புதன், 20 மே, 2015

தூது - சிற்றிலக்கியம்

தூது 



        ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது இலக்கியம்.

         காதலாலோ  துயரத்தாலோ ஆண் அல்லது பெண் தூது அனுப்புவது.
              
         அஃறிணைப் பொருளைத் தூது சென்று வருமாறு அனுப்புவது;  அவர்களிடம் மாலை வாங்கி வருமாறு தூது செல்லும் பொருளிடம் வேண்டுவது. 

                                                           
                ‘பச்சை விளக்கு’ திரைப்படத்திற்காக  கண்ணதாசன்- தூது செல்ல ஒரு தோழி வேண்டி தலைவியின் பாடல்.

தூது செல்ல ஒரு தோழி இல்லையென

துயர் கொண்டாயோ தலைவி                                                  



துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி

தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி......................

              ‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்திற்காக கங்கை அமரன்  அவர்கள் பூவையும் காற்றையும்  குயிலையும் குருவியையும் மயிலையும் பறவைகளையும் தூது விடுகிறார்.   இந்தப் பாடலைப் பாடிய எஸ். ஜானகி அம்மாவுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
                                                             
                                                              

செந்தூரப் பூவே! செந்தூரப் பூவே! ஜில்லென்றக்  
காற்றே!                                          
என் மன்னன் எங்கே? என் மன்னன் எங்கே?
நீ கொஞ்சம் சொல்லாயோ? செந்தூரப் பூவே!

தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்!
கண்களை மூட விட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்!
கன்னிப் பருவத்தின் வந்தக் கனவிதுவே!
என்ன இனிக்கிது அந்த நினைவதுவே!
வண்ணப் பூவே! தென்றல் காற்றே! 
என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே!


நீலக் கருங்குயிலே! தென்னைச் சோலைக் குருவிகளே!
கோலமிடும் மயிலே! நல்ல கானப் பறவைகளே!
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்!
காலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்!
வண்ணப் பூவே! தென்றல் காற்றே! 
என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே!



      ‘அச்சமில்லை அச்சமில்லை’ திரைப்படத்தில்  வைரமுத்து அவர்கள் தண்ணியத் தூது விடுகின்றார்.
                                                                                                                   
                        
                                                                 
மேகத்த தூது விட்டா
தெச மாறிப் போகுமோன்னு
தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்தக் கன்னி
சொல்லி விட்ட சேதியெல்லாம்
எப்ப வந்து தரப்போற
எப்ப வந்து தரப்போற......................

             ‘காக்க காக்க’  திரைப்படத்தில்  தாமரை அவர்கள் தூது காற்றிலா, கனவிலா என்று கேட்கிறார்.
தூது வருமா தூது வருமா                                             
காற்றில் வருமா கரைந்து விடுமா
கனவில் வருமா கலைந்து விடுமா.....................



     திருக்குறளில் தூது என ஒரு அதிகாரமே இருக்கிறது. தூது என்றால் செய்தி என்று பொருள். செய்தியைச் சொல்பவன் தூதன். பெண்பாலாயின் தூதி.

தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப.


இப்படிப் பன்னிரண்டு பேரைமட்டும் தூது செல்வதற்கு உரியவர்களாகத் தொல்காப்பியர் சொல்கிறார். 

தூது நூல்கள் யாவுமே பதினேழாம் நூற்றாண்டுமுதல் பாடப்பட்டவை. அதற்கு முன் தனித் தூது நூல்கள் கிடையாது.

 இலக்கியங்களில்

      சங்க இலக்கியங்களில், அகப்பொருள் நிலையிலும் புறப்பொருள் நிலையிலும் தூதுச் செய்திகள் அமைவதைக் காணலாம்.

‘தூது வந்தன்றே தோழி‘-  கலித்தொகையில் இடம் பெற்றுள்ளது.

             


சத்திமுத்தப் புலவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.   சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

-என்ற பாடலைப் பாடினார்.

              அந்த நேரத்தில்  அங்கு நகர சோதனைக்கு வந்த மாறான் வழுதி என்ற அரசன் இச்செய்யுளைக் கேட்டு தான் நாரையின் மூக்கிற்குப் பல அறிஞர்களிடமும், நூல்களிடமும் உவமை காணாது தேடிக்கொண்டிருந்த போது பனங்கிழங்கின் உவமையைக் கேட்டுக் களிப்புற்று, தன் மீது போர்த்தியிருந்த உத்தரீயம் என்ற மேலாடையினை அவர் மீது எறிந்தான். தன் சேவகரை விட்டு அவரைத் வருவித்து வேண்டியது வழங்கினான்.

மூவரையன் விறலி விடு தூது

              விறலி விடு தூதுகள் யாவும் சிற்றின்பம் பேசி, நல்லின்பம் பேண அறிவுறுத்துவது.  நோக்கம் சிற்றின்பம்தான் என்பது தெளிவு.
நற்குடிப் பிறந்தார் காமம் துய்க்க தாசி வழிச் சேரல், பொருள் இழத்தல், அவமானப்பட்டு, தாசியால் துரத்தப்பட்டு,  விறலியைத் தூதுவிட்டு, குடும்பத்தைச் சேர்ந்து மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்தல்.
மூவரையன் விறலி விடு தூது இயற்றியவர் மிதிலைப்பட்டி சிற்றம்பலக் கவிராயர் .

              விறலி என்பவள் யாழிசை, மிடற்றிசை, நாட்டியம் போன்ற கலைகளில் சிறந்த மதங்கி. கெட்டு அழிந்தபின், அவளை மனைவியிடம் தூது அனுப்புவது தான் இவற்றின் சாரம்.

இளையதாசியைப் பற்றி:
மீனுக்கு உணவூட்டி வீசுகின்ற தூண்டில் என
மானுக்கு இரு கண்ணில் மைய்யுமிட்டாள் – செஞ்சொற்
கலையெல்லாம் கற்றுக் கிடந்தாள் சங்கீத
நிலையெல்லாம் சாதித்து நின்றாள் – துலையாப்
பரதவிதம் அத்தனையும் பார்த்தாள் மதன்நூல்
சுரதவிதம் அத்தனையும் தோய்ந்தாள் – இருதனமும்
நண்ணிப் புடைக்கும் முன்னே நாகக் குருளையப்போல்
கண்ணில் பரபரப்பும் காட்டினாள்
              ‘இருதனமும் நண்ணிப் புடைக்கும் முன்னே’ என்கையில் தாசியின் இளமை சுட்டப் பெறுகின்றது.   ‘நாகக் குருளையைப் போல் கண்ணில் பரபரப்புக் காட்டினாள்’ என்கையில் யானைக் குட்டியைப் போல் கண்களில் பரபரப்புக் காட்டியதாகப் பொருள்.
             காசு கொடுத்தால் யாருடனும் கூடலாம் என்பது தாசிகுலத் தர்மம். கிழத்தாசி, இளைய தாசிக்கும் கூறும் அறிவுரைகள் சில :
பெட்டிச் சுமை எடுக்கும் பேயனும் கைக்காசு தந்தால்
கட்டிச் சுகம் கொடுக்கக் கட்டளை காண்
முக்கொடி செம்பொன் முடிப்புக் கொடுத்தாலும்
கொக்கோக மார்க்கருடன் கூடாதே
-இதில் கொக்கோக மார்க்கர் என்பது கலவி நுணுக்கங்களில் கற்றுத் துறை போகிய விற்பன்னர் என்று பொருள் படும்.
இலக்கியவாதிகள் பற்றியும் ஒரு எச்சரிக்கை உண்டு.
பொன் போலத் துதிக்கும் புலவரை நீயும் துதித்துப்
பின் போய் கும்பிட்டு அனுப்பிப் பின்னை வா
இலக்கியவாதிகளிடம்  பொருள்பெற இயலாது,  வேண்டுமானால் ஒரு வெற்று வாழ்த்துக் கவிதைதான் கிடைக்கும் என்பதைப்  தாசியும் தெரிந்து வைத்திருக்கிறாள்.

 விறலி விடு தூது நூல்கள்



1.   அலைவாய் விறலி விடு தூது.
2.   ஆறை அழுகப்ப முதலியார் விறலி விடு தூது.
3.   கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது.
4.   சங்கர மூர்த்தி பேரில் விறலி விடு தூது.
5.   சிதம்பபேரசர் விறலி விடு தூது.
6.   சின்னணைஞ்சுத்துரை விறலி விடு தூது
7.   செண்டலங்காரன் விறலி விடு தூது
8.   சிவசாமி சேதுபதி விறலி விடு தூது.
9.   தெய்வச் சிலையார் விறலி விடு தூது.
10. நண்ணாவூர் சங்கர சுவாமி வேதநாயகி அம்மன் விறலி விடு தூது.
11. நாதையன் விறலி விடு தூது.
12. பழனியாண்டவர் விறலி விடு தூது.
13. பழனியாண்டவர் விறலி விடு தூது.
14. பாபநாசம் விறலி விடு தூது.
15. விறலி விடு தூது.
16. விறலி விடு தூது.
17. வீரைத் திருவேங்கடவன் விறலி விடு தூது (அ) மூவரையன் விறலி                  விடு தூது    
18. வையாபுரிப் பிள்ளை விறலி விடு தூது.
19. கலைஞர் கருணாநிதி விறலி விடு தூது.
                  

       சிதம்பரேசுவரர் விறலிவிடு தூது ஒன்று, கூளப்ப நாயக்கன் காதல் என்பது மற்றொன்று. முதலாவது நூல் மாரிமுத்துப் பிள்ளை என்பார் இயற்றியது. மனைவியைவிட்டு தாசியிடம் அலைந்த ஒருவன், பிறகு மனம்திருந்தித் தன் மனைவியிடம் திரும்பி வரமுயற்சி செய்வது இந்த நூலின் கதை. கோபித்துக் கொண்ட மனைவியிடம் ஒரு விறலியைத் தூதாக அனுப்பி அவள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு செய்வது நூலின் இறுதிப்பகுதியாக அமைகிறது. கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது நூலும் ஏறத்தாழ இதே பாணியில் அமைந்ததுதான்.
      ஒரு கற்பனை தாசியை உருவாக்கி, அவளுடைய ஜாலங்களையும் அவள் தாய்க்கிழவியின் சாகசங்களையும் வரிசைப்படுத்திக் காட்டி ஆசிரியர் தாசி வலையில் விழவேண்டாம் என்று எச்சரிக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு ஆணும் தன் நிறையைப் பேணிக் கொண்டு தன் கற்புமிக்க மனைவியுடன் இல்லறம் நடத்தி வருவானானால், வேசியர் இருக்கமாட்டார்கள், ஏமாற்ற மாட்டார்கள் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.

என்பாலில் கூட்டிவைத்த யாழ்விறலிக்கு ஆடைநிதி
அன்பாய்க் கொடுத்து ஊர்க்கு அனுப்பியே- துன்பம் தீர்ந்து
அன்று முதலாய் அளகேசனைப்போல
நன்றிபெற வாழ்ந்திருந்தேன் நான்

என்பது இந்த நூலின் முடிவுப் பகுதி.

புறநானூற்றுப் பாடல்:
                                   
  அதியமான் என்ற மன்னனுக்காக ஒளவையார் என்ற புலவர்தொண்டைமான் என்ற அரசனிடம், போர் மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காகத் தூது சென்றதாகப் புறநானூற்றுப் பாடல்  கூறுகிறது.

      தமிழ்விடுதூதில், மதுரைச் சொக்கநாதரிடம் காதல் கொண்ட தலைவி தன் காதலைத் தெரிவித்து அவர் இசைவறிந்து வருமாறு தமிழைத் தூதனுப்பி வைப்பதாகப் பாடப் பெற்றுள்ளது. 268 கண்ணிகள் இதில் உள்ளன. ஆனால் தலைவியின் காதலைச் சொல்வதோ, மதுரைச் சொக்கநாதரின் பெருமையைச் சொல்வதோ முக்கியமல்ல. தமிழ்தான் இந்த நூலின் தலைமைப் பொருள். “துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க மறவாதே தூது சொல்லி வா” என்று வழக்கமாகத் தலைவி தூது விடும் பாங்கில் அமைந்தாலும், தமிழே நம் கவனத்தை யெல்லாம் ஈர்த்துக் கொள்கிறது.

“அரியா சனமுனக்கே யானால் உனக்குச்
 சரியாரும் உண்டோ தமிழே - விரிவார்

 திகழ்பா ஒரு நான்குஞ் செய்யுள்வரம் பாகப்
 புகழ்பா வினங்கள்மடைப் போக்கா - ........

 தித்தித்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
 முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள்

 உண்ணப் படுந்தேனே உன்னோ டுவந்துரைக்கும்
 விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள்................
   
“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

-என்று  தமிழின் பெருமைகளைக் கூறித் தமிழால் மட்டுமே தாம் இருப்பதாகச் சொல்லும் பகுதி போற்றத்தக்கது.

புலவரின் தூது:
சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய புறநானூறு என்ற நூலில் தூது அமைப்பில் உள்ள பாடல்: 
                                    

அன்னச் சேவல் அன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலையாங் கையறுபு இனையக்
குமரி அம் பெரும்துறை அயிரை மாந்தி
வடமலை பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெரும் கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடி உறை எனினே மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
நண்புறு நன்கலம் நல்குவன் நினக்கே

(புறநானூறு : 67)
                           

 இந்தப் பாடல் பிசிராந்தையார் என்ற புலவர் பாடியது. அவர், வானத்தில் பறந்து செல்லும் அன்னச் சேவலைப் (ஆண் அன்னத்தை) பார்த்து அன்னச்சேவலே! அன்னச் சேவலே! என்று அழைக்கிறார். அப்பொழுது மாலைநேரம். எப்படிப்பட்ட மாலை நேரம்? நிலவொளி வீசும். துணையைப் பிரிந்த வாழ்வோரை மயங்கச் செய்யும் மாலை நேரம். அன்னச் சேவலானது தெற்குத் திசையில் உள்ள குமரித் துறையில் உள்ள அயிரை என்ற மீன்களைத் தின்று விட்டுச் செல்கின்றது. அப்போது பிசிர் ஆந்தையார் அந்த அன்னச் சேவலிடம் தன் செய்தியைக் கூறுகின்றார்.




தூதுவனாக அன்னச் சேவல்:                

           
அன்னச் சேவலே!  நீ வடதிசையில் உள்ள இமயமலைக்குப் போகின்றாயா?  அவ்வாறு போவாய் ஆயின் இமயமலைக்கும் குமரித் துறைக்கும் இடையில் உறையூர் என்ற ஊர் உள்ளது.  இந்த ஊர் சோழ நாட்டில் உள்ளது.  நீ உறையூருக்குச் சென்றால் அங்கு உள்ள அரண்மனையின் உயர்ந்த மாடத்தில் தங்க வேண்டும்;  அங்கு வாயில் காவல்கள் இருப்பர்.
        

    எனவேஅவர்களுக்கு உணர்த்தாது நீ அரண்மனையின் உள்ளே செல்ல வேண்டும்அங்கு என் மன்னனாகிய கிள்ளி என்பவன் இருப்பான். அவன் கேட்கும்படி பெரிய பிசிர் என்ற ஊரில் உள்ள ஆந்தையின் அடியில் வாழ்வேன் என்று கூறவேண்டும். அவ்வாறு நீ கூறிய உடன் அவன் மனம் நெகிழ்ந்து உன் பெட்டை அன்னம் அணிவதற்கு நல்ல அணிகலன்களாய்த் தருவான் என்று பிசிர் ஆந்தையார் கூறுகின்றார்.


 தூது நூல்கள்  

கி.பி. 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய நெஞ்சுவிடு தூது என்ற நூலைத் தொடர்ந்து தமிழ் விடு தூதுஅன்னம் விடு தூதுமேகம் விடு தூதுகாக்கை விடு தூதுபழையது விடு தூதுமான் விடு தூதுகிள்ளை விடு தூது போன்று நூற்று ஐம்பதற்கும் மேற்பட்ட தூது நூல்கள் தோன்றியுள்ளன.

-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.









.


32 கருத்துகள்:

  1. சினிமா இலக்கியத்தில் இருந்து சங்ககால இலக்கியம் வரை அழகான உதாரணங்களோடு விளக்கி இருப்பது அருமை.

    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலோடு கூறிய கருத்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் மணவையாரே பிரமாண்டமான பதிவு ஒவ்வொன்றையும் அழகாக விவரித்து சொல்லிச் சென்ற விதம் அருமை.
    கண்ணதாசன் தொடங்கி நம்இன தமிழச்சி தமிழ்க்கவிஞர் தாமரை வரையிலான நல்ல பாடல் பகிர்வு
    கங்கை அமரன் சொன்ன செந்தூரப்பூவே என்ற பூ ஒன்று கிடையாது ஆனால் அவரின் கற்பனையில் இப்பூ மலர்ந்தது நல்லதொரு விடயம்
    தமிழ் மணம் முத்தமிழுக்காக மூன்று
    நான் பதிவுக்கு முதலில் வருபவன் கொஞ்சம் தாமதமானதுபோல் தெரிகிறது மன்னிக்கவும்.
    (தாங்கள் கடைசியில் வந்தே பழக்கப்பட்டவர்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      வணக்கம். தங்களின் விரிவான கருத்திற்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. தாங்கள் சொல்வது போல ‘செந்தூரப் பூ’ என்று ஒரு பூ இல்லை. இல்லாத பூவிற்கு உயிர்ப்பு கொடுத்து அமரத்துவம் செய்துவிட்டார் அமரன்.

      தாங்கள் எப்பொழுதும் தமிழ்மனத்தில் முதலில் வந்து முதலிடம் பிடிக்கும் முதல்வர் என்பது அனைவரும் அறிந்ததே! தமிழ்மணத்தில் சூடாகவும்... மகுடம் சூட்டி மகிழ்வரும் தாங்கள் தானே! நானெல்லாம் கடைக்கோடியில் இருக்கும் தமிழன்தானே! பொருத்தருள்க...!

      நீக்கு
  3. தங்கள் தொகப்பு மிக அருமை அய்யா,
    இலக்கிய இலக்கண ஆதாரங்கள் அருமை. தம் உள்ளக் கிடக்கையை தமக்கு உரியவரிடம் சொல்ல அனுப்பும் உயிர் இல்லை உயிர் இல்லா பொருளும் துதூ அனுப்பப்பட்டது.
    அதிலம் தாங்கள் சொன்ன செங்கல் நாராய் படல் மிக அருமையான பாடல், அது துதூ எனினும் அதன் பொருள் பாருங்கள் தன் மனைவியிடம் தன் நிலையைச் சொல்ல சொல்லும் பாடல்,
    கையது கொண்டு மெய்யது பொத்திக்
    காலது கொண்டு மேலது தழீஇப்
    பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனம் எனுமே"
    எத்துனை வேதனைத் தரும் வரிகள் பாருங்கள்.
    தங்கள் பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் அருமையான கருத்துகளுக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

      தாங்கள் சொல்வது போல ’செங்கால் நாராய்’ பாடல் புலவனின் வறுமை நிலைமையை, அதன் உச்சகட்டத்தை உலகுக்கு உணர்த்தும் உணர்ச்சியுள்ள பாடல். இதைவிட தன் ஏழ்மையை வேறு எந்தப் பாடல் கூறிட முடிமென எனக்குத் தெரியவில்லை!

      நன்றி.

      நீக்கு
  4. ஐயா வணக்கம்.

    அருமையான பதிவு.

    இப்படித் தமிழ் கற்பித்தால் நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்போம்.

    தொடருங்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. தூது பற்றிய கருத்து அருமை. முதல் தூது இலக்கியம், தனித்ழுவம் வாய்ந்த தூது இலக்கியத்தை சொல்லியிருந்தால் நலமாய் இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. தூது இலக்கிய வகையின் முதல் நூல் நெஞ்சுவிடு தூது என்ற நூல் ஆகும். இதனை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியர் ஆவார். இதன் காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு. தமது ஞானாசாரியரிடம் சென்று தமது குறைகளை எடுத்துக் கூறுமாறு, உமாபதி சிவாச்சாரியர் தமது நெஞ்சைத் தூது விடும் செய்தியைச் சொல்லியிருக்காலாம். பதிவு மிக நீண்டு செல்கிறதே என்று எண்ணிணேன். தனித்துழுவம் வாய்ந்ததாக சொல்லியிருக்கலாம்... படிப்பவர்களுக்கு சற்று சுவைபட இருக்கட்டுமே என்பதற்காகத்தான்.

      - நன்றி.

      நீக்கு
  7. சிற்றிலக்கியத்தில் தூது பற்றிய தொகுப்பு – நல்ல இலக்கியச் சுவை. பாராட்டுக்கள்.

    // தூது என்றால் செய்தி என்று பொருள். செய்தியைச் சொல்பவன் தூதன். பெண்பாலாயின் தூதி. //

    தூது > தூதுவன் – சரி. தூதி – எங்கோ இடிக்கிறதே.

    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      பெண்பாலாயின் தூதி - எங்கோ இடிக்கிறதே... தங்களின் அய்யம் நியாயமானதுதான் இடிக்கிறமாதிரி தெரிந்தாலும்...எங்கும் இடிக்காது.

      "தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
      தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
      துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
      தித்தித்த தோதித் திதி"
      என்ற கவி காளமேகப் புலவரின் பாடல்.

      தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..
      தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது..
      தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது - இங்கு
      துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..


      அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
      அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
      தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
      தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு.

      (தூதி தூது - தோழியின் தூதோ)

      கவிஞர் கண்ணதாசன் 'வானம்பாடி' திரைப்படத்துல, இதே பாடல் ,,,, ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே வருக’ இடம்பெற்று இருக்கிறது.

      நன்றி.


      நீக்கு
  8. தூதுவைப் பற்றி சங்க காலம் தொடங்கி இக்காலம் வரையிலான இலக்கியங்களைப் பற்றிய ஓர் அழகான அறிமுகத்தைத் தந்ததோடு மட்டுமன்றி உரிய உதாரணங்களையும் கூறியுள்ள விதம் பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல இருந்தது. தூது என்ற பொருண்மை தங்கள் மூலமாக எங்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பாடல்கள் அனைத்தும் பரவசம்...

    ஒவ்வொன்றாக விளக்கிய விதம் அற்புதம் ஐயா... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

      தாங்கள் பரவசப்பட்டு படித்ததற்கும் பாராட்டியதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தூது பற்றிய விளக்கம் அருமை தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. # சிற்றம்பலக் கவிராயர்#இந்த பெயர் சரிதானா ,அல்லது சிற்றின்பக் கவிராயரா :)

    பதிலளிநீக்கு
  12. நல்ல பணி ! தமிழுக்கு செய்யும் தொண்டு ! வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  13. தங்கள் சிறந்த இலக்கியப் பதிவை எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன்.
    https://yarlpavanan.wordpress.com/2015/05/24/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2/
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    ஐயா.
    ஒப்பிட்டு எழுதிய விதம் நன்றாக உள்ளது பாராட்ட வார்த்தைகள் இல்லை... பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்த பாணி அசத்தல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      நன்றி. நான் இரு சக்கர வாகனத்தில் இரயில்வே மேம்பாலத்தில் செல்கின்ற பொழுது விபத்து ஏற்பட்டு இடது கை இரண்டு விரல்களும், இடது
      கால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. ஒரு கையால் மட்டும் தட்டச்சு செய்கிறேன்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  16. எத்தனை அற்புதமான பகிர்வு தாமதமாக வந்தாலும் தக்க சுவையுடன் இருந்தது. பகிர்வுக்கு நன்றிங்க. பின்னூட்ட பதில்களையும் படித்து மகிழ்ந்தேன். (கண்ணதாசன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      மிக்க நன்றி. சிறு விபத்து எனக்கு. ஒரு கையால் மட்டும் தட்டச்சு செய்கிறேன்.

      நீக்கு
    2. அன்புள்ள சகோதரி,

      மிக்க நன்றி. சிறு விபத்து எனக்கு. ஒரு கையால் மட்டும் தட்டச்சு செய்கிறேன்.

      நீக்கு
    3. அன்புள்ள சகோதரி,

      மிக்க நன்றி. எனக்கு சிறு விபத்து ஏற்பட்டு விட்டது. ஒரு கையால் மட்டும் தட்டச்சு செய்கிறேன்.

      நீக்கு
  17. அடடா நன்றாக ஓய்வெடுத்து பிறகு பதிவுலகம் வாருங்கள் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  18. இலக்கியத்தையும் திரைப்பட இசையையும் கலந்து கட்டி அடித்தது அருமை! நல்ல ஒப்பீடு....

    என்றாலும் தாங்கள் இத்தனைக் கஷ்டப்பட வேண்டாமே நண்பரே! நன்றாக ஓய்வெடுத்து வாருங்கள் நண்பரே! நாங்கள் இங்குதானே உள்ளோம்....பிரார்த்தனைகளுடன்!

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள அய்யா,

    தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு