மீண்டும் மகாத்மா!
மனிதா!
இருட்டில் இருந்துகொண்டே...
வாழ்வில்-
வசந்தம் வந்து விடாதா என்று
காத்திருக்கிறாய்...!
இருட்டில் இருக்கிறாய்...
நீ-
வெளிச்சத்திற்கு
வருவது எப்போது?
பகுத்தறிவுத் தீக்குச்சியை
உரசும் வரை
உனக்குள் வெளிச்சம் இல்லை...!
வெளிச்சம்-
வெளியே இல்லை...
உள்ளத்தின் உள்ளே உள்ளது...
உன்-
இதயம் சுடாராகும்போதுதான்
உதயம்!
சூரியன் ஒளியாலானது...
நிலையானது...
மறைவதைப் போல
உனக்குத் தெரிந்தாலும்...
உண்மையில் மறையாதது!
பூமிதானே...
சூரியனைச் சுற்றுகிறது...
‘நானா சுற்றுகிறேன்’
என்றிருக்காதே!
நீயும் பூமியில்தான் வாழ்கிறாய்!
ஒளியை நோக்க...
உனக்கு-
நோக்கமிருந்தாலும்
இருப்பதென்னவோ
இருட்டில்தானே?
மண்ணாள்பவருக்கும்....
மதவாதிகளுக்கும்...
நீ-
‘பூம்...பூம்...’மாடாகிப்போனாய்...!
காரல் மார்க்சை...
நீ-
கற்றிருந்தால்...
எதற்கும் தலையசைக்க
கற்றுக்கொண்டிருக்க மாட்டாய்...!
இராமசாமியைப் படித்திருந்தால்...
இராம சாமியை வணங்கமாட்டாய்!
நம் நாட்டு-
கவர்ச்சித் தலைமைகளிடமிருந்துதானே
கற்றுக் கொண்டாய்... மடையனாய் மாடாகிப்போக!
யானை முகத்தான்-
தும்பிக்கையால்
பால் குடிக்கிறானென்றால்
நம்பிக்கை கொள்கிறாய்...!
பால் கிண்ணத்தோடு
பணிந்துருகுகிறாய்.
மனிதனை-
மதத்துக்குள் பிடித்துப்போட
மதம்பிடித்தலைவது...
யானை முகத்தானோ?
இல்லையே!
மனிதனை-
இறைவன் படைத்தான்
என்பவர்கள் ஆன்மீகவாதிகள்...!
இறைவனை-
மனிதன் படைத்தான்
என்பவர்கள் பகுத்தறிவுவாதிகள்...!
ஜனநாயகம்
மதநாயகமாகி
செம்மறி ஆடுகளாய்
மக்களை மாக்களாக்கி விட்டனரே?
தர்ம தேவதையின்-
சேலையை உரிந்து...
வேசியின் மானம் காக்கும்
வேடதாரிகள்தானே
இன்றைய அரசியல்வாதிகள்.
எவன் ஆண்டால் என்ன?
எமன் ஆண்டால் என்ன?
என்றிருக்காதே?
இனி-
யார் ஆண்டால்
இந்த-
பார் வாழும்
என்று எண்ணு!
மனிதா...
விழித்துக்கொள்!
மாறிவிடு...!மாற்றிவிடு...!!
பயணப்படு...
ஒளியை நோக்கி...
அதில்-
சுயநலவாதிகள் எரிந்து போகட்டும்...
உலகில் மீண்டும் மகாத்மாக்கள்
உலா வரட்டும்!
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ். .
அற்புதமான பகுத்தறிவு பதிவு நண்பரே....
பதிலளிநீக்குஅன்புள்ள நண்பரே
பதிலளிநீக்குமிக்க நன்றி.