வியாழன், 28 ஜனவரி, 2016

வாலியின் வசியம் செய்யும் வாலிபப் பாடல்கள்!


குட்டீஸ் நடனம்


என் ஆசை மச்சான் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தத்   திரைப்படத்தில் 



‘வாலிபக் கவிஞர்’ வாலியின் வரிகளுக்குத் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இசையில் பாடியவர் ‘சின்னக்குயில்’ சித்ரா;  நடித்தவர்கள் விஜய்காந்த் & ரேவதி.




காணொளி காண ‘கிளிக்’ செய்க...



ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்


சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
வீரப்பாண்டி தேருப் போல பேரெடுத்த சிங்கம் தான்
ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்


பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல 
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல 
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
சேலையோட நூலு போல சேர்ந்திருக்கும் பந்தம் தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித் தந்த சொந்தம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்...

***********************************************************************************************************



‘மெளனம் சம்மதம்‘ 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் வாலியின் வரிகளுக்கு இளையராஜாவின் இசையில்  ஜேசுதாஸ் & சித்ராவும் பாடிய ரம்மியமான பாடல்.  நடித்தவர்கள் மம்முட்டி மற்றும் அமலா

ஆண் : கல்யாண தேன் நிலா
          காய்ச்சாத பால் நிலா
          நீதானே வான் நிலா
          என்னோடு வா நிலா
          தேயாத வெண்ணிலா
          உன் காதல் கண்ணிலா
          ஆகாயம் மண்ணிலா

          கல்யாண தேன் நிலா
          காய்ச்சாத பால் நிலா


ஆண் : தென்பாண்டி கூடலா
          தேவார பாடலா
          தீராத ஊடலா
          தேன் சிந்தும் கூடலா

பெண் : என் அன்பு காதலா
           எந்நாளும் கூடலா
           பேரின்பம் மெய்யிலா
           நீ தீண்டும் கையிலா

ஆண் : பார்ப்போமே ஆவலா
          வா வா நிலா...

பெண் : கல்யாண தேன் நிலா
           காய்ச்சாத பால் நிலா

ஆண் : நீதானே வான் நிலா
          என்னோடு வா நிலா


பெண் : உன் தேகம் தேக்கிலா
          தேன் உந்தன் வாக்கிலா
          உன் பார்வை தூண்டிலா
          நான் கைதி கூண்டிலா

ஆண் : சங்கீதம் பாட்டிலா
          நீ பேசும் பேச்சிலா
          என் ஜீவன் என்னிலா
          உன் பார்வை தன்னிலா

பெண் : தேனூறும் வேர்ப்பலா
           உன் சொல்லிலா..ஆ.ஆ...

ஆண் : கல்யாண தேன் நிலா
          காய்ச்சாத பால் நிலா
          நீதானே வான் நிலா
          என்னோடு வா நிலா

பெண் : தேயாத வெண்ணிலா
           உன் காதல் கண்ணிலா
           ஆகாயம் மண்ணிலா

ஆண் : கல்யாண தேன் நிலா
          காய்ச்சாத பால் நிலா



காணொளி காண ‘கிளிக்’ செய்க...





-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.



செவ்வாய், 26 ஜனவரி, 2016

பொங்கட்டும் பொங்கட்டும்! - கவிதை


பொங்கட்டும் பொங்கட்டும்! 


மணவைத் தமிழ்ச் சங்கம் இன்று (26.01.2016) நடத்திய 

பொங்கல் விழாக் கவியரங்கில் 

புலவர்  சுப்பிரமணியன் அய்யா தலைமையில் 

நான் எழுதி வாசித்த...  கவிதை.






பொங்கட்டும் பொங்கட்டும்!


சங்கமெங்கும் பொங்கும் தமிழ் – மணவைத் தமிழ்ச்
     சங்கத்தில் பொங்கும் தமிழ்!
சங்கமெல்லாம் வளர்ந்த தமிழ் –  மதுரைச் தமிழ்ச்
     சங்கத்தில் பொங்கு தமிழ்!
அங்கமெல்லாம் கலந்த  தமிழ் – முச்சங்கத்தில்
     சங்கமமான எங்கள் தமிழ்!
எங்கள் தமிழுக்கு முதல் வணக்கம்- கவியரங்கத்
     தங்கத் தலைவர் மணியாக!
அங்கம் வகிக்கும் அரங்கத்தில் – சுவைஞராகச்
     சிங்காதனத் தினருக்கும் வணக்கம்!




சூரியன் பொங்கியதால் பூமித்தாயவள்
சூல்கொண்டாளோ?
பூமித்தாயவள் பொங்கியதால்                          
பூகம்பமானாளோ?
பூகம்பம் பொங்கியதால்
ஆழிப்பேரலையானதோ?
ஆழிப்பேரலை பொங்கியதால்
பேய்மழையானதோ?




பேய்மழை பொங்கியதால்
செம்பரம்பாக்கம் கடலானதோ?
இல்லை... இல்லை... கடலூரானதோ?
மாமழை போற்றினோம்- ஆனால்
மாமழையே! - உனக்கு
மனித உயிர்களின்மீது
இத்தனை ஆசையா?
எத்தனை உயிர்களைப்
பொங்கிப் பொங்கித் தின்றாய்...?!                    
எங்களுக்குச் சரிவர                                      
எண்ணிக்கை தெரியவில்லை...!
புள்ளிவிவரத்தை நீயாவது
சரியாகச் சொல்வாயா...?  
                            

 
இயற்கையே! - நீயே பொங்கினால்
சாமன்யர்கள் நாங்கள்
என்ன செய்வோம்...?
உன் சக்தியைக் காட்டிவிட்டாய்...!

                                                                                              
இயற்கைப் பேரிடரா...?
இல்லை...
செயற்கைப் பேரிடரா...?
பட்டிமன்றம் நடத்த வேண்டாம்...!
ஏனென்றால் சில நேரங்களில்...                       
நடுவர்கள்கூடத்
தீர்ப்பைத் திரித்துச் சொல்லி விடலாம்...!

                                                                                                        

‘கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
-என்று அய்யன் சொன்னதைப் போல
இந்தக் ‘கேட்டினும் உண்டோர் உறுதியாக
மனிதநேயம் பொங்கச் செய்தாய்...!
மதச்சங்கிலியைக் கட்டவிழ்த்து
மனித உயிர்களைப் பிணைத்தாய்...!                              
சாதியைத் தொலைத்து
சாதிக்கச் செய்திட்டாய்...!  ஆமாம்...
தன்னார்வத் தொண்டுள்ளங்களை
‘இணைவோம்... இணைப்போம்என்றே
நாட்டுக்கு அடையாளம் காட்டி...                         
நாட்டுப்பற்றை வளர்க்க உதவிட்டாய்...!




மதுவெள்ளம்
மகாநதியாகப் பொங்கி ஓடும்போது - அதில்
மாட்டிக் கொண்டவன் குடிமகன்தானே!
‘குடி குடியை கெடுக்கும்என்றால்
குடியை கெடுக்கக் கோ எதற்கு?
குடிமகனின் உள்ளத்தின் பொங்கல்...!                       
பொங்கட்டும் பொங்கட்டும்...!



மது அரவத்தின் நச்சுப்பல்லில் -
நாசமாகிப் போகின்றனவே...
மாணவச் சமுதாயங்கள்...!
எத்தனை சட்டக் கல்லூரி ‘நந்தினிகள்
எத்தனை முறைதான் சிறை செல்வது...? 

             
அய்ம்பது முறைக்கு மேல் சிறைவாசம்...!
தமிழச்சிகளின் கோபம்...
விதவைகளின் சாபம் வீணாகுமோ...?
தாய்க்குலத்தின் கண்ணீர்ப் பொங்கல்...!
பொங்கட்டும் பொங்கட்டும்...!



                                                                                                       
மதுவிலக்கு வேண்டி-
காந்தியவாதி சசிபெருமாள்...
வாதிட்டு... வாதிட்டு...
கடைசியில் உயிர்த்தியாகம் செய்தாரே!
அன்னாரின் குடும்பம்
அவரை இனி என்று(ம்) காணும்...?
விரைவில் மதுவிலக்கு காணும் பொங்கல்
பொங்கட்டும் பொங்கட்டும்...!



தமிழனின் வீரவிளையாட்டு-
ஏறுதழுவுதலை ஓரம்கட்டிய
மேல்தட்டினரைத் தட்டிவிடுவது யார்?
விலங்கின ஆர்வலர்களே...!                                              
காளைமாடுகளைத் தொட்டதாவதுண்டா...?         
ஆண்டாண்டாக மாட்டை வளர்த்துப்
பாதுகாப்பவர்களுக்குத் தெரியாதா?


ஆவின் பாலைக் கன்றிற்குக் கொடுக்காமல்
அருந்துவது மட்டும்
எந்த வகையில் நியாயம்...?
நியாயமாகப் பார்த்தால்...                               
மாட்டை வெட்டிக் கொல்லப்படுவதையல்லவா
தடுக்க முனைப்புக் காட்டியிருக்க வேண்டும்...?
அதற்காக உங்கள் உள்ளம் பொங்கட்டும்...
பொங்கட்டும் பொங்கட்டும்!      
                             


இலங்கைத் தமிழன் வாழ்வில்
எப்போது பொங்கும்
விடுதலைப் பொங்கல்?                                 
பொங்கட்டும் பொங்கட்டும்!



வருகிற(து) தேர்தல் பொங்கல்...!
மக்கள் மனத்திற்குத் தேறுதல் தருமா...?
ஆறுதல் தருமா தேர்தல் பொங்கல்...
பொங்கட்டும் பொங்கட்டும்... இன்பம்
தங்கட்டும் தங்கட்டும்...இன்பம்
பொங்கட்டும் பொங்கட்டும்!



-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.













சனி, 23 ஜனவரி, 2016

பிழையின்றித் தமிழில் எழுதலாம்! 1



பிழையின்றித் தமிழில் எழுதலாம்!

                                                                                


நாம் எழுதுகின்ற சொற்றொடர்களில் ஏற்படும் பிழைகளைத் திருத்தி  எழுத வேண்டுமல்லவா...?  வாருங்கள்... முயற்சி செய்து பார்ப்போம்.  முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்று உண்டோ?

பிழையான சொல் ‘சிவப்பு வண்ணத்திலும்
பிழை திருத்தம் ‘பச்சை வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
                                


1. என் முதற்கண் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(முதற்கண் நன்றி என்றால் இரண்டாம் கண் நன்றி.  மூன்றாம் கண் நன்றி என்று என்று உள்ளதாக அமைந்துவிடும்.)

   என் நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.
          


2. செய்திகள் வாசிப்பது சித்ரா.(இது தவறு)

   செய்திகள் வாசிப்பவர் சித்ரா.- (சரியானது)



                       



3. இந்த நூலை இயற்றியது பேராசிரியர் சாலமன் பாப்பையா.

   இந்த நூலை இயற்றியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

‘இயற்றியது என்பது அஃறிணைச் சொல்.  அதனால் இயற்றியவர் என்று இருப்பதே சரியானது.



4. அவர் பெரிய செல்வந்தர்

   அவர் பெரிய செல்வர்.

                                                                



5. அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(ஆங்கில மொழியின் தாக்கத்தால் அமைந்த பிழை வழக்கு.)

   அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

                                                                    



6. அமைச்சர் தனது தொகுதிக்குச் சென்றார்.

(அமைச்சர் என்பது பன்மைக்குரிய சொல்.  தனது என்பது ஒருமைக்குரிய சொல்.)

   அமைச்சர் தமது தொகுதிக்குச் சென்றார்.

                                                               



7. இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒழுங்கீனங்கள் ஏற்படாது.

(ஒழுங்கீனங்கள் என்னும் எழுவாய் ஒரு பன்மைச் சொல் அதற்குப் பயனிலையும் பன்மையில்தான் அமைய வேண்டும்.  ஏற்படாது என்பது ஒருமைக்குரிய பயனிலை. 

   இத்திட்டத்தை நிறைவேற்றுதில் ஒழுங்கீனங்கள் ஏற்படா.

                                 



8. ஊட்டியை மலையரசி என்று அழைக்கிறார்கள்.

   ஊட்டியை மலையரசி என்று வழங்குகிறார்கள். / குறிப்பிடுகிறார்கள்.
                                                                                   



9. பிரதி ஞாயிறுதோறும் விடுமுறை.

பிரதி (வடசொல்) என்றாலும் தோறும் என்றாலும் ஒரே பொருள்தான்.

   ஞாயிறு தோறும் விடுமுறை /
   பிரதி ஞாயிறு விடுமுறை.


                                                                       


10. தசரதனது மகன் இராமன்.


தசரதன் +   அது என்பதில் அது என்பது அஃறிணைக்குரியது.  தசரதனது மகன் என்று எழுவது பிழையாகும்.
நான்காம் வேற்றுமையில் கூற வேண்டியதை ஆறாம் வேற்றுமையில் கூற முயல்வதால் தசரதனது மகன் என்னும் தவறு உண்டாகிறது.
சிலர் இந்த ஆறாம் வேற்றுமையை வைத்துக் கொண்டு அஃறிணை உருபை மட்டும் மாற்றி ‘தசரதனுடைய மகன் இராமன்என்று எழுதுகிறார்கள்.  ‘உடைய’ என்பது ஆறாம் வேற்றுமைக்குச் சொல்லுருபு.  இக்காலத்தில் இத்தொடரைப் பிழையற்றதாய் ஏற்றுக் கொள்கிறார்கள்.  வேற்றுமை உருபைத் தராமல் ‘இன்என்னும் சாரியையினை மட்டும் இணைத்து ‘தசரதனின் மகன் இராமன்’ என்பதையும் தற்காலத்தில் ஏற்கின்றனர்.

         தசரதனுக்கு மகன் இராமன்.



நன்றி: தமிழாசிரியர் முழக்கம்.



                                                                தொடரும்...

-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.