புதன், 30 ஜூன், 2021

புதிரானவன்...!

 


            புதிரானவன்…!

(‘ஊமைக்கனவுகள்’ திருமிகு.விஜு அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றார்.)

 


          

கொரோனாவின்

கொடிய காலகட்டத்தில்

பள்ளி மாணவர் ஆசிரியர்

பள்ளியை விட்டு

விலகியிருக்கச் சொன்னது

என்னமோ உண்மைதான்

நீ பள்ளியிலிருந்தே

விலகியிருக்க முடிவு செய்ததேனோ?!

 

அன்று -

நீ வேலை வேண்டி

வேட்டி சட்டையுடன்

நின்ற காட்சியைக் கண்டவன்

 

நீ காதலானவன்

நீ காதலால் ஆனவன்

உமையாளைக் கைப்பற்றி

இனிய இனியா அரும்பாகி... மலராகி... 

இல்லறம் இனிதாக உனதாக்கினாய்.

 

நீ வித்தியாசமானவன்

இருபத்து மூன்றாண்டு ஆசிரியப்பணியை

இருபத்து எட்டாக்கி

விருப்பத்துடன் ஓய்வை

விரும்பி எட்டிய

ஆர்.சி. பள்ளியின் முதலான

நீ வித்தியாசமானவன்.

 

நீ பணியாற்றிய பல ஆண்டுகளில்

சில ஆண்டுகளே பழகியவன்

நீ அலையில்லா

கடலைப் போன்றவன்

உனக்குள் புதைந்து இருக்கும்

பல்லாயிரம் திறமைகளை

வெளியில் காட்டாத

அதிசயச் சுரங்கம்

நீ அலையில்லா

கடலைப் போன்றவன்

பொங்கினால் சுனாமி போன்றவன்.

 

எனக்கு -

வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி

எனது படைப்புகளை அழியாமல்

வளப்படுத்திய உலைக்களம் நீ!

உனக்குத் தெரியுமா?

உந்தன் திறமை...!

இரு மொழிப் புலமை பெற்ற

புலமைப்பித்தன் நீ.

 

நீ மண்ணுக்குள் புதைந்திருக்கும் தங்கம்

வெளியில் தெரியவேயில்லை

உன்னை எடுத்து உரசிப் பார்த்தால் தெரியும்

சொக்கத்தங்கம் என்று…!

நீ பட்டை தீட்டிய வைரம்

யாரும் பார்க்க ஜொலிக்கவேயில்லை…!

கூழாங்கற்களுக்கு வைரத்தைப் பற்றிய

அருமை தெரிய வாய்ப்பில்லை.

 

நீ புரிந்து கொள்ள முடியாத

புதிரானவன்

எதிரிகளை நடுங்கவைத்து

சதிராடுபவன்

மாணவரைக் கண்டிப்புடன் கலங்கடித்தாலும்

அன்பானவன்

உதவி என்று வந்துவிட்டால் கருணையுடன்

கர்ணனானவன்

பழகிய நாட்களை அழகிய நாட்களாக்கி

தோழனானவன்

தேசிய மாணவர் படைக்குப் போட்டி என்றால்

முதலானவன்…!

உந்தன் படையை -

ஆணையிட்டு வழி நடத்தும்

அருளாளர் குணாளன் குணசேகர்...

உன் பணி சிறக்க

நல்வழிகாட்டும் கைகாட்டி!

பணியில் சிறந்த அலுவலர்...

பழகுவதில் பாசமுள்ள தமயனான

அன்புள்ளமுள்ள பண்பாளர்.


நீ -

அசாத்திய நம்பிக்கையுடன்

எதையும் சாதிக்கும் மனத்திட்பத்துடன்

எதையும் சாத்தியமாக்கும் துணிவுடன்

எண்ணிய எண்ணம்  எல்லாம்

நிச்சயம் நிறைவேற்றுபவன்.

 

வண்ணமயமாகும்  வாழ்க்கை - நாளும்

வளம்பெறும்... மென்மேலும் 

வாழ்ந்திரு...!  வளர்ந்திரு...!!

உயர்ந்த மனிதனான நீ

உயர்ந்து சிறந்திடுசிகரம் தொடு!

 


 










இன்று

நீ வேலை வேண்டாமென்று

செல்லும் காட்சியையும்

கனத்த இதயத்தோடு 

கண்டு கலங்கியது நெஞ்சம் …!

 

நீ புரிந்து கொள்ள முடியாத

புதிரானவன்…!

 


 -மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்  

30.06.2021                             

 


 

 

 

  

 


 


2 கருத்துகள்: