திங்கள், 24 ஆகஸ்ட், 2015

கிளி ஜோஸ்யமும் சீட்டு எடுக்கும் கிளியின் இரகசியமும்...!



நீங்க கிளி ஜோஸ்யம்  பார்த்ததுன்டா...?





                     கிளி ஜோஸ்யம் பார்த்து நம்முடைய வாழ்க்கையில் நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப் போறவை பற்றி எல்லாம் சொல்லுகின்ற ஜோஸ்யக்காரரைப் பார்த்து  பள்ளிப் பருவத்தில் வியந்து போயிருக்கிறேன்.
என் வியப்பிற்குக்  காரணம்  என்னவென்றால்...  அடைத்து வைக்கப் பட்டிருக்கும் கிளி கூண்டைத் திறந்தவுடன்  வெளியே  வந்து அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் சீட்டை எடுப்பதைக்கண்டுதான்.



                      மணப்பாறைக்கு அருகிலுள்ள ஆண்டவன் கோயில் போல இருக்கும் கோவிலின் திருவிழாக் காலங்களில், ‘வள்ளி திருமணம்’ போல நாடகம் நடக்கக்கூடிய இரவு நேரங்களில்,  மக்கள் கூடும் சந்தைகளில்,  சாலை ஓரங்களில் , கிராமங்களில் கிளிக்கூண்டை மிதிவண்டிகளில் வைத்தோ அல்லது கைகளில் தூக்கிக்கொண்டோ  ஜோஸ்யம் பார்ப்பவர்கள் செல்வது  வாடிக்கை.  ஜோஸ்யம் பார்ப்பவர்களை  வேடிக்கை பார்ப்பது  எனது வாடிக்கை.


                   நாலணாவோ (25 பைசா)   எட்டணாவோ (50 பைசா) தட்சணையாகச் செலுத்திவிட்டுக்  குத்திட்டோ அல்லது சம்மணங்கால் போட்டோ அமந்து, அவரின் பெயரைஜோஸ்யக்காரர்  கேட்க, ஜோஸ்யம் பார்ப்பவரும்  தன் பெயரைச் சொல்ல,  இடது கையால் உடுக்கை எடுத்து வைத்துக் கொண்டு, வலது கையால் கூண்டுக்குள் இருக்கும் கிளியைத் திறந்துவிட,  கிளி வெளியே  வரும்.
                                                     
                  ‘கிளி நினைத்தால் பறந்து சென்று விடலாமே!  ஏன் பறந்து செல்லாமல் இவ்வளவு விசுவாசமாக இருக்கிறதே...! எப்படிக் கிளி இவ்வாறு இருக்க நன்றாக பழக்கியிருக்கிறான்’ என்ற அய்யப்பாடு எனக்குள்  எழும்.

             


உடுக்கையை வலதுகையால் அடித்துக்கொண்டே  அவர் சொன்ன பெயரைச் சொல்லி... அய்யாவுக்கு... பெண்ணாக இருந்தால் அம்மாவுக்கு ,  வயதைப் பொறுத்து அண்ணனுக்கு... அக்காவுக்கு...தம்பிக்கு... பாப்பாவுக்கு என்று அடைமொழி மாறும்.... ஒரு சீட்ட எடுத்துப் போடு என்று இராகம் போடுவார்.
                                                                 
கிளி அடுக்கி வைக்கப்பட்டு  இருக்கும் சீட்டில் ஒவ்வொரு சீட்டாக தன் சிவப்பு அலகால் அழகாக எடுத்து...எடுத்து போடும்.   ஒரு சீட்டை எடுத்து பெட்டிக்கருகில் போட்டுக்  கிளி கூண்டுக்குள்  சென்று விடும்.  கூண்டின் கதவை  மூடிவிட்டு சீட்டை எடுத்து உள்ளே இருக்கும் படத்தைப்  பிரித்துப் பார்ப்பார்.

ஜோஸ்யம் பார்த்துக் கொள்ள அமர்ந்திருப்பவர் மனது‘திக் திக்’ கென அடிக்க என்ன வந்திருக்கிறதோ?  என்று சிறிது பயத்துடன்தான் அமர்ந்திருப்பார்.

என்ன அதிசயம்!  அவர் வணங்கும் தெய்வமே வந்திருக்கிறது!    அவருக்கு ஒரே மகிழ்ச்சி... எனக்கும் ஆச்சர்யம்...! வியப்புதான்!!

அப்புறமென்ன பாட்டாலே இராகமாக பாடியே ஜோஸ்யம் சொல்லி முடிப்பார்.

இதேபோல  ஜோஸ்யம் பார்க்க வருபவர்கள் தங்களின் பெயரைச் சொல்லி பார்த்துக் கொண்டே இருப்பார்கள்...நானும் அதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.

கார்த்திகேயன் என்றால் முருகனோ,  சிவன்பார்வதி, பிள்ளையாரோ,பழநியோ அல்லது  திருப்பதி கோவிலோ   வரும்.

ஜோசப் என்றால் இயேசுநாதரோ, மாதாவோ, சூசையப்பரோ,  வேளாங்கண்ணி கோவிலோ வரும்.

                                                                                       

அப்துல் காதர் என்றால் நாகூர் தர்க்காவோ, பள்ளி வாசலோ, மெக்கா மெதினாவோ வரும்.

-இதுதான் எப்படி அவர்களுக்குத்  தக்கவாறு வருவது வியப்பாக இருந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் யாரும் செருப்பை கழட்டாமல் அமர்ந்து ஜோஸ்யம் பார்த்தால் கிளி வெறுங்கூட்டை எடுத்துக் கொடுக்கும்.  உடனே ஜோஸ்யக்காரர் ‘மிதியடிய கழட்டாம உக்கார்ந்தனால வெறுங்கூடு வந்திருக்கு...செருப்ப கழட்டிட்டு ஒக்காரு... தட்சணய மீண்டும் வை’ என  மீண்டும் பைசாவை வைக்கச் சொல்லி,  கிளி மீண்டும் வந்து சீட்டை எடுத்துக் கொடுக்கும்.

-செருப்பு போட்டிட்டு யார் உட்காந்து இருந்தாலும் இதே நிலைதான்.  இதுவும் மேலும் வியப்பைத்தான் உண்டு பண்ணியது.

எல்லோரும் இதெல்லாம் அறிந்த ஒன்றுதான் என்றாலும் இது எவ்வாறு நடக்கிறது என்று யாரும் யோசித்தது உண்டா?


எனக்குத் தெரிந்த பக்கத்து ஊர்க்காரன் இந்தத் தொழில் செய்து பிழைத்து வந்தார்.  இதன் இரகசியத்தைக்  கேட்டால் சொல்லுவாரா?  கேட்டுத்தான் விடலாமா? என்றெல்லாம் யோசித்துப் பார்த்து...அதை அவரிடம் கேட்பது அவருக்குத்  தொழில் தர்மம் ஆகாது அல்லது இரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்றோ அவரிடம் கற்றுக் கொடுத்தவர்கள் கூறி இருக்கலாம் என்று எண்ணி கேட்காமலே விட்டுவிட்டேன்.

ஆனாலும் கிளி ஜோஸ்யம் பார்ப்பவர்களைப் பார்த்துக் கொண்டிப்பேன்.
அதில் நான் கற்றவற்றைச் சொல்கிறேன்.


கிளி  ஏன் பறந்து செல்லாமல்  இருக்கிறது என்றால் கிளியின் இறக்கை பறக்கமுடியாதபடி வெட்டப்பட்டிருக்கும்.

எப்படி அவரவர்களுக்குத்  தக்கவாறு அவர்களின் தெய்வம் வருகிறது என்றால்  ஒவ்வொரு கூடுக்கு  வெளியே எண்கள் ஒட்டப்பட்டு இருக்கும்.  எந்த எண்ணின் கூடுக்குள் எந்த  தெய்வத்தின் படம் வைக்கப்பட்டு  இருக்கிறது என்பது ஜோஸ்யக்காரருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.  அதை மாற்றி வைக்க மாட்டார்.  இதேபோல்தான் வெறுங்கூடும் (செருப்பு அணியாதவருக்கு) எந்த  எண் என்பதும்தான் அவருக்குத்  தெரியுமே!

உங்களுக்கு  இப்ப வந்த சந்தேகத்தை நானறிவேன்.  கூடுக்குள் இருப்பது ஜோஸ்யக்காரருக்குத்தானே தெரியும்... கிளிக்கு எப்படித் தெரியும் என்பதுதானே?  நியாயமான சந்தேகம்.

உடுக்கை அடிக்கின்ற பொழுது நன்றாகக் கவனித்தால் தெரியும்...கிளியை சீட்டை எடுப்பதற்காக வலது கையை அசைத்து அல்லது ஆட்டிக்கொண்டே உடுக்கை அடிப்பார்.  இவரின் கையசைவை பார்த்துப் பார்த்துத்தான் சீட்டை எடுத்துப் போடும்;  கையசைவைச் செய்யாமல்  வெறும் உடுக்கை மட்டும் அடித்தால் அடுத்த சீட்டை எடுக்காமல் எடுத்த சீட்டை போட்டுவிட்டு உள்ளே சென்றுவிடும்.

அவர்கள் வழிபடும் தெய்வம் வந்தவுடன் சந்தோசத்தில் தன்னை மறந்து இவர்கள் ஜோஸ்யக்காரர் சொல்வதை அரைகுறையாக புரிந்து கொண்டு திருப்தி பட்டு விடுவர்.  இதில் ‘பார்ட்டி’ சில்லரை உள்ள ‘பார்ட்டியாக’ இருந்தால் ‘ஒனக்கு கண்டம் இருக்கிறது...தண்ணியில கண்டம்... மூணு மாசம் நேரம் சரியில்ல... தோஷம்...அதைக்கழிக்க பரிகாரம்   செய்தால் சரியாகும் என்று நூறு, இருநூறு ரூபாய் கறந்தும் விடுவார்கள்.





சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே...!



-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.



35 கருத்துகள்:

  1. கிளி ஜோஸ்யம் ரகசியத்தை வெளியிட்டு விட்டீர்களே? இனி கிளி ஜோஸ்யம் பார்ப்பவர்கள் தாங்கள் சொன்ன முறையைப் பயன்படுத்தி தெளிவாகிவிடுவர். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      கிளி ஜோஸ்யத்தை முதன்முதலாவதாக வந்து, வாக்கைத் தட்சணையாகச் செலுத்தி... பார்த்து... தாங்கள் சொன்ன குறி தப்பாது என்றாலும் அவர்கள் மேற்சொன்ன முறையைப் பயன்படுத்துவதில் தெளிவாக இருக்கின்றனர்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  2. அடுத்தவர் தலைஎழுத்தை சொல்பவர் ,தனக்கேன் இந்த அலையுற நாய்ப் பிழைப்பு என்று பார்த்துக் கொண்டு நிவாரணம் தேடிக்க முடியலியே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      கிளி ஜோஸ்யக்காரர், அவரே நிவாரணம் தேடிக்க முடியவில்லை என்பதைச் சரியாகச் சொன்னீர்கள். பாமரர்கள் இருப்பதாலேயே அவர்கள் பிழைப்பு நடக்கிறது.

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆகா
    ரகசியத்தைப் போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      சின்னப்பயலே சின்னப்பயலே
      சேதி கேளடா!
      நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா
      எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா!
      (சின்ன வயதில் பார்த்ததை மனதில் எண்ணியதை எழுத்தில் எழுதிப் பார்த்தேன்.)

      வளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ
      வலது கையடா - நீ
      வலது கையடா! (விபத்தினால் வலது கையால் மட்டுமே தட்டச்சு செய்கிறேன்)
      ரகசியத்தை மீண்டும் போட்டு உடைத்து விட்டேன்.

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நன்றி மணவையாரே ஊருக்கு வந்தால் ஒரு தொழில் செய்யக்கற்றுக்கொடுத்து விட்டீர்கள்
    தட்சிணை 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      வாருங்கள்...வரவேற்கிறோம்...நம் நாட்டில் தொழில் தொடங்க...வருக!
      ஆளுக்கொரு கிளி இலவசம்!
      தட்சணை வேறு செலுத்திவிட்டீர்கள்...தாங்கள் ‘மிதியடிய கழட்டாம தட்சணை செலுத்தியதாக கிளி ஏடெடுத்து வந்திருக்கிறது! தட்சணய மீண்டும் வைக்க வேண்டுமே...!

      வருக! வருக!! வருகைபுரிந்து வாக்களித்ததற்கு நன்றி.

      நீக்கு
  5. “ கிளி ஜோசியம்” பற்றிய ரகசியத்தை வெளியிட்டு அவர்களுக்கு ‘கிலி’யை உண்டு பண்ணி விட்டீர்கள். அவர்களை ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்ல முடியாது. ஒரு நம்பிக்கையின் பேரில் நடக்கும் வயிற்றுப் பிழைப்பு அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      ஒரு நம்பிக்கையின் பேரில் நடக்கும் வயிற்றுப் பிழைப்பு அவ்வளவுதான். உண்மைதான்...ஆனால் மூடநம்பிக்கையின் பேரில் நடக்கும் வயிற்றுப் பிழைப்பு என்று சொல்லலாமா...? ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சிறகடித்து சுதந்திரமாய் பறக்கவேண்டிய கிளியையும் காட்டில் கம்பீரமாய் நடக்க வேண்டிய யானையையும் பிச்சை எடுக்க விட்டு அதில் பிழைக்கும் மனித மிருகங்களை என்னென்று சொல்வது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      விலங்கிட்டு விலங்குகளை விலையாக்கும் வீணர்களை
      நலங்கெட்டு அதன் சுதந்திரத்தைச் சுரண்டும் சுயநலவாதிகளை
      நெற்றிப் பொட்டில் சட்டென அடித்தீர்கள்.

      நன்றி.

      நீக்கு
    2. எனக்கும் இதில் உடன்பாடில்லை ஆனால் மாட்டையும் ஆட்டையும் அன்பிலா வளர்க்கிறோம். பாலுக்கும் இறைச்சிக்கும் தானே!
      இவங்க பரவாயில்லைப் போலும்.

      நீக்கு
    3. அன்புள்ள அய்யா,

      தாங்பள் சொல்வது உண்மைதான். நான் கிளியை வைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்று சொல்லவில்லை. பாமர மக்களை ஏமாற்றி மூடநம்பிக்கையின் பேரில் நடக்கும் வயிற்றுப் பிழைப்பு .

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஐயையோ... இதென்ன கொடுமை ஐயா!

    கிளியின் இறக்கையை ஒடித்துக் கூட்டுக்குள் அடைத்து
    சோதிடம் பார்க்க வைக்கின்றனரா?..

    குயிலைப் பிடிச்சு கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்
    மயிலைப் புடிச்சு காலை உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்!..
    கிளியைப் பிடிச்சு இறக்கையைப் பிச்சு
    சோதிடம் பார்க்கவைக்கும் உலகம்ன்னு பாடணும் போல..:(

    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      கிளி மனிதனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்குமா...? பகுத்தறிவு மனிதன் சிந்திக்க வேண்டாமா?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கிளி ஜோசியர்களும், பாம்பையும்-கீரியையும் வைத்து வித்தை காண்பித்தவர்களும், மை வைத்து வித்தை காண்பித்தவர்களும் தங்கள் பேச்சால், முகபாவனைகளால் ஒரு கூட்டத்தையே வசியப்படுத்தும் திறமை கொண்டவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இன்னுமொரு ரகசியமும் உண்டு.

    உடுக்கை அடிக்காதவர் - அதாவது உடுக்கையே இல்லாமல் கிளில் சோசியம் பார்க்கின்றவர்கள் சம்மணமிட்டு உட்கார்ந்து தங்களது கால் பெருவிரலை ஆட்டிக்கொண்டே இருப்பார்கள். கால் பெருவிரல் ஆட்டத்தை நிறுத்தும்போது எடுக்கும் சீட்டை கிளி அவரிடம் கொண்டுவந்து கொடுத்துவிடும்.

    சில நேரங்களில் கையில் நெல் மணியை வைத்துக் கொண்டு கிளியைப் பார்த்து ஆட்டினாரென்றால் அந்தச் சீட்டை கொண்டுவந்து கொடுத்து விடும்.

    இப்போது உங்களது உடல் நலம் எப்படி?

    God Bless You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தாங்கள் சொல்வது போல உடுக்கை அடிக்காமல் ஜோஸ்யம் பார்ர்பவர்களும் இருக்கிறார்னள். மேலும் இரகசியங்களை வெளியிட்டதற்கு நன்றி.

      என்னுடைய உடல்நலம் முழுமையாக குணம் அடையவில்லை. இன்னும் ஒரு கையால்தான் (வலது) தட்டச்சு செய்கின்றேன். முதலில் சிரமாக இருந்தது. இப்பொழுது பழகிவிட்டது.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  10. நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பதிவு! கிளி ஜோஸ்யக்காரர்களின் குட்டை உடைத்துவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திறகு மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. அன்புள்ள புலவர் அய்யா,

      தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  12. அனைவரையும் சிந்திக்க வைக்கும் பகிர்வுங்க.
    பகுத்தறிவுப் பகிர்வும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் மேலான கருத்திறகும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அடேங்கப்பா நல்ல விளக்கம்...கிளி சோசியக்காரனுக்கே ஜோசியம் சொல்லி விட்டீர்கள்....அவர்கள் பல யுத்திகள் உபயோகித்து ஏமாற்றுவதைக் கவனித்திருக்கின்றோம்...ஏமாளிகள் இருக்கின்றார்களே...அருமையான பதிவு நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  14. அன்புள்ள அய்யா,

    தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி. தங்களின் புதிய வலைப்பூவில் இணைந்து அவசியம் பார்க்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  15. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி

      நீக்கு
  16. என்னமா கூர்ந்து கவனிச்சிருக்கீங்க!
    ரகசியம் அம்பலம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் மேலான பாராட்டிற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  17. ஒரு பார்வையாளனிடமிருந்து படைப்பாளி வித்தியாசப்படுவது நுட்பமான அவதானிப்புகளால் தான். அது இந்தக் கட்டுரையை வழி இன்னும் உறுதிப்படுகிறது. கிளிஜோசியக்காரர்களைக் கடந்து செல்லும் போதெல்லாம் கவனிக்க மறந்த விசயங்களை நுட்பமாய் கவனித்துச் சொல்லி இருக்கிறீர்கள். இனி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் போது அப்படியாக கவனிக்க ஆசை எழுகிறது. முதல் முறையாக உங்கள் வலைப்பக்கத்திற்கு வருகிறேன், உள்ளே நிறைய வாசிக்க இருக்கிறது, தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி. தொடருங்கள்... தொடர்வோம்.

      நீக்கு