வெள்ளி, 10 ஏப்ரல், 2015

வள்ளுவத்தில் வாழும் கலைஞர்!



வள்ளுவத்தில் வாழும் கலைஞர்!







                            திருக்குவளையில் கலைஞர் மு. கருணாநிதி  ஆகியநீர் கருவாகி,  திருவாரூரில்  உருவாகி, ஈரோட்டில் மெருகாகி,  காஞ்சியில் திருவாகி, வள்ளுவத்தில் தருவாகி, வாழும் வரலாறே! 

                        ‘ தமிழர்களின் சமயம் வள்ளுவர் சமயமே;   அவர்களின் நெறிநூல் திருக்குறளே!’  என்று உரைத்த பெரியாரின் பள்ளியில் பிள்ளையாய், சென்னையிலே வள்ளுவருக்குச் சிலைவைத்த பேரறிஞர்  அண்ணாவின் பல்கலைக்கழகத்தில் தம்பியாய்த் தரணியில் உலாவரும் தமிழ்க்களஞ்சியமே!

                        ஈ.வே.ரா.-வும் அண்ணாவும் உனதிரு கண்கள் என்றால்;   வள்ளுவர் உனக்கு மெய்யாகும் என்பது உனது செயப்படுபொருள்களால் மெய்யாகும்.  

                         இருநூற்றாண்டுகள் சங்கமிக்கும் 1.1.2000-த்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அய்யன் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் கல்லிலேயே சிலை வைத்திட்டாய்.   பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து 
நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் அமைந்து திகழ்கிறது.
ஆம். அறத்தை அடித்தளமாகக் கொண்டே பொருளும் இன்பமும் அமைந்திடல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் 'வள்ளுவமாகவே' சிலை அமைக்கப்பட்டுள்ளது.   கன்னியாகுமரியில் பிரமாண்டமாக நின்று கொண்டிருக்கும் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவரான,
                                         
                              பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி
தமது  84ஆவது வயதில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுக் காலமானார்.

                         நீரால் வள்ளுவரும் ;  வள்ளுவரால் நீரும் உலக அதிசயமாகி விட்டீர்கள்!  ஆழி உள்ளளவும்  உங்கள் புகழ் ஊழியளவும்  இருக்கும். 



வள்ளுவர் கோட்டம்:

                         1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்க் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு. 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.
                                                                                   
                        முப்பால் எக்காலத்திலும் அழியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணியே சென்னையில் வள்ளுவருக்குக் கோட்டம் அமைத்து, அதில் குறள்களனைத்தையும் கல்லில் பதித்து வைத்திட்டாய்...!

சிற்பத் தேர்:



     இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் 
கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 அடி(7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டுயானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
                                                                      


 தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் 
பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.   
இத் தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

                                                                   






குறளோவியம்:

                        

                          சிற்பியாக மட்டுமல்லாது  ஓவியராகவும் இருந்து வள்ளுவருக்குக் குறளோவியம் தந்திட்ட   ஓவியமே!
       

                      கலைஞர் மு.கருணாநிதி  1956 -இல் குறளுக்குப் புதிய கோணத்தில் கதை சொல்லும் முறையில் முரசொலி, தினமணிக் கதிர், குங்குமம் போன்ற வார இதழ்களில் குறளோவியம் தீட்டத் தொடங்கி, ஏறத்தாழ முப்பது ஆண்டுகால உழைப்பின் பயனாக அது 1985-இல் மிகச் சிறந்த நூலாக வெளிவந்தது.   அதில் அறத்துப்பாலில் 76 குறள்களும்,  பொருட்பாலில் 137 குறள்களும்,  காமத்துப்பாலில் 141 குறள்களும் ஆக 354  குறள்களுக்கு 300 குறளோவியங்கள் தந்திட்டார்.  இந்நூல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.  பின்னர் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

                          குறளோவியத்தைக் கதைகளாக, வாழ்க்கை நிகழ்வுகளாக, வரலாற்றுச் சுவடுகளாக, தமிழக வரலாறுகளாக மிக எளிமையாகவும், அழகாகவும், ஆழமாகவும் வரைந்திருக்கின்றார்.  எல்லாக் குறள்களுமே அஜந்தா ஓவியங்களைப் போலவே!  எந்தவொரு குறளோவியம் எந்தவொரு குறளோவியத்திற்குக் குறைந்து போனது,  எதை எடுப்பது,  எதை விடுப்பது,  எல்லாமும் ஒரு குடம் தேனில் ஒரு துளி எடுத்தால் போதுமாதலால் முப்பாலிலும் ஒவ்வொரு குறளெடுத்துத் தந்திருக்கிறேன்;   சுவைத்துப் பாருங்கள்.

அறம்:


                        “தாத்தா!  தாத்தா!  அய்யோ அந்த மனிதர் ஆற்றில் விழுந்து விட்டார்!  விழுந்தவர் நீந்திடக்கூட முடியாமல் தவிக்கிறார்.  அதோ பாருங்கள் தாத்தா அவர் ஆற்றில் முழுகிக் கொண்டேயிருக்கிறார்.   ஆமாம்!  ஆளையே காணவில்லை!  ஆற்றோடு போய்விட்டார் தாத்தா!”

                       “அவர் விழுந்துவிட்ட ஆறு என்ன ஆறு தெரியுமா?  அதுதானப்பா அழுக்காறு!  அதில் விழுந்த யாரும் தப்பமுடியாது!  எந்த ஆற்றில் விழுந்தாலும் ஒரு வேளை தப்பிவிடலாம்.  இந்த அழுக்காறு இருக்கிறதே; இதில் விழுந்து பிழைத்தோர் யாரும் இல்லை.”

                        “தாத்தா!  அழுக்காறு என்றால் என்ன?”

                         “அதுதானப்பா அடுத்தவன் வாழ்வதைப் பார்த்து அடுத்தவன் புகழப்படுவதைப் பார்த்து அடுத்தவனின் அறிவாற்றல், வீரம், உறுதி இவற்றைப் பார்த்து - பொறாமை கொள்ளுதல்!  அதற்கு பெயர்தான் அழுக்காறு!  அதனால்தான் வள்ளுவர் பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு சுமைகளையும் சுமக்காமல் நடந்தால் அறவழியில் எளிதாகச் செல்லலாம் என்று  கூறியிருக்கிறார்.”

                     தாத்தாவின் விளக்கம் கேட்டுப் பேரனின் விழிகள் ஒளி சிந்தின.

                     அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
                     இழுக்கா இயன்றது அறம்.                                                 
                                                                                                                              (குறள் 35)  



கலைஞரின் மாட்சிமிகு சொல்லாட்சிக்கு அறம் சொல்லிய தமிழே சாட்சி.

பொருள்:

               என் அருமைத் தந்தை முத்துவேலரின் வாழ்க்கையில்நடைபெற்ற
ஒரு  நிகழ்ச்சியைக் கூற விழைகிறேன்.  அந்தப் பரணில் நெளிந்து கொண்டிருந்த நல்லபாம்பொன்று எப்படியோ தவறிப்போய், ஒரு இடுக்கின் வழியாகக் கீழே விழுந்திருக்கிறது.   விழுந்த பாம்பு நேராகத் தரையில் விழாமல் என் தந்தையின் தோள் மீது விழுந்திருக்கிறது.  உடனே என் தந்தை கூச்சலிட்டு அலறிக் கையால் அந்தப் பாம்பைத் தூக்கி எறிய முனைந்திருப் பாரேயானால், பாம்பு தலையைத் தூக்கிப் படத்தை விரித்து இமைப்பொழுதில் அவர் உடலில் நஞ்சினை ஏற்றிவிட்டு ஓடியிருக்கும்.  ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.  தன் தோளில் பாம்பு விழுந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார்.  அதே சமயம் பாம்பின் இயல்பையும் நினைவுபடுத்திக் கொண்டார்.  நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் துடித்துத் துள்ளினால் அது கடித்துவிடும்;   ஆகவே அமைதியாக இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்தார்.  பாம்பு தோள்மீது ஊர்ந்து கொண்டிருக்கிறதே என்ற அதிர்ச்சிக்கு இடம் தராமல் ஆடாமல் அசையாமல் அப்படியே சிலை போல உட்கார்ந்திருந்தார்.  தோளில் இருந்த பாம்பு, மெல்ல அவர் தொடை வழியாக இறங்கிப் பிறகு தரையில் நெளிந்து அங்கிருந்து அகன்று விட்டது.  இந்த நிகழ்ச்சியை  என் தாயார் அஞ்சுகத்தம்மை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

                    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
                    உள்ளத்தின் உள்ளக் கெடும்.                             
                                                                                                                  ( குறள் 622 ) 

                                                                                       
கலைஞரின் நதிநீர் போன்ற நடை தமிழுக்கு வளம் சேர்க்கிறது.
           
இன்பம்:

                   கட்டிலறையிலே கணவனும் மனைவியும் செல்லமாகச் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் தெரியுமா?  ஒன்று சேருவதற்காக!  ஊடல் புரிக!  ஏன் கூடுவதற்காக!  கிண்டல் நிறைந்த அழகான உண்மையல்லவா இது!  


                   செல்லச் சண்டை - பிறகு இருவரும் தனித்தனியே!  ஓரிரு நாழிகைகள் நகருகின்றன.  அதுவரைக்கூடப் பொறுக்காது அதற்குள்ளாகவே மங்கிய ஒளியில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தல் - இருவரும் ஏககாலத்தில் பார்த்துக் கொண்ட ஒருவருக்கொருவர் நாணுதல் - நெருங்குதல் - கரம்படுதல் -  “சூ  என்னைத் தொடவேண்டாம்” என்ற கடுமொழி - ஆனால் கரும்பை வெல்லும் மொழி!    அவன் கையை எடுத்துக் கொள்ளல் - பிறகு அவள், அவன் மீது கைபடுமாறு நெருங்குதல் - “அட நீ ஏன் என்னைத் தொடுகிறாய்?”  அவன் சீறுதல் செல்லமாக!

                        “ நீங்கள் மட்டும் ஏன் தொட்டீர்களாம்...” உரிமைக் குரல் இப்படி!
                      

                        “நீயும் தொடு;  நானும் தொடுகிறேன்” -  ஒருவருக்கொருவர் போட்டாப் போட்டி!  பிறகு ஊடல்கனி தந்த உற்சாக வெள்ளம்!  இந்த ஊடல் எவ்வளவு அவசியமானது என்பதைத்தான் வள்ளுவர் எழுதிக் காட்டுகிறார்.
இதோ குறள்:

                         ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்
                        கூடி முயங்கப் பெறின்.                                               
                                                                                                                           (குறள்:1330)


                     கள்ளைக் குடித்தால் இன்பம்;  காமத்தைக் கூடி முடித்தால் இன்பம், ஆனால் கலைஞரின் இன்பத் தமிழைப் படித்தாலே பேரின்பம்.



திருக்குறள் கலைஞர் உரை


                                                                   

                       கலைஞர் முரசொலியில் 1330 குறள்களுக்கும் ஒன்னேமுக்கால் அடியில் 2328 வரிகளில் உள்ள தமிழ் மறையாம் திருக்குறளுக்கு உரையெழுதி ‘திருக்குறள் கலைஞர் உரை’ என்னும் நூலை 1996-இல் வெளியிட்டார்.

                                                          
                            திருக்குறளுக்கு தருமர்,  மணக்குடவர்,  தாமதத்தர்,  நச்சர்,  பருதி,பரிமேலழகர்,  திருமலையர்,  மல்லர்,  பரிப்பெருமாள்,  காலிங்கர்  ஆகிய பதின்மர் பழைய உரையாசிரியர்கள்.  இவ்வரிசையில் திரு.வி.கா., கா.சு.பிள்ளை, மு.வரதராஜன்,  வ.சுப.மாணிக்கம், கி.வா.ஜ.,  பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், சுஜாதா போன்ற பலர் உரை எழுதியுள்ளனர்.  சிற்றுரை, பேருரை, தெளிவரை, கருத்துரை, குறிப்புரை, ஆய்வுரை என்று 360க்கும் அதிகமான உரைகள் வெளிவந்துள்ளன.

                                இவற்றுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்று பலர் கொள்கின்றனர் என்றாலும் ஆழ்ந்து நோக்கும்போது வருணாசிரம நெறியினையே ஆரிய வழிகாட்டலாக வள்ளுவர் வலியுறுத்தியுள்ளதாகப் பரிமேலழகர்  சற்றுக்  குழம்பியுள்ளார் என்றே சொல்லலாம்.

                                  நாத்திகவாதியான கலைஞர் ‘திருக்குறன் கலைஞர் உரை’ -யில் வள்ளுவரின் வழியிலேயே நின்று பகுத்தறிவுக் கருத்துகளோடு உரையெழுதியிருக்கின்றார்.  அறம், பொருள், இன்பம் எழுதிய வள்ளுவர் வீடு என்பதை விட்டு விட்டதிலிருந்து அவரும் ஒரு பகுத்தறிவுவாதிதான் என்றே எண்ணத் தோன்றுகிறது.

                        வள்ளுவர் காலத்தில் கடவுள் நம்பிக்கையுள்ள மக்களே தமிழ் நிலத்தில் வாழ்ந்தார்கள் என்பதை இலக்கியங்களிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.  நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பள்ளிகளில் இறைவழிபாடு இருப்பதைப் போல, கடவுளை வாழ்த்திவிட்டுத்தான் அல்லது வணங்கிவிட்டுத்தான் எதையும் தொடங்குவது மரபாகும்.  வள்ளுவர் மரபை மீறாமல் கடவுள் வாழ்த்தை வைத்திருக்க வேண்டும்.

                          கடவுள் வாழ்த்தைப் பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள்  ஆகியோர் கடவுள் வாழ்த்து என்றனர்.  சுகாத்தியர் முதற்பொருள் வாழ்த்து என்றும்,   இலக்குவனார் இறைநலம் என்றும், தேவநேயப் பாவாணர் முதற்பகவன் வாழ்த்து என்றும் கூறியுள்ளனர்.

                         கலைஞர் ‘வழிபாடு’ என்று பொதுவில் வைத்து, கடவுள் என்று சுட்டாமல் விட்டு விடுகிறார்.  இறைவனைத் தலையானவன் என்றே பொருள்கொள்கின்றார்.

                         வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

                         தெய்வத்துள் வைக்கப் படும்.                                          (குறள் 50)                                                

வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான் என்கிறார்.   ‘சொல்லப்படும் தெய்வம்’ என்பதால் தானொரு பகுத்தறிவுவாதி என்பதைப் பறைசாற்றுகிறார்.   கலைஞர் பகுத்தறிவுவாதி என்பதற்கு மேலும் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
                                                               


                           ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
                           
                           கெழுமையும் ஏமாப் புடைத்து.                                       (குறள்: 398)

                       ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது,  ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.   

                          தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

                           மெய்வருத்தக் கூலி தரும்.                                                  (குறள்: 619)

                        கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.            

                          ஒருமைச்  செயலாற்றும் பேதை எழுமையும்

                           தான்புக் கழுந்தும் அளறு.            
                                          (குறள்: 835)                                                      

                         தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.      


                         குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
                          மடிதற்றுத் தான்முந் துறும்.                                                (குறள்:1023)
                                                                                                              

                          தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக் கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக் கொண்டு வந்து துணைபுரியும்.
                                                                                                                             

                        திருக்குறள் கலைஞர் உரை நன்னூல் இலக்கணப்படி சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற உத்தியில் உரைக்கப்பட்டுள்ளது.  குறளுக்கு உரைகள் பெரும்பாலும் ஒரே சொற்றொடரில் (சில குறள்களைத் தவிர) எழுதியிருப்பது மிகச் சிறப்பாகும்.

                        அறத்துப்பாலில் 68 குறள்களுக்கும், பொருட்பாலில் 81 குறள்களுக்கும், இன்பத்துப்பாலில் 20 குறள்களுக்கும் ஆக 169 குறட்பாக்களுக்குச்  சுருக்க உரை எழுதியிருக்கிறார்.

                         மிகமிகச் சுருக்கமாக உரையெழுதி இருப்பது மேலும் வியப்பின் விளிம்பிற்கே நம்மைக் கொண்டு செல்கிறது.

                           அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
                            பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.                                 (குறள் 49)

                          பழிப்புக்கு இடமில்லா இல்வாழ்க்கை இல்லறம் எனப்போற்றப்படும்.                                                                                 

                          அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
                           உள்ளழிக்க லாகா அரண்.                                                  (குறள் 421)

                          பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.                                                                                                

                          இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
                          கெடுப்பா ரிலானுங் கெடும்.                                              (குறள் 448) 

                         குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே  கெடும்.
                                                                                                                              
தமிழமுதமாக இருக்கின்ற உரையில் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல மூன்று பாலிலும் ஒவ்வொரு குரல் எடுத்து பதம் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன்.
                                                         

அறம்:

                        தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

                        சொற்காத்துச் சோர்விலாள் பெண்.                    (குறள்: 56)

கற்புநெறியில் தன்னையும்  தன் கணவனையும் காத்துக்கொண்ட தமக்குப் பெருமை  சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.

பொருள்:

                        தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
                         தீரா இடும்பை தரும்.

                                                                                                                  (குறள் 510)  
                                                                         

ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக் கொண்டபின் அவரைச் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.

இன்பம்:


                     கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்                                                                           திங்களைப் பாம்புகொண்  டற்று.                             
                                                                                                               (குறள் 1146)

                                                                                                    


காதலர் சந்தித்துக் கொண்டது ஒரு நாள் தான் என்றாலும் சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் கிரகணம் எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.

                         திருக்குறள் என்ற அட்சய பாத்திரத்திலிருந்து கலைஞரின் உரை தமிழ் அமுத சுரபியாக அள்ள அள்ளக் குறையாத தேனமுதாகத் தித்திக்கின்றது.

                                      


வான்புகழ் கொண்ட வள்ளுவம்

                                                         
                                                             


                  கலைஞர் அறத்துப்பால், பொருட்பால் இரண்டிலும் இருந்து அதிகாரத்திற்கு ஒரு குறளாக (பொருட்பாலில் 14 அதிகாரங்களுக்கு மட்டும் ஒன்றுக்கும் மேலாக) எடுத்து, 108 அதிகாரத்திற்கும் 132 குறள்களுக்கு, விளக்கங்களைக் கவிதையில் கூறிக் குறளைக்காட்டி, உரையோடு, அழகான ஆய்வுரையாக முரசொலியில் எழுதப்பட்ட வான் புகழ் கொண்ட வள்ளுவம் 2005-இல் வண்ண நூலாக வெளிவந்தது.

                   இந்தக் கவிதைத் தேன்கூட்டில் கதைகள், உவமைகள்,  தற்கால நிகழ்வுகள்,  வரலாற்றுச் சம்பவங்கள்,  கலிங்கத்துப்பரணி,  பாஞ்சாலி சபதம், பரிமேலழகர் உரை போன்றவற்றை உதாரணங்களாக்கிக் கலைஞர் கவிதையில் எடுத்தாண்டிருக்கிறார்.  அனைத்தும் தேனில் விழுந்த பலாச்சுளைகளாகத் தித்திக்கின்றன.  இருபாலில்   இருபாலரும் மகிழும் வண்ணம் ஒவ்வொரு பலாச்சுளையைக் கலைஞரின் சொல்லெடுத்துத் தருகிறேன்.

அறம்:


                      கூடா ஒழுக்கம்

 பச்சைக் கிளிகளையும் பால்நிறப் புறாக்களையும் பிடிப்பதற்கு 
 இச்சையுடன் கண்ணி வைத்துப் புதரில் 
 மறைந்துள்ள பொல்லா வேடனைப் போல்
 பாவையரைக் காம வேட்டையாடப் பாழும்  துறவியர் சிலர்
 பாசறை அமைத்து அதனைப் பக்தி மடமென்று பசப்புகின்றார்
 பகல் வேடதாரியிடம் பகவான் பேரால் ஏமாற்றும் எத்தனிடம்
 எப்போதும் எச்சரிக்கை என்றுரைப்பதும் அய்யன் தானே!

                     தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து                                                                    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.                                  

                                                                                                              (குறள்: 274) 


(புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும்,  தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை)

பொருள்:

                     பெருமை

                      1967- ஆம் ஆண்டு கழகத்தின் ஆட்சி அமைந்த பொழுது, அண்ணாவுடன் சென்று பெரியாரைச் சந்தித்து ஆசி வேண்டியதைக் கலைஞர் கவிதையில் காண்க...

அவர் தங்கியிருந்த திருச்சி மாநகருக்கே சென்றோம்-
அந்த நள்ளிரவு நேரத்திலும் அவர் விழித்திருந்து எம்மை
ஆரத் தழுவி வாழ்த்து மழை பொழிந்ததையும் அருகிருந்து
அன்னை மணியம்மை மற்றும் அய்யாவின் தளபதிகள்;
அன்பாக உபசரித்து அகமகழ்ச்சி கொண்டதையும்
அதற்கு முதல் நாள் வரையில் அரசியல் மேடைகளில் வீசிய
அடாத பகைப் புகை மறைந்து பண்பாடு மலர்ந்ததையும்
விடாது எமைத் தழுவிப் பெரியார் வாழ்த்தி விடை கொடுத்ததையும்,
தன்னை வியந்து கொள்ளும் தற்புகழ்ச்சியில்லாமல் அண்ணா,
தந்தை பெரியாருக்கு வெற்றிக்கனியைக் காணிக்கையாக்கி                                                                                                                                                                                                                                                                                                                                   வணங்கியதையும்
இப்போதும் காண்பது போல விழிகள் பனிக்கின்றன....!

                       பணியுமாம் என்றும் பெருமை;  சிறுமை

                       அணியுமாம் தன்னை வியந்து.                                  (குறள்: 978)

(பண்புடைய பெரியோர், எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்,  பண்பு இல்லாத சிறியோர்,  தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.)

                     

                        மனித நேயப் பாவாணராம்  வள்ளுவர் இயற்றிய வள்ளுவத்திற்குக் கலைஞர் தமிழில் படைத்திட்ட இலக்கியங்கள் யாவும் தமிழன்னைக்குச் சூட்டி மகிழ்ந்து,  அழகுக்கு அழகு சேர்த்த மணிமகுடங்கள் ஆகும்.  


                         வான்புகழ் வள்ளுவம் வண்டமிழர் போற்றுமுன்
                         தேன்தமிழில் தீம்குறள் ஓவியமும் தான்படைத்துக்
                         கண்டாய்க் குறளுக்(கு) உரையும் கலைஞரே
                         கொண்டாய்ப் புகழைக் குவித்து. 

பார்வை நூல்கள்:

1. குறளோவியம், பாரதி பதிப்பகம், சென்னை.
2.திருக்குறள் கலைஞர் உரைதமிழ்க்கனி பதிப்பகம்,சென்னை.
3.வான்புகழ் கொண்ட வள்ளுவம், தமிழ்க்கனி பதிப்பகம், சென்னை.
  
    நூலாசியர்: கலைஞர் மு. கருணாநிதி.



-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

                        
                        
       


            

27 கருத்துகள்:

  1. தமிழ் மணம் 3 பிறகு வருவேன் மணவையாரே...

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள ஜி,

    தங்களின் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மணவையாரே வாழ்த்துகள் மிகவும் பிரமாண்டமான அருமையான விளக்கவுரைகள் நிறைய விடயங்கள் அறியத்தைந்தமைக்கு மனமார்ந்த நன்றி.
    இதை இரண்டு பதிவுகளாக போட்டு இருக்கலாமே நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள ஜி,

    நீங்கள் சொல்வது சரிதான்... இரண்டு பதிவுகளாக போட்டு இருக்கலாம்.... உண்மைதான் ஜி.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வள்ளுவரின் முதன்மை வாசகன் கலைஞர்தான் ஐயமே இல்லை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள பகவான் ஜீ,

      அய்யமில்லை என்று அய்யா சொன்னதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  6. மிகவும் விரும்பி... ரசித்துப் படித்தேன்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  7. வான்புகழ் வள்ளுவம் வண்டமிழர் போற்றுமுன்
    தேன்தமிழில் தீம்குறள் ஓவியமும் தான்படைத்துக்
    கண்டாய்க் குறளுக்(கு) உரையும் கலைஞரே
    கொண்டாய்ப் புகழைக் குவித்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வள்ளுவத்தில் வாழும் கலைஞர்!

    பதிலளிநீக்கு
  9. வள்ளுவர் புகழினையும் கலைஞர் கருணாநிதி வள்ளுவருக்கு செய்த சிறப்பினையும் ஒருசேர, ஒரே பதிவினில் தந்திட்ட, ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.
    த.ம.9 -?

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. தங்களின் வாக்கிற்கு ? வாழ்த்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. த.ம.9 -? விளக்கம்: உங்கள் பதிவிற்கு தமிழ்மணத்தில் வாக்களிப்பதில் ஏதோ தொழில் நுட்பக் கோளாறு இருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் நான் அளித்த வாக்கு உங்கள் கணக்கில் ஏறவில்லை. மேலும் மீண்டும் வாக்களித்தால் ஏற்கனவே வாக்களித்து விட்டதாக தமிழ்மணம் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தமிழ்மணத்தில் தொழில் நுட்பக் கோளாறு இருக்கலாம். தாங்கள் மீண்டும் வந்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  12. வலிப்போக்கன் அவர்கள் தனது வலைப்பதிவில் தங்களுக்கு தந்திருக்கும் கீழே கண்ட மறுமொழியை கவனிக்கவும்.

    வலிப்போக்கன் -4/11/2015 09:36:00 முற்பகல்
    திரு.ஜேம்ஸ் அய்யா அவர்களுக்கு தங்களின் தளம் வராமல் தமிழ்நண்பர்கள் தளம் தான் வருகிறது. தங்களின் தளத்தை கண்டுபிடிப்பதற்கு ஒரு வழியை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள அய்யா,

    எனக்கு வலைத்தளம் பற்றிய தெளிவு அவ்வளவு இல்லை. நான் பதிவிடும் பதிவுகளை ‘தமிழ்நண்பர்களில்’ இணைப்பது உண்டு. மற்றபடி தாங்கள் சொல்லித்தான் வலிப்போக்கன் அய்யா அவர்கள் இட்ட பின்னூட்டம் கண்டேன். தாங்கள் இடும் பின்னூட்டம் எல்லாம் வருகிறது. என்னவென்று தெரியவில்லை அய்யா. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அதிக செய்திகளைக் கொண்ட நல்ல தொகுப்பு. வழங்கியுள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தாங்கள் சொல்லியது போல் அதிகச் செய்திகளை உள்ளடக்கியதாகத்தான் உள்ளது. இரண்டு மூன்று பதிவுகளாகப் பிரித்துப் போட்டிருக்கலாம்.

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்திரைத் திருநாள் வாழ்த்தை இத்திரையில் வழங்கிட்ட
      சத்தான வரிகளுக்கு நன்றி.

      நீக்கு
  16. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு