நிலவும் தனிமையில்...!
நிலவும் தனிமையில் உலவும் வெறுமையில்
நினைவுச் சுமைதனை நெஞ்சம் தாங்குமோ...?
தேசமெங்கும் அரசியல் வேசமாச்சு
வேசத்தாலே எல்லாம் மோசம் போச்சு
வாழ்க்கை என்பது சிறையாய் ஆச்சு
வாழ்வோம் என்பது கேள்விக்குறியாப் போச்சு
(நிலவும்...
சிலருக்குச் சட்டம்கூடப் பாதுகாப்பாச்சு
பலருக்கது கைக்காப்பாச்சு... கைக்காப்பாச்சு...
கொட்டம்போடும் கூட்டத்திற்கு தோதாய்ப் போச்சு
கூடிவாழக்கூட அது தடையாப் போச்சு...
(நிலவும்...
கானலையே காமன் கண் காதலென்றது
காதலென்பது பேசும் கதையாய் ஆனது
கொடியொன்று பட்டுப் போனது
கொம்பின்று விட்டுப் போனது
(நிலவும்...
கண்ணில் நீர் வற்றிப் போனது
விண்ணில் மீன் கொட்டிப்போனது
என்னில் சோகம் சுற்றிக் கொன்றது
காரிருள் என்னைப் பற்றிக் கொண்டது
(நிலவும்...
*(‘கானல் நீர் கோலங்கள்’-மேடை நாடகத்திற்காக...
தலைவி தனிமையில் இருக்கையில்)
-மாறாத அன்புடன்,
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குநிகழ்வினைப் பாடியே நெஞ்சம் நிறைந்தீர்!
புகழ்மிக வோங்கும் பொலிந்து!
உங்கள் வலைத்தளம் வந்து கருத்திட வழி சமைத்தீர்கள்!
மிக்க மகிழ்வுறுகிறேன்!
உங்களுக்கு உதவிய ஐயா விஜு யோசெப் ஐயாவுக்கும் என் உளமார்ந்த இனிய நன்றிகள்! வாழ்த்துக்கள்!
அருமையான பாடல்! மெட்டுப்போட்டுத் தாளமிட்டுப்
பாடலாம் போல இருக்கின்றது! மிகவே இரசித்தேன்!
என் வலைத்தளம் வந்து வாழ்த்திக் கருத்துப் பதிவு
செய்தமைக்கும் உளமாந்த இனிய நன்றி ஐயா!
தொடருங்கள்!... அன்புடன் வாழ்த்துகிறேன்!
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குகருத்துப் பதிவு செய்திருந்தேனே!..
கிடைத்ததா?
அன்புள்ள கவிஞர்.திருமதி இளமதி அவர்களுக்கு,
நீக்குவணக்கம். கருத்துப் பதிவு கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி.
நன்றி.
அன்புள்ள கவிஞர்.திருமதி இளமதி அவர்களுக்கு,
பதிலளிநீக்குவணக்கம். என் வலைத்தளம் வந்து கருத்திட்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு மடல் கிடைத்ததா என்றேனே? கிடைக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.
தங்களுக்கு என்ன எழுதலாம் நினைத்த பொழுது திரு.இனியா அவர்கள் தங்களை ஈழத்துக் கவிஞர் விளித்ததால்...
ஈழத்துக்காரராக இருக்கலாம் என்று எண்ணி எழுதினேன்...அதை மீண்டும் எழுதுகிறேன்.
எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு குமரன் என்ற மாணவன் படித்தான். அவன் படிப்பும் கையெழுத்தும் நன்றாக இருக்கும்.
” உங்க அப்பா என்ன செய்கிறார்?” -என்று விசாரித்தேன்.
“ எங்க அப்பா இல்லை “என்றான்.
“ உங்க அம்மா என்ன செய்கியார்கள்?“ என்றேன்.
“ எங்க அம்மா இல்லை“ என்றான்.
“ இல்லை என்றால் இங்கில்லையா?“
“ இல்லை இரண்டு போரும் இறந்து விட்டாட்கள்“
“ இறந்துவிட்டார்களா! நீ எங்கிருந்து வருகிறாய்?”
“ இலங்கைக்கான அகதிகள் முகாமில் இருந்து!“ என்றான்.
“ எப்படி இறந்தார்கள்?“ என்று கேட்டேன்.
“ இலங்கையில் எங்களால் வாழ முடியாமல்... கள்ளத்தோணி பிடித்து...பணம் அதிகமாக கொடுத்து...நாங்கள் இந்தியா வந்தோம்...எங்களைப் போல் நிறையப் பேர் அன்று படகில் வந்தார்கள்.... படகு பாரம் தாங்காமல் கடலில் மூழ்கிடுச்சு... எங்க அப்பா அம்மா கடலில் இறந்துட்டாங்க...என்ன யாரோ படகுலதூக்குப் போட்டார்கள்...நான் பிழைத்து விட்டேன்...இப்போ எங்க சித்தியுடன் இருக்கிறேன்.“
அவன் முகத்தில் துக்கத்தையோ சோகத்தையோ எப்பொழுதும் வெளிக்காட்டியதே இல்லை...அப்பொழுதும் வெளிக்காட்டாமல் செய்தியைச் சொன்னான். நான் ஆச்சர்யத்துடன் பார்த்து வியந்தேன்.
அந்த ஆண்டு பள்ளியின் ஆண்டு விழாவில் ஒரு நகைச்சுவை நாடகம் போட்டோம். குமரனை அழைத்து‘ நடந்த நிகழ்வை நாடகத்திற்கு பிறகு நீயே எழுதி நடந்தவைகளைச் சொல்லு‘ என்றேன். ‘சரி‘ என்றான்.
இரண்டு நாள் கழித்து ‘அய்யா என்னால் முடியாது ‘ என்றான்.
‘‘ஏன்’‘என்று கேட்டேன்.
“ அய்யா...என்னால் சொல்ல முடியாது...அழுது விடுவேன்“ என்றான்.
“முடிந்தவரை சொல்லு...முடியவில்லை என்றால் நான் பின்னால் இருந்து சொல்லி முடித்து விடுகிறேன்“ என்றேன்.
நகைச்சுவை நாடகம் முடிந்தவுடன்...இப்பொழுது ‘ஓர் உண்மைச்சம்பவம்‘என்று குமரனை மேடை ஏற்றினேன். குமரன் சொல்ல ஆரம்பித்தான்...நான் மேடைக்குப் பின்புறம் விட்ட இடத்தில் இருந்து தொடரத் தயாராக இருந்தேன்...சொல்லும் போதே அவனுக்கு அழுகை வந்து விட்டது...
அழுது கொண்டே சொன்னான்.... தேம்பி..தேம்பி அழுது கொண்டே...அழுது கொண்டே... முழுவதும் சொல்லி முடித்தான்.
அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
அடுத்த ஆண்டே அவன் இலங்கை செல்வதாகக் கூறி எங்களிடம் ஆசி பெற்றுச் சென்றான் திரு.குமரன்.
இந்தியா மீண்டும் வந்தால் என்னை வந்து பார் என்று வழியனுப்பி வைத்தேன்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
உங்கள் குமரனுக்கு அப்போது நான் கணித ஆசிரியன்.
நீக்குவகுப்பறையில் கடலில் அவனைத் தோளில் சுமந்து நீந்தி மற்றொரு படகில் ஏற்றியவரை மாமா என்றே அவன் குறிப்பிட்டதாய் நினைக்கிறேன்.
அவன் என்னிடத்தில் படித்த வகுப்பு 7B.
மிக நன்றாய்ப் படிக்கும் மாணவன் அவன்.
அவனது வட்ட முகமும்,
கொஞ்சு தமிழ்ப்பேச்சும்
இன்னும் என் நெஞ்சு நிறைந்திருக்கின்றன அய்யா!
அவ்வகுப்பிலே இன்னொரு மாணவனும் படித்தான்.
எங்கிருந்தாலும் நம்மை மறந்திருக்க மாட்டான் என்று நினைக்கிறேன் அய்யா!
அப்போதிருந்த மாணவர்களை நாமும் கூட!
இதை நீங்கள் தனிப்பதிவாகவே இட்டிருக்கலாம்.
மனம் கனக்கிறது.
அன்பு நண்பருக்கு,
நீக்குதாங்களும் குமரனுக்கு கணித ஆசிரியராக இருந்தீர்கள் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
மிக மெலிந்த தேகம்...நல்ல உயரம்...இனிய இலங்கைத் தமிழ்ப் பேச்சு...குமரன் செல்லும் போது தலைமையாசிரியருக்குஒரு சிறிய மரத்தால் ஆன தேர் செய்து கொடுத்து, அவனது அன்பை வெளிப்படுத்திவிட்டுச் சென்ற நேசம்...ஏழ்மையிலும் நேர்மை...பாசம்...அவன் கள்ளமில்லா சிரிப்பு என் நெஞ்சை விட்டு நீங்காமல் இருக்கிறது...இருக்கும்.
திரு.குமரன் எங்கிருந்தாலும் வாழ்க!
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
வணக்கம் ஐயா!
நீக்குதங்களிடமிருந்து இத்தகைய செய்தி தாங்கிய மடலெதுவும்
எனக்கு வரவில்லையே ஐயா!...
இன்று நீங்கள் தந்த பின்னூட்டங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
குமரன் கதையறிந்து முகுறுகிறது நெஞ்சு!
உண்மைதான் ஐயா..
அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற அனர்த்தங்களில் இப்படிக் பல குமரன்கள் உருவாக்கப்பட்டனர். பாவம் இவனும்!
நாடுவிட்டு வெளியேறிய ஈழத் தமிழர்கள் பலரின் வாழ்வின் பின்னணியில் இப்படி ஏதாகிலும் துயரச் சம்பவங்கள் தொகுப்பாக இருக்கும்!..
நானும் என் கணவரும் இன்னோர் வகைப் பாதிப்பினாலேயே புலம்பெயர்ந்து ஜேர்மனியில் தஞ்சம் புகுந்தோம்.
குமரன் எங்கிருந்தாலும் உங்களை மறவான். போன இடத்தில் எத்தகைய சூழலில் இருக்கின்றானோ?... எதுவாகினும் அவன் நலமாக இருக்க நானும் வேண்டுகிறேன்.
உங்களினதும் விஜு யோசெப் ஐயாவினதும் பகிர்வுகளிலிருந்து அவன்மீது நீங்கள் கொண்ட பாசம் புரிந்து கொண்டேன்!
காலம் சிலவேளை உங்களின் சந்திப்புக்கு வழிவகுக்கும்!
பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!
ஐயா!.. ஒரு விண்ணப்பம்!.. என்னைச் சாதாரணமாக இளமதி என்றோ அல்லது சகோதரி என்றோ அழையுங்கள்! கவிஞர் என்பதெல்லாம் என் கற்கை மேம்பாட்டிற்காக எனக்குக் கிடைத்த ஒரு தலைப்பு. அதையே அடைமொழியாகக் கொண்டிருக்கும் தகுதி இன்னும் எனக்கு வரவில்லை.
சாதாரணமானவள் நான்!
அதுவே எனக்குப் பிடித்தமானதும் கூட!
அன்புடன் நன்றி ஐயா!
அன்பு சகோதரி இளமதி அவர்களுக்கு.
பதிலளிநீக்குவணக்கம். ஜெர்மனியின் செந்தேன் மலரே! ஈழத்தின் கவி மகளே! தாங்கள் குமரன் பற்றிய செய்தியறிந்து பின்னூட்டம் இட்டதைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன்.
‘ போன இடத்தில் எத்தகைய சூழலில் இருக்கின்றானோ?... எதுவாகினும் அவன் நலமாக இருக்க நானும் வேண்டுகிறேன்’
-என்ற உங்களது தாயின் உள்ளத்தை... எண்ணத்தை... அறிந்து மகிழ்ந்தேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
சமூக விடயத்தைப்பாடி சொல்லும் கவிதை அருமை. குமரன் பற்றிய பின்னூட்டக்கருத்துக்கள் மனதை நெருடுகின்றது நம் வாழ்க்கை இப்படி!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பதிலளிநீக்குதங்களின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி.
நீக்கு‘தனிமரம் தோப்பாகாது...
ஆனால்...
தோப்பில் இருப்பதெல்லாம்
தனிமரம்தான்’
யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.
எழில்மிகு வார்த்தைகள், நல்லதோர் பாடல் மெட்டுடன் கவிதை. சிறப்பு . வாழ்த்துக்கள் தங்களுக்கு. இந்தப் பதிவில் இலங்கை குமரன் பற்றிய உண்மைச் சம்பவத்தை அறிந்தேன். நெஞ்சம் நெகிழ்ந்தது. வாழ்க வளமுடன் . தங்களின் வலைத்தளம் கண்டு மகிழ்வெய்தினேன்.
பதிலளிநீக்குஅன்புள்ள திரு.கா.நா.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு,
நீக்குமெட்டுடன் கவிதை பாராட்டடிய தங்களுக்கு நன்றி. இலங்கை குமரன் பற்றிக் கூறிய கருத்திற்கும் நன்றி.
சோகத்தோடு ஒரு கவிதை! தேசத்தை தொட்டு, தேகத்தை தொட்டு எழுதிய கவிதை! கவிதைக்குள் கவிதையாய் தாங்கள் சொன்ன இலங்கை குமரனின் சோகக் கதை மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குதமிழ் அய்யா நன்றி .
நீக்கு