சனி, 31 ஜனவரி, 2015

என்னுடைய மேடை நாடகம் -2 ‘மண்ணில் இந்த காதல்’


என்னுடைய மேடை நாடகம்

மண்ணில் இந்த காதல்





28-7-94  வியாழக்கிழமை மாலை 7-00 மணிக்கு  நடந்ததை ‘மாலை மலர்‘ விமர்சனத்தை  அறியத்தரப்படுகிறது. 

                   திருச்சி ஆர்.ஆர். சபாவில்  80-ம் ஆண்டு நாடகப்போட்டி நடந்து வருகிறது.  6-வது நாளான நேற்று, திருச்சி புனிதாலயா குழுவினரின் நாடகமான  “மண்ணில் இந்த காதல்”  இடம் பெற்றது.



                                      (புதுமண தம்பதிகளாக தோன்றும் 
                                         இருதயராஜ் -எலிசபெத்   அருகில்  தந்தையாக                                                                     நிற்பவர்  ஜார்ஜ் ஸ்டீபன்) 


          கல்லூரி மாணவன் ஜெயராஜ்.  அவரது  காதலி துளசி.   இருவரும் நண்பர்கள் உதவியால் ஜாதி மதம் கடந்து திருமணம் செய்து கொள்கிறார்க்ள.  துளசியின் தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர்.  அவர் ஜெயராஜை மிரட்டி திருமண ஜோடியை பிரித்து விடுகிறார்.  துளசிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கப் போவதாக திருமண பத்திரிகை வருகிறது.

          ஜெயராஜ் இடிந்து போகிறான்.  மாதங்கள் உருண்டோடுகின்றன.  ஜெயராஜுக்கு அவளது அத்தை மகள் ஏஞ்சலினை வற்புறுதி கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.  மாடு முட்டி படுகாயம் அடைந்த ஜெயராஜ் ஆஸ்பத்திரிக்கு செல்ல... அதே ஆஸ்பத்திரிக்கு துளசி பிரசவத்துக்காக வருகிறாள்.  அவளுக்கு குழந்தை பிறக்கிறது.  திருமணம் செய்து கொண்டு இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்த... ஒரு சில நாட்களை நினைத்து கண்ணீரில் கரைகிறார்கள்.

          அப்போது துளசி, ஜெயராஜிடம்,  “நான் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை.  இது நம் குழந்தைதான்” என்று சொல்கிறாள்.  மாடு முட்டி சிகிச்சை பெறும் ஜெயராஜ்,  ஏஞ்சலின் என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறான்.  அவன் இனி தந்தை ஆகும் தன்மையை இழந்து விட்டான் என்ற உண்மை துளசிக்கு தெரிய வருகிறது.  மயங்கி விழும் அவள் ‘கோமா’ நிலையை அடைகிறாள்.  “துளசி பெற்றது என் குழந்தை ... அதை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று ஜெயராஜ் கேட்க, துளசியின் தந்தை மறுக்கிறார்.  அது வழக்கு வடிவில் கோட்டுக்கு போகிறது.

          இந்த நிலையில் துளசி மயக்கம் தெளிந்து எழுகிறாள்.  தன் குழந்தையை ஜெயராள்-ஏஞ்சலின் தம்பரிதயினரிடம் ஒப்படைந்துவிட்டு தனிமரம் ஆகிறாள்.


காதல் ஜோடி

          கல்லூரி மாணவர் ஜெயராஜ் (ஆர். இருதயகுமார்) - துளசி (டி.ஆர்.ராஜேஸ்வரி) காதல் உயிர் உள்ளதாக இருந்தது.  இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்ச முய்ன்றார்கள்.  பிரிந்த பின்பு துளசியும், ஜெயராஜும் தவித்த தவிப்பு கண்முன்னேயே நிற்கிறது.

          நாயகன் இருதயகுமாரின் சோகம் - தாகம் - வேகம்  எல்லாமே ஏற்ற இரக்கம் இல்லாத ஒரே ‘பிராண்ட்’ கொஞ்சம் வித்தியாசப்படுத்தி இருக்கலாம்.  ராஜேஸ்வரி வழக்கம் போல் குறை வைக்கவில்லை.  ஆஸ்பத்திரி காட்சியில் ‘துடிக்க’ வைத்தார்.

          போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் (எம்.குணசேகர்) பொருத்தமான தேர்வு (முக பாவங்களுக்கு இன்னும் முயற்சி வேண்டும்)  ராயல்சாமி (ஜார்ஜ் ஸ்டீபன்) ஏஞ்சலின் (எலிசபெத்) குறை சொல்ல முடியாதவர்கள்.

          டாக்டர் (சகாயராஜ்), வக்கீல்கள் (பாண்டுரங்கள், மெல்க்யூர்) நீதிபதி (செபாஸ்டின்) உள்பட அனைவரும் அந்தந்த பாத்திரங்களாகவே வந்து இருநதனர்.  இதில் வெற்றி பெற்றவர் ஒப்பனையாளர் எம்.சி.தங்கராஜ்.

       
இயக்கம்

          ‘ஜாதி வெறிதான் இந்தியாவில் வரதட்சணை ஒழியாமல் இருப்பதற்கு காரணம்...’ -இது வசனத்தின் ஆழத்துக்கு ஒரு உதாரணம்.  நாயகன், வில்லன் பாத்திரங்களை இன்னும் மெருகேற்றி இருக்கலாம் என்றாலும் கதையில் சொல்ல நினைத்ததை சரியாக சொல்லி கதை,வசனம், இயக்கத்துக்கு பாராட்டு பெற்றவர் மணவை ஜேம்ஸ்.

          ஆஸ்பத்திரி, கோர்ட் கட்டிடங்கள் அப்படியே மேடைக்கு வந்திருந்தன.  இசை இசைந்து ஒலித்தது என்றாலும் குழந்தையின் குரல் ‘அபஸ்வரம்’.  “மணணில் இந்த காதல்...’ மனநிறைவு தரும் காதல்தான்.  நாடகப் போட்டியில் இந்த காதலுக்கு எந்த இடம் கிடைக்கும்?  நீதிபதிகள்தான் நிர்ணயிக்க வேண்டும்.

_________________________________________________________________________________------------------------------------------------------------------------------------------------------------
                                                                   
             நாடகம்  முதல்காட்சி  நிழல்காட்சி (Shadow)  காதலர்கள் இருவரும்  பல (Still) நிலைகளில் நிற்கவைத்து Live -வாக ‘பாயுமொளி நீயெனக்கு... பார்க்கும் விழி நானுனக்கு......’ Back ground -இல்  ‘பாரதியார்‘ பாடலை       ஆண்-பெண் பாடகர்களைப் பாடவைத்து இடையிடையே நடிகர்களை புரஜெக்டரில் சினிமாபோன்று  Title  சிலைடில் போட்டோம்!
                                                                  

          காதலர்கள் நண்பர்களின் உதவியால் நாயகிவீட்டைவிட்டு நாயகனோடு  வந்து திருமணம் செய்து.... பிறகு ஓர் இரவில்  வெளியில் ஓர் அறையில் தங்குகிறார்கள் ...நிழல்காட்சி (Shadow)   இரண்டு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருக்கிறது... இரண்டும் நெருங்கி வந்து... இணைந்து ஒன்றாக எரிவதைப்போலக்  காட்சிப்படுத்தினேன்.   அது அனைவரின் பாராட்டையும் பெற்றது.
                                                     

                                                                                மாடு முட்டுவதுபோன்றக் காட்சிக்காக கரகாட்டத்தின்போது மாடு வேஷம் போட்டு ஆடுவார்கள் அல்லவா?  அதைப் போல  ஏற்பாடு செய்து (Shadow)  நாயகனை முட்ட வைத்தோம்.  முட்டுகின்ற பொழுது  உண்மையான கொம்பு அவர் மேல்பட்டு அவருக்கு மயக்கம் வந்துவிட்டது.  அடுத்த காட்சி மருத்துவமனை என்பதால் அவர் வீல் சேரில் வருவதாகக் கதையிருந்ததால் தப்பிப்பிழைத்தோம்.

          இதில் உச்சகட்டம்  (Highlight) என்னவென்றால்... பிறந்த குழந்தை வேண்டுமே!  பொம்மையை வைத்தால் நன்றாக இருக்காது என்று எண்ணியதால் பிறந்த குழந்தை கிடைக்குமா என்று நண்பரிடம் கேட்டபொழுது ... பிறந்து ஒரு வாரங்கூட ஆகாத  குழந்தை இருக்கிறது... அந்தக் குழந்தையின் தாய் எனக்குத் தெரியும் என்று அந்தத் தாயைச் சம்மதிக்கவைத்து  அந்த தாயும் வந்து காத்திருக்க...(தொப்புள் கொடி அறுபடாத நிலையில்)  அந்த ஒரு வாரக் குழந்தையும் நடித்தது... அந்த குழந்தைக்கு இப்பொழுது  வயது இருபது இருக்கும்!


          அன்றைக்கு அந்த ‘பிறந்த குழந்தை’யாகப் பார்த்தது... இப்பொழுது நண்பரிடம் சொல்லி,   அந்தக் குழந்தை நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது!
                                                               


நன்றி.
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.
 manavaijamestamilpandit.blogspot.in

வெள்ளி, 23 ஜனவரி, 2015

கே.பாலசந்தர் ஒரு சகாப்தம்





கே.பாலசந்தர் ஒரு சகாப்தம்


(மணவை ஜேம்ஸ்)





கே.பி. என்று-
அழைக்கப்படுகின்ற...
திரைத்துறையில்-
பொன்விழா கண்ட துரையவர்...
நல்லமாங்குடி மைனரவர்...
சதம் படங்களுக்குமேல் இயக்கிய
சரித்திர சிகரமவர்.

இவரின்-
மெழுகுவர்த்தி நாடகத்தில் உருகி...
தெய்வத்தாயின் வசனத்திற்கு
வாய்ப்பளித்தார் எம்.ஜி.ஆர்!

இருகோடுகளில் சிவாஜியை
இணைத்தார்...!
நீர்க்குமிழியில் உடையாமல்-
நாணலாக வளையாமல்
திரைக்கடலில்...
எதிர்நீச்சலிட்டே
அரங்கேற்றம் கண்டவர்.


அவள் ஒரு தொடர்கதையாக
சொல்லத்தான் நினைக்கிறேனென்றே...
மன்மத லீலையை வென்று
ஆபூர்வ ராகங்கள் மீட்டினார்.


கமல் ரஜினி ஸ்ரீதேவி மூவரை
மூன்று முடிச்சில் இணைத்து
அவர்களை
நிழல் நிஜமாக்கிக் காட்டினார்.

தெலுங்கில்- மரோ சரித்ரா

இந்தியில் ஏக் துஜே கே லியே

இந்திய மொழிகளில்...
வெற்றிக்கொடி கட்டினார்.

தப்புத் தாளங்கள் போட்டு...
தில்லு முல்லு செய்து...
நினைத்தாலே இனிக்குமென...
மீண்டும் கமல் ரஜினியை இணைத்தார்.



வறுமை நிறம் சிகப்பாக்கி
தண்ணீர் தண்ணீர்குடிக்க வைத்து
அச்சமில்லை... அச்சமில்லையென்றே
உச்சம் தொட்டவர்.

அறுபதுக்கும் மேலானவர்களை
நடிப்பில் அறிமுகப்படுத்தி
மேலானவர்களாக்கிய
மேலானவர். 

புதுப்புதுப் அர்த்தங்களை
ன்னால் முடியும் தம்பியென
அழகனாய்
புன்னகை மன்னனானார்!

கல்கி அவதாரமெடுத்து
டூயட் பாடி
கடைசியில்...
பொய்யில் மெய்யாய் நடித்து
பார்த்தாலே பரசவப் படுத்தி
“தாதா சாகேப் பால்கே“
விருது வாங்கியே பரவசப்பட்டே
மூச்சை விட்டார்!.

            

                                        -மாறாத அன்புடன்,


                                         மணவை ஜேம்ஸ்.

புதன், 14 ஜனவரி, 2015

மணப்பாறையில் மேடை கட்டி...

                 

         மணவை பொன் மாணிக்கம்  

                  மணப்பாறையில் மேடை கட்டி...

                                 
           
                                                           
                       மணப்பாறை தவிட்டுப்பட்டி கிராமத்தில், பொன்னன்-லட்சுமி அம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார் மணவை பொன் மாணிக்கம்.  இருப்பதை வைத்து சிறப்பாய் சமைக்கும் அம்மா மீது மாணிக்கத்துக்கு பாசம் அதிகம்.  ‘இளைத்திருக்கும் பிள்ளைக்கு இலையில் சோறு போட்டால், சதை பிடிக்கும் என்று உறவினர் சொல்ல, ஆறேழு வருடங்களாக இலையில் சோறு போட்டு வளர்த்த அன்னையாயிற்றே!

                       தியாகேசர் ஆலை உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதோ கவிதை கைவசமானது.  பெரியார் கல்லூரியில் படித்தபோது புதுக்காலனி கம்பன் கலைக்குழு நண்பர்கள் உதவியுடன் ‘மனிதன் என்ற போர்வையில்’ நாடகத்துக்கு கதை, வசனம் எழுதி, இயக்குனராகவும் பரிமளித்தார்.

                        சொந்த பந்தங்களின் பிள்ளைகளைப்போல மகனும் அரசுப்பணியில் அமரவேண்டும் என்பது அப்பாவின் ஆசையாக இருந்தது.  ‘லட்சுமி மகனா நீ?!  என்று எல்லோரும் வியக்கும்படி என் மகன் அவன் வழியில் முன்னேறுவான்’ என்று தீர்ககதரிசனம் காட்டினார் அம்மா.  கல்லூரிப்படிப்பு முடிந்ததும் தாய்மாமன் தங்கப்பல் பழனி கொடுத்த கம்பராமாயணப் புத்தகத்துடன் சென்னைக்கு வந்தார் மாணிக்கம்.  சென்னை வானொலியில் ஒலிபரப்பான ‘தகுதி’ நாடகங்கள் ஒரு புதிய வட்டத்தை உருவாக்கிக் கொடுத்தன.  பார்த்தசாரதி சபாவில் நடந்த நாடகப் போட்டியில் இவரது ‘கர்ப்பக்கிரகம்’ பரிசைத் தவறவிட்டபோதிலும், சர்சைக்குள்ளாகி, நல்ல நாடகம் என ‘தாய்’ பத்திரிகையில் வலம்புரிஜான்,  வார்த்தைகளால் வக்காலத்து வாங்கும் அளவுக்கு அறியப்பட்டது.   ‘தாய்’ பத்திரிகையில் சுதந்திர படைப்பாளி,  ‘ராணி’யில் சிறுகதை எழுத்தாளர் என்று எழுத்துக்கோலம் போட்டுக் கொண்டிருந்த மாணிக்கத்துக்கு ‘பாக்யா’வின் வாசல் திறந்தபோது வசந்தம் வீசி, வெளிச்சமான விலாசம் கிடைத்தது.

                            ‘புத்தகமாக வெளிவரத் தகுதியற்ற எதையும் எழுதுவது வீண்’ என்கிற கவிப்பேரரசு வைரமுத்துவின் வார்த்தைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மாணிக்கம்,  ‘பாக்யா’வில் எழுதியவையெல்லாம் அவரது எழுத்தாசான் கே.பாக்யராஜின் மெய் ஆசியுடன் புத்தகங்களாக வெளிவந்தன.

                             ‘எதை எதையோ ...
                               எதிர்பார்த்து எதிர்பார்த்து
                               இறுதியில்...
                               நலம் விசாரிக்கும் கடிதம் மட்டுமே
                               எதிர்பார்த்து...
                               இறுதி மூச்சுவிட்ட
                               என் தாய் தந்தையர்க்கு....’  
-என்று இவர் எழுதிய சமர்ப்பண வரிகள் பல சினிமாக் கலைகர்களால் பாராட்டப்பட்டன.

                               ‘படித்துப் பார்த்த எனக்கே கண்ணீர் துளிர்க்கிறதென்றால்,  உணர்ந்தெழுதிய உமக்கு எப்படியிருக்கும்?’ என்று உச்சி முகர்ந்திருக்கிறார் வைரமுத்து.

                               எம்.ஜி.ஆரைப்பற்றி இவர் எழுதிய ‘எட்டாவது வள்ளல்’ பத்துப்பதிப்புகளைக் கடந்து பாராட்டுகளை அள்ளியது.  இவரது ‘ஐந்தாம் வேதம்’ சிறுகதைத் தொகுதி, கால் காசு செலவில்லாமல் காதல்காட்சிகளைக் கவந்துகொள்ள சில சினிமா இயக்குனர்களுக்குக் கைகொடுத்தது.

                              சென்னை சாலிகிராமம் சத்யா கார்டனில் இருந்த இயக்குனர் ராஜகுமாரன் அறைக்குச் செல்கிறார் மணவை பொன்.மாணிக்கம்.  அங்கே சிறிய  பூஜையறையில் வைக்கப்படிருந்த சாமி படங்களுடன் ‘எட்டாவது வள்ளல்’ எம்.சி.ஆரும் இடம் பெற்றிருந்தார்.  ‘எங்க அப்பனைப் பற்றி புத்தகம் எழுதின அதே கையால என் படத்துக்கு ஒரு பாட்டு எழுதிக்கொடுங்க’என்று சொல்லி மணவைக்கான பாட்டுச்சாலையைத் திறந்துவிட்டிருக்கிறார் ராஜகுமாரன்.  ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ படத்தில் சிற்பி இசையில், ‘பாசமுள்ள சூரியனே, தேயாத சந்திரனே...’ என்று இவர் எழுதிய முதல் பாடலை மனோவும் கிருஷ்ணராஜும் பாடியிருந்தார்கள்.

                        ரவிஷங்கர் இயக்கத்தில், சிற்பி இசையில் வெளிவந்த ‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தில் இவர் எழுதி, உன்னிமேனனும் சுஜாதாவும் பாடிய ‘முதல் முதலாய் உன்னைப் பாக்கிறேன் ஒன்று கேட்கிறேன்...’ என்ற பாடல் மெல்லிசையால் வருடியது.
                     
                       ‘இதயமே’ படத்தில் ‘பொன் மேகங்கள்...’ என்று தொடங்கும் இவரது வரிகளை பிரசன்னாவும் அனுராதா ஸ்ரீராமும் சிலாகித்துப் பாடியிருந்தார்கள்.

                        ‘லுக்’ படத்தில் தேவா இசையில், ‘டியூஷன் சொல்லித்தர வா...’ என்கிற பாடலை சிருஷ்ணராஜும் ரேஷ்மாவும் பாடினார்கள்.

                       ‘காதல் எஃப் எம்’, என்னவோ பிடிச்சிருக்கு, ‘வணங்காமுடி’ என மணவையின் பாடல்களைச் சுமந்த படங்கள் வந்து கொண்டிருந்தன.  ‘வணங்காமுடி’யில் தேவா இசையில் இவர் எழுதிய ‘வெடக்கோழி நான் விருத்தாசலத்து வெடக்கோழி, கறிக்கோழி நான் ராத்திரி கூவுற கறிக்கோழி...’ செங்குத்து இதயத்தையும் சரித்துவிடும் குத்தாக அமைந்தது.

                        நாடகம், பத்திரிகை, பாடல் என இருந்த மணவை பொன். மாணிக்கத்தை சினிமா இயக்குனராக்கும் காலமும் கனிந்துவிட்டது.  இவரது புத்தகங்களைப் படித்த பல படைப்பாளிகளும் ‘சிறந்த திரைக்கதைக்கான காட்சிகள் இங்கே குவிந்து கிடக்கின்றன’ என்று சாட்சி சொன்னார்கள்.  சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மணவையின் இயக்குநர் உற்சாகமாக எழுந்திவிட்டார்.

                         மாட்டு வியாபாரியின் மகன் நாயகம், முறுக்க வியாபாரியின் மகள் நாயகி என்ற பின்னணியில் ‘ஐந்தாம் வேதம்’ என்ற பெயரில் படம் இயக்க தயாராகிவிட்டார்.  மணப்பாறையின் பெருமை சொல்லும் ஒரு பாடலை அந்தப் படத்துக்காக எழுதியிருக்கிறார் மணவை பொன்.மாணிக்கம்.
                                                           
                           * வண்ணத்திரை (19-1-2015)  இதழில் ‘பாட்டுச்சாலை’ப் பகுதியில் நெல்லை பாரதி எழுதி  எங்கள் மண்ணின் மைந்தர்... அன்பு அண்ணன்  மணவை பொன் மாணிக்கம் அவர்களைப் பற்றி வெளிவந்துள்ளது.
                                                                                                      -நன்றி.வண்ணத்திரை.

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.


                         

வியாழன், 1 ஜனவரி, 2015

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!



                இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


   தாலாட்ட நேரமில்லை


மணவை ஜேம்ஸ்




                                     பல்லவி


தாலாட்ட நேரமில்லை... பாலனே எழுந்திடு...
பணிசெய்யப்  புறப்படு...  எழுந்திடு!    புறப்படு...!

             அனுபல்லவி

மனித வடிவில் அவதரித்த
அன்பு வடிவம்  யேசுஅவர்
ஏழைக்கு ஏற்றம் தந்த அந்த
மாட்டுக் கொட்டில் தேவனவர்                              
                                                                                                                                      (தாலாட்ட...

              சரணம்

புன்னகை பூத்தே விழிக்கின்றார்
மானுடம் காக்க இமைக்கின்றார்
புனிதம் மலர வாழ்கின்றார்
குளிரில் குடிலில் இருக்கின்றார்
பாவம் போக்கப் பார்தனிலே
பாமர  னாக   அவதரித்தார்!    
                                                                                                                                      (தாலாட்ட...


மரியின் மடியில் தவழுகின்ற
மன்னன் உலகின் ஒளியல்லவோ?
வாடும் உலகை மீட்க அவர்
வாழும் வழியைக் காட்ட வந்தார்
அன்பை உலகில் விதைக்க வந்த
அவரை வாழ்த்திப் பாடுவோமே....!
                                                                                     
                                                                                                                                    (தாலாட்ட...
                                                                                                                                 
                                                                                                                                 
                                                                
                                                                                                                           

========================================================================

கடலில் ...!


மணவை ஜேம்ஸ்



ஏலே ஏலோ... ஏலேலோ...ஏலே ஏலோ...!
ஏலே ஏலோ... ஏலேலோ...ஏலே ஏலோ...!

              பல்லவி

நீலக்கடல் அலைகளில் நீந்துகின்ற
படகுகளே...யேசுமகன் பிறந்திருக்கான்
துடுப்பசைத்து துள்ளித்துள்ளிப்
படகை  ஓட்டி  வாருங்களே!     
                                                                                                                                  (ஏலே ஏலோ...
   

                                                                     


                                                           
                   சரணம்                                                
         
கடல்மீது நீ நடக்க...
புயலதை நீ அடக்க...
புறப்படு பொன்மகனே
பூமியெலாம் உனைவணங்கும்...!
சின்னவனே சின்னவனே
சேதியென்ன சொல்ல வந்தாய்?
அன்புதனை விதைத்துவிட்டு
பாவங்களை அறுக்க வந்தாயோ?
கானம்பாடும் வானம்பாடி வாழ்த்திபாடுமே...!
                                                                                                                 
                                                                                                                      (ஏலே ஏலோ...                             

                        

அலைஓசை தாலாட்ட
தென்றல்வந்து சீராட்ட
கலங்கரை விளக்காக
நட்சத்திரம் வழிகாட்ட
சந்திரனின் சூரியனின்
மன்னனவன் மண்ணில்வந்தான்...
வேண்டும்வரம் வேண்டிடுங்கள்...
மீண்டும்அவன் தந்திடுவான்...
தங்கமகன் தங்கமீனும் தந்திடுவானே...!    
                                                                                                                                 (ஏலே ஏலோ...
                                                                                                                             

                                                                                                                                  

========++++++++========








                                                                                                       -மாறாத அன்புடன்,
                                                                                                          மணவை ஜேம்ஸ்.