நிலாவே...! யாரைத் தூதுவிடப் போகிறாய்...!
நிலா!
உன்னைப் பாடாத கவிஞரில்லை...
உன்னைப் பாடாதவர் கவிஞரில்லை...!
நான் மட்டும்
அதிலென்ன விதிவிலக்கு?
நீயே...வீதி விளக்கு...!
ஞாலத்தின் ஒளி விளக்கு...!
ஒளிரும் ஒரே விளக்கு...!
உன்னைப் பாடாத கவிஞரில்லை...
உன்னைப் பாடாதவர் கவிஞரில்லை...!
சூரியக் காதலனை-
சுற்றிச் சுற்றி அலைந்தே...
தேய்பிறையாகிப் போன...
காதலி!
கதிரவனின் கடைக்கண்
பார்வைப் பட்டதினால்...
வளர்பிறையாய் வளர்ந்தவள்.
இரவி(யி)டம்-
வாங்கிய வெளிச்ச முத்தத்தை...
மொத்தமாய்ச் சேர்த்து...
சில்லரையாய்
நிலத்தில்...
குளிர்ச்சி விதையை விதைக்கும்
நித்தில நிலா!
முழுவுடலை முகிலால் மூடாமல்
முழுதாய்க் காட்டும்-
மணநாள்தான் பௌர்ணமியோ?
அன்றுதான்...
உனக்கு தேனிலவோ?
என்ன அதிசயம்?
எப்படிப் பெற்றெடுத்தாய்...
இத்தனை-
நட்சத்திரப் பிள்ளைகளை...!
அட்சயபாத்திரமாய் ஆகிப்போனதோ
உன் கருப்பை?
சூரியக்கணவனின்
எண்ண ஒளியை பிரதிபலிக்கும்
வெண்மதி பிம்பமே!
நீ... எங்கள்-
சின்னக் குழந்தைகளுக்கு...
உன்னக் கிடைத்த
பெரிய அப்பளமோ?
தமிழ்ப் பெண்ணின்
நெற்றிப் பொட்டோ?
தங்க வட்டத் தட்டோ?
செம்பொன் கேடயமோ?
காரிருளில் இலவசமாய்...
ஒளியை வழங்கும்
விலையிலா மகளோ?
இல்லை...
வேறு யாரையோ
விலைபேச தேடியலையும்
அலைமகளோ?
உன்னிடம்-
களங்கம் என்றா
பரிதிராமன் நெருப்புச் சிதையில்
குளிக்கச் சொன்னான்
நிலாச் சீதையை..!
ஞாயிற்றிடம்-
கோபம் கொண்டு
திங்களே ஒளிந்து...
அம்மாவாசையானாயோ?
இடி மின்னலாய்-
ஒரே சத்தச்சண்டை
உங்களுக்குள் எப்படி வந்தது?
உண்மையைச் சொல்...
உங்களுக்குள் ஊடலா?
நிலாவே... நீ-
வானுயர் நீதிமன்றத்தில்
விவாகரத்துக் கேட்டு
வழக்குத் தொடுக்கும்
எண்ணம் ஏதும் இருக்கிறதா?
உன்னை-
விதவையாகப் பார்க்க மனமில்லை...!
உன் உள்ளத்திலே
குடியிருக்க வரலாமா?
வருவதென்றால்...
வாடகை என்ன தரவேண்டும்?
யாரைத் தூதுவிடப் போகிறாய்...?
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக