திங்கள், 20 ஏப்ரல், 2015

தூக்கிலேற்றிய காதல் !





தூக்கிலேற்றிய  காதல்! 

                                                            - ஒர் உண்மைச் சம்பவம்.13.03.2015 

                                                                           

                                           
          காதலின் சுவை மரணத்தில்தான் தெரியும் போலிருக்கிறது. தினமும் நாளிதழ் படிக்கும் வழக்கம் எனக்கிருக்கிறது. நாளிதழைத் திறந்தாலே கொட்டிக்கிடக்கும் கொலை கொள்ளை தற்கொலை போன்ற செய்திகளின் வீச்சும் வீரியமும் அவை நமக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நடக்கும்வரை புரிவதில்லை.

          அப்படி என் ஊரில் என் உறவொன்றிற்கு நடந்த ஒரு சம்பவத்தின் பின் தான் நாளிதழ்களில் வரும் செய்தியின் கனத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

செய்தி இதோ..



                  திருச்சி மாவட்டம்  மணப்பாறையைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் இவருடைய மகள் கிருபாஹெலன் (வயது 19).  இவர் கிராப்பட்டியில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கித் திருச்சியில் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் படித்து வந்தார்.  நேற்று மாலை வீட்டின் அறையில் மாணவி கிருபாஹெலன் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  நீண்ட நேரமாகக் கதவு பூட்டப்பட்டு இருந்ததால்சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.



                     அங்குக் கிருபாஹெலன் தூக்கில் பிணமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  உடனடியாக இது குறித்து எடமலைப்பட்டிப்புதூர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்குச் சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றித் திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


                                                          

               தற்கொலை செய்து கொண்ட கிருபாஹெலன் என்னுடைய நண்பரின் மகள். கிருபாஹெலனின் தந்தை பேருந்து ஓட்டுநராக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.    இன்னும் இரண்டு  ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கின்றார்.  அவரது அம்மா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  தலைமையாசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.  கிருபாஹெலனின் அண்ணன் எங்கள் பள்ளியில் மேல்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்துபொறியியல் கல்லூரியில்  பட்டப்படிப்பையும் முடித்துச்  சென்னையில் தனியார் நிறுவனத்தில்  தானே சம்பாதித்துச் சாப்பிட வேண்டும் வைராக்கியத்துடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

                    இந்தச் செய்தி அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

                    கிருபாஹெலனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு  அடுத்தநாள் பிரேதப் பரிசோதனை செய்த பிறகு மதியம் 12 மணியளவில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் சொந்த ஊரான வையம்பட்டிக்கருகிலுள்ள கருங்குளம் கல்லறைக்கு  நேராகக் கொண்டு செல்லப்பட்டு ... உறவினர்களின் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு... ஆசிரியர்கள் குடும்பங்கள்... உறவினர்கள் எல்லாம் மிக அதிகமானவர்கள்  வந்து அஞ்சலி செலுத்த பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது.




                                                         

                    கிருபாஹெலன் ஏன் தூக்குப் போட்டுக் கொண்டார் என விசாரித்த பொழுது....                          காதல்....காதல்...காதல்...

                                               காதல் போயின் சாதல்! 
                     ஆறாம் வகுப்பு படிக்கின்ற பொழுது  திண்டுக்கல் ஹாஸ்டலில் தங்க வைத்துக் கிருபா ஹெலனைப் படிக்க வைத்திருக்கிறார்கள்.  பிறகு கரூரில் மேல்நிலைக்கல்விக்காக...  ஹாஸ்டலில் தங்கிப் படிக்கச் வைத்தார்கள்..  அதன்பிறகு கல்லூரிப் படிப்பிற்காகச் சித்தி வீட்டில் தங்கிப் படிக்க வைத்தார்கள்.. 
                    படிப்பு...படிப்பு என்று சொல்லி வீட்டை விட்டு விடுதியில் சேர்த்துப் பிள்ளைகளை....  வீட்டின் பாசத்திற்காக ஏங்க வைத்து விடுகிறோமோ? 

                   கிருபா ஹெலன்  உறவுக்காரப் பையனைக்  காதலித்திருக்கிறார்.  அவனின் தந்தையிடம் விவரத்தைச் சொல்லி பையனைக் கண்டிக்கச் சொல்லி பெண் வீட்டார் கூறி இருக்கிறார்கள்.  ஆனால் அவரின் தந்தையோ  இந்தப் பெண்ணிடம் பேசிக் கண்டித்திருக்கிறார்.  

                   துணி துவைப்பதற்காகத்  ஊறவைத்த துணி பாத்ரூமில் ஊறியபடி இருக்க.... திடீரென  இந்த விபரீத முடிவெடுத்திருக்கிறார்.  

                   திருச்சி கிராப்பட்டியில்  சித்தி  வீட்டில் தங்கியிருந்த கிருபாஹெலன் மதியம் இரண்டு மணியளவில் வாசிங் மெஷினில் கால் வைத்து அதன் மீது ஏறி மேலே உள்ள கொக்கியில் சேலையை  மாட்ட...  உயரம் எட்டாமல் போகவே தொட்டிச் சேலை தொங்கவிடும் வளைந்த கம்பியை எடுத்துச் சேலையை உள்ளே விட்டு ஒரு முடிச்சுப்போட்டு எட்டு வடிவில் சேலையை முறுக்கியவாறே    மாட்டித் தூக்கிட்டுக் கொண்டார்.

                    கிருபாஹெலனின் சித்தியின் குழந்தைகள்... பள்ளியை  விட்டு வந்த பிறகு உடைமாற்றுவதற்காகக்  கதவைத் தட்டிய பொழுது,   நீண்ட நேரமாகியும் கதவு திறக்காமல் இருக்கவே...அவரின் சித்தி கதவையை உடைத்து உள்ளே சென்ற பொழுதுதான் .... கிருபாஹெலன் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிப்போய் உடலைக் கீழே இறக்கியிருக்கிறார்.  தொலைக்காட்சி அதிக சத்தத்துடன்  ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது.

                    “அவள்  உயிர் பிழைக்க எண்ணியிருந்தால்  அந்த வாசிங் மெஷினில் கால் வைத்திருந்தால் பிழைத்திருப்பார்... அரை அடிகூட இடைவெளி இல்லை” என்று அவரின் சித்தி ஆதங்கப்பட்டுச் சொன்னார். 
                                                                       
                     வீடே சோகம் கப்பிக்கொண்டு கிடப்பதைக் கண்டு... அவர்களைத் தேற்ற வார்த்தையின்றிப் போனது .


                      கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர். தேசிய குற்றப்பதிவுத் துறை அளித்திருக்கும் புள்ளிவிவரங்களின் படி மேற்கு வங்கத்தைத் தவிர்த்து விட்டுத் தொகுக்கப்பட்டுள்ள இந்த இந்தியத் தற்கொலைகள் பற்றிய அறிக்கையின்படி மொத்தம் 79,773ஆண்களும், 40,715 பெண்களும் உயிரைத் துறந்திருக்கின்றனர்.
          தற்கொலை விகிதப்படிப் பார்த்தால் ஒர் இலட்சத்திற்கு 11.2 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.                                    ஒரு மணிநேரத்திற்கு 15தற்கொலைகளும், ஒரு நாளைக்கு 371 தற்கொலைகளும் நடக்கின்றன.
 பாலின ரீதியில் 242 ஆண்களும், 129 பெண்களும் ஒரு நாளில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.         
                                                                                                                                                                                 இந்திய அளவில் நடக்கும் தற்கொலைகளில் மொத்தம் 16,927தற்கொலைகள் நடந்த தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து மராட்டிய மாநிலம் 16,112 தற்கொலைகளுடன் இரண்டாம் இடத்திலும்மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும், 14,328தற்கொலைகள் நடந்த ஆந்திரா நான்காம் இடத்திலும் உள்ளன. நகரங்கள் என்று பார்த்தால் 2,183 தற்கொலைகள் நடந்த சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் காதல் தோல்வியால் இறப்பவர்களில் 15 சதவீதம்பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டின் மக்கள் தொகையில் 16.5 சதவீதம் கொண்ட உத்திரபிரதேசத்தில் 3.6 சதவிகிதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


          தற்கொலை என்பது தீர்வு அல்லவேதனையான முடிவுதான்நமக்கிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான்...மறுபிறவி என்பதெல்லாம் இல்லை.


                    பிள்ளைகளே!  பெற்று வளர்த்து ஆளாக்கியப் பெற்றோரை எண்ணிப்பாருங்கள்.   தவமாய்த் தவமிருந்து...தாய் பத்துமாதம் கருவறையில் பாதுகாத்து...உயிர்போய் உயிர்வந்தது என்பார்களே அதுபோல் மறுபிறவி எடுத்து இந்த உலத்தை அறிமுகப்படுத்தியது உங்களைக் கல்லறையில்  போட்டு மூடுவதற்காகவா?

         பிறந்த நாளைப் பெரு விழாவாக்கி மகிழ்வார்களே...!  
         அதை மறக்கலாமா?            
         பள்ளியில் சேர்த்து  மழலையில் படித்து மகிழ்வதைப் பார்த்து 
         பரவசம் அடைவார்களே...!  
         அதை மறக்கலாமா?  
         பெரியவள் ஆனபொழுது...உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்ந்தார்களே...!
         அதை மறக்கலாமா?
         பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரியில் காலடிவைக்கையில்
         உன் வாழ்க்கையை  எண்ணிக் கனவில் திளைப்பார்களே...!
         அதை மறக்கலாமா?
          அப்பாஅம்மா கண்ணீர்  விடுவார்களே...!
         அதை மறக்கலாமா?

எதற்கும் சாவது தீர்வல்ல என்பதை யாராக இருந்தாலும்  உணரவேண்டும்.  சாவது கோழைத்தனம் அல்லது வீரம் என்றெல்லாம் விவாதிக்கவில்லை. 
வாழும் வரை போராடு...எதிர்த்து நில்.... உன் கொள்கை சரியென்றால் துணிந்து நில்!  நாணல் போல் வளைந்தாலும்...மூங்கில் போல் நிமர்ந்து நின்றாலும் உனக்கு நீ செய்வதில்  நியாயம் இருந்தால்...அது நிறைவேறும் வரை போராடு...வெற்றிபெறு!

போராடு... போராட்டம்தான் வாழ்க்கை.  ஒரு வேளை போராட்டத்தில் வெற்றிக் கிடைக்காமல்கூடப் போகலாம்...பரவாயில்லை...வெற்றிக் கிடைக்கும் வரை ...வெற்றிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மட்டும் விட்டு விடாமல் போராடு!
போராட்டத்தில் உன் உயிர் யாருக்காவது வேண்டுமென்றால்... அவர்கள் வேண்டுமென்றால்  எடுத்துக்கொள்ளட்டும்! அப்பொழுதும் உன் இலட்சியத்தில் வெற்றிப் பெற்றிருக்கிறாய்!  உன் உயிரை எடுக்க நினைப்பவர்கள்கூட ஒரு கனம் யோசிக்கவே செய்வார்கள்! 

 இறப்பு இயற்கையாக நிகழும் வரை இருக்க எண்ணு... !
இந்தப் பூமியை விட்டுப் பிரியமாட்டேன் என்ற உறுதியெடு!



                     ‘ என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை...
                     பெற்றோர்களே!  சம்பாதித்து வையுங்கள்...
                      பிள்ளைகளின் தேவையென்ன என்பதை  உணருங்கள்...
                      சந்தேகப் பார்வையுடனே பார்க்காதீர்கள்...
                      பாசத்துக்காக ஏங்குகிறேன்...
                      என் உயிரே நான் தரும் பரிசு....’
                      என்னை மன்னியுங்கள்...! 
-என்று  கண்ணீர்க் கடிதத்துடன்  இந்த உலக வாழ்வைவிட்டுப் பிரிந்து சென்று விட்டாய்..!
                   
சிறகில்   பறந்து      திரிந்தாயே
பிறந்த    உலகை    மறந்தாயே
இறந்து  வாழ்வைத் துறந்தாயே
சிறந்த   உயிரைப்     பிரிந்தாயே!


                           இழப்பு ஈடு செய்ய முடியாதது... பெற்றோர்களே... பிள்ளைகளே

                           சிந்தியுங்கள்!

                                                          
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.







24 கருத்துகள்:

  1. கற்ற கல்வி
    சீரிய சிந்தனைக்கு உதவவில்லையே
    நல் வழி காட்ட உதவவில்லையே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்கள் வாக்கிற்கும் கருத்திற்கும் நன்றி.

      நீக்கு
  2. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது...? பெற்றோர்கள் முதலில் மாற வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

      ஆமாம் அய்யா...! மிக்க நன்றி.

      நீக்கு
  3. மனம் வருந்தும் பதிவு மணவையாரே!

    பதிலளிநீக்கு
  4. அய்யா வணக்கம்.

    தங்களின் சமூகப்பதிவு அருமை.

    பருவ வயதை அடையும் பிள்ளைகளிடம் பெற்றோர் காட்டாது விடுகின்ற அன்பு, அக்கறை, அவர்களோடு மனம் விட்டுப் பேசுதல் இவை எல்லாம்தான் இது போன்ற முடிவுகளைப் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கக் காரணமாய் அமைந்துவிடுகிறது.

    இழந்த பிறகு அய்யோ அம்மா என்று துடிப்பதை விட இந்த இழப்பில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் இதுவாய்த்தான் இருக்க வேண்டும்.

    மனம் விட்டுப் பேசும், நட்பு பாராட்டும் பெற்றோரின் பிள்ளைகள் இவ்வாறு நடக்கின்றார்களா என்று பார்க்க வேண்டும்.

    காதல் அது இயல்பாக வருகின்ற உணர்வு.

    படிப்பு முடியட்டும். நல்ல வேலை வரட்டும். அதன் பிறகு அந்த அன்பு நீடித்தால் நாங்களே உங்களைச் சேர்த்து வைக்கிறோம் என்னும் ஒரு வார்த்தையில் இது போன்று போகும் உயிர்கள் பலவற்றைத் தக்க வைத்திருக்கலாம்.

    சாக அதிக மனோபலம் வேண்டும்தான்.

    ஆனால் அது சிக்கலை எதிர்கொண்டு வாழும் மனோபலத்தைக் காட்டிலும் குறைவானது.

    வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிவைத் தராத கல்விமுறையால் இனிமேலும் வாழ்க்கையைத் தொலைத்தும், வாழ்க்கையை இழந்தும் போகாமல் இருக்க எண்ணற்ற கிருபாஹெலன்களுக்கு உங்களைப் போன்றோரின் கருத்துகள் போய்ச் சேர்ந்தால் அதைவிட நன்மை வேறென்ன...!

    தொடருங்கள்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் நீண்ட பின்னூட்டம் நிஜத்தைச் சொல்கிறது. பாசம் கிடைக்காமல் பரிதவிக்கும் பிள்ளைகள்...மோசம் போக இனியும் பெற்றோர் காரணமாக இருக்கக் கூடாது!

      பிள்ளைகளும் பெற்றோரை இது போல் தவிக்கவிட்டுச் செல்லவும் கூடாது...!

      இரண்டும் கூடவே கூடாது...!

      நன்றி.

      நீக்கு
  5. தற்கொலை எதற்கும் தீர்வல்ல! ஆனால் ஒரு நொடியில் ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்பு அவர்களை இந்த குழியில் தள்ளிவிடுகிறது! தகுந்த ஆலோசனை வழங்கப்படின் இந்த துயரச்சம்பவங்கள் குறையும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்று சரியாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி.

      நீக்கு
  6. மனம் கனக்கின்றது மணவையாரே...
    தமிழ் மணம் ஆறு மனமே 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      கனத்த மனத்துடன் தமிழ் மணத்தில் வாக்களித்தது மனத்திற்கு ஆறுதலாக இருக்கிறது.

      நன்றி.

      நீக்கு
  7. பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியானது தற்போது நீண்டுகொண்டே போகிறது. அனைத்துமே வணிகமயமாகிவிட்ட இக்காலகட்டத்தில் உண்மையான வாழ்க்கையை பலர் வாழவில்லை. வாழ்வதாக நடிக்கிறோம். நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். இவ்வகையான வேதனையை என்னதான் பகிர்ந்தாலும் அவ்வேதனை இருந்துகொண்டுதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    தாங்கள் சொன்னது முற்றிலும் சரியே! உண்மையான வாழ்க்கையைப் பலர் வாழவில்லை. வாழ்வதாக நடிக்கிறோம்.

    -மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. படிக்க வைப்பதே இப்படியெல்லாம் தவறான முடிவு எடுக்கக் கூடாது என்பதற்குத் தான் !சுய காலில் நிற்க வேண்டியவர்கள் காலுக்கு கீழே உள்ளதையும் தள்ளி விட்டு தற்கொலை செய்து கொள்வது பெற்றோரைப் பதற வைக்கும் செயல் ,இளைய தலைமுறையினர் திருந்த வேண்டும் !

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    சுய காலில் நிற்க வேண்டியவர்கள்...
    சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்...
    பெற்று வளர்த்தோரைப்... பேணிக்காத்தோரை...
    விட்டு விட்டுச் செல்ல துணியலாமா?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஐயா
    சொல்லிய விதம் நன்று தொடருகிறேன் தங்களின் பதிவை...

    வணக்கம்
    ஐயா
    கவியை போன்று சிறிய அடிகள் கொண்டவை அல்ல சிறுகதைகள் மிகவும் நீண்ட வரிகள்...எல்லா சிறுகதைகளையும் பதிவிடுவது என்பது இயலாத காரியமாக உள்ளது... எனவே வெற்றி பெற்ற போட்டியாளர்கள் தங்களின் தளங்களில் பதிவாக பதிடவும்

    வெற்றி பெற்றி கதைகளை மின்நூலாக வெளியிட திட்டம் உள்ளது... இது சம்மந்தமாக பேசிக்கொண்டுதான் இருக்கேன்...பார்க்கலாம்.. ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள அய்யா,

    நன்று என்று பாராட்டியதற்கும் பதிவைத் தொடர்வதற்கும்
    நன்றி.

    வெற்றி பெற்ற கதைகளை மின்நூலாக வெளியிடும் திட்டம் உள்ளது அறிந்து மகிழ்ச்சி.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. தற்கொளைகளே உளவியல் ரீதியாகப் பார்க்கப் படவேண்டியவை.

    இதுவும் அதில் ஒன்று! எங்களைக் கேட்டால் இது போன்ற தற்கொலைகள் வீட்டாரின் கண்காணிப்பு, பாசம், னேசம், அன்பு, நட்பு இல்லாமையால் தான்.

    அப் பெண்ணின் காதல் தெரிய வந்த போது இரு வீட்டாரும் கலந்து பேசி, இரு குழந்தைகளையும் அழைத்து மிகவும் பாசத்துடன் நட்புடன் பேசியிருக்க வேண்டும். அவர்கள் இருவருமே உறுதியாக இருந்திருந்தால், அந்தப் பையனுக்கு வேலை கிடைத்ததும், பெண்ணின் படிப்பு முடிந்ததும், அப்போதும் இந்தக் காதல் நீடித்து இருந்தால் சேர்த்து வைக்க முடிவு செய்திருக்கலாம். காதல் என்பது மிகவும் இயற்கையான உணர்வு. அதன் ஆழத்தை மட்டுமே நாம் நோக்க வேண்டும். காதல் வருவதில் தவறே இல்லை. ஆனால் அதை அணுகும் முறையில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். காதலிப்பது தவறில்லையே இதை பெற்றோர்கள் உணர வேண்டும். அழகான கவுன்சலிங்க் மூலம் இந்தத் தற்கொலையை/களை முறியடிக்கலாம்.

    வாழ்வியல் பாடங்களைக் கற்றுக் கொடுக்காமல், வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கும் நமது கல்விமுறை...ம்ம்ம் மனதிற்கு வருத்தம் அளிக்கின்றது....

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள அய்யா,

    அந்தப் பெண் பெற்றோரின் பாசத்திற்காக ஏங்கி இருக்கிறாள் என்பது அந்த மரணம் தரும் செய்தியாக இருக்கிறது. அந்தப் பெண்ணிற்கு ஆதரவாக ஒரு மனம் இருக்க அதைப் பிடித்துக் கொண்டிருக்க... பிடித்த கிளையும் முறியும் என்றவுடன் இந்த முடிவு!

    கவுன்சலிங்க் மூலம் இந்தத் தற்கொலையை/களை முறியடிக்கலாம் என்பது உண்மையே!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த அன்புக்காக ஏங்குவதுதான் பலரையும் தடுமாற வைக்கின்றது.....ஏன் வயது வந்தவர்களைக் கூட.....அதனால் நாம் நம் குழந்தைகளுக்கு அன்பு செலுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும் ....சரிதானே நண்பரே!

      நீக்கு
    2. ஆமாம் அய்யா...! நம் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களான பெற்றோரையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அந்த மரணத்தின் கடைசி ஆசையாக வேண்டுகோளாக இருந்தது.

      தாங்கள் சொல்வது போல நம் குழந்தைகளுக்கு அன்பு செலுத்தக் கற்றுக் கொடுத்தால் வருங்காலத்தில் அவர்களின் சந்ததிக்கு கண்டிப்பாகப் பயன்படும். நம்மையும் பார்த்துக் கொல்லாமல்... பார்த்துக் கொள்வார்கள் அல்லவா?

      நன்றி.

      நீக்கு
  15. எல்லாம் முடிந்தபின், அய்யோ அம்மா, இப்படி ஆகிவிட்டதே என்ற வெற்று புலம்பல் தேவையா?
    இருக்கும் போதே பேசுவோம்,
    புரியவைப்போம், தீர்வு காணப்படும் வரை காத்து இருத்தல் என்பது முக்கியம், எதற்காகவேனும் சாவி என்பது தீர்வு இல்லை என்பதை எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  16. உண்மைதான். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு