சனி, 24 பிப்ரவரி, 2018

நொண்டி நாடகமும் ராஜபார்ட்டும்.


நினைவலைகளில் நீந்துகிறேன்...!(2)

நொண்டி நாடகமும் ராஜபார்ட்டும்.
பூம்புகார் பார்த்துத் திரைப்பட வசனங்களை உருப்போட்டிருந்த எனக்கு, முதலில் தோன்றியது நான்மட்டுமே ஏற்ற இறக்கத்தோடு பேசிப்பார்த்த அந்த வசனத்தைப்போல் நாமும் பலர்முன்னிலையில் பேசிப் பாராட்டு வாங்கிவிடவேண்டும் என்ற ஆசைதான்.

ஆறாம் வகுப்பில் நாடகத்தில் நடிக்க ஆசைப்படுகிறவர்கள் கையைத் தூக்கலாம் என்ற அறிவிப்பிற்கு, தான்முந்துற்ற முதல் கை எனது கையாகத்தான் இருந்தது.
பெயர் எழுதிக் கொண்டார்கள்.
நாடகத்திற்கான கதாபாத்திரங்களை மறுநாள் தெரிவு செய்வதாகச் சொல்லியிருந்தார்கள்.
அன்றிரவெல்லாம் உறக்கம் வரவில்லை.
எப்பொழுது கண்ணயர்ந்தேனோ தெரியாது.

சனி, 3 பிப்ரவரி, 2018

சூடான முறுக்கு ..வடை… காப்பி….!


நினைவலைகளில் நீந்துகிறேன்...! (1)

மணப்பாறை முறு... முறு... முறுக்கே...! 


    மணப்பாறை என்றதும் நினைவுக்கு வரும் இரு விஷயங்கள் முறுக்கும் தண்ணீர்ப்பஞ்சமும் தாம். ஒரு காலத்தில் தண்ணீர்ப்பஞ்சத்தின் விளைவால் மணப்பாறையில் நிற்கும் புகைவண்டிகளின் கழிவறைதோறும் தண்ணீர்பிடித்து அதைக் குடிதண்ணீருக்கும் சமையலுக்கும் பயன்படுத்தக் குடத்துடன் காத்திருந்த பெண்கள் கூட்டத்தை அன்று மணப்பாறை வழியே இரயில் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் அறிவர். அரசின் முயற்சியால் இன்று குடிநீர்ப்பஞ்சம் தீர்ந்திருந்தாலும் முறுக்கு இன்றளவும் பிரபலமாக மணப்பாறையின் பெயரைத் தக்கவைத்திருக்கிறது. மணப்பாறையில் தயாரிக்கப்படும்   முறுக்கிற்கு எங்கள் ஊரின் உப்புச்சுவை மிகுந்த நீரும் ஒரு காரணம் என்பது கூடுதல் தகவல்.
   இந்தப் பதிவின் தலைப்பு  அன்றைய திரையரங்குகளில், திரைப்படங்களின் இடைவேளைகளில் இருக்கைகளின் ஊடே நடமாடிய பல  விற்பனையாளர்களின் தொனியை நினைவு கூர்ந்து வைக்கப்பட்டது.