திங்கள், 17 டிசம்பர், 2018

கலைஞர் சிலை... கவிஞர் வைரமுத்துவின் பாமாலை!


              



கலைஞர் மு.கருணாநிதியின் 8 அடி உயர வெண்கலச் சிலையை

சோனியா காந்தி 16.12.2018 அன்று மாலை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைத்தார்.


          கலைஞர் சிலை திறப்பு விழாவைக் காண ‘கிளிக்‘ செய்க.

                   https://www.youtube.com/watch?v=H12izsXOGWw


ஒரு மலையே சிலையானது போல!


 கவிப்பேரரசு வைரமுத்து


மலையடி வாரம் பார்த்து
     மழைச்சாரல் விழுதல் போல
கலையடி வாரம் பார்த்துக்
     கவிதைகள் மலர்தல் போல
அலையடி வாரம் தன்னில்
     ஆட்படும் முத்தைப்போல் உன்
சிலையடி வாரம் தன்னில்
     சிந்தினேன் கண்ணீர்ப் பூக்கள்..


தலைமகன் பெரியா ராலே
     தன்மானப் பெருமை யுற்றாய்
கலைமகன் அண்ணா வாலே
     கனித்தமிழ்ப் புலமை பெற்றாய்
உலைக்களம் போல் உழைத்தே
     உயர்வினைப் பெற்றாய்; இன்று
சிலையாகி நிலைத்தாய்; பெற்ற
     செல்வனால் சிறப்புப் பெற்றாய்..


மடியிலே தமிழை வைத்தாய்
     மனதிலே உறுதி வைத்தாய்
வெடியிலே தீயைப் போலே
     வேகத்தை வைத்தாய்; கட்சிக்
கொடியிலே உதிரம் வைத்தாய்
     கொள்கையும் வைத்தாய்; கல்லக்
குடியிலே தலையை வைத்தாய்
     கோட்டையில் காலைவைத்தாய்..


சமத்துவ புரங்கள் கண்டாய்
     சரித்திரம் சலவை செய்தாய்
நமக்குநாம் என்றாய்; சிற்றூர்
     நகரமாய் ஆக்கி வைத்தாய்
குமரியின் கடலின் ஓரம்
     குறளாசான் சிலையெடுத்தாய்
இமயத்து வடக்கும் தெற்கை
     எட்டியே பார்க்க வைத்தாய்..


பன்னூறு ஆண்டின்முன்னே
     பாரினை ஆண்ட மன்னர்
எண்ணூறு களங்கள் கண்டார்
     இன்புகழ் கொண்டார்; ஆனால்
தொண்ணூறு கவிஞர் கூடித்
     தோளிலே மாலை யிட்டுப்
பண்ணூறு படித்த காட்சி
     பாரிலே நீதான் கண்டாய்..


மறக்குல மாண்பு காட்ட
     மாக்கதை செய்தாய்; கல்வி
சிறக்கவே வேண்டு மென்று
     செழுந்தமிழ் உரைகள் செய்தாய்
இறக்காத காவி யங்கள்
     எதிர்கால ஓவி யங்கள்
மறக்கவா முடியும்? – உன்னை
     மறந்தவன் இறந்த வன்தான்


பொய்ப்பழி சொல்லிப் பார்த்தார்
     புவிஅதை ரசிக்க வில்லை
மெய்ப்புகழ் குறைய வில்லை
     மேம்பாடு சரிய வில்லை
அய்யனே நீங்கள் கற்ற
     அண்ணாவின் தமிழ்மீ தாணை
பொய்களால் போர்வை செய்து
     புதைக்கவா முடியும் வானை?


செப்படி வித்தை காட்டும்
     செந்தமிழ் எங்கே; நாங்கள்
தப்படி வைத்த போது
     தடுத்தவன் எங்கே? எம்மை
இப்படித் துடிக்க விட்டே
     இறந்தவன் எங்கே; நானும்
அப்படி அழுத தில்லை
     அப்பனே மறைந்த போதும்..


எங்களின் மதத்தின் பேரோ
     இனமானம் இனமானம் தான்
எங்களின் கடவுள் எல்லாம்
     இறவாத தமிழ்ஒன் றேதான்
தங்களால் காக்கப் பெற்ற
     தமிழ்மானம் சாய்வதில்லை
செங்கதிர் தீர்ந்து போகும்
     திராவிடம் தீர்வ தில்லை..


உளமாரச் சொல்லுகின்றேன்
     உன்படை வெல்லும்; கொள்கைத்
தளத்திலே நின்று வீரத்
     தமிழ்நாடு செல்லும்; வெற்றிக்
களம்பல கண்ட எங்கள்
     கலைஞரே உங்கள் பேரை
இளம்பிள்ளை சொல்லும்; நாளை
     இந்நாடு திருப்பிச் சொல்லும்..

கவிதையைக் கவிப்பேரரசு வைரமுத்துவின் குரலில் கேட்க ‘கிளிக்’ செய்க.

                                           https://www.youtube.com/watch?v=GTil9H1tzC  

நன்றி - கவிப்பேரரசு வைரமுத்து



- மாறாத அன்புடன்,

  மணவை ஜேம்ஸ்.