திங்கள், 6 ஏப்ரல், 2015

நீங்க பார்க்காத குறத்தி...! -சிற்றிலக்கியம்...1.




நீங்க பார்க்காத குறத்தி...!




      ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இருக்காது.  தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பிரபலமான குழுக்கள் இன்னமும் இருந்துகொண்டு ஆடிவருகிறார்கள்.

                       குறவன் குறத்தி ஆட்டம் என்றால் பாட்டுப் பாடிக்கொண்டே, அவர்கள் ஆடுவதைப் பார்ப்பதே ஓர் அழகுதான்.

                      சிற்றிலக்கிய (96) வகைகளில்  குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்வதுகுறவஞ்சி என்ற இலக்கிய வகை ஆகும்.
  
          இப்பொழுது இருக்கும் குறவன் குறத்திகள் ஊர்களில் நையாண்டி மேளத்துடன் ஆடிப்பாடி கதகைகளைக் கூறி மக்களை மகிழ்விக்கிறார்கள். 


         சிற்றிலக்கியத்தில் வரும் குறவஞ்சிக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும், மணப்பாறைக்கு அருகிலுள்ள ‘சமுத்திரம்’ என்ற கிராமத்தில் கையில் பனையோலைச் சுவடிக்கட்டை வைத்துக் கொண்டு, ஊர்ஊராகச் சென்று குறிசொல்லி, பிழைப்பை நடத்தக்கூடிய பெண்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.  ஆண்களும் அங்கிருந்து குடுகுடுப்பையுடன் இரவு நேரங்களில் சாமங்கிக் கோடங்கியென்று வீட்டிற்கு முன் வந்து “நல்லது நடக்கப் போகிறது என்றும்... அல்லது தீயவை நடக்க இருக்கிறது என்று இரவுக்குறி சொல்லி பகலில் வந்து அந்தஅந்த வீடுகளில் கொடுப்பதைப் பெற்றுச் செல்கிறார்கள்.  அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ‘ஜோஸ்யம்’ சொல்லி வரும் வரும்படியைத் தங்கள் வீட்டில் கொடுத்தும் வாழ்க்கை நடத்தி வருபவர்கள் இதுபோல நம்நாட்டில் இன்னும் பல ஊர்களில் இருக்கிறார்கள். 

          குறவஞ்சி என்பது குறவர் குலத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் முதன்மை இடம் பெறுவதால் இந்த இலக்கிய வகைக் குறவஞ்சி.

      குறவஞ்சி நூல்கள்
          ஆசிரியர்
திருக்குற்றாலக் குறவஞ்சி(முதல் குறவஞ்சி)
திருகூடராசப்ப கவிராயர்
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
தமிழரசிக் குறவஞ்சி
வரத நஞ்சையப்ப பிள்ளை
பெத்தலேகம் குறவஞ்சி
வேதநாயக சாஸ்திரி
கூட்டுறவுக் குறவஞ்சி
தஞ்சைவாணன்
விஸ்வநாத சாஸ்திரி
வண்ணக்குறவஞ்சி

திருக்குற்றாலக் குறவஞ்சி:

          பாட்டுடைத் தலைவன் குற்றால நாதர். அவர் எழுந்தருளியுள்ள இடம் திருக்குற்றாலம். எனவே,  இந்த இடத்தின் பெயரால் இந்த நூல் பெயர் பெற்றுள்ளது.


              பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி ஒருத்தி, அத்தலைவன் மீது காதல் கொண்டு அவனை அடையத் தவிக்கும் நிலையில், குறவர்குலத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி அத்தலைவிக்குக் குறி கூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுதலால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது.
                       குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர்.

                      குற்றாலநாதரின் திருவுலா எழுச்சியைக் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகிறான். திருவுலா தொடங்குகிறது.  குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார்.   அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லியும் திருவுலாக்காண வருகிறாள்.   தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள். இந்நிலையில் குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் குறப்பெண் தன்நாட்டு மலைவளமும் தொழில்வளமும் சிறப்பாக எடுத்துக்கூறுகிறாள். பின் வசந்தவல்லி கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் மீது காதல் கொண்டுள்ள செய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச்சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லி பரிசு பெறுகிறாள் குறத்தி சிங்கி. அவள் கணவன் சிங்கன் அவளைக் காணத் தேடிவருகிறான். குறத்தியைக் கண்ட சிங்கனிடம் குறத்தி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர்.

                       1964-இல் எம்.ஜி.ஆர்.-சரோஜா தேவி நடித்து வெளிவந்த ‘பணக்காரக் குடும்பம்என்ற திரைப்படத்தில்  டி.எம்.சௌந்தர ராஜன், பி.சுசீலா அவர்கள் பாடிய பாடல்.
                       பந்தைக் காதலுக்குத் தூது விட்டது கண்ணதாசன்மட்டும்தான்.


பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது...................   
இது தான் அந்த நிலவோ
என்று முகம் பார்க்கும் வண்ணப் பந்து
இல்லை இது முல்லை
என்று போராடும் கண்ணில் வண்டு
வருவார் இன்று வருவார்
என்று மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும்
என்று வழி பார்க்கும் காதல் செண்டு....

                       திருக்குற்றாலக் குறவஞ்சியில் வரும் வஞ்சி வசந்தவல்லி பந்தாடும் பாங்கைப்பற்றிச் சந்த நயத்தோடு கூடிய பாடல். பந்து துள்ளுவது போல் பாடல் வரிகள் துள்ளும்...



வசந்தவல்லி பந்தடித்தல்



விருத்தம்


வித்தகர் திரிகூ டத்தில் வெளிவந்த வசந்தவல்லி
தத்துறு விளையாட்டாலோ தடமுலைப் பிணைப்பினாலோ
நத்தணி கரங்கள் சேப்ப நாலடி முன்னே ஓங்கிப்
பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே.


இராகம் - பைரவி, தாளம் - சாப்பு

கண்ணிகள்

(1)
செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.

(2)
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு
புரண்டாடக் - குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை
வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை
திண்டாட - மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.

(3)
சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை
நின்றாடப் - புனை
பாடக முஞ்சிறு பாதமு மங்கொரு பாவனை
கொண்டாட - நய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர்
வீதியிலே - அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
அடர்ந்துபந் தாடினளே.

(4)
இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய
தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி
வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற்
பந்துகொண் டாடினளே.


விருத்தம்

கொந்தடிப்பூங் குழல்சரிய நன்னகரில் வசந்தவல்லி கொடிய காமன்
முந்தடிபிந் தடியிடைபோய் மூன்றடிநா லடிநடந்து முடுகி மாதர்
சந்தடியில் திருகியிட சாரிவல வாரிசுற்றிச் சகிமார் சூழப்
பந்தடிக்கும் பாவனையைப் பார்க்கஅயன் ஆயிரங்கண் படைத்தி லானே.


தரு

இராகம் - காம்போதி, ஆதி - தாளம்

பல்லவி

பந்தடித்தனளே வசந்த சுந்தரி விந்தை யாகவே (பந்)

சரணங்கள்
     1. மந்தர முலைக ளேச லாட 
  மகரக் குழைக ளூச லாடச்
  சுந்தர விழிகள் பூச லாடத் 
  தொங்கத் தொங்கத் தொங்கத் தொம்மெனப் (பந்

2.பொன்னி னொளிவில் வந்துதாவிய 
  மின்னி னொளிவு போலவே
  சொன்ன யத்தினை நாடிநாடித் 
  தோழியருடன் கூடிக் கூடி
  நன்ன கர்த்திரி கூடம் பாடி 
நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம்மெனப் (பந்)

  




 திருக்குற்றால நாதரின் திரிகூட மலையையுடைய நகரத்தில் வெளித்தோன்றிய வசந்தவல்லியானவள் தாவுகின்ற விளையாட்டினாலோ; அன்றிப் பெரிய கொங்கைகளின் சுமையினாலோ, சங்கு வளையல்கள் அணிந்துள்ள தன் கைகள் மிகச் சிவப்பு நிறமடைய நான்கு அடிகள் முன்னேறிச் சென்றும், பத்தடிகள் பின்வாங்கிப் போயும் பந்தடித்து விளையாடல் புரிகின்றாள்.



(1) சிவந்த கைகளின் வளையல்கள் கலீர் கலீர் என்றும் வெற்றி வெற்றியென்றும் கூறுவனபோல் ஒலித்து அசைய, இடை இனி இருப்பது ஐயமென்று கூறுவது போல் சிலம்பின் ஒலியோடு தண்டையின் ஒலியும் கலந்து தோன்ற அசைய, கொங்கைகளானவை தம் கொடிய பகையாகிய (பந்துகளை) வென்று விட்டொமென்று நெகிழ்ந்து நெகிழ்ந்து அசைய, மலர்களையுடைய பசுங்கொடிபோன்ற வசந்தவல்லி யென்னும் அழகுடையாள் பந்தடித்து விளையாடு வாளானாள்:


(2) மிக்க கனத்த காதணிகளானவை நெருங்கிய கெண்டை மீனையொத்த கண்களின்மீது புரண்டு புரண்டு ஆட்டங் கொள்ள, கூந்தலாகிய மேகத்தினின்றும் வண்டினங்கள் கலைந்து செல்லுதல் கண்டு மன்மதன் கரும்பு வில்லின் நாணான வண்டுகளும் உடன்போக, இதைப் பார்த்து இனிமேல் உலகம் என்ன பாடுபடுமோ என்பது போல் இடையானது துவண்டு துவண்டு நடுக்கங்கொள்ள செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளையொத்த மங்கைப்பருவத் தாளாகிய வசந்த வல்லியென்னும் பெயருடைய அழகுடையாள் பந்தடித்து விளையாடுவாளானாள்.
(3) சூடக வளையலணிந்துள்ள முன்னங்கைகளில் சங்கு வளையல்களும் சேர்ந்து இரண்டு தோள்வளையல்களும் மேலெழுந்தாட, அணிந்துள்ள கால்களின் கொலுசுகளுடன் சிறு தண்டைகளும் அக்கால்களிடத்தே மேலேறுவதும் கீழ்வருவதுமாகிய ஒத்த தன்மைகளைக் கெண்டு ஆட, நல்ல கூத்தாட்டங் கொள்ளும் மயிலென்னும்படி சிறந்த குற்றால நகரத் தெருவிடத்தே அழகிய பொன்கொடி போன்ற வசந்த வல்லியெனும் ஒயிலினாள் நெருங்கிப் பந்தடித்து விளையாடுவாளானாள்.
(4) இவள் திருமகளோ இரதியோ தெய்வலோக அரம்பையோ மோகினிப் பெண்ணோ என்று கண்டோர் ஐயங் கொள்ளுமாறு இவள் மனந்தான் முன்செல்கின்றதா'இவள் கண்கள்தாம் முந்துகின்றனவா'இவள் கைகள்தாம் முந்துகின்றனவா'என்று எண்ணும்படி மூன்றாம் பிறையை அணிந்தவரான சிறு பலாமரத்தடியில் எழுந்தருளியிருக்கின்ற அருட்செல்வராகிய திருக்குற்றால நாதருடைய கூட்டம் அழகு செய்கின்ற தெருவிலே பச்சை வலையலணிந்த வளாகிய வசந்தவல்லி அழகிய பந்தைக் கையிற் கொண்டு விளையாடுவாளானாள்.

(1) வசந்த சுந்தரி கண்டவர் வியப்புறப் பந்தடித்தனள்.

(2) மந்தரமலை போன்ற கொங்கைகள் பழிமொழிக்கு இடமாகவும், காதணிகள் ஊஞ்சலாடவும் (போக்குவரவு செய்யவும்) அழகிய கண்கள் கலகஞ் செய்யவும் தொங்கத் தொங்கத் தொங்கத்தொம் என்னும் ஓசையெழும்படி பந்தடித்தனள்.


(3) பொன்னின் ஓளியில் வந்து தாவிய மின்னின் ஒளி போலச் சொல்லினிமையை நாடி நாடிக் கொண்டு தோழியருடன் கூடிக், கூடி, நல்ல நகராகிய திரிகூடம்பாடி நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம் என்னும் தாள ஒசை உண்டாகும்படி பந்தடித்தனள்.



நடனம் பார்க்க கீழே  ‘கிளிக்’ செய்க.


   

                                                                                                                            வ(ள)ரும்...
-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.  

20 கருத்துகள்:

  1. ரசிக்க வைக்கும் வர்ணனை...

    அழகான விளக்கம் ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள வலைச்சித்தர் அய்யா,

    முதலில் வந்து ரசித்து வாழ்த்தியத்திற்கும்... வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பாடல் வரிகளும் அதற்கான விளக்கமும் ரசிக்க வைத்தன! குற்றாலக் குறவஞ்சியின் சில பாடல்கள் படிக்கும் போது பயின்று இருக்கிறேன்! சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான பதிவென்று வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. உண்மையில் நான் பார்க்காத, படிக்காத விபரங்கள் அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் மணவையாரே...
    தங்களின் எழுத்து நடையழகு மெருகேறிக்கொண்டே இருக்கிறது வாழ்க வளமுடன்
    தமிழ் மணம் ஐந்தருவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் வாழ்த்தும் வாக்கும் வளமுடன் ஆக்கும்!

      ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தேன்.

      நன்றி.

      நீக்கு
  6. அன்புள்ள கரந்தையார் அவர்களுக்கு,

    வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. குறவஞ்சி இலக்கியங்கள் பற்றிய சிறு அறிமுகம், உரிய பாடல்கள், பண்பாடு போன்றவற்றைத் தொடர்ந்த விதமும், தெளிவான விளக்கங்களும் அருமையாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    தங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. மிக மிக அருமையான ஒரு பதிவு! நிறைய தெரிந்து கொண்டோம். குற்ராலக் குறவஞ்சி ஒரு சில பாடல்கள் கர்றிருக்கின்றோம். ஓள்ளியில். ஆனால், இதைப் போன்று பல விசயங்களை தாங்கள் சொல்லித்தான்...மிக்க ந்னன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நாம் இன்றுதான் பந்தாடும் வசந்த சுந்தரியை பார்க்கிறோம் ,அன்றே திரிகூட ராயப்பர் திரியைக் கொளுத்திப் போட்டிருக்காரே :)

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள பகவான் ஜீ,

    ஆமாம்... நன்றாகவே...!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சிற்றிலக்கியம் !விரிவான விளக்கம்! நன்று! நலமா!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நலம். நாடுவதும் அதுவே.

      நீக்கு
  14. சிற்றிலக்கியச் சுவையை பேரின்பச் சுவையாக தந்து அசத்தி விட்டீர்கள்.

    மணப்பாறைக்கு அருகில் உள்ள, சமுத்திரம் கிராமத்தில் இருக்கும் கோடங்கி மக்கள் பற்றிய நாட்டார் வரலாற்றினை நேரில் கண்டு தனியாக விவரித்து எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.

    பணக்கார குடும்பம் – எம்ஜிஆர், சரோஜாதேவி பூப்பந்தாட்ட பாட்டுடன், வசந்தவல்லி பந்தடிக்கும் காட்சிப் பாடலை இணைப்பாக காட்டியது உங்கள் இலக்கியத் திறனுக்கு எடுத்துக்காட்டு. “சொல்லடி அபிராமி” என்று தொடங்கும், (நடிகர் எஸ்,வி.சுப்பையா) திரைப்படப் பாடலில் இந்த பாடல் வரிகளும் இடம் பெற்று உள்ளன.

    இதுபோன்ற இலக்கிய கட்டுரைகளை வலைப்பக்கம் இன்னும் தரவும்.

    த.ம 11

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள அய்யா,

    தங்களின் பாராட்டுதலுக்கும் கருத்துகளுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு