வெள்ளி, 24 அக்டோபர், 2014

தெருவில் ஒரு திருவிளக்கு...!


தெருவில் ஒரு திருவிளக்கு...!

                     
                       
     
            “தர்மம் செய்யுங்கய்யா...  தாயே தர்மம் செய்யுங்கம்மா... அய்யா...அம்மா... ஒங்களுக்கு புண்ணியமா போகுமுங்க...’’ அண்ணா சிலைக்கருகில் பரிதாமாபமாகக் குழந்தையை இடுப்பிலும் ஈயத்தட்டைக் கையிலும் வைத்துக்கொண்டு கீறல் விழுந்த தேசிய கீதத்தைப்போலக் கத்திக் கொண்டு இருந்தாள் கண்ணகி.

           நிலவுக்கு வழிவிட்டுச் சூரியன் மறையும் அந்தி வேளை...அந்தச் சோடியம் வேப்பர் விளக்கின் வெளிச்சம்..  கண்ணகியின் மேனிக்கு மஞ்சள் பூசி அழகை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.  இன்று ஜங்ஷனுக்கு வந்து போகும் ஜனங்களின் நடமாட்டம் சற்று அதிகமாகத்தானிருந்தது.

           பிள்ளை மொழி பேசத் தெரியாததால் பசியை அழுகையால் அறிவுறுத்தியதும்...தன்னிடம் பால் இல்லையென்பதும் கண்ணகிக்குத் தெரியாத ஒன்றல்ல... தனது பசியையும் மறந்து பிள்ளையின் பசியைப் போக்க நினைத்துத்  தட்டைப்பார்த்தாள்... பால் வாங்கக்கூட பற்றாக்குறையாகத்தான் இருந்தது.

            விதியை நொந்து கொள்வதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.  பிள்ளை பசியின் கொடுமை தாங்காமல் ‘வீல்...வீல்...’ எனக் கத்த ஆரம்பித்தது.  தாய்பால் இல்லையென்றாலும் பாலைக் குழந்தைக்கு ஊட்டுவது போல் முனைந்தாள்.

             கண்காட்சியாக இதைக் கவனித்துக் கொண்டிருந்தது அங்கொரு கும்பல்,  வெறும் பால் ரப்பரைச் சப்பிக்கொண்டு  எல்லாக் குழந்தைகளைப் போலத்தான் அதுவும் தனக்கு வேண்டியது கிடைத்து விட்டது போல மகிழ்ச்சியில்  அழுகையை நிறுத்தியது.  கண்ணகிக்கோ அழுகை அழுகையாய் வந்தது.  தாய்மையின் இலக்கணமே அதுதானே...!

              அதை  நினைத்து அழுதாள்.  ‘அந்த லாரிக் காரன் குடிச்சிட்டு வண்டி ஓட்டி...பாவிப்பய... எ புருஷன் மேலயா வண்டிய விடனும்...ஆண்டவன் எ தலையில் இப்படி எழுதிட்டானே... இந்த அபலைய அம்போன்னு அனாதையா விட்டிட்டு...கட்டின ஒரு வருஷத்திலே போயிட்டியேயா... இந்த பாவி மக கையிலேஒரு புள்ளயக்கொடுத்துட்டு... இப்படி கஷ்டப்பட வச்சிட்டு போயிட்டியேய்யா...போயிட்டியேயா...’ எண்ணப்பறவை எங்கெங்கோ பறந்து கொண்டிருக்க அந்தப் பேச்சு கண்ணகிக்கு எங்கே இருகிறோம் என்று ஞபாகப்படுத்தியது.

                “டே...கருப்பானாலும் அழகுக் கருப்புடா...!”

                “மச்சி...இவளுக்கு இருபது வயசுகூட இருக்காது...மார்க்கு எம்பதுக்கு மேலே போடலாமுடா...!”

                “டே...இவ அப்படிப்பட்டவளா இருக்குமோன்னு எனக்குச் சந்தேகமா இருக்குடா...!”

                 “இதுல என்ன மச்சி சந்தேகம்...எல்லாம் அந்த கேஸ்தான்...காசு இல்லாம இதப்பத்தி பேசிப் பிரயோஜனம்...வா போகலாம்”. -கல்லூரி மாணவர்களின் பேச்சு அவளின் விழியைச் சிவப்பாக்கியது.
                                                             
                  ரோட்டுக்கரையிலே வந்து நிக்கனுமுன்னு எனக்கு மட்டும் பிரியமா... என்ன?  வேலை கேட்ட பக்கமெல்லாம் குழந்தையில்லேன்னா வேலை தர்றேங்கிறாங்க...குழந்தை இருக்கிறதனாலேதான் நான் உயிரோட இருக்கிறேங்கிறது அவுங்களுக்குத் தெரிவதற்கு நியாயமில்லதான்.  இப்போதைக்கு இதைத் தவிர வேற வழியே தெரியலை.

                  இரக்க குணம் படைத்தவர்கள் சிலர் இல்லாமல் இல்லை.  இரண்டு அம்பது பைசாவும் ஒரு ரூபாய் காசும்  சொந்தம் கொண்டாடிக் கிடந்தது .  ‘அம்மா தாயே..’.என்று வழக்கமான பல்லவியைப் பாட ஆரம்பித்தாள்.

                  ‘ஒடம்ப வளத்து வச்சிருக்கா..ஒழச்சு சாப்புட வேண்டியதுதானே... என்ன கை நொண்டியா...? காலு நொண்டியா...?  பிச்சை போட்டுப் போட்டுத்தான் நம்ம நாடு இப்படியாயிடுச்சு...’ வழிநடைப் பயணிகள் சிலர் பேசிக்கொண்டே போனார்கள்.

                    முருக்கு மீசைக்காரப் பால்காரன்... கைலியும் பனியனும் மட்டுமே மாட்டியிருந்தவன்... மீதமான பாலைச் சேதமாகாமல் சேர்த்து வைத்துக் கொண்டே... நீண்ட நேரமாகத்  தன்னையே பார்த்துக் கொண்டடிருந்தாலும், பார்க்காதவள்  போல்தான் நின்று கொண்டிருந்தாள்.

                   பால்காரன் பக்கத்தில் வருவதைப் பார்த்த கண்ணகி,  “குழந்தை பசியால துடிக்குதுங்க...என்ட்ட இருக்கிறது ரெண்டு ரூபாதாங்க...இதை வச்சிக்கிட்டு குழந்தைக்குக் கொஞ்சம் பால் கொடுத்தீங்கன்னா...“ எதிர்பார்ப்பு அவள் கண்ணில் தெரிந்தது.
                                                           

                    பீடியைப் பற்றவைத்துப் புகையை வாயிலிருந்து  வளைய வளையமாக விட்டுக்கொண்டே பேசினான், “புள்ளைக்கு பாலுதானே வேணும்...கவலைய வுடு... எனக்கு காசே வேணாம் புள்ள...எவ்வளவு காசு வேணுமுன்னாலும்  நா தர்றேன்... என்னோட வர்ரீயா...?”

                     அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலே அவள் உடலே நடுங்கியது.  அந்த வார்த்தை அந்தச் சம்பவத்தை நினைவு படுத்தியது.... இப்படித்தான்   ஒருநாள் அந்தி சாயும் நேரம் நடுத்தர வயதுள்ள ஒருவன்
‘நான் ஒன்ன அடிக்கடி கடை வீதியிலே பாக்கிறேன்...எ மனைவிக்கு ஒடம்பு சரியில்ல...வீட்டுக்கு வந்து...பாத்திரத்தச் தேச்சு கொடுத்துவிட்டுப் போயிடு...அன்னன்னிக்குப் பணம் கொடுத்திடுறேன்...எனக்கும் சுலபமா இருக்கும்...ஒனக்கும் சாப்பாட்டுக்கு வழி கிடைக்கும்...’ என்றான்.  இவளும் அவனோடு  சென்றாள்.

                      வீட்டிற்குள் நுழைந்தவள் ‘அம்மா எங்கே? ’ என்று கேட்டாள்.

                      ‘ எங்கே அம்மா இருக்காங்க...சும்மா சொன்னேன்...எல்லாம் நான்தான்...என்னோடு நீயும் சேர்ந்தால் ‘  என்று அவளைக் கட்டி அணைக்க முயன்றான்.  அவனின் முரட்டுப்பிடியில் இருந்து திமிற முடியாமல் திணறிய அவள், தனது குழந்தையின் அழுகுரல் கேட்க... அடுத்த வினாடி சுதாரித்துக் கொண்டவளாக ‘கொஞ்ச நேரம் பொறுங்கள் குழந்தையின் அழுகையை நிப்பாட்டிட்டு வர்றேன்’ என்றவாரே,   வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து... சடாரென வேகமாக  அறையைத் தாழ்ப்பாள் போட்டு விட்டு அன்றைக்கு தப்பித்து  வந்தது  நினைவுக்கு வர கண்கள் குளமாயின.

                   “என்ன புள்ள...என்னோட வர்ரியா புள்ள...”-மறுபடியும் பால்காரன் கேட்டான்.

                   “......................................................................................” அவளால் பேச முடியாமல் வார்த்தை சிக்கிக் கொண்டு வெளியில் வரத் தடுமாறியது.

                   “எங்கே கூப்புடுறேன்னு புரியலேங்கிறியா...?  வா புள்ள புரிய வைக்கிறேன்... காசுக்குக் காசு... சுகத்துக்குச் சுகம்...”

                   “......................................................................................”- விழிகளிலிருந்து நீர் ‘பொலபொல’வென வழிந்தது.

                   “மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிங்கிறத... நா மறந்தே போயிட்டேன்...” காரைப் பல்லைக்காட்டிச் சிரித்தான்.

                  “ நா வாழனுமுன்னு நெனைக்கிறேன்... எ வாழ்க்கைய அழிக்கனுமுன்னு நெனைக்கிறீங்களே... என்ன வாழவிடுங்கய்யா...ஒங்கள கை எடுத்துக் கும்புடுறேன்” என்று கெஞ்சினாள்.

                  “பொழைக்கத் தெரியாத புள்ளையா இருக்கிறீயே...“ மீசையை முறுக்கிய  பால்காரன்... பாதிரியார் பக்கத்தில் வரவே நகர ஆரம்பித்தான்.
                                                                         
                   அந்த நேரத்தில் அருகில் வந்த பாதிரியார், “உன் நிலையை பார்த்து மனம் ரொம்ப வேதனைப்படுது...உனக்கு சிஸ்டருங்க மடத்தில... கான்வென்ட்ல...  சமைக்கிற வேலை வாங்கித் தர்றேன்... என்னோடு வாரியாம்மா...” தாயன்போடு கேட்டார்.  அதுவரை நாராசமா ஒலித்த இந்த வார்த்கை இப்போது அவளுக்குத் தெய்வ வாக்காக  காதில் கேட்டது.  தெய்வமாகத் தெரிந்த பாதிரியாரைப் பார்த்து ‘சரி’ யென்பதைப் போலத் தலையசைத்து...  அவள் நம்பிக்கையுடன்  குழந்தையோடு பாதிரியாரைத் தொடர்ந்தாள்.

                    “பாருடா...நா கூப்புட்டதுக்கு  வராதவ... அவரு கூப்புட்டவுடன... போறதப் பாரு...”  பால்காரன் படு கேவலமாகவும்...  ஏளனத்துடன் பேசியது காதில் கேட்டாலும்,  பிரகாசமான கண்களோடு தனக்கு நல்ல எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கி நடைபோட்டு சென்றாள்.   எதைப்பற்றியும்  கவலைப்படாமல்  அவர்கள் நடந்தார்கள்!


                   

                                                                                                         
          -மாறாத அன்புடன்,

            மணவை ஜேம்ஸ்.
                                                   

                                                                                                     
                               

                             

                                                                                                         

                                                                                                       


16 கருத்துகள்:

  1. சிறுகதையானாலும் நெஞ்சை நெகிழச் செய்யும் கதை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு.கரந்தை ஜெயக்குமார் அய்யா,

      மிக்க நன்றி.

      நீக்கு
  2. தங்களது கதையைப் படிப்பதன் ஊடாகப் புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதை நினைவுக்கு வருகிறது.
    அதில் தன் காயம் பட்ட தன் கணவன் முருகேசனுக்குப் பால்கஞ்சி ஊற்றுவதற்காக வெகுயியல்பாக இன்னொருவனுடன் சேர்ந்து முக்கால் ரூபாய் துட்டைச் சம்பாதிக்கும் அம்மாளுவும்... வந்து போகிறார்கள்.
    கதையின் இறுதி இப்படி முடியும் “ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே .... இதுதானைய்யா பொன்னகரம்“ என்று.
    அது ஒரு நடப்பியல் சிறுகதை தான்..
    நீங்கள் லட்சியவாதத்தை முன்னெடுக்கிறீர்கள்!
    பசிவந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.

    மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
    தானம் தவம் முயற்சி தாளாண்மை - தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந்திடப் போகும் பறந்து “
    என்றவாறு .....

    கதாபாத்திரத்திற்குக் கண்ணகி என்று பெயர் கொடுத்தும் விட்டீர்கள்.கற்பின் வழி நிற்கவல்லவா வேண்டும்!!!!
    பாதிரியாருடன் போன கண்ணகி, இதற்கு முன்பு பாத்திரம் கழுக அழைத்தவனோ முருக்கு மீசை பால்காரனோ பரவாயில்லை என்று பின்னர் நினைக்காமல் இருந்தால் சரிதான்! நிஜம் அப்படித்தானே இருக்கிறது.
    கடைசியில் கண்ணகியின் நம்பிக்கை.....
    அதாவது நாசமாகாமல் இருக்கட்டும்..
    அதுதானே எல்லாம்!!!
    சிறுகதை நிறைய நினைவுகளைத் தூண்டுவதாய் அமைந்தது.
    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள அய்யா,

    கண்ணகியின் நம்பிக்கை வீண்போகக்கூடாது என்பதுதான்

    நமது நம்பிக்கையும் கூட...நம்பிக்கை தானே வாழ்க்கை!

    சிறுகதை நிறைய நினைவுகளைத் தூண்டுவதாய் அமைந்து...


    நல்ல கருத்திட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கதை! ஒரு பெண் இந்த சமுதாயத்தில் கஷ்டப்பட்டால் என்னென்ன நேர்கின்றது, எத்தனைக் கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றாள் என்று சொல்லி இறுதியில் நல்ல ஒரு முடிவைத் தந்த்து மனதைத் தொட்டது! நல்ல முடிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு.துளசிதரன் அய்யா,

      நல்ல கருத்துக்களையும்...அருமையாக விமர்சனங்களையும் அழகாகத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் ஐயா!

    தெருவிளக்குத் தெருவைத் தேடியோ வந்தது…!
    பெருவலியும் வேதனையும்தான் ஐயா!
    பெண்ணுக்கு எந்த நிலை வரினும்
    போகப் பொருளாய்ப் – போதைப் பொருளாய்
    உருளும் உலகம் நினைப்பதை எப்பொழுது மாற்றப் போகிறது..!

    கையிற் குழந்தையும் கண்ணீர் வழியும் முகமுங் கொண்ட
    கண்ணகியின் தோற்றம், கதையென்பதை மறைத்துக்
    குறும்படமாய் விரிந்தது…!
    மிக அருமை நீங்கள் கதை சொன்ன பாங்கு..!
    முடிவு சுபமாக இருக்க வேண்டும் இறைவா!..
    என எம்மையும் அறியாமல் எண்ண வைத்தது.
    வாழ்த்துக்கள் ஐயா!

    ஐயா!..
    வலைப்பதிவர் விழாவில் என்னையும் நினைவு கூர்ந்து நீங்கள் கூறினீர்களா?.. அப்படி என்ன செய்துவிட்டேன்!.. என் இயல்பான குணமாக சக வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் - அவர்களின் பதிவுகளுக்கு என் கருத்துகளைப் பதிவிடும் பணியைத்தான் செய்தேன்.. செய்கிறேன்!
    அதுவுங்கூட இதோ இம்முறைபோல அவ்வப்போது என்னால் உரிய நேரத்தில் பதிவுகளைப் படித்துக் கருத்துப் பதிந்திட முடியாமற் போகிறது. வருத்தத்தைத் தருகிறது…

    நாடிழந்து அடைக்கலந் தேடிவந்த இடத்தில் விபத்திற்குள்ளாகி சுய உணர்வற்றுக் கோமா நிலையில் கடந்த 12 வருடங்களாக வீட்டிலேயே படுக்கையிற் கிடக்கும் கணவரின் கடமைகளைகள் - பணிகளின் ஏற்ற இறக்கம் வேகத் தடையாகிவிடுகிறது எனக்கு….!

    உங்களின் அன்பில் நெகிழ்ந்தேன் ஐயா! மிக்க மிக்க நன்றி!
    முடிந்தவரை எனக்கு நேரம் கிட்டிவிடில் உடனேயே
    பதிவுகளுக்குக் கருத்துப் பதிவேன்! காலம் துணை வரட்டும்!

    தொடரட்டும் தங்கள் தமிழ்ப் பணி! வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்க வேண்டும் ஐயா!.......
      //தெருவிளக்குத் தெருவைத் தேடியோ வந்தது…!
      பெருவலியும் வேதனையும்தான் ஐயா!...//

      திருவிளக்குத் தெருவைத் தேடியோ வந்தது…!
      பெருவலியும் வேதனையும்தான் ஐயா!
      என எழுதுவதற்குப் பதிலாக மாற்றி எழுதிவிட்டேன்!...

      நீக்கு
    2. அன்புச்சகோதரி,

      வணக்கம். ‘குறும்படமாய் விரிந்தது…!
      மிக அருமை நீங்கள் கதை சொன்ன பாங்கு..!’ உண்மைதான்.
      குறும்படம் எடுப்பதற்குத் தகுதியானது என்று தங்களின் கருத்து கண்டு உள்ளபடியே பெருமிதம் கொள்கிறேன். இந்த கதை திருச்சியில் ஒரு கோவிலில் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு மேடை நாடகமாக போடப்பட்டது.
      எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் நடித்தார்கள். வீடியோ எடுக்க முயற்சி செய்தேன்...முடியவில்லை...புகைப்படம் மட்டும்தான் எடுக்க முடிந்தது. அருமையான நாடகமாக அன்றைக்கு அமைந்தது.

      நிற்க....

      திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றியமைப்பதற்காக எங்களுடைய சொந்த வீடும், அதன் அருகிலேயே நான்கு இலட்சத்திற்கு நான் விலைக்கு வாங்கிய வீடும் இடித்துத் தள்ளப்பட்ட பொழுது எனது சொந்த ஊரைவிட்டுச் செல்ல மனம் வரவில்லை. நான் பிறந்த ஊரைவிட்டு வேறு இடத்தில் குடியேற என் மனம் நினைக்கவே இல்லை. எங்கள் ஊரிலேயே வாடகை வீட்டில் மூன்றாண்டுகள் குடியேறி வாழ்ந்து வந்தோம்.

      சமீபத்தில்தான் 18.05.2014 அன்று அடிபட்ட இடம்போக மீதியிருந்த காலியிடத்தில் புதிய வீடுகட்டி ... திறப்பு விழாவிற்கு திருமிகு.திருச்சி சிவா, எம்.ஏ.பில்.,எம்.பி.
      மாநிலங்களவை உறுப்பினர் அவர்கள் வருகைபுரிந்து திறந்து வைத்து...இரண்டு மணிக்கும் மேலாக இருந்து...ஒரு சில திரைப்படப்பாடலும் பாடி மகிழ்ந்திருந்து சென்றார்கள்.

      எதற்குச் சொல்கிறேன் என்றால் சொந்த இடத்தை இழந்து நிற்பவனுக்குத்தான் அதன் வேதனை, வலி தெரியும்... அதை நினைத்துக் கொண்டே தூங்காமல் பல இரவுகள் கழித்தது...நமது இடத்தை எடுக்காமல் விட்டு விட மாட்டார்களா..? என ஏங்குவது....அந்த வேதனையை அனுபவித்தவன் என்பதற்காக சொன்னேன்.

      ஆனால் ...
      தாங்களோ சொந்த நாட்டையே விட்டு...
      பந்த பாசங்களை உதறிவிட்டு
      உடமைகளை எடுத்துச் செல்ல இயலாமல்
      முயன்றாலும் முடியாமல்...
      உயிர்பிழைத்தால் போதுமென்று
      சிறுபிள்ளையோடு ஜெர்மானிய தேசம் சென்று
      வாழும் பொழுது...
      கணவர் பாழும் விபத்துக்குள்ளாகி ...
      பன்னிரண்டாண்டுகள் நினைவின்றி ...
      படுத்த படுக்கையில் கிடக்கின்ற வேளையிலும்
      பணிவிடைசெய்து... செய்து...
      பரிதவித்து... துடிதுடித்து...துவண்டு வாழும்
      தூய உள்ளத்தின் சோகத்தை எண்ணி எண்ணி
      சொல்லொண்ணா துயருறுகிறேன்....!

      இரத்தம் வழியும் இதயத்தின் காயத்தை...
      எங்கு வைத்து எப்படி ஒழிப்பது?
      மறைத்து வைக்க முயற்சித்தாலும்
      மறையாமல் வெளிக்காட்டிக் கொண்டுதானே
      மனதைப் புண்படுத்தும்...
      பண்பட்ட மனதென்பதால்...
      சுமைதாங்கியாய் தாங்கிக் கொண்டு...
      பணிச்சுமைகளுக்கிடையேயும்...
      கவித்துவத்துடன் தமிழ்ப்பணியாற்றி
      இலக்கியத்தில் இளைப்பாறும்
      இளைய நிலாவாக வலைவானில் உலா வரும்...
      இளமதியின் உளமதை
      எண்ணி எண்ணி வியக்கிறேன்....

      பட்ட காயத்திற்கு கவிப்பணி மருந்தாகட்டும்...
      எங்களுக்கு என்றும் அது விருந்தாகட்டும்...
      தொய்வின்றி தொடரட்டும் தூய பணி...
      தூரத்து தேசத்தில் விடியட்டும் விடியல்...
      நாளைய வாழ்வு நலமுடனே அமையட்டும்.

      நன்றி.

      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.
      manavaijamestamilpandit.blogspot.in

      நீக்கு
    3. வணக்கம் ஐயா!
      தங்களின் உணர்வுமிக்க பதிற் கருத்துரைக்கும்
      அன்பார்ந்த ஆறுதல் மொழிக்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

      எனது நிலையைக் கூறினாற்தான் வரமுடியாத கருத்துப் பதியாத சந்தற்பத்தைப் புரிந்து கொள்ள இயலும் என்பதற்காய் இங்கு அவற்றைச் சுருக்கி எழுதினேனன்றி வலையுறவுகளின் உணர்வுகளைச் சோதிக்க அல்ல..!
      என் நிலையை இப்படிக் கூறி அனுதாபத்தைத் தேடுவதாக, அதற்காக எழுதியதாக யாரும் எண்ணிவிட வேண்டாம்....!

      தங்களின் வாழ்த்தும் ஆறுதல் மொழியும் என்னைச் சோரவிடாது உரமூட்டி வாழ்வை எதிர் கொள்ள
      வலுவைத் தருகிறது!
      இயன்றவரை என் தமிழ்ப்பணி தொடரும்!
      தங்கள் அன்பிற்கு மீண்டும் இதயம் நிறைந்த நன்றி ஐயா!

      நீக்கு
  6. அய்யா வணக்கம்
    கதையை இன்னும் ரெண்டு டிராப்ட் அடித்திருக்கலாம்
    இதேபோல் ஒரு உண்மைச் சம்பவம் நினைவில் வந்தது...
    நன்றி ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பின்னூட்டத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி .

      நீக்கு

  7. ஐயா வணக்கம்!

    கம்பன் விழா நிறைவுற்று அதன் தொடா்வேலைகள் யாவும் நிறைவுற்றன.

    உங்கள் மின்வலைக்கு இன்றுதான் வருகிறேன்.
    முத்தமிழ் விருந்தாக உங்கள் வலை சுவை கொடுக்கிறது.

    தொடா்ந்து விருந்துண்டு மகிழ்வேன்!

    "தெருவில் ஒரு திருவிளக்கு" கதை படித்து முடித்ததும் படித்தவரின் நெஞ்சம் கனமாகிறது. இக்கதையால் வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளளைப் போன்று நானும் வாடி நிற்கின்றேன்.

    மணவை வடித்த கதைபடித்தேன்! உண்ணும்
    உணவை மறந்தேன்! உறைந்தேன்! - வணங்குகிறேன்
    வண்ணத் தமிழை வளா்கின்ற இவ்வலையை
    எண்ண மலரை இறைத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    வணக்கம். கம்பன் விழா புகைப்படங்கள் எல்லாம் பார்த்து மகிழ்ந்தோம். தங்களின் அரிய பணி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.

    பாக்களின் சக்கரவர்த்தியாகத் திகழும் தங்களின்
    பன்முக ஆற்றல்கண்டு பிரமித்துப் போகிறேன்
    நல்லதமிழ்த் தொண்டாற்றும் தூயவரைத் தமிழுலக
    நாயகரைத் நாளும் போற்றி மகிழ்கின்றோம்!

    தாங்கள் பாராட்டியது பெரும் பேராகக் கருதுகிறேன். என் வலைப்பூவிற்கு வந்து நல்ல பல கருத்துகளை வழங்கிட்டமைக்கு என் நெஞ்சார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுக்க நேரம் கிடைக்கும் பொழுது ... எனது வலைத்தளத்திற்கு வருகைபுரிந்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
  9. எதை செய்தாலும் குறை கூறும் சமூகத்தின் போக்கை படம் பிடித்துக்காட்டியிருகிறீர்கள்!! அவளுக்கு உதவி செய்ய ஒரு பாதிரியார் கிடைத்தாரே அதுவரை மகிழ்ச்சி!! கதை இன்றைய

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி,

      ‘ வாழ்ந்தாலும் ஏசும்...
      தாழ்ந்தாலும் ஏசும்...
      வையகம் இதுதானடா.....’

      நல்லதைச் செய்யவும் மாட்டாட்கள்...
      நல்லதைச் செய்ய விடவும் மாட்டார்கள்...!

      நன்றி.

      நீக்கு