வியாழன், 26 அக்டோபர், 2023

புலவர் மனுவேல்ராஜ் அய்யா பணி நிறைவு பாராட்டு மடல்



பணி நிறைவு பாராட்டு மடல்











 

நொடிக்குள் நூறுகவி படைத்தவா!

        நோகுந் தடைபலவும் உடைத்தவா!

படிக்க மனச்சிறையுள் அடைத்தவா!

          பழகும் உறவினுக் கினித்தவா!

வெடிக்கும் எரிமலைகள் அணைத்தவா!

          விதிக்கும் தமிழெழுதி விதித்தவா

முடிக்கும் பணியினிது முடித்தவா!

       மனுவே லெனமனதுள் துடித்தவா!

 

 

சொல்லி னேர்பூட்டி உழுதவா!

           செவிகள் பாராட்டித் தொழுதவா!

புல்லில் பனியாக விழுந்தவா!

        புவியின் கவியாக எழுந்தவா!

செல்லும் இடமெங்கும் சிறந்தவா!

        சேரும் புகழ்சேர்க்க மறந்தவா!

வெல்லுந் தமிழ்கொண்டு திரிந்தவா!

        வீழ்த்தி பகைக்கருளும் புரிந்தவா!

 

                                               

வகுப்பி னறைகளிலே வாழ்ந்தவா!

        வணங்கு தமிழழகில் ஆழ்ந்தவா!

மிகுத்த சொல்வளங்கள் சூழ்ந்தவா!

      மேவு நட்பதனில் வீழ்ந்தவா!

பகுத்துப் பொழிலுரைக்க வல்லவா!

       பாட லுனக்கடங்கு மல்லவா?

மிகுத்து யானுமெதுஞ் சொல்லவா?

       மனுவேல் தமிழ்ப்பகழி வில்லவா!

 

                                                (வேறு)

 

சங்கத் தமிழ்ப்பெண்ணின்  சீரே  போய்வா!

      சபைகள் விரும்புதமிழ்ச் சாறே போய்வா!

எங்கள் தமிழ்த்துறையி னேறே போய்வா!

     எரியு  மனந்தணிக்கும் நீரே போய்வா!

பொங்கு கவியருவிப் பேறே போய்வா!

      புகழின் புதியவர லாறே  போய்வா!

மங்கு  மனத்துயரி னூறே போய்வா!

      மனுவே லெம்பள்ளி வேரே  போய்வா!

 

 

நீயும் நானும் சேர்ந்து இருந்தோம்

இருந்தோம் ஆர்.சி. பள்ளி தேன்கூட்டில்

தேன்கூட்டில் நீதானே ஒற்றை இராணித்தேனி

இராணித்தேனியைச் சுற்றியே நாங்கள் நாளும்

நாளும் போனதே முப்பத்துநான்கு ஆண்டுகள்

முப்பத்துநான்கு ஆண்டுகள் நேற்றுபோல இருக்கிறதே!

 

இருக்கிறதே என்றாலும் இனிக்கிறதே எந்நாளும்

எந்நாளும் இனிவரும் காலங்கள் இனிதாகட்டும்

இனிதாகட்டும் கவியரங்கத்தில் உந்தன் கவிதை

கவிதையுடன் பாடலும் பட்டிமன்றமும் உனதாகட்டும்

உனதாகட்டும் கலைகள் எல்லாம் உன்வசமாகட்டும்

உன்வசமாகி எங்கும் நடமாடட்டும் தமிழ்ச்சங்கம்!

 

தமிழ்ச்சங்கம் வைத்து வளர்த்த மதுரைமண்

மதுரைமண்னோடு அருட்தந்தை சூசைராஜால் வளர்ந்தவர்

வளர்ந்தவர் மனுவேல்ராஜ் வெண்கலமணியாய் ஒலிக்குமே

ஒலிக்குமே  என்றும் உந்தன் குரலோசை

குரலோசைக் கேட்க புதுக்கவிதை தவமிருக்குமே

தவமிருக்குமே ஆர்.சி.பள்ளி இனியுன் இனியோசைக்கு!

 

                                               

இனியோசையை இனியாம் என்று கேட்போமோ?

கேட்போமோ என்று கேட்டாலுமிது கட்டாயம்

கட்டாயம் ஓய்வென்பது காலத்தின் பிடி!

பிடிசுசிலாவைக் காதலித்து கரம்பிடித்த தமிழ்வேழமே!

தமிழ்வேழம் ஈன்றெடுத்த சகாயகாவியத் தங்கங்களே!

தங்கங்களே தந்திடுமே இனிவாழ்வில் இன்பங்களே!

 

இன்பங்களே என்றும் காண்பாய் முத்தமிழில்

முத்தமிழில் இயற்றமிழில் இசையுடன் வாழ்வாய்!

வாழ்வாய் நாடகத்திலும் சிறந்த நடிகராய்

நடிகராய் அன்றுமென்றும் சிறந்தே வாழ்கவே!

வாழ்கவே தமிழ்போல் வாழ்வாங்கு வாழ்கவே!

வாழ்கவே நூறாண்டுகண்டு நாடுபோற்ற வாழ்க!

 

 



பாராட்டு மடலைக் கேட்க மேலே 'கிளிக்' செய்க

 




 ஆர்.சி. மேனிலைப்பள்ளி,

திருச்சிராப்பள்ளி                                 -மாறாத அன்புடன்,

21.05.2023                                         மணவை ஜேம்ஸ்.