சனி, 16 மே, 2020

நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் கலைஞர்தான் !

நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் கலைஞர்தான் !



சென்னை கலைவாணர் அரங்கத்தில் 26 – 27 ஜுலை  மாதம் 2008 ஆம் ஆண்டு அறிஞர் பேரவை, தமிழ்நாடு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. 
கலைஞர் படைப்புலகம் ஆய்வுக்கோவை (Proceedings of the International Conference Seminar Papers on Kalaingar Studies) பேராசிரியர் டாக்டர் திருமிகு. ந.வேலுசாமி அவர்கள் தொகுக்க, 148 கட்டுரையை (1000 பக்கங்கள்) நூலை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு.மு.கருணாநிதி (மாலை 6.00 மணிக்கு வருகைபுரிந்து 9.00 மணி வரை அரங்கில் இருந்து) வெளியிட்டார்.

அந்த நூலில் ‘நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் கலைஞர்தான் ’என்னுடைய கட்டுரையும் இடம்பெற்றது. 

பல மாதங்களுக்குப் பிறகு அன்பகத்தில் 148 ஆய்வுக்கட்டுரைகளுக்குத் திருவாளர்கள் புலவர்.க.திருநாவுக்கரசு, வளப்பக்குடி வீரசங்கர்(எனது கட்டுரைக்குக் குரல் கொடுத்தவர்), செல்வ கண்ணாத்தாள், க.ஜீவா, ஜெசிந்தா, டாக்டர் க. பத்மநாபன் ஆகியோர் குரலில் ஒலிப்புத்தகமாகக் குறுந்தகட்டில் (Audio Book) தளபதி மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்கள்  இதை வெளியிட்டார்.

இந்த இரண்டு நிகழ்விலும் நான் கலந்து கொண்டது மகிழ்ச்சி. அந்தக் கட்டுரை ஒலி வடிவத்தில் உங்கள் செவிக்கு
வரி வடிவில் உங்கள் பார்வைக்கு….




திரு.  மணவை ஜேம்ஸ் அவர்கள் எம்.ஏ., எ.எட், ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.  இவர் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.  திருச்சி ரசிக ரஞ்சனா சபாவில் 1990 ஆம் ஆண்டு நடந்த நாடகப் போட்டியில் இவர் எழுதி இயக்கிய ‘புதிய உடன்படிக்கை’ என்னும் நாடகம் சிறந்த நாடகத்திற்கான முதல் பரிசையும்.  கதை, வசனம், சிறந்த இயக்கத்திற்கான முதல் பரிசையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.  இவர் எழுதிய சிறுகதை, கவிதைகள், மாலை முரசு, வைரமாலை போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ளன.

___________________________________________________________________________________________________

நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் கலைஞர்தான்

     ஐந்தமிழ் அறிஞர் கலைஞர் படைப்புலகம் பரந்து விரிந்தது.  தமது 84 வயதிலும் ஓயாமல் தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி.
     கலைஞர் பேசும் கலை வளர்த்த பெருமகனார்.  ‘முரசொலி’ கையெழுத்துப் பிரதியாக ஆரம்பித்துத் தினசரியாய் மாற்றிச் சரியாய் நடத்தி வரும் சரித்திரம்.
     ‘நச்சுக்கோப்பை’ முதல் பதினெட்டு நாடகங்கள் நடத்திய கலைஞர், ‘ராஜகுமாரி’ முதல் ‘பாசக்கிளிகள்’ வரை எழுபது திரைப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதிய எழுத்தாளர்.  ‘பராசக்தி’யில் சிவாஜியை அறிமுகப்படுத்தித் திரைப்பட வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய புதிய வார்ப்பு.
     ‘நெஞ்சுக்கு நீதி’ கலைஞரின் சுயசரிதை ஒரு வரலாற்றுப் பெட்டகம். ‘குறளோவியம்’, ‘திருக்குறள் உரைகள்’, வள்ளுவர் கோட்டம், குமரியில் வள்ளுவர் சிலை – இதெல்லாம் வள்ளுவனை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட கலைஞர்.  கட்டுரை, சிறுகதை, தொடர்கதை, சரித்திரக் கதை, தொல்காப்பியம் என்னும் இலக்கண மருந்தைத் ‘தொல்காப்பியப் பூங்கா’ என்னும் தேன் தடவிச் சுவைக்க வைத்த சுவைஞர் அல்லவா கலைஞர்!  சங்கத் தமிழ் தந்த தங்கத் தமிழன்.

கலைஞரின் கவிதை இலக்கியம் பற்றி ஒரு பார்வை

     அடலேறு மொழித் தமிழே – இன்பக்
     கடலேறு தனித் தமிழே – சோலை
     மடலேறு சுவைத் தமிழே – நீ என்
     உடலேறி உயிரேறி வாழ்விக்கின்றாய், வணங்குகின்றேன்
என்று தமிழ் வணக்கம் செய்கிறார் கலைஞர்.
     தமிழே!  தேனே!  தங்கக் கனியே!
    அமிழ்தே!  அன்பே!  அழகுக் கலையே!
     எழிலே!  அறிவே!  எண்ணச் சுடரே!
     பொழிலே!  புகழே!  பொன்னின் மணியே!
     திருவே!  உருவே!  திங்கட் குளிரே!
     தருவே!  நிழலே!  நிழல்தரு சுகமே!
என்று தமிழைப் போற்றிப் புகழ்கின்றார் கலைஞர்.
     இலக்கணத்தை எதிர்க்கும் எண்ணம் என்பால் இல்லை
     இலக்கணம்தான் என்னோடு ஊடல் செய்யும் அன்புக் கிள்ளை
     ஒருபாட்டும் இலக்கணமும் ஒருப்பட்டு வராவிடினும்
     தரும்பாட்டுத் தமிழ் உணர்வைக் கொல்லாதெனும்
     கரும்பாட்டும் ஆலையிலே வேம்பொன்று புகுந்தது போல்
     கவிக்கூட்ட மேடையிலே வீரமாய்ப் புகுந்துவிட்டேன்
என்று அவைக்கு அடங்கி, அடக்கி வாசிக்கும் கலைஞரின் அவையடக்கம் தான் என்னே!
     ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்!  நீ
     தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே!
     வீரத்தமிழ் கொஞ்சும் நாட்டிலே – நாங்கள்
     சாரமில்லாச் சொற்கள் ஏற்கமாட்டோம் ஏட்டிலே!
     ஆயிரத்துத் தொள்ளாயிரத்த முப்பத்தெட்டிலே தம் பதினான்கு வயதிலேயே கலைஞர் திருவாரூரில் மாணவப் போராளிகளை இந்தி எதிர்ப்புப் போருக்கு வாருங்கள் என்று தலைமை தாங்கி அழைத்த வீரர்.
     ஆரிய திராவிடப் போராட்டம்தான் இராமாயணமென்று
     ஆசியாவின் ஜோதி பண்டித நேரு;
     அவர் எழுதிய உலகம் புகழ் புத்தகத்தில்
     ஆதாரத்துடன் எடுத்துச் சொல்லியுள்ள உண்மையினை
     அடியேனால் எளிதில் மறக்க முடியவில்லை.
     “இராமன் அவதாரமா அல்லது மனிதனா?”
     இதற்குப் பதிலை நான் சொன்னால்
     இராமசாமிப் பெரியாரின் சீடனன்றோ
     இப்படித்தான் சொல்வான் என்பர்!
என்று கலைஞர், நேருவின் நேர்மையான கருத்தையும், தான் பெரியாரின் சீடனென்றும் – பகுத்தறிவுவாதி என்றும் பறைசாற்றுகின்றார் கலைஞர்.
     இராஜாஜி எழுதிய தொடரோவியமாம்
     சக்கரவர்த்தி திருமகனைப் படித்துப் பார்த்தேன்
     அதில்…
     மொத்தத்தில் வால்மீகியின் இராமன்
     சிறந்த இராசகுமாரன், வீர புருஷன்,
     அபூர்வமான தெய்வீக குணங்கள் கற்றவன்
     அவ்வளவே தவிர;
     அவன் கடவுளாக
     வேலை செய்யவில்லை 
என்று பட்டுக் கத்திரித்தாற் போல் திட்டவட்டமாகத் தீட்டியுள்ளார்.  பாபர் மசூதி இடிப்பதற்கும், இராமர் கோவில் எழுப்புவதற்குமென்று எண்ணினாரில்லை.  
‘’இரமாயணமும், மகாபாரதமும் இந்தியக் கவிஞர்களின் கற்பனை.  இராமனை நற்குணங்களின் நாயகன் என்று இதிகாசங்கள் சித்திரிப்பதால், அந்த தெய்வீக மைந்தனை வணங்குகிறேன்” என்றார் காந்தியடிகள்.
அது என்ன இராமர் பாலம்?  பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு  முன்னால் சீதையைச் சிறை எடுத்தானாம்.  சீதையை மீட்க இராமன் பாலம் அமைத்தானாம்.  அணில்களும், வானரங்களும் பாலத்தைக் கட்டியதாகக் கூறுகிறார்கள்.  இதை எப்படி நம்புவது?  பகுத்தறிவு வாதத்தைத்தான் கலைஞர் முன் வைக்கிறார்.  ஒரே மேடையில் விவாதிக்க அறைகூவல் விடுக்கிறார்.
கடல் நீரோட்டங்களாலும், அலைகளாலும் ஏழு மலைத்திட்டுகள் உருவாகி இருக்கின்றன.  அதில் ஒன்று தான் ஆதம் பாலம் என்று வரலாறு கூறும் மணல்மேடு.  இராமர் பாலம் என்பது இயற்கையாக உருவான ஒரு புவியியல் அமைப்பு என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
           உண்மையைத் தலைவர் கலைஞர் சொன்னால் அவரின் தலையையும், நாக்கையும் துண்டாடுவோம் என்று வேதாந்தி சொன்னானாம்.  அன்று விவிலியத்தில் பிறன்மனை நயந்து பெருமை இழந்த ஏரோது மன்னனிடம் ஒரு பாவமும் அறியா அருளப்பர் தலையை அறுத்துத் தர வேண்டினாரே அதைப் போலல்லவா இருக்கிறது.
           யாரையடா தலைகொய்வாய்?  பெரியார் என்ற வெடிமருந்துக் கிடங்கில், அண்ணா என்ற கந்தகத்தால் வடிவமைக்கப்பட்ட கலைஞரின் புதிய வார்ப்பாகிய உடன்பிறப்புத் தோட்டாக்கள் நாங்கள்.  எங்கள் தலையாய தங்கத் தலைவர் கலைஞரின் தலைக்கா விலை வைக்கிறாய்?  எடைக்கு எடை தங்கமா?  அங்கம் பதறுதடா?  வெறும் எண்பது கிலோ தங்கத்தின் மதிப்புதான் கலைஞரின் மதிப்பா?
     நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா?
     நீரை நீரால் நிறுத்த முடியுமா?
     வெறுப்பை வெறுப்பால் விலக்க முடியுமா?
     வெம்மையை வெம்மையால் மாற்ற முடியுமா?
     தீமைகள் எனக் கருதும் செயல்கள் அகற்றிடத்
     தீவிரவாதமெனும் மற்றொரு தீமை பயன்படுமா?
என்று எங்களையெல்லாம் ஆற்றுப்படுத்தி அமைதிக்குப் பங்கம் வராமல் தமிழகத்தின் நூறாண்டுக் கனவு நனவாக, மதவெறியர்களின் சூழ்ச்சியால் திட்டம் நிறைவேறாது போகாமல் சிறுமுனையில் பட்ட புண்ணைச் சிரிப்பாலே ஆற்றி வருங்கால வெற்றிக்கு வழிவகுக்கச் சொல்கின்றார் கலைஞர்.  தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் கண்டெடுத்த எங்கள் தங்கம் கலைஞர்.  தமிழனை என்ன நினைத்தாய்?  தமிழினத்தின் தலைவர் கலைஞரை என்ன நினைத்தாய்?  உடன்பிறப்புகள் தான் கலைஞரின் கேடயமும் வாளும்.  தெரிந்து கொள்.
     எங்கள் மன்னாதி மன்னன் கலைஞர், போர்ப் படைக்குத் தளபதியுண்டு – உடன்பிறப்புப் படையுண்டு.  அகிலத்தில் இதுபோன்று எங்குண்டு?  இங்குண்டு – புரிந்து கொள்.  இல்லையேல் புரிய வைப்போம்.
     கலைஞரை முதல்வர் மட்டும்தான் என்று எண்ணி விடாதே!  கலைஞரின் தலையெடுக்க நினைத்த வேதாந்தியே!  கலைஞர் தலைசிறந்த கவிஞர் தெரியுமா?
     சாமிதனைத் தொழுதிடுவோம்!
     பூமியிலே நம்மை வாழவைத்து வளரவைத்த
     சாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம் – ராம
     சாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம்.  பெரியார்
     ராமசாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம்
என்றைக்கும் கலைஞரின் முதல் மரியாதை பெரியாருக்குத்தான்.

பெரியார்

     வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு
பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு
செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு – வெண்
சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு – அதில்
சாகும் வரை ஒளி உண்டு!
பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றியபின் – இவரோ
படுகிழமாய்ப் போன பின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்.
பெரியாரின் தோற்றத்தை ஏற்றமுடன் இவ்வளவு அழகுத் தமிழில் கலைஞரால் மட்டுமே பாட முடியும்.

எரிமலையாய்ச் சுடுதழலாய்
இயற்கைக் கூத்தாய்
எதிர்ப்புகளை நடுங்க வைக்கும் இடி ஒலியாய்
இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
இழிவுகளைத் தீர்த்துக் கட்டும் கொடுவாளாய்
இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதென்சுநகர் சாக்ரடீசாய்
ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்சு வால்டேராய்
எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்.  இன்றைக்கோ
இறப்பின் மடியினிலே வீழ்ந்திட்டார்.
உலகத் தலைவர்களின் பண்புகளோடு பெரியாரின் பண்புகளை ஒப்பாய்வு செய்த உயர்ந்த கவிதை.

பாராட்டிப் போற்றி வந்த பழைமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!
ஈ.வெ.ரா.  என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின்
அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்.
ஈரோட்டுக் குருகுலத்தில் கலைஞர் இயற்றியது.  கலைஞரும் குருகுல மாணவர் என்பதைத் தெரிந்து கொள்.

பழித்துவிட்டான் பகுத்தறிவால்
பக்தி, மதம், புராணமெல்லாம்
பாழ்! பாழ்! பாழ்! என
உதித்து விட்ட புதுக்கருக்து – புரட்சிக் கருத்து
மிதித்து விட்டால் புழுக்கூடப் புலியாகுமென்றால்
புலியென்ன ஆகும்?  புரியாதார் இன்னும் கூட இருக்கின்றாரே!
அழுக்குருவப் பன்றி முதல் சொறிநாய்
கழுதைக் கூட்டம் – அனைத்துக்கும்
உரிமையுண்டு உயர் சாதிக்காரர்
உலவுகின்ற தெருக்களில் ஓடி விளையாட – ஆனால்
கடவுளின் கால் மூலம் பிரசவித்த
கடைக்கோடிச் சூத்திரனும் பஞ்சமனும்
அந்தத் தெருப்பக்கம் நடந்தாலே தீட்டு என்று
அநியாய நீதி உண்டு – அதன் பேர்தான் மனுநீதி – அதனை
மறுப்பதற்கு ஆளில்லை; ஈரோட்டில் பெரியார் பிறப்பதற்கு                                                                                                                         முன்னே!     
மனுநீதி என்ற அநியாயத்தைப் பெரியாருக்கு முன்னாலே
எதிர்க்க எவரும் முன்வரவில்லை என்கிறார் கலைஞர்.

களையெடுத்த சமுதாயக் கழனியில்தான்
பொதுவுடைமைப் பயிர் வளருமென்ற கருத்துச்
சுளையெடுத்துத் தந்தவரும் பெரியார் தாமே!
என்று பொதுவுடைமைக் கொள்கை மலர வேண்டும்       
என்று எண்ணியவர் பெரியார் என்கிறார் கலைஞர்.

கொள்ளை இருட்டுக்குள் கிடந்த தமிழ் நிலத்தைக்
கொள்கை ஒளியால் உய்விக்கத் தோன்றிய தந்தையே!
முடைநாற்ற மெடுக்கும் மூடத்தனங்கள்
கடைகட்டு மட்டும் தமிழர்க்கு வாழ்வில்லை!
நடை போட்டு வரும் உன் பாசறையின் சிப்பாய்கள் நாங்கள்;
தடை போட்டு மறித்தாலும் எம் தலைகளுக்குத் தாழ்வில்லை!
எம் தலைகளுக்குத் தாழ்வில்லை
என்கிறார் கலைஞர்.  வேதாந்தியே புரிந்துகொள்.


பேரறிஞர் அண்ணா

எண்ணக் குறிப்பறிந்தே
ஈடேற்றும் தம்பியரின் அண்ணாவே!
எனையிங்கே ஆளாக்கிக்
காத்திட்ட ஆருயிரே!
தம்மை ஆளாக்கிச் சீராட்டிப் பாராட்டிய அண்ணனுக்குத் தம்பியின் நன்றிக் கடன்.
ஏறுகின்றார் மேடையெனில் அது மகுடிநாதம்
எழுதுகின்றார் ஏட்டிலென்றால் அது தமிழர்வேதம்
எதிரிகளின் தலையெல்லாம் நெற்கதிர்போல் தாழ்வதற்கு
எம் அண்ணன் கற்றிருந்தார் சொல்லை ஆள்வதற்கு!
வாதம் செய்வதிலே வழக்கறிஞர் சிங்கமெலாம் தோற்க                                                     நேரும்! பிடி
வாதம் செய்வதிலே தேர்ச்சியில்லை அண்ணனுக்கு!
கம்பன் தமிழுக்குச் சிரக்
கம்பம் செய்கின்றேன்; ஆனால்
கம்பராமாயணம் ஏலேன்
என்றார் பேரறிஞர் அண்ணா.  அண்ணன் இராமாயணம் ஏலேன் என்ற பிறகு அவர் தம்பி கலைஞர் ஏற்பாரா?


கழகம் கண்டார்

ஈ.வெ.ரா.  பெரியாருடன் கருத்து மாறி
இன்னொரு கழகம் காண்பேன் என்று
கண்ணீர் பெருக்கிப் பிரிந்த போதும்
இரட்டைக் குழல் துப்பாக்கி போல் இருப்போமென்று
எதிரிகட்கு இடித்துரைத்தார் எங்கள் அண்ணன்
இன்று வரை திராவிடர் கழகமும் – திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டைக் குழல் துப்பாக்கியாகவே செயல்பட்டு எதிரிகளை நடுங்க வைக்கிறது.
யாரேனும் கேட்டதுண்டா?
பாரேனும் பகர்ந்ததுண்டா?
பதினெட்டு ஆண்டுக்குள் ஓர் இயக்கம்
பதுங்கிப் பாயும் வேங்கையெனப் பாராள வந்த கதை?
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்ததை ஆச்சர்யத்துடன் கலைஞர் கூறுகிறார்.

எழுத்தால் பேச்சால் எம்முள்ளம் கவர்ந்தவரே!
பழுத்தாய் நீ அறிவில் என்று
பறித்துக் கொண்டு ஓடியதோ காலக் குழந்தை?
என் செய்வோம் அண்ணா?
அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற கலைஞர் என் செய்வோம் என்று விம்முகிறார்.

பெருந்தலைவர் காமராசர்

கறுத்திருக்கும் உன்றன் உடல் என்றாலும் – நெஞ்சில்
கருத்திருக்கும் காலமெல்லாம் உழைப்பதற்கு!
கதராடை மேனிதனை அலங்கரிக்கும்
கதறுகின்ற ஏழைகளைக் கரம் அணைக்கும்
பச்சைத் தமிழனை உச்சி முகந்து மெச்சிப் புகழ்ந்தார் கறுப்புக் காந்தியென்று நம் கலைஞர்.

கடவுள்

கடவுளைக் காட்டுகிறேன் வா என்று
கட்டிலுக்கு அழைப்பவனெல்லாம்
கடைந்தெடுத்த துறவியாம் சாதுவாம் சாமியார்
காமன் கணை தொடுக்கும் கயவனெல்லாம்
காட்டுகின்றேன் சொர்க்கமென்று பெண்களையே
மீட்டுகின்றார் வீணையாக!
கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றி வாழும் வேதாந்திகளுக்குத் துறவியென்றும், சாமியென்றும் சொல்லிக் கொள்ளும் போலிகளையே சாடுகிறார்.  பெரும் துறவியாகக் கருதப்படுதிற மறைந்த குன்றக்குடி அடிகளாரிடத்தும் இப்போதைய இளைய மடாதிபதி குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடத்திலும் கலைஞருக்கு இன்றும் அன்பும் பற்றும் பாசமும் உண்டு.  காரணம் அவர்கள் தமிழ் வளர்ப்பதால் மதம் வளர்க்காமல் மரம் வளருங்கள் என்கிறார் கலைஞர்; காரணம் மதம் தலையை, நாக்கைக் கொண்டு வா என்று சொல்லத் தோன்றும் – மரத்தை வளர்த்தால் மக்களை வாழ வைக்கப் பயன்படும் என்கிறார்.

மதம் பிடிக்கவில்லை

குழந்தையாய்ப் பிறக்கும் போது மனிதன்
கும்பிடும் தெய்வம் எதுவென்று தெரியாமலே பிறக்கின்றான்.
பிறந்த பின்னரே தாயும் தந்தையும்
இந்து என்றால் இவனும் இந்துவாகிறான்!
பெற்றோர் இருவரும் இஸ்லாமியர் எனிலோ
இவனும் தன்மதம் இஸ்லாம் என்கிறான்!
இவனைப் பெற்றவர் இஸ்ரேலும் மேரியும் எனிலோ
இவனும் தன்மதம் கிறிஸ்கவம் என்கிறான்!
பெற்றோரும் உற்றாரும் கண்காணாமல் இருந்து
மற்றோர் எவரோ இவனை வளர்த்தால்
மதத்தை நினையாத மனிதனாய் வளர்வான் – தன்
கடவுள் யார் என்று கவலையும் கொள்ளான்!
மதம் பிடித்து மண்டையை உடைத்துக் கொண்டு அலையும் மனிதனைப் பார்த்துக் கலைஞர் நிதர்சனமான உண்மையை உரைக்கின்றார்.

கலைஞரே!  கழகத்தின் தாயுமானவரே!
தமிழே!  உயிரே!  உயிர்மெய் நீயே!
பெரியாரைத் தந்தையாக்கிக் கொண்டவரே!
அண்ணா அறிவாலயத்தின் தம்பியே!
எந்தையே! – உன்னாலே உன்னாலே
மதத்தை நினையாத மனிதனாக்கினாய்…
என்னைப் பகுத்தறிவுக் கொள்கையால் மனிதனாக்கினாய்,
அதனால் வணங்குகிறேன்.
நான் கண்டதும் கொண்டதும்
ஒரே தலைவர் கலைஞரைத்தான்.







-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.


 

                                                                                                                                          


ஞாயிறு, 10 மே, 2020

ஒழிக நீ எம்மண்…!





ஒழிக நீ எம்மண்…!

  

கொரோனா – நீ
வந்துதான் உணர்த்தினாய்…!

மண்டிக்கடையையுடைய பெரியார்-
மக்களிடம்…
மண்டிக்கிடந்த மூடப்பழக்கமொழிய
பகுத்தறிவு மருந்துக்கடை விரித்தார்…
கொள்வாரில்லை!

கொரோனா… நீ
வந்த பின்புதான்...
ஆந்திராவிலுள்ள சித்தூர்
திருப்பதி வைணவத்தலமாகட்டும்
கேரளத்தில் பத்தனம் திட்டாவிலுள்ள
சபரிமலை அய்யப்பன்  கோவிலாகட்டும்
தமிழகத்தில் மதுரை
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலாகட்டும்
இன்னும் உள்ள
அனைத்து கோவில்களில்-
தெய்வங்கள் காப்பதாய்ப்
பூசாரிகள் ஓதுவதும்…

கொரோனா… நீ
வந்த பின்புதான்...
இத்தாலி ரோம் நகரிலுள்ள
வாடிகன் புனித பீட்டர் சர்ச் முதல்
தேவாலயங்களில்-
தேவமைந்தன் காப்பதாய்ப்
பாதிரிகள் பாடுவதும்…

கொரோனா… நீ
வந்த பின்புதான்...
சவுதி அரேபியாவின்
மக்கா முதல்
மற்றுமுள்ள பள்ளிவாசல்களில்
இறைதூதர் காப்பதாய்
உலமாக்கள் உரைப்பதும் என
இன்னும் எத்தனை எத்தனை?
அத்தனை பேரும்
உண்மைக்குப் புறம்பானவற்றையே
உணர்த்திக் கொண்டிருக்கும்…
உண்மையை உணர்த்தி
அத்தனையும்  இழுத்து மூடச்செய்து விட்டாயே…!

‘ஆட்டம்காலி… படுதாகாலி…’ என்று
கொரோனா – நீ
வந்துதான் உணர்த்தினாய்!

கண்ணுக்குத் தெரியாத
கடவுள் இல்லை என்பதை…
கண்ணுக்குத் தெரியாத – நீ
வந்து உணர்த்தி விட்டாயே…!

உண்மையை உலகினுக்கு
உணர்த்தினாலும்…
நீ வாழ்கயென்று…
வாழ்த்த வழியில்லை…
உண்மையைச் சொல்ல
உனக்கு இத்தனை உயிர்ப்பலிகளா…?!

நாங்கள் வாழ…
ஒழிக நீ எம்மண்…!

 -மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.



வெள்ளி, 8 மே, 2020

அண்ணாவிற்குத் தம்பியின் தாலாட்டுப் பாடல்


பேரறிஞர் அண்ணாவிற்குத் திருச்சி சிவாவின்  தாலாட்டு





பட்டு மணல் தொட்டிலிலே
பூமணக்கும்  தென்றலிலே
கொட்டும் பனிக்குளிரினிலே
கடல்வெளிக்  கரையினிலே
உறங்குகின்றாய் மன்னா – நாங்கள்
கலங்குகின்றோம் அண்ணா
அருமை அண்ணா

உன்னை இங்குப் பிரிந்ததனால்
பூவுலகம் அழுகின்றது
தன்விழியை இழந்ததனால்
தடுமாறி விழுகின்றது ….                                          (2)
ஏதுமற்ற சூனியத்தில் – எங்கள்
மனம் தவிக்கின்றது
சூழுகின்ற துயர்க்கடலில்
மூழ்கி மூழ்கி துடிக்கின்றது ….                                     (2)
                           ஆரிரோ… ஆரிராரோ ….



கண்ணுறங்கு கலைமகனே
ஆவிவிட்டுப் போனபின்பும்
வாழுகின்ற தலைமகனே
                             ஆரிரோ… ஆரிராரோ ….
நாடுபட்ட நோய் தீர்க்க
நாளெல்லாம் பாடுபட்டாய்
பாடுபட்ட காரணத்தால்
உன் உடம்பில் மாறுபட்டாய்                                       (2)
மாறுபட்ட பொன்னுடம்பை
மீட்டுத்தர முடியவில்லை
ஆனமட்டும் பாடுபட்டும்
அந்த வித்தை பலிக்கவில்லை                                     (2)
                               ஆரிரோ… ஆரிராரோ ….

கண்ணுறங்கு கலைமகனே
ஆவிவிட்டு போன பின்னும் 
வாழுகின்ற தலைமகனே
                                ஆரிரோ… ஆரிராரோ ….
தூங்கிய தென்னவரை
தருணத்தில் விழிக்க வைத்தாய்
தாயைப் போல் அரவணைத்து
தன்மான உணர்வளித்தாய்                                        (2)

விட்டு எம்மைப் பிரிந்து செல்லும்
எண்ணத்தை யார் கொடுத்தார்
சிட்டு போல் சிறகடித்து
சொல்லாமல் ஏன் பறந்தாய்                                       (2)
                               ஆரிரோ… ஆரிராரோ ….

கண்ணுறங்கு தலைமகனே
ஆவி விட்டுப் போன பின்னும்
வாழுகின்ற தலைமகனே
                               ஆரிரோ… ஆரிராரோ ….             (2)


            *************************************


கையறுநிலையில் பேரறிஞர் அண்ணாவின்                
நினைவைப் போற்றும்  
கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம் அவர்களின் பாடலை... 
தாஜ் நூர் அவர்களின் மெல்லிய இசையில் 


திருச்சி சிவா அவர்கள் உருகிப் பாடித் தாலாட்டும் 
அருமையான பாடல்.    



பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க...



 -மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.