மூடப்பழக்கங்களுக்கு வைக்கப்பட்ட
முதல் கொள்ளி...
தீண்டாமை கொடுமைக்கு
வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி...
ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய
அறிவுப்பள்ளி...
பெண்ணினத்தின் விடுதலைக்கு
முளைத்திட்ட பகுத்தறிவுப்பள்ளி...!


பிராமணர்களின்-
சமயச்சடங்கில் ...
சிக்கிக்கிடந்தவரின்
சிக்கலைத் தீர்த்த...
சமுதாயப் புரட்சியாளி!.

ஓலையைப் பிரித்துப் படித்து
போலி நம்பிக்கையை
வளர்ப்பவன் ஜோதிடன்...
மூளையைப் பிரித்துப் படித்து
தன்னம்பிக்கையை வளர்த்தவன்
‘பெரியார்’ என்னும் திராவிடன்!


உன்னை-
வெறுப்போடு பார்த்தவர்களைவிட
செருப்போடு பார்த்தவர்கள் அதிகம்...!


தன் மானத்தைப்-
பெரிதென மதியாமல்...
இனமானத்திற்காக
அவமானப்  படுவதை
வெகுமானமாகக் கருதிய கருத்தாளி!



காதல் மணத்தையும்-
கைம்பெண் மணத்தையும் ஆதரித்தும்...
தேவதாசி முறையை   ஒழித்தும்
பெண்கள் சரிசமமாக
வாழ வைக்க போராடியதனால்
பெண்களே-
 ‘பெரியார்’ ஆக்கிப்
 பெருமை கொண்டனர்.


நாகம்மை மறைவுக்குப் பின்
எழுபதாவது வயதில்-
முப்பது வயது...
மணியம்மையை மணந்தார்.



நீ-
தமிழ் எழுத்துகளைச்-
சீர்திருத்தி நேர்நிறுத்தினாய்..!                  
இந்தி எழுத்துகளை அழித்து...
சிறை சென்று தியாகியானாய்!.

திராவிடரின் உயர்விற்காக-
திராவிட கழகத்தை
வடித்துக் கொடுத்து சிற்பியானாய்!


தொண்ணூற்று நான்கு வயதிலும்-
சுயமரியாதைச் சுடரொளியாய்...
தன்மானமுள்ள  தமிழனாய் வாழ...        தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தே       தமிழினம் வாழ வழிகாட்டி...
விடிவெள்ளியானாய்!                  



(136-ஆவது பெரியார் பிறந்த நாளுக்காக)


                                                                                 -மாறாத அன்புடன்,
                                                                                   (மணவை ஜேம்ஸ்)













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக