செவ்வாய், 1 டிசம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)

   மிழினியனும் அவனது தாய் தங்கம்மாளும் ரோஸியின் வீட்டில் தங்கி இருந்ததை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஏற இறங்கப் பார்த்தார்கள்.



           “தாயைப் போல பிள்ளைங்கிறது... தப்பாப் போகும்மா என்ன...?”  அந்தத் தெருவில் வசிக்கும்  மாரியப்பன்  ரோஸி காதில் விழும்படியாக சத்தமாகக் கூற, அருகில் இருந்த  ஆறுமுகம் அதைவிடச் சத்தமாகக் கத்தினான்.

            “ஆமாமா... தப்பாப் போகும்மா என்னான்னா கேக்கிறாய்...?  தப்பாத்தான் போயிடுச்சே... பாத்தாத் தெரியல... யாரோ ஒரு பய வசமா மாட்டிக்கிட்டான் போல  தெரியுது...! புரோக்கர் தொழிலுக்கு   ஒரு வயசான கிழவி ஒருத்தி சிக்கிருக்கா...”

           “தாய் எட்டடி பாஞ்சா... குட்டி பதினாறு அடி பாயணுமுல்ல...  இளம் கன்று பயம் அறியாதுல்ல... வசூல் ராணியா வலம்வலப் பேறான்னு சொல்லு...”

            “ராணிக்கு ரேட்டுதான் என்னன்னு தெரியல...” மாரிமுத்து மறுபடியும் கூற ஆறுமுகம் சிரித்துக் கொண்டே இருவரும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றனர்.

             தங்கம்மாளின் காதில் இந்தப் பேச்சு விழுந்தாலும் ஒன்றும் புரியவில்லை.  ஆனால் தமிழினியனுக்குப் இது  புரியாமலா இருக்கும்?  நன்றாகவே புரிந்தது.  ரோஸி தன் நிலையை எண்ணி அடுக்களைக்குள் சென்று அழ ஆரம்பித்தாள்.

            தமிழினியன்  ரோஸிடம்  “வேலியோரத்து பூக்களையே வீதியில போறவங்க கிள்ளி வேடிக்கை பார்க்கிறப்ப... வீதியோரத்து பூவ கசக்கிப் பார்க்க இந்த உலகம் அஞ்சவா போகுது...?  தெருநாய் குரைக்கிறதுக்கு நீங்க  ஒன்னும் கவலப்படாதே...  நாங்க ஒன்னும் கவலப்பட மாட்டோம்...”

            ரோஸி நிமிர்ந்து பார்த்து, “வக்கரப் புத்தி நிறைஞ்ச மனுசங்க நடுவுல... வாஞ்சையுள்ள மனுசனா ஒங்களப் பாக்கிறேன்... உடம்பப் பாத்தே பழகிப்போனவுங்க மத்தியில உள்ளத்தப் பார்க்கிற மனுசனா உஙகளப் பாக்கிறேன்...” தனது முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
         

 ரோஸி சமைத்து விட்டு அலுவலகத்திற்குச் செல்வதால் சிரமமில்லாமல் வேளாவேளைக்கு மாத்திரைகளை எடுத்துக் கொண்டு ஓய்வெடுப்பது அவன் அம்மாவிற்குச்  சௌகரியமாகத்தான் இருந்தது.

    தாயும் ரோஸியும் வற்புறுத்தியதால்  தமிழினியன் அன்று கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றான்.  கல்லூரியின் வாயிலிலேயே தமிழினியனை நண்பர்கள் வழிமறித்துக் கொண்டனர்.

           இத்தனை நாள் ஏன் கல்லூரிக்கு வரவில்லை என்று விசாரணையில் ஈடுபட்டனர்.

           “ தீடிர்ன்னு...அம்மாவிற்கு  உடம்பு சரியில்ல... அதான்” என்றான் தமிழினியன்.

           “வீடு வேற தீப்பிடிச்சு எரிஞ்சிருச்சுன்னு கேள்விப்பட்டோம்...” -ஆமாம் என்பதைப் போல தலையாட்டினான்.
     
   “ அம்மாவிற்கு உடம்பு சரியில்லை... நீ வரவில்லை... ஆமாம்...சசிரேகா உன்னைப் போலவே வரவில்லை ஏன்?” என நண்பன் இக்பால் கேட்டான்.

   “என்னது... சசிரேகா... வரவில்லையா...?”

          “என்ன உனக்குத் தெரியாதா?  சசிரேகாவுக்கு கல்யாணமாம்... கேள்விப்படலையா...?”

          “இதோ வருகிறேன் ?” என்றவாறு கல்லூரிக்குள் செல்லாமல்  வெளியே  வந்தான்.   தமிழினியன் மனக்குழப்பத்துடன் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே   நடந்தான்.

   சசிரேகா வீட்டின் தொலைபேசிக்கு,  அருகிலிருந்த கடைக்குச் சென்று  ‘காயின் பாக்ஸில்’  காசைப் போட்டு  ‘டயல்’ செய்தான்.  நீண்ட நேரம் ரிங் போய்க் கொண்டே இருந்தது.
                                                                               
   “ஹலோ...” மெதுவாக ஒரு பெண் குரல் கேட்டது.  அந்தக் குரல் சசிரேகாவின் குரல்தான் எனக் கேட்டமாத்திரத்திலேயே தெரிந்து கொண்டான். பாத்ரூமிலிருந்து என்ன வேகத்தில்தான் வந்தாரோ அவளின்  அப்பா தெரியவில்லை.  வந்த வேகத்தில போனைப் பிடுங்கிக் கொண்டார்.

   “நான்தான் தமிழினியன் பேசுறேன்... என்ன சசி... ஏன் இத்தன நாளா காலேஜ் வர்ல... அம்மாவுக்கு உடம்பு சரியில்ல அதான் நானும் காலேஜுக்கு 
வர்ல...இப்பத்தான் கேள்விப்பட்டேன்... நான் கேள்விப்பட்டது உண்மையா இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... சசி... பேசு சசி...என்ன நா பேசிக்கிட்டே இருக்கேன்... நீ பேசாமலே இருக்காய்...  சசி... சசி....   என்னாச்சு...  சசி  சொல்லு சசி...? ” 

   “ஏண்டா எச்சிக்கல நாயே... என்னா தைரியம்டா எ  பொண்ண  லவ் பண்றதுக்கு...?  என்னப் பத்தி ஒனக்குத் தெரியாதுடா... ஓ வீடு தீப்பிடிச்சு எரிஞ்சப்பவே நீங்க அங்கேயே  செத்துப் போயிருக்கணும்... வீட்ல இல்லாம  போனதால... பொழச்சுப் போயிட்டீங்க...!  உயிர் மேல ஆசை இருந்தா இத்தோட இந்த நெனப்ப  விட்டிடு... இல்ல ஆள வச்சு ஒன்னத் தீத்துக் கட்டிட்டு போயிடுவேன்... என்னடா இப்ப பேச்சயே காணாம்...”  குரலை உயர்த்தி மிகவும் கோபமாகவும் சத்தமாகவும்   பேசினார்.  நேரம் முடியப்போவதை அறிந்து தமிழினியன் பேசாமலே மீண்டும் காசைப்  போட்டான்.

   “ எ பொண்ணோட அத்தமகனுக்கும் அவளுக்கும்  ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில அடுத்த வாரத்தில... கல்யாணம்... பாக்கு வெத்தல மாத்திப் பத்திரிக்கை எல்லாம் அடிச்சாச்சு... அமெரிக்காவில மாப்பிளைக்கு  வேலை... ஒன்ன மாதரி அன்னக்காவடியோ... அழிசாதிக்  கூட்டமோ...  அன்றாடங் காய்ச்சியோ இல்ல... தெரிஞ்சிக்க... பணக்காரப் பொண்ணக்  காதலிக்கிறமாதரிக் காதலிச்சு ஏமாத்திக்  கல்யாணம் பண்ணிக்கிட்டா இருக்கிற சொத்த எல்லாம் வளைச்சு போட்டுடலாங்கிறதுதானே ஒங்க ஜாதிப் புத்தி... ஒ கனவு நிச்சயம் பலிக்காதுடா...!  பலிக்க விட மாட்டேன்...!”

   நேரம் முடிந்து தொலைபேசியின் இணைப்புத்  துண்டிக்கப்பட்டது.  தமிழினியன் இதைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை:   ‘என்ன செய்வது?’ என்று ஒன்றும் தெரியாமலே பைத்தியம் பிடித்ததைப் போல இருந்தான்.   அவனின் மனம்  தெளிவில்லாமல்  குழப்பத்தின் உச்சியில்  இருந்தது.  கல்லூரிக்குச் செல்ல மனமில்லாமல் நடந்தே இரயில்வே ஜங்சன் பூங்காவிற்கு வந்தான்.  வந்த அவன் புல் தரையில் படுத்தான்;  ஏதோ குத்துவதை உணர்ந்தவன் எழுந்து பார்த்தான் நெருஞ்சிமுள் இருந்ததைப்  பிடுங்கி எறிந்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டு யோசித்தான்.  அழுகை வந்து அவனின் கண்களை மறைத்து  வழிந்த கண்ணீர் கன்னங்களில் கீழே ஓடியது.

   சூரியன் சுள்ளெனச்  சுட்டான்.   தமிழினியன் எழுந்து அமர்ந்தான்.  தன்னிடமிருந்த நோட்டை விரித்தான்;  எழுதத்தொடங்கினான்...

‘அன்பிற்கினிய சசியே!  என் சகியே!

   உனது நிலையை அறிந்தேன்.  
   எனது  நிலையை நன்றாக அறிவாய்...!
   உன்னைத்  திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
   என்னை நம்பி நீ வருவதாக இருந்தால்
   நாளை மறுதினம் ‘புதன் கிழமை’ இரவு  பன்னிரண்டு மணிக்கு
   வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் பேருந்து நிலையம் வரவும்...
   உனக்காகக் காத்திருக்கிறேன்...
   ஏதாவது வேலை செய்து உன்னைக் கண் கலங்காமல் காப்பாற்றுவேன்...
   என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு...!
   என்னை நம்பி நீ வரலாம்... உன் வரவுக்காகக் காத்திருப்பேன்...!

உன் அன்புத் தமிழ்.

-எழுதியதை மீண்டும் படித்தான்;  நோட்டில் இருந்த தாளைக் கிழித்துச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.   புல்லின் மீது படுத்தான்;  தூரத்தில் பூத்திருந்த செம்பருத்தி இவனைப்பார்த்துச் சிரிப்பது போலச்  சிரித்துக்  காற்றில் தலையை ஆட்டியது.

   தமிழினியனை யாரோ அடித்துப் போட்டது போல இருக்க... அப்படியே படுத்தபடியே உறங்கிப் போனான்.  மாலைப் பொழுதில் பூங்காவிற்கு வந்த சிறுவர்களின் சத்தம் கேட்டு உறக்கம் கலைந்து எழுந்து ரோஸியின் வீட்டை நோக்கி நடந்தான்.

   ரோஸிடம் நடந்ததையெல்லாம் விளக்கமாகச் சொன்னான்;  அதை அப்படியே கேட்டு உள் வாங்கிக் கொண்டாள்.

   “சரி... இப்ப என்ன செய்யலான்னு இருக்கீங்க...?”

   “எனக்காக ஒரு பெரிய உதவி செய்யணும்...”

   “என்ன செய்யனும்... சொல்லுங்க...?”

   “சசி வீட்டுக்கு நாளைக்குப்  போகணும்...”

   “போயி...?”

   “போயி... நீ காலேஜு ஸ்டுடண்ட்... சசிய விசாரிக்கிறமாதரி... போயி... இந்த ‘லட்டர்’ கொடுத்திட்டு வரணும்...”-என்று சொல்லிச்  சட்டைப் பையிலிருந்த கடிதத்தைக் கொடுத்தான்.

   “இவ்வளவுதானே... கொடுத்திட்டாப் போச்சு...!  சரி... வாங்க....அம்மா சாப்பிட்டுட்டு  நல்லாத்  தூங்கிறாங்க... வாங்க சாப்பிடலாம்...” -என்று சொல்லி ரோஸி  சாப்பாடு போட்டாள்;   பசியோடு இருந்த தமிழினியன்  சாப்பிட்டான்.

   “என்ன லட்டர்ல எழுதி இருக்கீங்க...?” சாப்பிட்டு முடித்த தமிழினியனிடம் கேட்டாள் ரோஸி.

   “என்னான்னு படிச்சுப் பார்க்க வேணடியதுதானே...!”

   “அடுத்தவங்க லெட்டர படிக்கிறது நாகரிகம் இல்லல்ல...”

   “நான்தான் படிக்கச் சொல்றேன்ல்ல... அப்புறமென்ன...?”

   “என்னதான் இருந்தாலும் அடுத்தவங்க லெட்டர படிக்கக்கூடாது...”

   “சரி... அதுக்கு மேல உங்க இஷ்டம்...” -என்று கூறிய படி அம்மாவிற்கு அருகில் சென்று படுத்தான் தமிழினியன்.

   அந்த வீட்டில் இருந்த இன்னொரு சின்ன அறையில் ரோஸி சென்று படுத்தாள்.

   ‘தமிழினியன் கடிதத்தில் என்ன எழுதி இருப்பாரோ... அதை அவரே பார்க்கச் சொல்லி விட்டதால் பார்க்கலாமா?’  என்ற மனம்  ஆசைப்பட்டாலும்... யோசித்து அது தப்பு என்று முடிவெடுத்துப்  படுக்கையில் புரண்டவள் சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.
                                                      
    பொழுது விடிந்ததும்  தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த ரோஸி சமைக்க ஆரம்பித்தாள்.  சற்று நேரம் கழித்து எழுந்த தமிழினியன் டீக்கடைக்குச் சென்ற ஒரு பார்சல் டீயை வாங்கி வந்து கொடுக்க மூவரும் குடித்தனர்.
                                                                     
   ரோஸி சமையல் முடித்துக் குளித்து முடித்து அனைவரும் சாப்பிட்ட பிறகு புறப்படத் தயாரானாள்.  சசிரேகாவின் வீட்டின் அடையாளத்தை நன்கு கேட்டு அறிந்து கொண்டு புறப்பட்டாள் பேக்கில் ‘அந்தக் கடிதத்தை’ எடுத்துக் கொண்டு...!

                                                                                                                          -வ(ள)ரும்... 


படிக்க  ‘கிளிக்’ செய்க

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.








16 கருத்துகள்:

  1. கடிதத்தில் என்ன எழுதி இருப்பாரோ...?

    ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தரே!

      தங்களின் முதல் வருகைக்கும் ஆவலுடன் எதிர்பார்ப்புக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நானும் சசியின் வீட்டுக்கு தொடர்கிறேன் மணவையாரே...
    தமிழ் மணம் தொடர்ந்து விழும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தாங்கள் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆ...நீங்க நினைக்காத நெஞ்சம்...! 8 அத்தியாயம் வந்துவிட்டதா...! நல்லது அணைத்தையும் படித்துவிடுகிறேன்..அய்யா..8வது அத்“தியாயத்தில் சசியின் அப்பா..... மரத்துவர்கொய்யாவான ..சாதி தாஸ் மாதிரி பேசுகிறார்.... தொப்புள் கொடி உறவோ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் அனைத்துயும் படிப்பதற்கும் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. விடுபட்ட பகுதிகளையும் இப்போது தான் படித்தேன். விறுவிறுப்பு தொடர்கிறது. நானும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் தொடர்வதற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சூரியன் விழுவது சிம்பாலிக்கா எதையோ சொல்லுதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      சூரியன் விழுவதை கண்டுபிடித்து விட்டீர்களே! எதையோ சொல்லுதே என்று வேறு சொல்லி விட்டீர்கள்... யோசிக்க வேண்டியதுதான்!

      தங்களின் வாக்கிற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஐயா வணக்கம்.

    நிச்சயமாய் நாங்க நினைக்காத நெஞ்சமாகத்தான் கதையின் போக்கு இருக்கும் என்ற எண்ணம் இன்னொருமுறை உறுதிப்படுகிறது.

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      வணக்கம். தாங்கள் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நானும் தொடர்ந்து செல்கிறேன்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள கரந்தையாரே!

    தாங்கள் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.


    பதிலளிநீக்கு
  9. என்ன ஆகப் போகுதோ....ரோசிக்கு அங்கு ஏதோ அதிர்ச்சி இருப்பதாகத் தெரிகின்றது...பார்ப்போம்..காத்திருக்கின்றோம்

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    தங்களின் வருகைக்கும் காத்திருப்புக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு