வெள்ளி, 24 அக்டோபர், 2014

தெருவில் ஒரு திருவிளக்கு...!


தெருவில் ஒரு திருவிளக்கு...!

                     
                       
     
            “தர்மம் செய்யுங்கய்யா...  தாயே தர்மம் செய்யுங்கம்மா... அய்யா...அம்மா... ஒங்களுக்கு புண்ணியமா போகுமுங்க...’’ அண்ணா சிலைக்கருகில் பரிதாமாபமாகக் குழந்தையை இடுப்பிலும் ஈயத்தட்டைக் கையிலும் வைத்துக்கொண்டு கீறல் விழுந்த தேசிய கீதத்தைப்போலக் கத்திக் கொண்டு இருந்தாள் கண்ணகி.

           நிலவுக்கு வழிவிட்டுச் சூரியன் மறையும் அந்தி வேளை...அந்தச் சோடியம் வேப்பர் விளக்கின் வெளிச்சம்..  கண்ணகியின் மேனிக்கு மஞ்சள் பூசி அழகை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.  இன்று ஜங்ஷனுக்கு வந்து போகும் ஜனங்களின் நடமாட்டம் சற்று அதிகமாகத்தானிருந்தது.

           பிள்ளை மொழி பேசத் தெரியாததால் பசியை அழுகையால் அறிவுறுத்தியதும்...தன்னிடம் பால் இல்லையென்பதும் கண்ணகிக்குத் தெரியாத ஒன்றல்ல... தனது பசியையும் மறந்து பிள்ளையின் பசியைப் போக்க நினைத்துத்  தட்டைப்பார்த்தாள்... பால் வாங்கக்கூட பற்றாக்குறையாகத்தான் இருந்தது.

            விதியை நொந்து கொள்வதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.  பிள்ளை பசியின் கொடுமை தாங்காமல் ‘வீல்...வீல்...’ எனக் கத்த ஆரம்பித்தது.  தாய்பால் இல்லையென்றாலும் பாலைக் குழந்தைக்கு ஊட்டுவது போல் முனைந்தாள்.

             கண்காட்சியாக இதைக் கவனித்துக் கொண்டிருந்தது அங்கொரு கும்பல்,  வெறும் பால் ரப்பரைச் சப்பிக்கொண்டு  எல்லாக் குழந்தைகளைப் போலத்தான் அதுவும் தனக்கு வேண்டியது கிடைத்து விட்டது போல மகிழ்ச்சியில்  அழுகையை நிறுத்தியது.  கண்ணகிக்கோ அழுகை அழுகையாய் வந்தது.  தாய்மையின் இலக்கணமே அதுதானே...!

              அதை  நினைத்து அழுதாள்.  ‘அந்த லாரிக் காரன் குடிச்சிட்டு வண்டி ஓட்டி...பாவிப்பய... எ புருஷன் மேலயா வண்டிய விடனும்...ஆண்டவன் எ தலையில் இப்படி எழுதிட்டானே... இந்த அபலைய அம்போன்னு அனாதையா விட்டிட்டு...கட்டின ஒரு வருஷத்திலே போயிட்டியேயா... இந்த பாவி மக கையிலேஒரு புள்ளயக்கொடுத்துட்டு... இப்படி கஷ்டப்பட வச்சிட்டு போயிட்டியேய்யா...போயிட்டியேயா...’ எண்ணப்பறவை எங்கெங்கோ பறந்து கொண்டிருக்க அந்தப் பேச்சு கண்ணகிக்கு எங்கே இருகிறோம் என்று ஞபாகப்படுத்தியது.

                “டே...கருப்பானாலும் அழகுக் கருப்புடா...!”

                “மச்சி...இவளுக்கு இருபது வயசுகூட இருக்காது...மார்க்கு எம்பதுக்கு மேலே போடலாமுடா...!”

                “டே...இவ அப்படிப்பட்டவளா இருக்குமோன்னு எனக்குச் சந்தேகமா இருக்குடா...!”

                 “இதுல என்ன மச்சி சந்தேகம்...எல்லாம் அந்த கேஸ்தான்...காசு இல்லாம இதப்பத்தி பேசிப் பிரயோஜனம்...வா போகலாம்”. -கல்லூரி மாணவர்களின் பேச்சு அவளின் விழியைச் சிவப்பாக்கியது.
                                                             
                  ரோட்டுக்கரையிலே வந்து நிக்கனுமுன்னு எனக்கு மட்டும் பிரியமா... என்ன?  வேலை கேட்ட பக்கமெல்லாம் குழந்தையில்லேன்னா வேலை தர்றேங்கிறாங்க...குழந்தை இருக்கிறதனாலேதான் நான் உயிரோட இருக்கிறேங்கிறது அவுங்களுக்குத் தெரிவதற்கு நியாயமில்லதான்.  இப்போதைக்கு இதைத் தவிர வேற வழியே தெரியலை.

                  இரக்க குணம் படைத்தவர்கள் சிலர் இல்லாமல் இல்லை.  இரண்டு அம்பது பைசாவும் ஒரு ரூபாய் காசும்  சொந்தம் கொண்டாடிக் கிடந்தது .  ‘அம்மா தாயே..’.என்று வழக்கமான பல்லவியைப் பாட ஆரம்பித்தாள்.

                  ‘ஒடம்ப வளத்து வச்சிருக்கா..ஒழச்சு சாப்புட வேண்டியதுதானே... என்ன கை நொண்டியா...? காலு நொண்டியா...?  பிச்சை போட்டுப் போட்டுத்தான் நம்ம நாடு இப்படியாயிடுச்சு...’ வழிநடைப் பயணிகள் சிலர் பேசிக்கொண்டே போனார்கள்.

                    முருக்கு மீசைக்காரப் பால்காரன்... கைலியும் பனியனும் மட்டுமே மாட்டியிருந்தவன்... மீதமான பாலைச் சேதமாகாமல் சேர்த்து வைத்துக் கொண்டே... நீண்ட நேரமாகத்  தன்னையே பார்த்துக் கொண்டடிருந்தாலும், பார்க்காதவள்  போல்தான் நின்று கொண்டிருந்தாள்.

                   பால்காரன் பக்கத்தில் வருவதைப் பார்த்த கண்ணகி,  “குழந்தை பசியால துடிக்குதுங்க...என்ட்ட இருக்கிறது ரெண்டு ரூபாதாங்க...இதை வச்சிக்கிட்டு குழந்தைக்குக் கொஞ்சம் பால் கொடுத்தீங்கன்னா...“ எதிர்பார்ப்பு அவள் கண்ணில் தெரிந்தது.
                                                           

                    பீடியைப் பற்றவைத்துப் புகையை வாயிலிருந்து  வளைய வளையமாக விட்டுக்கொண்டே பேசினான், “புள்ளைக்கு பாலுதானே வேணும்...கவலைய வுடு... எனக்கு காசே வேணாம் புள்ள...எவ்வளவு காசு வேணுமுன்னாலும்  நா தர்றேன்... என்னோட வர்ரீயா...?”

                     அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலே அவள் உடலே நடுங்கியது.  அந்த வார்த்தை அந்தச் சம்பவத்தை நினைவு படுத்தியது.... இப்படித்தான்   ஒருநாள் அந்தி சாயும் நேரம் நடுத்தர வயதுள்ள ஒருவன்
‘நான் ஒன்ன அடிக்கடி கடை வீதியிலே பாக்கிறேன்...எ மனைவிக்கு ஒடம்பு சரியில்ல...வீட்டுக்கு வந்து...பாத்திரத்தச் தேச்சு கொடுத்துவிட்டுப் போயிடு...அன்னன்னிக்குப் பணம் கொடுத்திடுறேன்...எனக்கும் சுலபமா இருக்கும்...ஒனக்கும் சாப்பாட்டுக்கு வழி கிடைக்கும்...’ என்றான்.  இவளும் அவனோடு  சென்றாள்.

                      வீட்டிற்குள் நுழைந்தவள் ‘அம்மா எங்கே? ’ என்று கேட்டாள்.

                      ‘ எங்கே அம்மா இருக்காங்க...சும்மா சொன்னேன்...எல்லாம் நான்தான்...என்னோடு நீயும் சேர்ந்தால் ‘  என்று அவளைக் கட்டி அணைக்க முயன்றான்.  அவனின் முரட்டுப்பிடியில் இருந்து திமிற முடியாமல் திணறிய அவள், தனது குழந்தையின் அழுகுரல் கேட்க... அடுத்த வினாடி சுதாரித்துக் கொண்டவளாக ‘கொஞ்ச நேரம் பொறுங்கள் குழந்தையின் அழுகையை நிப்பாட்டிட்டு வர்றேன்’ என்றவாரே,   வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து... சடாரென வேகமாக  அறையைத் தாழ்ப்பாள் போட்டு விட்டு அன்றைக்கு தப்பித்து  வந்தது  நினைவுக்கு வர கண்கள் குளமாயின.

                   “என்ன புள்ள...என்னோட வர்ரியா புள்ள...”-மறுபடியும் பால்காரன் கேட்டான்.

                   “......................................................................................” அவளால் பேச முடியாமல் வார்த்தை சிக்கிக் கொண்டு வெளியில் வரத் தடுமாறியது.

                   “எங்கே கூப்புடுறேன்னு புரியலேங்கிறியா...?  வா புள்ள புரிய வைக்கிறேன்... காசுக்குக் காசு... சுகத்துக்குச் சுகம்...”

                   “......................................................................................”- விழிகளிலிருந்து நீர் ‘பொலபொல’வென வழிந்தது.

                   “மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிங்கிறத... நா மறந்தே போயிட்டேன்...” காரைப் பல்லைக்காட்டிச் சிரித்தான்.

                  “ நா வாழனுமுன்னு நெனைக்கிறேன்... எ வாழ்க்கைய அழிக்கனுமுன்னு நெனைக்கிறீங்களே... என்ன வாழவிடுங்கய்யா...ஒங்கள கை எடுத்துக் கும்புடுறேன்” என்று கெஞ்சினாள்.

                  “பொழைக்கத் தெரியாத புள்ளையா இருக்கிறீயே...“ மீசையை முறுக்கிய  பால்காரன்... பாதிரியார் பக்கத்தில் வரவே நகர ஆரம்பித்தான்.
                                                                         
                   அந்த நேரத்தில் அருகில் வந்த பாதிரியார், “உன் நிலையை பார்த்து மனம் ரொம்ப வேதனைப்படுது...உனக்கு சிஸ்டருங்க மடத்தில... கான்வென்ட்ல...  சமைக்கிற வேலை வாங்கித் தர்றேன்... என்னோடு வாரியாம்மா...” தாயன்போடு கேட்டார்.  அதுவரை நாராசமா ஒலித்த இந்த வார்த்கை இப்போது அவளுக்குத் தெய்வ வாக்காக  காதில் கேட்டது.  தெய்வமாகத் தெரிந்த பாதிரியாரைப் பார்த்து ‘சரி’ யென்பதைப் போலத் தலையசைத்து...  அவள் நம்பிக்கையுடன்  குழந்தையோடு பாதிரியாரைத் தொடர்ந்தாள்.

                    “பாருடா...நா கூப்புட்டதுக்கு  வராதவ... அவரு கூப்புட்டவுடன... போறதப் பாரு...”  பால்காரன் படு கேவலமாகவும்...  ஏளனத்துடன் பேசியது காதில் கேட்டாலும்,  பிரகாசமான கண்களோடு தனக்கு நல்ல எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கி நடைபோட்டு சென்றாள்.   எதைப்பற்றியும்  கவலைப்படாமல்  அவர்கள் நடந்தார்கள்!


                   

                                                                                                         
          -மாறாத அன்புடன்,

            மணவை ஜேம்ஸ்.
                                                   

                                                                                                     
                               

                             

                                                                                                         

                                                                                                       


திங்கள், 20 அக்டோபர், 2014

தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்!


                                தீபம் ஆவளி




அரக்கனின் அட்டூழியம்
அத்துமீறிப் போனதால்
அவனை அழித்தது சாமி...
ஆசாமி அல்ல;  மாசாமி...
கிருஷ்ண சாமி!

இறந்த நரகாசுரனே...                
இந்த விழா கொண்டாட
வேண்டிக் கொண்டதால்
தீபம் ஆவளியாக கொண்டாட்டமாம்.

ஒருவன் இறந்ததற்காக
ஒரு விழாவா?!

ஈழத்தில் தமிழன்
ஓலத்தில் இருக்கையில்...
கொத்துக் குண்டுகளைக்
கொடூரன் வீசிக் கொல்லும்
அந்நிய அரக்கன்
இன்னும் இருக்கையில்...
தமிழ்ச் சொந்தங்களின்
உயிர்த் துடியாய் துடிக்கையில்
நாம் வேடிக்கைதானே
பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
நாம் வெடிக்க... வெடிகுண்டெனும்  
அணுகுண்டும் தேவையோ?

ஆமாம்...யார் சொன்னது?
நரகாசுரன் இறந்தானென்று!
                                                                                 


கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டு...
எச்சத்தில் மீன்பிடித்தே...
நம் தமிழன்...                           
சிறை பிடிக்கப்பட்டு
உச்சத்தீர்வை வேண்டி
நித்தம் நித்தம்
தூண்டில் மீனாய்
கண்ணீரில் கவலையுடன் அழுவதும் ஏனோ?
வாழ்வாதாரமின்றி வாழ்வதும் வீனே!
ஓலைக்குடிசையில் வாழ்க்கை வெடிக்கையில்...
ஓலைப்பட்டாசுதான் வேண்டுமோ?

ஆமாம்... யார் சொன்னது...?
நரகாசுரன் இறந்தான் என்று...!





அண்டை நாட்டுக்காரன்-
காஷ்மீரில்-
ராக்கெட் குண்டுகளை எறிந்து
மண்டையை உடைக்கும் போது
ராக்கெட் வெடியை...
நாம் விடுவதும் முறையோ?
ஆமாம்... யார் சொன்னது...?

நரகாசுரன் இறந்தான் என்று...!

இங்குள்ள குடிசைகள்...             
பற்றி எரிவதும் பற்றதா?
ஏழைக் குடிசைவாசிகளின்
வயிறு பற்றி எரியும் போது
அதை அணைக்க
உன்னால் ஆன
உதவி செய்து                     
அவனை வாழ வை.

காசை ஏன் கரியாய் ஆக்குகிறாய்...
வானத்தை வாங்கி இனி கொளுத்தாதே...
புகையாக்கி பூமியை கெடுக்காதே!
ஓசோனில் விழுந்த...
ஓட்டைகள் போதும்...!




காந்தியைக்கூட...
கோட்சே என்ற அரக்கன்
துப்பாக்கியால் சுட்டுக்கொன்றானே...!
மகாத்மா அகிம்சை
விட்டுச்சென்றானே...!
நமக்கு விளையாட                   
துப்பாக்கி எதற்கு?
விளையாட்டிற்காகக்கூட
துப்பாக்கி தூக்க வேண்டாமே!

மதுஅரக்கனை-
அரசே வளர்த்து...
வேலியே பயிரை மேயும்
விந்தையையான வேலையைச்
செய்யும் வேளையில்              
மந்தையான மனிதன்...
சுற்றிச் சுற்றித் திரிகையில்
சுற்றுவதற்குச் சங்குச் சக்கரம்
வாங்குவதும் எதற்கு?


திரைப்படங்கள்-
மனிதனைக் குருடாக்கிக்
கொண்டிருக்கும் பொழுது...
நடிக நரகாசுரன்களை
நல்ல படங்களில் நடிக்கச்சொல்லியே...
சாட்டை எடுப்போம்...!
பற்றவைத்து மகிழ...
நமக்கெதற்கு சாட்டை ?
புதுச் சட்டைவேண்டுமானால்...
போட்டு மகிழ்வோம்...!
வேட்டு எதற்கு?                          
வேட்டி வேண்டுமானால்...
கட்டி மகிழ்வோம்...!

நம்மைச்சுற்றி-
நாலாபுறமும் இருக்கும்...
‘எபோலா போல உயிர்க்கொல்லும்
நரகாசுரன்களின்
பகை விலக்கப் பார்ப்போம்...          
பகை விலக்கிப் பார்ப்போம்...
நாமே ஒழிக்கப் பார்ப்போம்...
தமிழன் விழிக்கப் பார்ப்போம்...
மனிதம் செழிக்கப் பார்ப்போம்...
                                                                                 
அப்பொழுது...
இடியாய் வெடிவைத்து..         
கொடிமின்னலாய் ஒளிவைத்து...
நட்சத்திரமாய் மத்தாப்பு வைத்து...
கித்தாய்ப்பாய் வைத்து...
புகையில்லா... பகையில்லா...
தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்!
                                         -மாறாத அன்புடன்,

                                          மணவை ஜேம்ஸ்.

                                         


சனி, 18 அக்டோபர், 2014

குடிமகனின் பாடல்

                      

கள்ளச்சாராயத்தைக் குடித்ததனால் கண்ணிழந்த  ஒருவன்
                    பாடித்திரிகின்றான்


                          

         

     






              

                          அன்புகொண்ட உள்ளங்களே கொஞ்சம் நில்லுங்கள்....- நல்ல
                  
                           பண்பில்லாத பாவியெந்தன் பாடல்  கேளுங்கள்...

செவ்வாய், 14 அக்டோபர், 2014

இவர்கள் இருக்கிறார்கள்...!

எண்ணே...! எண்ணே...!!  ஒனக்கு ஆம்பளப் புள்ளேண்ணே...” மூச்சு முட்ட ஓடி வந்த தங்கை வள்ளியைப் பார்த்துச் சந்தோசத்தால் வார்த்தை வராமல் அப்படியே நின்றான் சொக்கன்.
  “எண்ணே...மம்மட்டிய போட்டுட்டு மவனப் பாக்க வாண்ணே...” என்று சொன்னவுடன்தான் பண்ணையில் கூலி வேலை பார்த்துக் கொண்டிருப்பதைச் சட்டென சொக்கனின் மூளை உணர்த்தியது.
பொன்னுத்தாயி நல்லா இருக்காளா...? மவன் நல்லா இருக்கானா...?  கருப்பா...மாநிறமாஇதோ எசமான்ட்டே கேட்டிட்டு  வர்றேன் தாயி...”
-தாய் இல்லாத குறையாலோ என்னவோ தங்கையைத் தாயி என்று அழைப்பதே வழக்கமாகி விட்டது. முதலாளியிடம் சென்று சொக்கன்  சிரித்த முகத்துடன்  பயம் கலந்த குரலில் சொன்னான்.

          “எசமா... எனக்கு பய பொறந்திருக்கான்...”

          “அதுக்கு என்ன என்னடா செய்யச் சொல்றாய்...?”  கோபமாக முதலாளி அவனை  ஏற இறங்கப் பார்த்தார்

சனி, 11 அக்டோபர், 2014

மதிக்கு(ம்) மடல்...







மதிக்கு(ம்)  மடல்...

 

இலங்கைத் தமிழர்களின்-
வாழ்க்கைக் கதை கேட்டு                                
வாழும் நிலை கேட்டு
வாழ்ந்த வதை கேட்டு
வாழ்வின் கதவடைத்து                                       
வாயடைத்துப் பதைபதைத்துக்
கையறுநிலையில் கதைக்கின்றோம்!

புதன், 8 அக்டோபர், 2014

இதோ உங்கள் குமரன் கதைக்கிறான்....!










என்னடா தமிழ்க்குமரா ... என்னை மறந்தாயோ ? -என்னும் முந்தைய பதிவின் தொடர்ச்சி...




வானற்று மண்ணற்று வாழுந் திசையற்று

தானுற்ற நோவைத் தமிழ்க்குமரன் - கூனுற்றுத்

தாழ்ந்த தமிழகத்தில் தேம்பிக் கதைக்கின்றான்!

“ வாழ்ந்த குலத்தின் வளம்.“










இனி உங்கள் குமரன் கதைக்கின்றான்.


-இது கதையல்ல...நிஜம்!


( குமரன் 19.02.2001 அன்று கூறிய வரிகளின் எழுத்துப்பதிவு )














இதோ...

உங்கள் முன்னால் குமரன்...!
நமது பள்ளியில் 8ஆம் வகுப்பு ‘H’ பிரிவில் படிப்பவன்...
இலங்கையில்...மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் ராணுவத்திற்கும்...விடுதலைப் புலிகளுக்கும்...
இடையில் நடந்த போரில்...
இராணுவத்தின் தாக்குதலுக்குப் பயந்து...
நான்...எனது தாய், தந்தை, சித்தி, தம்பி, தங்கை, அம்மம்மா மற்றும் எனது
உடன்பிறவா பல சகோதர்களுடன் இந்தியா வருவதற்கு புறப்பட்டோம்.
சம்பவத்தன்று...
மாலை 6.30 மணியளவில் ...
நாங்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் படகில் ஏறினோம்...
படகில் ஏறியபோது எனக்கு இனி செல், குண்டு தாக்குதலுக்கு பயப்படாமல்
வாழலாம் என எண்ணி மிக மகிழ்ச்சியடைந்தேன்.
நாங்கள் படகில் ஏறியவுடனே... மழை பெய்தது
படகில் சுமார் 145 பேர் இருந்தோம்...
சற்று நேரத்தில் படகு அங்குமிங்கும் ஆடியது...

நாங்கள் அனைவரும் ‘அய்யோ...அம்மா’ எனக் கதறினோம்...


பின்னர் அனைவரும் கடலில் தாழ்ந்தனர்...


என்னையும் எனது தங்கையையும் யாரோ தூக்கியதாகக் கூறினார்கள்.

மேலும் என்னைப்போல ...

தாய், தந்தையைப் பிரிந்த பிள்ளைகள்,

பிள்ளைகளைப் பிரிந்த தாய் என...

மொத்தம் 36 பேரை உயிருடன் மீட்டனர்.

மயக்கமடைந்த நிலையில் இருந்த நான்...

அக்கராயன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன்.

மீண்டும் திரும்பிச் சென்று

எனது தாய், தந்தையின் இறுதி சடங்குகள் முடிந்தவுடன்


எனது சித்தியுடன் இந்தியா வந்து...

அகதிகள் முகாமில் தங்கி...

இங்கு வந்தும்...

அங்கு சென்றும் வாழ்ந்து வருகிறேன்


-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

manavaijamestamilpandit.blogspot.in

திங்கள், 6 அக்டோபர், 2014

அரிய நிகழ்வு அறிய...! இது கதையல்ல...நிஜம்.

                      




                                         கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மூன்று பேர் புறப்பட்டோம்.

                                         முதலாமவர் முனைவர்.பா.மதிவாணன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் அவர்கள்...காட்சிக்கு எளிமை... கருத்துக்கு இனிமை...பேச்சில் தமிழின்  வலிமை... பேசியவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே...

                                          இரண்டாமவர்  நண்பர் திரு.ஜோசப் விஜு,  திருச்சிராப்பள்ளி,  ஆர். சி.மேனிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர்
ஊமைக்கனவுகளால் வலைச்சரத்தினரை மனம் கொண்ட புரத்தால் கொள்ளை கொண்டவருடன், கள்ளமில்லா உள்ளம்கவர் பேச்சைக் கேட்டுக் கொண்டே ...

சனி, 4 அக்டோபர், 2014

என்னடா தமிழ்க் குமரா...என்னை நீ மறந்தாயோ...?இது கதையல்ல... நிஜம்!



               எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு குமரன் என்ற மாணவன் படித்தான். அவன் படிப்பும் கையெழுத்தும் நன்றாக இருக்கும்.  முதல் மதிப்பெண் எடுப்பான்.  முதல் தரத்தில் வகுப்பில் இருப்பான்... மாணவரின் அறிமுகத்தின் பொழுது அவனிடம் ...
” உங்க அப்பா என்ன செய்கிறார்?” -என்று விசாரித்தேன்.

“ எங்க அப்பா இல்லை “என்றான்.

வியாழன், 2 அக்டோபர், 2014

நீங்களே சொல்லுங்கள்! காந்தி...மகாத்மாவா? இல்லையா?




நீங்களே சொல்லுங்கள்! காந்தி...மகாத்மாவா? இல்லையா?



1869 அக்டோபர் 2-
கரம்சந்த் காந்தி+
புத்திலிபாய்க்கும்
புத்திரரான...
மோகன்தாஸ் அவதரித்தான்!

போர்பந்தரில்-
இந்திய விடுதலைப்
போருக்காகத்தான்...
பிறந்தானோ?

அடிமை இந்தியாவின்-                                              
விடுதலைச் சின்னம் நீ...!
ஊமையாய் இருந்தவர்களை...
உரிமைக்குரல் கொடுக்கச் செய்த      
மறுமலர்ச்சியின் வண்ணம் நீ...!
                                                                         


                                                       
 பதின்மூன்றில்-
இளம் வயதிலேயே
இனியவள் கஸ்தூரிபாயை...
தனக்கு-
இணையாக்கி...
வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்ட
தூயவன்.



இங்கிலாந்தில்-
பாரிஸ்டர் பட்டம் பெற்றே...
தென்னாப்பிரிக்காவில்
சட்டப்படிப்பிற்கான
வேலையைச் செய்தே
சமூக நீதி காத்தவன்.
.                                                                                          

அங்கு-
ஜோகன்னஸ்பர்க்கில்...
சத்தியாகிரகப்  போராட்டத்தில்
சமூக நீதிக்காகச்
சிறை சென்றவன்...!
காலனி ஆதிக்கம் செய்த
ஜெனரல் ‘ஸ்மட்ஸ்’க்கே
காலணி செய்து கொடுத்து              
நாணப்பட வைத்தவன்.
                                                                                 
நீ-
இந்தியா-
திரும்ப நினைத்த பொழுது...
உன் தியாகத்தைத்
திரும்பிப் பார்த்தவர்கள்...
52 பவுன் தங்கச் சங்கிலி...
தங்கக் கடிகாரம்...
வைர மோதிரம்...
இன்னும் எதை எதையோ
வெகுமதியாகக்  கொடுத்தபோதும்...
எதையும் எடுத்துக் கொள்ளாமல்
சமூக சேவைக்காக...
அவர்களுக்கே
அனைத்தையும் கொடுத்து...
வெறும் கையுடன்  வந்த
அவதாரப் புருஷன்.


இந்தியா வந்து-
இந்திய தேசிய காங்கிரஸ்
தலைவனானாய்...
இந்தியத் தலைகள் அனைத்தும்...
உனக்குத் தலை வணங்கின.


நமது மகான்-
நான்கு மகன்களுக்குத் தந்தை...!
நாட்டைக்   கவனித்த    எந்தை...
நால்வரைக் கவனிக்காதது விந்தை...!
                 


அகிம்சையென்ற-
ஆயுதம் கொண்டே...                                                    
பரங்கியரின் பீரங்கிப்படையை
நிராயுதபாணியாய் நின்று எதிர்த்தவன்...

அண்ணலின் ‘குருதேவ்’வான-
இரவீந்தரநாத் தாகூர் ஆத்மா...
காந்தியை ‘மகாத்மா’ வாக்கியது.

உன்னைக் கொல்ல...                                    
மெல்ல ஆள் அனுப்பிய
வெள்ளையனைத் தேடியே
நீ சென்றாய்...!
‘ஆக வேண்டியதைச்
செய்து கொள்’-என்று
நீ உடலைக் காட்டியவன்.


‘ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டு’-என்ற
இயேசுவின் போதனையில் சென்றாயோ?
‘என் வாழ்க்கையே என் செய்தி’
-என்று சத்திய சோதனையில் சொன்னாயே!
இருந்தாலும்...
உனக்குத் துணிச்சல் அதிகம்தான்!

மனிதப் பிறவியில்...
தீண்டத்தகாதவன் என்று-
இருந்தவனை...-?
‘ஹ்ரிஜன்’ என்று துதித்தவன்.                                  
தாழ்த்தப்பட்டவன்  நுழையக்கூடாதென்ற
ஆலயத்திற்குள் பிரவேசம் செய்ததற்காகக்
கட்டிய மனைவியின் உறவையே
வெட்டிவிடத்  துடித்தவன்...
இருந்தாலும்...
உனக்குத் துணிச்சல் அதிகம்தான்!

மனித மனங்களின்-
இராட்டையைச் சுழற்றியே...
அன்புநூல் நூற்றவன்!
அரையில்-
அரையாடை கட்டியே
ஆங்கிலேயக் கறையை
அடியோடு அகற்றியவன்.
அடியவர்க்கெல்லாம்- நல்
அறிவுரை புகட்டிய மகான்.


நவகாளியில் கலவரத்தில்...
இந்து-
இஸ்லாமியர் ஒற்றுமைக்காக...
உண்ணாவிரதம் இருந்தே
உயிர்விடத் துணிந்தவன்.

‘நான் நோயில் மாண்டு போனால்...
இவன் ஏமாற்றுக்காரன்...’ என்றும்
ஒரு வேளை சுடப்பட்டு மாண்டு போனால்..
இவன் மகாத்மா’ என்றும்  சொல்லென்று
பேத்தியிடம் சொன்னவன்அல்லவா நீ!

அடுத்தநாளே...
நாதுராம் கோட்ஸே...
மனிதமிருகமொன்று
துப்பாக்கிக் குண்டுகளால்                         மனிததெய்வத்தைத்
தின்று பார்த்ததே...!
‘ஹே...  ராம்...ராம்...’என்றே
நின்று சாய்ந்ததே!

நீங்களே சொல்லுங்கள்...!
காந்தி...!
மகாத்மாவா? இல்லையா?
 




                                                                                 
                                                                                                                                                                                                                                                                                                                                           
                                                                                                                           
                                                                                     -மாறாத அன்புடன்,

                                                                                       மணவை ஜேம்ஸ்.                        
                         

புதன், 1 அக்டோபர், 2014

நிலவும் தனிமையில்...!


                                நிலவும் தனிமையில்...!
                                          


நிலவும்  தனிமையில்  உலவும்  வெறுமையில்

நினைவுச்  சுமைதனை  நெஞ்சம்  தாங்குமோ...?


                     தேசமெங்கும்   அரசியல்      வேசமாச்சு

                     வேசத்தாலே எல்லாம் மோசம் போச்சு

                     வாழ்க்கை   என்பது   சிறையாய்  ஆச்சு

                     வாழ்வோம் என்பது கேள்விக்குறியாப் போச்சு


                                                                                                                        (நிலவும்...

                      சிலருக்குச் சட்டம்கூடப் பாதுகாப்பாச்சு

                      பலருக்கது கைக்காப்பாச்சு... கைக்காப்பாச்சு...

                      கொட்டம்போடும் கூட்டத்திற்கு தோதாய்ப் போச்சு

                      கூடிவாழக்கூட அது  தடையாப் போச்சு...

                                                                                                                          (நிலவும்...

                       கானலையே காமன் கண் காதலென்றது

                       காதலென்பது பேசும்  கதையாய்  ஆனது

                       கொடியொன்று  பட்டுப் போனது

                       கொம்பின்று   விட்டுப்   போனது

                                                                                                                         (நிலவும்...

                       கண்ணில்    நீர்   வற்றிப்   போனது

                       விண்ணில் மீன் கொட்டிப்போனது

                       என்னில் சோகம்  சுற்றிக் கொன்றது

                       காரிருள் என்னைப் பற்றிக் கொண்டது
                   

                                                                                                                         (நிலவும்...


                    *(‘கானல் நீர் கோலங்கள்’-மேடை நாடகத்திற்காக...

                        தலைவி தனிமையில்  இருக்கையில்)





                   

                                                                                                        -மாறாத அன்புடன்,

                                                                                                          மணவை ஜேம்ஸ்.