சனி, 11 ஜூலை, 2015

உயிர் மெய்...! -சிறுகதை.


                                  உயிர் மெய்...!    -சிறுகதை

                                                       (மணவை ஜேம்ஸ்)





     அதிகாலை வேளை விடியும் பொழுதில் கோழி கூவியது.  கோழி கூவித்தான் பொழுது விடியாது என்றாலும், உறங்கிக் கொண்டிருந்த இராதகிருட்டிணனின் உறக்கத்தை அது கலைத்தது.

     சின்னச்சின்ன வட்டங்களாகக்  கோரைப்பாய் கிழிந்திருக்க, அதில் படுத்திருந்த இராதகிருட்டிணனின் உடம்பு தரையில்பட்டு இருந்ததால் சில்லென்ற சிலிர்ப்பை உண்டாக்கியது.   அருகில் மனைவி ஜெயந்தி அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தாள்.

முப்பத்தைந்து வயதாகிறது ஜெயந்திக்கு என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.  இருபது அல்லது இருபத்தைந்து என்றுதான் மதிக்கத்தோன்றும் இளமையுடன் இருக்கும் இவளது வனப்புமிகு தேகம் மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறம்.  பௌணர்மி போன்ற பிரகாசமான வட்ட முகத்தில் சின்ன வட்டமாகச்  செந்தூரப்பொட்டு நெற்றியில் இருந்து  சி திறி முகத்தில் ஒட்டியிருந்தது.  அடர்ந்து சுருண்ட கூந்தலில் பூவைச் சூடாமல் இருந்தாலும்கூட பூவையின் கூந்தலில் மணம் இருந்தது .   வியர்வையில் தாலிக்கயிறு குளித்திருக்க, கழுத்தை ஒட்டித்  தரையில் தாலி கிடந்து  ஜெயந்தியின் மேனியை அழுத்த, தாலியை எடுத்து அவளின் மார்புக்கு நடுவில் இழுத்து வைத்தபொழுது அவரையும் அறியாமல் லேசாக விரல் மார்பில்  பட, அனிச்சச் செயலாக கையைத் தள்ளிவிட்டு முன்பு போலவே அயர்ந்து தூங்குவதில் முனைந்தாள்.

     ஜெயந்திக்கு அருகில் படுத்திருந்த மகள், கவிதா உருண்டு தரையில் படுத்து, தூங்கிக்கொண்டு இருந்தாள்.  பதினான்கு வயதான கவிதா பாவாடை சட்டையில் இருப்பவள்.  இன்றைக்கோ நாளைக்கோ தாவணிக்கு வந்துவிடுவாள்.  அப்புறம் கல்யாணம் காட்சி என்று நல்ல வரன் தேடி திருமணம் முடிக்க வேண்டும்.  இவளுக்கென்று எதைச் சேர்த்து வைத்திருக்கிறோம்?  ஒன்பதாவது படிக்கும் போதே இவளைப் பற்றி ஏன் இப்படிஒரு சிந்தனை வருகிறது என்று இராதகிருட்டிணன் நினைக்கும்பொழுது பால்காரனின் மணி அடித்தது.  பால் வாங்க எழுந்து வாசல் வந்தார்.

     “ போன மாசம் பால் பணம் தர முடியலைப்பா... இந்த மாசம் சேத்துக் கொடுத்திடுறேன்”  இராதகிருட்டிணன் கெஞ்சும் குரலில் கேட்டார்.

     “ சார்... நா என்ன பணம்ன்னு கேட்டேனோ.,..?   எனக்குப்  பாடம் சொல்லிக்கொடுத்த வாத்தியாரு நீங்க... ஒங்கள்ட்ட பணமே வாங்கக் கூடாது...” பால்கார இராமச்சந்திரன் குருபக்தியுடன்  பேசினான்.

     “ அது நியாயம் இல்லை இராமச்சந்திரா... வாத்தியாருன்னு கடனா பால் ஊத்துனாலே போதும்... இந்த உதவிய மறக்க மாட்டேன்.”

     “சார்... பெரிய வார்தையெல்லாம் சொல்லாதீங்க சார்... எம்.காம்.,பி.எட்.படித்த ஒங்களுக்கு அரசாங்கம் வெறும் நானூறு ரூபாய் சம்பளமா கொடுத்து வருதே... உண்மையிலே ஒங்க நிலமையை நெனச்சு வேதனைப்படுறேன் சார்... நீங்க காசைப் பத்திக்  கவலைப்படாதீங்க சார்.  நீங்க பணம் எப்ப வேணுமுனாலும் கொடுங்க... ஒங்களுக்குப்  பால் ஊத்தறது என் கடமை” பாலை ஊற்றிவிட்டுச் சென்றான்.

     1978-இல்  ஹையர் செகண்டரி ஆரம்பித்த பொழுதே அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த இராதகிருட்டிணன் பதினைந்து வருடங்கள் வேலை செய்தும் தற்பொழுது வாங்கும் சம்பளம் நானூற்றி அம்பது ரூபாய்தான் என்பதை நினைத்துப் பார்த்தால் மெய்யாகவே  கேவலமாகத்தான் இருந்தது.

     கதிரவனின் கதிர்கள் வெடித்துச்  சிவப்புப் பிழம்புகளாய் ... இராதகிருட்டிணனின் கண்ணில் பட்டு மேலும் சிவந்தது.  ஜெயந்தியை எழுப்பி டீ போடச் சொன்னார்.

     “நா...டீ போட முடியாது...நீங்க... வேணுமுன்னா இன்னைக்கி டீ போடலாம்”.  -கூந்தலை அள்ளி முடிந்து கொண்டே சொன்னாள்.

     “நா என்னைக்கி டீ போட்டிருக்கேன்...” ஒன்றும் புரியாமல் கேட்டார்.

     “வாடீ...போடீன்னு  என்னை டீ போடலாம்... ஆனா நா டீ போட முடீயாது... ஏன்னா... டீத்தூள் தீர்ந்து போயிடுச்சு...!டீத்தூள் வாங்க துட்டும் இல்லை..!.”

     ஏம்மா என்னைக்கு உன்னைய டீ போட்டு கூப்பிட்டு இருக்கேன், எனக்கு வாய் வருமா? உனக்குத் தெரியாதா? - என்று மனதில் நினைத்துக்கொண்ட இராதகிருட்டிணன்.

     “சீனி இருக்கில்ல...”

     “கொஞ்சம் இருக்கு...”

     “டீ...கூட ஒடம்புக்கு கெடுதிதான்...பால் குடிப்போம்...ஒடம்புக்கு நல்லது...போட்டுக் கொண்டு வா...”

     சிறிது நேரத்தில் தம்ளரில் பாலோடு வந்து இராதாகிருட்டிணனுக்குக்  கொடுத்தாள் ஜெயந்தி.

     “சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதிங்க... நா ஒங்களக் கட்டிக்கிட்ட இந்தப்  பதினஞ்சு வருசத்தில என்னோட இருபத்தஞ்சு பவுனு நகையும் வித்தாச்சு... என்னோட கழுத்தில காதுல ஒண்ணும் இல்லேன்னு சொல்றதா நெனைக்காதிங்க... நமக்குன்னு ஒரு பொண்ணு இருக்கா... நாளைக்கு அவளுக்குன்னு...!”

     “வாஸ்தவம்தான் ஜெயந்தி... என்னை என்னச் செய்யச் சொல்றே..?  பேருதான் ஹையர் செகண்டரி வாத்தியாரு...சம்பளமா அரசாங்கம் சொடுக்கிறது நானூத்தி சொச்சம்... இந்தா இன்னைக்கி அடிப்படை சம்பளம் போட்டுடுவாங்க...நாளைக்கு போட்டுடுவாங்கன்னு நம்பியே நானும் பதினைங்சு வருசத்தை இதுல ஓட்டிட்டேன்.... இனி வேற வேலைக்கா போக முடியும்...?.மனித வாழ்க்கையே நம்பிக்கையிலதான் ஓடுது  ஜெயந்தி... நம்பிக்கையோட இருப்போம்... சரி சரி... கவிதாவை..எழுப்பிப்  பாலை குடிக்கச் சொல்லு”-இராதாகிருட்டிணனின் பெருமூச்சில் ஏமாற்றமும் சேர்ந்திருந்தது.

    ஜெயந்தி, கவிதாவை எழுப்பி விட்டு உள்ளே இருக்கும் பாலை எடுத்து குடிக்கச் சொன்னாள்.  மீண்டும் இராதாகிருட்டிணனின் அருகில்  வந்தாள் ஜெயந்தி. 

     “ஏங்க...”

     “என்ன ஜெயந்தி...?”

     “அரிசி இன்னிக்கி மட்டும்தான் வரும்...”

     “போன மாதப் பாக்கி கொடுக்கலை...எப்படிப் போயி அரிசி கேக்கிறது... சரி, இன்னைக்கி இருக்கிறதைப் போட்டு ஆக்கு... ” என்ன பண்றதுன்னே புரியலையே..என்று .யோசித்து யோசித்துப் பார்த்தார்.  இராதாகிருட்டிணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

     “ஏங்க..!. மஞ்சள முடிஞ்சு இந்த மஞ்சக்கயித்தில கட்டிட்டுத்  தாலியை வித்திட்டு வாங்க... அரிசிக் கடன அடச்சிட்டு, மளிகை சாமான் வாங்கலாம்... இந்த தாதலியை அவுத்துட்டு போங்க...”தாலியைக் காண்பித்து ஜெயந்தி கேட்டபெழுது இருவரின் க்ண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.

     “இன்னும் நா உயிரோடதானே இருக்கேன்...?”
       -இராதகிருட்டிணனின் வாயைப் பொத்தினாள் ஜெயந்தி.

     “வேற வழி தெரியலைங்க... நா சொன்னது தப்புத்தான்...” கன்னத்தில் போட்டு கொண்ட ஜெயந்தியின் கையைப் பிடித்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டே ஆறுதல் கூறினார்.

     “ நமக்குன்னு ஒரு வழி இல்லாமலா போயிடும்...கவலைப் படாதே...”

     “எம்.காம்.,பி.எட்., படிச்ச ஒங்களுக்கே இந்த நெலமை, பத்தாவது பாஸாகாத எனக்கு என்ன வேலை கெடைக்கும்...ஏங்க.. நா சித்தாளு வேலைக்குப் போகட்டா...?”

     “வாத்தியாரு பொண்டாட்டி சித்தாளு... ஊரு என்ன பேசும்?”

     “ஊரா நமக்குச்  சோறு போடுது?”

     “இல்ல... இருந்தாலும் அந்த வேலை எல்லாம் ஒன்னால செய்ய முடியாதும்மா...?  -இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டே பாலைக் குடித்து  முடித்தாள் கவிதா.

     “அப்பா... எனக்கு இருக்கிறது ரெண்டு யூனிபார்ம்... அதுல ஒண்ணு கிழிஞ்சு போச்சுப்பா...ஒரு வாரமா இந்த ஒரே யூனிபார்மதான்...ரொம்பக்  கஷ்டமா இருக்குப்பா...”

     “புதுசா ஒரு யூனிபார்ம் வாங்கிட்டாப்  போச்சு...” எப்படி வாங்குவது என்று தெரியாமலே அரசியல்வாதியைப் போல வாக்குறுதியை மட்டும் வழங்கினார். 

     “அய்யா...”-மகள் கவிதாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

     “கொழம்பு வைக்க ஒண்ணும் இல்ல... மாச ஆரம்பத்திலேயே இப்படின்னா... இந்த மாசத்தை இனி எப்படி ஓட்டறது?...”ஜெயந்தி சொல்லிவிட்டு அடுக்களைக்குள் சென்றாள்.

     ஆசிரியர்களின் பதவி, மதிப்பு அவர்கள் பெறும் ஊதியத்தைப்பொறுத்தே அமைகிறது.  ஒருவருடைய பொருளாதார அடிப்படையைக் கொண்டே சமூகம் மதிப்பளிக்கிறது என்பதை மனதில் நினைத்துக்கொண்டே பள்ளிக்குப் புறப்படத் தயாரானார்.  துவைத்துப் போட்ட கதர் வேட்டி சட்டையை வழக்கம் போலத்  தேய்த்துப் போட முடியாமல் எடுத்து உடுத்திக் கொண்டார்.  ஒட்டுப் போட்டுத்தித்திருந்த பழைய செருப்பை ‘ இன்னும் எத்தனை நாளைக்கு என்னுடன் வரப் போகிறாய்’ என்று நினைத்துக் கொண்டே காலில் மாட்டிக் கொண்டார்.

     அவருடன் கவிதாவும் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

     இராதாகிருட்டிணன் வேலை பார்க்கும் அரசினர் மேல்நிலைப்பள்ளி நல்லவேளை அதிக தூரம் இல்லாததால் நடப்பதற்கு வசதியாக இருந்தது,  இல்லையென்றால் இந்தப்  போக்குவரத்துச் செலவை எப்படி ஈடுகட்டுவது?

     “அப்பா... இன்னைக்கு டீச்சர்ஸ்  டே..! . ஏதோ கொடிக்குன்னு ஒரு ரூபாய் எங்க டீச்சர் கேட்டாங்க...”-கவிதா சொன்னபோதுதான்... இராதாகிருட்டிணனுக்கு ஞாபகம் வந்தது,  இன்றைக்குப்  பள்ளிக்கு கல்வி அமைச்சர் மாண்புமிகு பொன்னுச்சாமிநாதன் வருவது.

     “அப்பா...எனக்கு ஒரு ரூபாய் தரணும்...” மீண்டும் கேட்ட பொழுது, பேனா மட்டுமே இருக்கும் சட்டைப்  பாக்கெட்டைத்  தனக்கே தெரியாமல் காசு ஏதும் இருக்கிறதா? என்று இராதாகிருட்டிணன் தடவிப் பார்த்துக் கொண்டார்.  அவருக்குத் தெரியாமல் எப்படி இருக்கும்?

     “ஸ்கூல்ல வந்து தர்றேன்...”

     -பகுதி நேர ஆசிரியர் என்ற பெயரில் முழு நேரம் வேலை பார்க்கும் தன்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லையே என்பதை நினைத்து மிகவும் வேதனைப் பட்டார் இராதாகிருட்டிணன்.  இருவரும் ஏதும் பேசாமலே பள்ளி வரை நடந்து வந்தனர்.

     என்.சி.சி. ஆசிரியர் இராஜமாணிக்கம் பள்ளிக்குள் இருந்து வருவதைக் கவனித்தார்.  தேவைப்படும்பெழுது இவரிடம் கேட்டால் இல்லையென்று சொல்லாமல் கொடுக்கக்கூடியவர்.  கவிதாவை அங்கேயே நிறுத்திவிட்டு, இராஜமாணிக்கம் அருகில் சென்றார்.

     “சார்...ஒன் ருப்பி...இருக்குங்களா...?”-இராதாகிருட்டிணன் சங்கோசப்பட்டுக் கொண்டே கேட்டார். 

     “இராஜமாணிக்கம் தன் சட்டைப் பையைப் பார்த்தார்.  நூறும் அம்பதுமாகத்தான் இருந்தது.  உள்ளே கையை விட்டு சில்லரை இருக்கிறதா என்று  தேடிப்பார்த்தார்.  நூறையும் அம்பதையும் காண்பித்துச் சொன்னார்,                 “சாரி சார்...ஒன் ருப்பி இல்ல....”
      “பரவாயில்லைங்க சார்...”

      “எஜுகேசன் மினிஸ்டர் நம்ப ஸ்கூல்ல... டீச்சர்ஸ்  டேக்குக் கொடி ஏத்துறதுகுக்  கார்ல வந்துட்டார்... கொடி ஏத்த ஏற்பாட்ட செய்றேன்.”-சொல்லிக்கொண்டே வேகமாகச் சென்றார் இராஜமாணிக்கம்.

     “அப்பா... மணியடிச்சிடுச்சிப்பா...ஒரு ரூபா காசு கொடுங்கப்பா...”
    
     “................................................................”

      “அப்பா...ஒரு ரூபா காசு கொடுங்கப்பா...”

     “டீச்சர்ட்ட... நா காசு கொடுத்துக்கிறேன்... நீபோ...”

     “டீச்சர் அடிப்பாங்க...”-கண்களைத் தேய்த்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

     “அழுதீன்னா ... நா அடிச்சுப்புடுவேன்...சொன்னா கேளு...போ...”
        - கவிதா  பயந்து கொண் டு  அழுதவாறே  சென்றாள்.

      மேடையில் நின்ற கல்வி அமைச்சர் தேசியக் கொடியை ஏற்ற, கொடிக்கயிற்றின் சுருக்கை அவிழ்த்தார்.

  
     இராதாகிருட்டிணன் தனது அறையில் வேட்டியைக் கழற்றி உத்திரத்தில்  மாட்டினார், கழுத்தில் சுருக்கிட்டு  முடிச்சை இறுக்கினார்,  கால் உதைத்து.  உயிர் முடிச்சு  அவிழ வாழ்வின் போராட்டம் சில நொடியில் முடிந்து போன பேரமைதியில் பிதுங்கிய அந்தக் கண்களில் அவரைப் போன்ற இன்னும் போராட்டத்தோடு உயிர்வாழும் ஜீவன்களின் வலி உறைந்து கிடக்கிறது. அவரின் எஞ்சியிருந்த மலம் மட்டும் கடைசி எச்சத்தின் மிச்சமாகத் தரையில் கழிந்து கிடக்கிறது.

     கல்வி அமைச்சர்கொடியை ஏற்றிக் கொண்டிருக்கையில் இடையில் வந்த முடிச்சொன்றால் அமைச்சர் ஏற்றிய தேசியக் கொடி கம்பத்தின் உயரத்திற்குப் போக முடியாமல் அரைக் கம்பத்திலேயே நின்று பட்டொளி வீச  இந்தக் சிக்கலைப் பார்த்துச் செய்வதறியாது அனைவரும்  திகைத்து நின்றனர்.


     ‘ என் சாவிற்கு வேறு யாரும் காரணமில்லை...அரசாங்கம்தான்... இறந்தால் கொடுக்கும் அறுபதாயிரத்தை விரைவில் வீட்டிற்கக் கொடுக்கவும்’
-இராதாகிருட்டிணனின் கையில் இருந்த கசங்கிய  தாளில் இந்த வரிகள் எழுதி இருந்தது.

    

                                                                                             -மாறாத அன்புடன்,

                                                                                               மணவை ஜேம்ஸ்.
                

                  (1994-இல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.)

                மீள் பதிவு

18 கருத்துகள்:

  1. இராதாகிருட்டிணன் அவர்களின் நிலை போல் யாருக்கும் வரக் கூடாது... நெகிழ வைத்த கதை... கதையாகவே இருக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

      எத்தனையோ இராதாகிருட்டிணன்கள் பள்ளிகளில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் அய்யா,
    இது கதையா மனம் வலிக்கும் உண்மை,
    இன்றும் இப்படி எத்தனையோ பேர்,,,,,,,,,,
    நல்ல கதை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      வணக்கம்.
      உண்மைதான். இன்றும் இப்படி எத்தனையோ பேர் பட்டங்கள் பல பெற்றும்... கூலி வேலை செய்பவர்கள் சம்பளத்தையும் விடக் குறைவாக வாங்கி...காலத்தை நகர்த்துகின்றார்கள்... கொடுமையிலும் கொடுமை.... இந்தக் கதை எழுதிய அந்தக் காலத்தில் அனுபவித்த உண்மைகள்.

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஐயா வணக்கம்.

    ஏற்கனவே படித்த கதைதான் என்றாலும், புதிய கதையைப் படிப்பது போன்றே இருந்தது.

    இன்னும் பழைய பதிவுகளை மீண்டும் அறியத் தாருங்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      வணக்கம்.

      தட்டச்சு செய்ய இயலாத காரணத்தினால்... இந்தக் கதை வெளியிட்ட பொழுது தமிழ் மணத்தில் எனது வலைப்பூ சேர்க்கப்படாததால் மீள் பதிவு.

      பழைய பதிவுகளை மீண்டும் அவசியம் அறியத் தருகின்றேன்.

      நீக்கு
  4. அன்றைய ஆசிரியர்களின் நிலையை அறிய முடிந்தது. ஆசிரியராக இருந்தும் இராதாகிருஷ்ணன் எடுத்த முடிவு வருந்த வைத்தது.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    ஆசிரியராக இருந்தும் இராதாகிருஷ்ணன் எடுத்த முடிவு வருந்த வைத்தது என்னமோ உண்மைதான். அன்றைய ஆசிரியர்களின் நிலை...உண்மைதான்...ஏன் இன்றும் கூட தனியார் பள்ளிகள், ஆங்கில வழிப் பள்ளிகள் ஆசியர்கள் வாங்கும் ஊதியத்தைப் பார்த்தால் இந்த அவலம் இன்னும் தொடர்கதையாகவே தொடர்கிறது.

    தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் மனதை நெகிழ வைத்த பதிவு என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி.
      மன்னிக்கவும்... எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக மற்றவர்களின் தளத்திற்கு வர இயலவில்லை.
      நன்றி.

      நீக்கு
  7. எங்கள் ஊரில் ஒரு சகோதரர்களால் நடத்தப்படும் ஒரு கல்வி நிறுவனத்தில் ஆயிரம் பசங்களுக்கு மேல் படிக்கிறார்கள்
    மேல்நிலை ஆசிரியர் ஊதியம் ஏழாயிரம்தான்
    எந்த தேவலாயத்தில் முறையிடுவது ...
    கதை வீச்சுடன் இருக்கிறது
    இன்னும் கிராப்ட் செய்தால் சிறந்த கதையாக வரும்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் ஒரு பக்கம் இருந்தாலும்... ஒரு பக்கம் மிகமிகக் குறைந்த ஊதியம் வாங்குகின்ற துயரம் தொடர்கதையாகத்தான் உள்ளது.
    தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கதை அருமை நண்பரே! மனதை நெகிழ வைத்துவிட்டது அந்த முடிவு...பல பள்ளிகளில் குறைந்த மிகக் குறைந்த ஊதியம் ஆசிரியர்களுக்கு....கொடுப்பது ஒன்று கணக்குக் காட்டுவது வேறு தொகை...இப்படி எல்லாம் நடக்கின்ரது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      பல பள்ளிகளில் உண்மை நிலை தாங்கள் சொல்வது போலத்தான் உள்ளது என்பது நிதர்சனம். தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ஆசிரியர்கள் இன்று அழுதால் நாடு நாளைஅழும் ....அன்றே ஒருவர் சொன்னது ,நினைவுக்கு வருதா மணவையாரே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான் சொல்லவும்தான் அந்த விருதுவாக்கு ‘ ஆசிரியர்கள் இன்று அழுதால் நாடு நாளைஅழும் ’ நினைவுக்கு வந்தது.

      நன்றி

      நீக்கு