ஞாயிறு, 29 மே, 2016

புதிய உடன்படிக்கை - 7 -நாடகம்


புதிய உடன்படிக்கை


காட்சி 7

இடம்:  படுக்கை அறை

பாத்திரங்கள்:  ஜான்சன், ஜாக்லின் சித்ரா.

(ஜான்சன் கட்டிலின் மீது அமர்ந்தும் – எழுந்தும் இருந்தவாறு இருக்கும் வேளையில்... கதவைத் திறந்து உள்ளே நுழைகிறாள் ஜாக்குலின் சித்ரா)

ஜான்சன்: வாங்க... மெதுவா அடிஎடுத்து வைச்சு வாங்க... சாப்பிட்டுட்டு வர இவ்வளவு நேரமா...?

ஜாக்லின்: நான் சாப்பிடலை...

ஜான்சன்: சாப்பிடலையா... ஏன் ஒடம்புக்கு ஏதாவது...?

ஜாக்லின்: அதெல்லாம் ஒன்னுமில்லை...
                     
ஜான்சன்: பின்ன ஏன் லேட்டு... ஆமா...‘நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்’ -ன்னு சினிமா பாட்டு கேட்டிருக்கியா...?

ஜாக்லின்: இன்னைக்கும் நீங்க குடிச்சிட்டு வந்திருக்கிறீங்களா...?

ஜான்சன்: ஆமா...  நான் தெரியாமத்தான் கேக்கிறேன்... குற்றவாளிய விசாரிக்கிற மாதிரில்ல... விசாரிக்கிறா... குடிச்சா என்னா தப்பா...?

ஜாக்லின்: என்ன...? என்ன...? தப்பான்னா கேக்குறீங்க... பின்ன தப்பில்லையா...?

ஜான்சன்: நான் என்ன மட்டமான கள்ளச் சாரயத்தையா குடிக்கிறேன்... பிராந்தியத்தானே குடிக்கிறேன்... இது ஒன்னும் தப்பில்லை...

ஜாக்லின்: எல்லாக் கண்ட்ராவதியும் போதை வர்றதுதானே... போதை வர்றதெல்லாம் ஒடம்புக்குக் கெடுதிதானே...!

ஜான்சன்: அப்படிப் பாக்கப் போனா எதுலதான் ஒடம்புக்குக் கெடுதி இல்ல... நாம திங்கிற எல்லாத்திலையும்தான் ஏதாவது கெடுதி இருக்கு... இதுக்கின்னு எதையுமே சாப்புடாம இருக்க முடியுமா என்ன...?

ஜாக்லின்: பேச்சுக்கு வேணுமின்னா அழகா இருக்கலாம்...

ஜான்சன்: இங்கே பாரு... மிலிடரியில பிராந்தியெல்லாம் குடிக்கக் கொடுக்கிறாங்களே...!

ஜாக்லின்: அவுங்கெல்லாம் கடுமையா எக்ஸ்ஸைஸ்... வேலை எல்லாம் செய்றாங்க...  அதுவும் கொஞ்சமான அளவுதான் கொடுக்கிறாங்க...

ஜான்சன்: நா என்ன... அந்த அளவைவிட கொஞ்சம் கூடக் குடிக்கிறேன்... அவ்வளவுதான்... எ அளவு எனக்குத்தானே தெரியும்... இது தப்பா...? சரி தப்புன்னா கவர்மெண்டு பிராந்திக் கடைய ஏன் தொறந்து விடுது...?

ஜாக்லின்: கவர்மெண்ட் கஜானா எப்படியோ நிறையனும்... நாளைக்கு கஷ்டப்படுறது... நாமதானே...?

ஜான்சன்: நாமலா... நாம ஏன் கஷ்டப்படனும்... காசு இல்லாதவன்தான் கஷ்டப்படுவான்... நமக்கென்ன... பாட்டன் சொத்து இருக்கு நாலு தலைமுறைக்கும் உக்காந்திட்டு சாப்பிடலாம்... தெரியுமில்ல...

ஜாக்லின்: உக்காந்திட்டு சாப்பிடக் கூடாதுங்க... உழைச்சு சாப்பிடனும்... கவர்மெண்ட் கூட ‘குடி குடியைக் கெடுக்கும்... குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்’-ன்னு சொல்லித்தான் கொடுக்கிது... தெரியுமில்ல...

ஜான்சன்: அப்படியா... தெரியாதே... எங்கே பார்ப்போம்... (இடுப்பிற்குள் சொருகி வைத்திருந்த பிராந்தி பாட்டிலை எடுத்துப் படித்துப் பார்க்கிறான்) நா எல்லாம் அதப் பாத்ததே இல்ல... பாட்டில்... சீல் ஒடைக்காம இருக்கான்னுதான் பார்ப்போம்... எங்கே பார்க்கிறேன்... ஆமா  எழுதியிருக்கு... நீ சொன்னது உண்மைதான்... (பாட்டிலைத் திறந்து குடிக்கிறான்)  ஆமா... இந்த பாட்டில்லே இதெல்லாம் எழுதியிருக்குங்கிறது உனக்கெப்படி தெரியும்...? ஒரு வேளை நீயும் தண்ணி அடிப்பியோ...? (கண்ணடிக்கிறான்)

ஜாக்லின்: என்ன தைரியம் இருந்தா எனக்கு முன்னாடியே குடிப்பீங்க...

ஜான்சன்: இதுக்காக ஒனக்கு பின்னாடியா குடிக்க முடியும்... வர்றப்பவே ஊத்திட்டுத்தான் வந்தேன... சுதி கொஞ்சம் பத்தலை... அதான் ஒனக்கு முன்னாடி... கோவிச்சுக்காதே... இனி ஒனக்கு முன்னாடி குடிக்கவே மாட்டேன்...

ஜாக்லின்: எனக்கு முன்னாடின்னு இல்ல... எப்பவுமே குடிக்கமாட்டேன்னு சொல்லுங்க...

ஜான்சன்: அய்ய்ய்யோ... அப்படியெல்லாம் சொல்ல மாட்டேம்மா... சொல்றத செய்யனும்... செய்றதத்தான் சொல்லனும்... பொய் சொல்லக்கூடாதுல்ல...

ஜாக்லின்: அப்ப என்னதான் சொல்றீங்க...?

ஜான்சன்: நீ என்ன கேக்றா... புரியலையே...

ஜாக்லின்: எனக்காக நீங்க குடிக்க்க்கூடாது...

ஜான்சன்: உனக்காக நா குடிக்கல... எனக்காகத்தான் குடிக்கிறேன்...

ஜாக்லின்: யாருக்காவும் இனி குடிக்க்க்கூடாது... இந்த கெட்ட பழக்கம் எனக்கு சுத்தமா பிடிக்கல... பிளிஸ்...எனக்காக விட்டிடுங்க...

ஜான்சன்: நேத்து வந்தவ நீ... இதென்ன இன்னக்கி பழக்கமா...? 
நெனச்சவுடன விடுறதுக்கு.... இதெல்லாம் நடக்காத காரியம்...

ஜாக்லின்: ஏங்க நடக்காது... நீங்க மனசு வச்சா கண்டிப்பா நடக்கும்...

ஜான்சன்: என்னமோ நானும் அப்ப இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன்... ரொம்பத்தான் பேசிறியே... ஊரு உலகத்தில யாரு குடிக்காதவன இருக்கான்... என்னமோ பெரிசா புத்திமதி சொல்ல வந்திட்டா... நமக்கு இன்னும் முதல் இரவே நடக்கலை... இன்னைக்கி ரெண்டாவது இரவாயிடுச்சு... சரி... விளக்கை அணைக்கவா...?

ஜாக்லின்: இதுக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்...

ஜான்சன்: எதுக்கு...?

ஜாக்லின்: நீங்க இனி குடிக்க்க்கூடாது...

ஜான்சன்: ஒ பேச்சுக்கு நா ஒன்னும் ஆட முடியாது... எ இஷ்டப்படி குடிப்பேன்... நீ ஒன்னும் என்னக் கேக்க்க் கூடாது... இப்ப என்ன சொலறாய்... (பாக்கெட்டில் இருந்து சிகெரெட் பாக்கெட்டை எடுத்து சிகரெட்டை பற்ற வைக்கிறான்)

ஜாக்லின்: இப்படியெல்லாம் நீங்க இருப்பீங்கன்னு நெனக்கிலைங்க... சிகரெட் பிடிக்கிறதுகூட உண்டா...?

ஜான்சன்: இதுவும் கெட்ட பழக்கமுன்னு சொல்லுவியே...

ஜாக்லின்: நா என்னத்த சொல்றது... (பெருமூச்சு விட்டபடியே) நா சொல்லித்தான் கேக்க முடியாதுன்டீங்க...

ஜான்சன்: எப்பவும் புருஷன் சொல்றதத்தான் பொண்டாட்டி கேட்கனும்... அதான் நம்ம நாட்டோட பண்பாடு... சரி... வா... இன்னைக்காவது முதல் இரவா இருக்கட்டும்...

ஜாக்லின்: (கோபமாக) வெளி உலகத்துக்குத்தான் நாம கணவன் மனைவி... நா வேணுமின்னா குடியை விடுங்க... குடியை விட முடியாதின்னா... என்னால ஒன்னும் சொல்றதுக்கு இல்லே... சாரி என்ன மன்னிச்சிடுங்க...

ஜான்சன்: இதுதான் ஒ முடிவா...?

ஜாக்லின்: ஆமாம்...

ஜான்சன்: நல்லா யோசிச்சு சொல்லு...

ஜாக்லின்: நல்லா யோசிச்சுத்தான் சொல்றேன்... நல்லா நம்ம வாழ்றதுன்னா இதுதான் முடிவு,.. அதனால நீங்க கட்டில்ல படுத்துக்கங்க... நா கீழே தரையில படுத்துக்கிறேன்... குட் நைட்...



         




                                                       -தொடரும்...

                                                      
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.
























  


















வெள்ளி, 20 மே, 2016

புதிய உடன்படிக்கை - 6 நாடகம்



புதிய உடன்படிக்கை 


காட்சி – 6
இடம்:  மாளிகை
பாத்திரங்கள்: ஜாக்லின் சித்ரா, ஆரோக்கியசாமி, ஜான்சன்.

(ஆரோக்கியசாமி சோபாவில் அமர்ந்திருக்க நின்று கொண்டு இருக்கிறாள் ஜாக்லின்)

ஆரோக்கியசாமி:  ஏம்மா... நின்னுக்கிட்டே இருக்கா... உட்காருமா...

ஜாக்லின்: பரவாயில்லைங்க மாமா...

ஆரோக்கியசாமி:  பள்ளிக்கூடத்துக்கு எத்தனை நாளும்மா லீவு போட்டிருக்கா...

ஜாக்லின்: ஒரு வாரம் லீவு போட்டிருக்கேன் மாமா...

ஆரோக்கியசாமி:  ஓ...கோ... ஆமாம்மா... நேத்தைக்கு எத்தன மணிக்கு வீட்டுக்கு...  ஜான்சன் வந்தான்...?

ஜாக்லின்: அவரு வந்தப்ப மணியப் பாக்கலைங்க மாமா...

ஆரோக்கியசாமி: நான் படுக்கிறப்பவே மணி பன்னெண்டுக்கு மேலே ஆயிடுச்சு... நான் படுத்து எவ்வளவு நேரம் கழிச்சு வந்தான்...?

ஜாக்லின்:  கொஞ்ச நேரத்தில வந்திட்டாருங்க மாமா...

ஆரோக்கியசாமி: துரைக்கு அவ்வளவு நேரம் என்ன வேலையாம்...? 
அயோக்கியப் பயல்... முன்னாடிதான் நேரங்காலம் தெரியாம சுத்துவான்... கண்ட நேரத்துக்கு வந்து படுப்பான்... பொண்டாட்டி கட்டினத்துக்கு அப்புறம்கூட புத்தி வல்லையே... கொஞ்சமாவது நெஞ்சுல பயமிருந்தா... இப்படி இருப்பானா...? காலையில போனவன்... பொழுது சாஞ்சு எவ்வளவு நேரமாகுது... போனவன இன்னும் காணோமே...(கோபமாக) வரட்டும்...

ஜாக்லின்: மாமா... அதோ அவரு வர்றாருங்க மாமா...

ஆரோக்கியசாமி: வர்றானா...! வரட்டும்... வரட்டும்...

(மெதுவாக உள்ளே நுழைகிறான் ஜான்சன்)

ஆரோக்கியசாமி: டே... நில்லுடா... எங்கே போயிட்டு வர்றாய்...?


ஜான்சன்: ..............................................................................           (ஜாக்லினை முறைத்து பார்க்கிறான்)

ஆரோக்கியசாமி: அங்கே என்னடா மொறப்பு வேண்டிக் கிடக்கிது... எங்கே போயிட்டு வர்றான்னு கேட்டேன்... பதிலைச் சொல்லுடா...

ஜான்சன்: (தயங்கி தயங்கி) இல்ல... இல்ல... விவசாயத்துக்காக நம்மளுக்கின்னு ஒரு... ஒரு... டிராக்டர் வாங்கலாமுன்னு பக்கத்து ஊருக்குப் போயி பாத்திட்டு வர்றேன்...

ஆரோக்கியசாமி: அட...!  இதென்னடா ஆச்சர்யமா இருக்கு... தோட்டத்துப் பக்கம் போடான்னக்கூடப் போகமாட்டாய்... உண்மையில இனி நீ பொழச்சுக்குவாடா... என்னா... வண்டியைப் பாத்தியா...?

ஜான்சன்: வண்டியப் பாத்தேன்... ஒண்ணும் ஒத்துவர்றமாதிரி தெரியலைப்பா...

ஆரோக்கியசாமி: ஏண்டா...?

ஜான்சன்: நம்ம இழுவைக்கு ஒத்து வர்ற மாதிரி தெரியலை...

ஆரோக்கியசாமி: ஒத்துவல்லைன்னா என்னா...? ஒத்துவர்ற வண்டியப் பார்க்க வேண்டியதுதானே... உலகத்தில அந்த ஒரு வண்டிதான் ஓவியமா...என்ன...?

ஜான்சன்: வண்டி பாக்க நல்லா இருக்கு...  பார்ப்போம்...

ஆரோக்கியசாமி: சரி...சரி... ஒ மனசுக்கு புடிச்சிருந்தா பாரு...

ஜான்சன்: பாக்கிறேம்ப்பா... பாக்கிறேன்...

ஆரோக்கியசாமி: என்னம்மா நாங்களா பேசிக்கிட்டு இருக்கோம்... நீ பேசாமா இருக்கே...? டே...! மருமகள் கோவிச்சிருக்கிறாப்புள நடந்திக்காதடா...

ஜான்சன்: (பயந்தவாறு) என்னப்பா...?

ஆரோக்கியசாமி: இல்ல... எங்க போனாலும் நா இந்த எடத்துக்குப் போறேன்... வர்றதுக்கு இவ்வளவு நேரமாகுமுன்னு சொல்லிட்டு போகனும்டா...

ஜான்சன்: அதானே...! நா கூட பயந்தே போயிட்டேன்...!

ஆரோக்கியசாமி: சரிம்மா... நல்ல காரியத்துக்குத்தானே போயிட்டு வந்திருக்கான்... மகாலட்சுமி மாதிரி நீ வந்திட்டா... இனி எனக்கென்ன கவலை...

ஜான்சன்: ஆமா மாமா... ஒங்களுக்கு என்ன கவலை...

ஆரோக்கியசாமி: ஆமாம்மா... சரி... அவனுக்குப் சாப்பாடு போடும்மா...

ஜாக்லின்: வாங்க சாப்பிடலாம்...

ஜான்சன்: வெளியில நா சாப்பிட்டேன்...

ஆரோக்கியசாமி: டே...!  என்னடா... நீ எப்ப வருவான்னு மருமகள் ஒனக்காக... காத்துக்கிட்ட இருக்கு... நீ என்னடான்னா வெளியில சாப்பிட்டேங்கிறியே... ஒனக்கே இது நல்லா இருக்கா...?

ஜான்சன்: இல்லப்பா... பிரண்ஸ்ஸோட சாப்பிட்டேன்... எனக்கு ரொம்ப டயடா இருக்கு... பெட் ரூமில்ல போயி படுக்கிறேன்...

ஆரோக்கியசாமி: டே...! மருமகள் இன்னும் சாப்பிடலை... தெரியுமில்ல...?

ஜான்சன்:  எனக்கெப்டிப்பா தெரியும்... சரி... சாப்புட்டுட்டு  வரட்டும்... நா போயி படுக்கிறேன்...
                                                                                                                    

               





                                                        -தொடரும்...

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.


























சனி, 14 மே, 2016

புதிய உடன்படிக்கை - 5 நாடகம்


புதிய உடன்படிக்கை

 

காட்சி-5

 

இடம்:  கனகராஜ் வீடு

 

பாத்திரங்கள்: ஜான்சன், கனகராஜ், செல்வம், சேகர்.

 

(எல்லோரும் அமர்ந்திருக்க, ஜான்சன் மட்டும் நின்றுகொண்டு ஏதோ சிந்தனையில் இருக்கிறான்)

                                                                        

கனகராஜ்: என்னடா ஜான்சன்... ஏன் வீட்டுக்கு வந்த்துல இருநது நானும் பாக்கிறேன்... ரொம்ப டல்லா இருக்கியே...
செல்வம்: புது மாப்பிளைன்னா சும்மாவா போச்சு... விடிய விடிய கண்ணு முழிச்சிருப்பாரு...
சேகர்: அதான்... கண்ணு செவந்திருக்கா...?  ஆமாம்மா... ரொம்ப டயடாத்தான் இருக்கும்...
கனகராஜ்: ஓகோ... அப்படீங்கிறியா...?
சேகர்: ஆமாங்கிறேன்... நேத்தைக்குப் பாத்ததுக்கு இன்னைக்கு இளச்சு போயிட்டான் பாரு...
ஜான்சன்: டே...! கடுப்ப தூண்டாதிங்கடா... அவ அவன்... நொந்து போயி இருக்கான்...
சேகர்:  மச்சி... ரொம்ப வொரில்ல இருக்கான் போல இருக்கு... ஏ மச்சி வீட்ல ஏதும் பிரச்சனையா...?
ஜான்சன்: டே... நீ சொன்ன மாதிரியே... ஏடாகூடமா ஆயிடுச்சு...
கனகராஜ்: என்னடா ஆயிடுச்சு...
ஜான்சன்: அதை எப்புட்டி சொல்றது...?
செல்வம்: வாயிலதான்டா...
ஜான்சன்:இந்த நக்கல்தானே வேணாங்கிறது...
செல்வம்: ‘துன்பம் வரும் வேலையில சிரிங்கன்னுசொல்லி வச்சான்... வள்ளுவனும் சரிங்க...(பாடுகிறான்)
கனகராஜ்: விவஸ்த கெட்ட ஆளுடா... மச்சி! அவன் கெடக்கிறான்... என்னா நடந்திச்சின்னு நீ சொல்லு...
ஜான்சன்: குடிச்சிட்டு போனேனா...? போயி பக்கத்துல நெருங்கிறதுக்குள்ள  எப்படியோ கண்டு புடுச்சிட்டாள்...
செல்வம்: அதுக்குத்தான் அப்பவே சொன்னே... கொஞ்சமா குடிடான்னு...
ஜான்சன்: நீ ஒன்னும் அப்படி சொல்லலைடா...



செல்வம்: நீ போதையில மறந்திருப்பா...
கனகராஜ்: அப்புறம் என்ன ஆச்சு...?
ஜான்சன்: அப்புறமென்ன ‘டோன்ட் டச்ன்ட்டா...!
கனகராஜ்: நீ என்னடா சொன்னாய்...?
ஜான்சன்:  நா என்னடா சொல்றது...?
சேகர்: ஆமா... ஒ வொய்ப் இங்கிலீஸ்லய்யா சொன்னாங்க...
ஜான்சன்டே...!  சீரியஸான மேட்டர்டா... ‘பஸ்ட் நைட்’லயே... இப்படி ஆகிப் போச்சேன்னு சொல்றேன்... ஒங்க லைப்ல இப்படி நடந்திருந்தா... சிந்திச்சு பாருங்கடா...
சேகர்: சிந்திச்சு பாருடா...
செல்வம்: நீ சிந்திச்சு பாருடா... (யோசிக்கிறான்)
கனகராஜ்: சும்மா சிந்திச்சா... சிந்தனையே வரமாட்டேங்கிதே...
செலவம்: சிந்திச்சா... ஒரே துக்கம்தான்... துக்கம் தாளலல்ல... கவலைய மறந்து துக்கத்தைக் கொண்டாடுவோம்... டே...! ஜான்சன்... பிராந்தியடிப்போம்... பிரச்சனைய மறப்போம்...
சேகர்: டே...  செல்வம்...! வீட்ல இதுனாலதான் பிரச்சனையே...!
கனகராஜ்: சேகர்... ஒனக்கு ஒரு பழமொழி தெரியுமா...? முள்ள முள்ளாலதான் எடுக்கனும்... தெரியுமா...?
செல்வம்:  அட... இதக்குப் போயி கவலைப்பட்டுக்கிட்டு... அந்தக் காலத்துல... கல்யாணம் ஆனதுக்கு பிறகும்... பத்து மாசமாக்கூட புருசனை பக்கத்தில விடாதவங்க இருக்காங்க... இது மாதிரி கதைய நெறையா கேள்விப்பட்டு இருக்கேன்... தெரியுமா...?
சேகர்:  எப்பவும்... எதுக்கும் கவலைப்படக் கூடாதுடா... என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு... தைரியமா... ஆம்பளை மாதிரி இருடா...
செல்வம்:  இப்பவே பொண்டாட்டி பேச்சக் கேக்க ஆரம்பிச்சா... அவ்வளவுதான்...
கனகராஜ்: ஆம்பிளை ஆயிரம் தப்பு செஞ்சாலும்... அட்சஸ் பண்ணிப்போற பொம்பளையா இருக்கனும்... இப்ப என்ன எடுத்துக்கவே... நா என்ன குடிக்காமயா இருக்கேன்... இது நாள் வரை எ பொண்டாட்டி ஒரு வார்த்தை கேட்டு இருப்பாளா...?
செல்வம்: அதானே... அண்ணி தங்கமானவங்க... வாய் பேசமாட்டாங்களே...!
சேகர்: எனக்குக்கூட ரொம்ப நாளா சந்தேகம்... ஊமையோன்னு...!
கனகராஜ்: டே...! சேகர் இதானே வேணாங்கிறது... அப்படி ஒரு கட்டுப்பாடா வச்சிருக்கேன்...
சேகர்:  ஓகோ... இதுதான் குடும்பக் கட்டுப்பாடோ...?
கனகராஜ்:  அவளக் கூப்புடுறேன்... நேராக் கேளுங்கப்பா... ஏய்... செங்கமலம்...
ஜான்சன்:  நீ போட்ட சத்தம் எங்களுக்கே கேக்கல... நீ சொல்றதுல்ல நம்பிக்கை இருக்குடா...
செல்வம்:  நீங்க கூப்பிட்ட... உடனையே ஓடியாந்துட்டாங்க பாரு         (கிண்டலாகச் சிரிக்கிறான்)
கனகராஜ்:  எ சத்தம் கேட்டிருக்காது... இல்லைன்னா ஓடியாந்திருப்பா தெரியுமுல்ல...
ஜான்சன்:  சரி... வாங்க பாருக்கு போயி... பிராந்தி அடிப்போம்...!
கனகராஜ்:  இப்ப சொன்னியே இதுதான் சரி... வாங்க சீக்கிரம் பாருக்குப் போவோம்... ‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு...!
(அனைவரும் புறப்படுகின்றனர்)
                                                                                                                     
                     





                                                    -தொடரும்...

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.