வியாழன், 27 நவம்பர், 2014

வலைப்பூவை செல்போனில் ...!



வலைப்பூவை செல்போனில் 

பார்ப்பதற்கு ஏற்ப மாற்ற...!

 

          அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே...!

                     வணக்கம்.  தற்போது செல்போன்களின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறது.  ஒரே ‘கிளிக்கில் இணையம், சமூக வலைத்தளங்கள் என செல்போனிலேயே எல்லாவற்றையும் செய்து கொள்ளுமாறு ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்படுகின்றன.
                                 


                     வலைப்பூ வலைப்பக்கமானது கணினிகளில் படிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.  அதனால் வலைப்பூவை செல்போனில் பார்க்கும்போது தெளிவாக இட அமைப்புடன் தெரிவதில்லை.
                                                                                        

                                                                  
                      ஆனால்... செல்போன்களின் அபார வளர்ச்சியால் பலரும் இணையதளங்களைத் தேடி... கணினிக்குச் செல்லாமல் செல்போனிலேயே பார்த்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.    வலைப்பூவை செல்போனிலும் பார்ப்பதற்கு ஏற்றபடி அமைப்புகளை அமைத்து விட்டால் பலர் பயனடைவார்கள்.  இதற்கு எந்த மென் பொருளையும் உங்கள் வலைப்பூவில் சேர்க்க வேண்டியதில்லை.
                                                                             
                      பிளாக்கர் சேவையே இதை எளிமைப்படுத்தியுள்ளது.  அதை எப்படிச் செய்வது?
                           


                      கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து பிளாக்கர் டிராப்ட் தளத்தில் உங்கள் கணக்கில் நுழையவும்.

                   http://draft.blogger.com
  
                                                Settings>Email&Mobile  என்ற பகுதிக்குச் செல்லவும். பின்னர்
                                                Show Mobile Template
 என்பதற்கு நேராக உள்ள
                                                Yes.  On mobile devices.
                                                Show the mobile
                                                version of my     Template  
என்பதைத் தேர்வு செய்து சேமித்துக் கொள்ளவும்.

                   செல்போனில் உங்கள் தளம் எவ்வாறு தெரியும் என்பதை அறிந்துகொள்ள அருகிலேயே உள்ள
                    Mobile Preview  
என்ற பட்டனை கிளிக் செய்து பார்த்துக் கொள்ள முடியும்.

                  தினத்தந்தியில் 10.11.2014 அன்று கம்ப்பூட்டர் ஜாலம் பகுதியில் இடம் பெற்ற செய்தியைத் தந்துள்ளேன்... 
                  முயன்று பாருங்களேன்...!
எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றும் அறியேன்...!!

                                                                                                     ( நன்றி- தினத்தந்தி)


-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.


திங்கள், 24 நவம்பர், 2014

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்... காந்தி என்றார்...!




கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்... காந்தி என்றார் தோழா!



கனவிலே வந்தயெம் காந்தி பிரானே!
நனவிலே நான்விடை கூற - மனதிலே
கில்லர்ஜீ வந்தார்! கொடுப்பாய் விடையென்றார்
இல்லையென் பேனோ இனி?


                                                                   
    

                                                           

கரந்தை   ஜெயக்குமார்   கண்ணிலே   காந்தி

பரந்துபட்ட சிந்தனையைப் பாருக்குச் சொல்லிடவே...

தில்லை அகத்தாரும் தீரமுடன் கேட்டிடவே...

எல்லையில் லாதவர் எம்பெருமான் அண்ணலவர்

கேட்டிட்ட நல்லபல  கேள்விக்குத் தான்பதிலைத்

தீட்டினேன் நன்றி யுடன்! 

கனவில் வந்த காந்தி...ஜி! கேட்ட (கில்லர்... ஜி அன்று) கேள்விக்குப் பதில்: 

                                                       
                                                     


நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?


      மகானே!  நீயே முட்டி மோதிப் பார்த்து முடியாமல் போனதால்தானே இந்தக் கேள்வி கேட்கிறாய்...?  உனக்குத்தான் தெரியுமே மறுபிறவி ஒன்று இல்லையென்று... தெரிந்து கொண்டே தெரியாது போல் கேட்கிறீரே...! இந்த நக்கல்தானே வேணாங்கிறது...!

   “கேட்ட கேள்விக்கு பதில் என்ன?...நீ மறு பிறவியில்...”   அண்ணல் மகாத்மா காந்தி ஆள்காட்டி விரலை ஆட்டி ஆட்டிக் கேட்டார்.
                                                                                                       
                                   


   “.....................................................நான் பயந்து கொண்டே மெளனமாக நானும் ஆள்காட்டி விரலை ஆட்டாமல் மெல்ல அவரைப் பார்த்து நீட்டினேன்.
          

ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?


             இப்பக் கேட்டாயே ஒரு கேள்வி...சரியான கேள்வி...தாத்தா...!  கேள்வியில் சின்ன சந்தேகம்... இந்தியாவின் ஆட்சியாளனாகவா...?  இல்லை தமிழ்நாட்டின் ஆட்சியாளனாகவா?
                                                       
              நீ அப்பவே நினைத்திருந்தால் ஆட்சியாளராக வந்திருக்கலாம்... நீதான் ஆட்சி அதிகாரத்தை விரும்பாமல் வெளியிலேயேயிருந்துவிட்டாய்..!  நீமட்டும் தப்பித்துக்கொண்டு என்னை மாட்டிவிடப் பார்க்கிறாயே...இது முறைதானா?...என்ன முறைத்துப் பார்க்கிறாய்...?  கேட்ட கேள்விக்குப் பதில் என்ன என்கிறாயா?  மோடி மஸ்தான் வேளையெல்லாம் என்னிட்ட வேண்டாம் என்கிறாயா?  சோனிதிட்டாமில்லாம ஒரு நல்ல திட்டமாச் சொல் என்று கேட்கிறாயா?                                                               

                                                                                                            
                                                    
       ம்...ம்... இப்படிச் செய்யலாமா?           இந்தியாவிலுள்ள எல்லாக் கோவில்களிலும்...ஒவ்வொரு இல்லங்களிலும் இருக்கக்கூடிய தங்கத்தையெல்லாம் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடவேண்டும்......ஒரு பவுன் தங்கம் கூட இல்லத்தில் யாரிடமுடமும் இருக்கக்கூடாது என்று சட்டம் போட்டு ... உடனடியாக நடைமுறைப்படுத்தி ... தங்கத்தையெல்லாம் அரசுக் கஜனாவிற்கு கொண்டு வந்திடுவோம்...வந்திடுவோம் என்ன வந்தாச்சு அண்ணலே...(வேண்டுமானால்... தவிர்க்க முடியவில்லையென்றால்... விருப்பப் பட்ட ஆபரணங்களை இரும்பிலே செய்து மஞ்சள் முலாம் பூசிவேண்டுமானால் அணிந்து கொள்ள உள் ஒதுக்கீடாக ஒரு தனிச் சட்டம் இயற்றிக்கொள்ளலாம்) அப்புறம் என்ன செய்யலாம்?...நீதான் சொல்லனும்...!

                   என்ன ஆச்சர்யம்... பணக்கார நாடுகளிடையே நாம பெற்ற இடத்தைப் பார்த்தாயா?! என்ன?நீயே மிரண்டு விட்டாயாவல்லரசு நாடுகள் எல்லாம் நம்மிடம் கையேந்தி நிற்கிறதா?  நிற்கட்டும்...நிற்கட்டும்...! முதலில்....இந்திய தேசிய நதிகளையெல்லாம் இணைத்து விவசாயத்தை முதலில் முன்னேற்றமடையச் செய்வோம்....நீதானே சொன்னாய்... கிராமங்களால்தான் இந்தியா வாழ்கிறது’ என்று... முதலில் கிராமங்கள் வாழட்டும்..... என்ன தாத்தா நா சொல்றது சரியா?  இல்லையா?

        “  தமிழ்நாட்டப்பத்தி யோசிக்கவே மாட்டியா?
        
        ‘தமிழ்நாடென்ன செய்யதது நமக்கு...நீ என்ன செய்தாய் அதற்கு?
-என்று யோசிக்கணுமா...!  நாம மட்டும் யோசிச்சு....?  நாட்டு மக்கள் யோசிக்கமாட்டேங்கிறாங்களே....! 
          ஆமாம்...! இன்னாள் சட்டமன்றமா?       முன்னாள்சட்டமன்றமா?
                     
                                   


          

     இலவசங்கள் இனி என்ன வேண்டுமென்றாலும்... எவ்வளவு வேண்டுமென்றாலும் ஆட்சியாளர்கள் கொடுத்துக்கொள்ளலாம் என உடனடியாக ஆணை பிறப்பிக்கப்படும்.  ஒரே ஒரு சின்ன நிபந்தனை...ஒரு ரூபாய் கூட அது மக்களின் (வரிப்) பணமாக  இருக்கக்கூடாது என்பதுதான்.... (அரசியல்வாதிகளின் சொத்தில் இருந்துமட்டும்....வேறெதுவும் இல்லை.

         (குறிப்புமீன் பிடிக்க பயிற்சி வகுப்பு எடுத்து கற்றுத் தரப்படும்.  மீன் இலவசமாக யாருக்கும் இனிமேல் கொடுக்கப்பட மாட்டாது)
      

இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?


                இதற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால்...நீங்கள் இந்தியர்களாக இருப்பதால்...யார் யார் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களோ...அவர்களிடமும் தங்கநகைகள் இருக்கக்கூடாது என்பது கண்டிப்பாகும் என்று அறிவித்து விடுவோம்...அப்புறம் யாருடைய எதிர்ப்பு இருக்கப்போகிறது...?

 முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

                                                                 
        என்ன தாத்தா இப்படி கேட்டுப் விட்டாய்...பெற்றோர்கள் சேர்த்த சொத்தோபணமோ... பூர்வீகச் சொத்தோ (இப்பொழுது இருக்கும் முதியவருக்கு இது பொருந்தாது) பிள்ளைகளுக்கு அது கண்டிப்பாக அதில் உரிமை கொண்டாட முடியாது... முதியவர்கள் அவர்கள் விருப்பப்படி மகிழ்ச்சியாக இருந்து  அவர்களேதான் செலவு செய்து கொண்டு வாழ வேண்டும்....!

         பிள்ளைகளோ...பேரன் பேத்திகளோ....அவர்கள் உழைத்த உழைப்பில்தான்...வாழவேண்டும்...உழைத்துத்தான் வாழ வேண்டும்...  முதியோர்களுக்கு இந்தச் சலுகை உடனடியா அமலுக்கு வருகிறது.


அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?


                     பாபுஜீயைப் போல அகிம்சைவாதியாக... தன்னலமில்லாத்... தியாகியாக...  இருக்க முடியாது என்பதால்...

         மக்களுக்கு இம்சை அரசனாக இல்லாமல் இருக்க ஒரு திட்டம்... அரசியல்வாதிகள் ஊழல் செய்யலாம். அது ஒன்றும் தவறில்லை என்று ஒரு திட்டம் போட்டு அரசியல்வாதிகள் நினைத்தபடி திருடிக்கொள்ள இடம் அளிக்கப்படும்.  ஆனால் ஒரு சின்ன நிபந்தனைதான்... ஒவ்வொரு ஊழல் செய்கின்ற பொழுதும் அவரின் உடம்பிலிருந்து (குறைந்தது எந்த ஓர் உறுப்பையாவது...எது என்பது அவரின் சொந்த விருப்பத்திற்கு விடப்பட்டு )வெட்டி எடுக்கப்படும்.  அதற்குரிய மருத்துவச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்.  என்ன இருந்தாலும் நாட்டுக்காக உழைத்திருக்கிறார்கள் இல்லையா?  


                                                            

மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?


         இப்படி மொட்டையாக கேட்டால் எப்படி...அரசியல்வாதிகளுக்கு நாம் போடும் மதிப்பெண்களைக் கேட்கிறீர்களா...?  ஒரு தடவை உறுப்பு வெட்டப்பட்டவர்களுக்கு மேல் முறையீடு செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது!
                                   

         ‘நான் அதைக் கேட்கவில்லை.... மாணவர்களுக்கு போடும் மதிப்பெண்களைக் கேட்டேன்’ என்கிறீர்களா?...இப்படி விளக்கமாக கேட்டால்தானே புரியும்...!

        
         உங்களுக்குத் தெரியாதா?  ஒன்பதாம் வகுப்பு வரை மதிப்பெண்களே மாணவர்களுக்குக் கிடையாது.... சி.சி.இ. மெத்தேடு... படிப்படியாக இது மேலும் மேலும் வளர்ந்து.... படிப்பில் உயர்கல்வி வரைக்கும் செல்லப் போகிறது...!  மதிப்பெண்கள் இருந்தால்தானே மேல் நீதிமன்றங்கள் போவது...அதற்கான வாய்ப்பேயில்லை! 

         உலகத்தரத்திற்குக் கல்வியை உயர்த்தப் போகிறோம்.  அயல்நாட்டுடன் இதற்கான வரைவு ஒப்பந்தம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

            

விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும் இருக்கின்றதா?


                                                                


       விஞ்ஞானிகள் யாரும் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்படும்.  இந்திய நாட்டின் செலவில் படித்து அறிவியல் அறிஞர்களாகி வெளிநாடு செல்வதா?  அண்ணலே ! வெளிநாட்டுத் துணியையே உடுத்தக்கூடாது என்று போராடியவராயிற்றே... வேண்டுமானால் அவர்கள் எந்த நாட்டிற்கு வேண்டுமானலும் சுற்றலா சென்று வர ஒரு மாதம் மட்டும் அனுமதி வழங்கப்படும்.  இங்கு ஊதியம் குறைவாக இருக்கிறது என்ற கோரிக்கை வந்தால் பரிசீலிக்கப்பட்டு( இங்குதானே படித்தார்கள்) ....குடியரசுத் தலைவரின் ஊதியத்தை விட சிறிது குறைத்து வேண்டுமானல் ஊதியம் வழங்க சிபாரிசு செய்யப்படும்.     

இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?

                                                                       
              இதை எனக்கு முன்னால் வந்தவர்கள் செய்யாத்தால் எனக்கு பின்னால் வருபவர்கள் செய்வார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் அல்லவா அண்ணலே!   நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இதைவிட நன்றாக செய்வார்கள்... ஏன் செய்யமாட்டார்களா?
மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
           
            மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக...  என்றால்......
 என்றால்......

                       இந்தியாவில்தான் உலகத்திலேயே அதிகமான இளைஞர்களைக்கொண்டுள்ள நாடு நம் நாடுதான்...!  இப்பொழுது  35 கோடியே 60 இலட்சம் இளைஞர்கள்  இந்தியாவில்தான் இருக்கிறார்கள்...!
                                                                                                 

    
       உனக்குத் தெரியுமா?  உலகிலேயே 10  முதல் 24 வயதுள்ளவர்கள் தற்போது அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கூட 26 கோடியே 90 இலட்சம் பேர்தான்...    
             அமெரிக்காவில் 6 கோடியே 50 இலட்சம் பேர்தான் இருக்கிறார்கள்...அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள மனித வளம் மிகுந்த நாடு நம்நாடுதான் என்பதில் பெருமிதம் கொள்வோம்....என்ன மகிழ்ச்சியாக இருக்கிறதா?


    நூறு இளைஞர்களைத்தான் விவேகானந்தர் கேட்டார்... இப்பொழுது பார்த்தாயா? ஆனால் ஒரே ஒரு விவேகானந்தர் இருந்தாலே போதும்!  நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்!

       


எல்லாமே நீ சரியாக சொல்வது போல் இருக்குஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?

                                                                                       
       எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கா! ... போலத்தானே இருக்கு...! அப்ப சரியா இல்லையா?  என்ன... சரியா இருக்கு...ஆனா சரியா இல்லையா...?  வரும்...ஆனா வராதா?  வலைத்தளத்தில் பதிவர்களுக்குப் பதில் சொல்வதைப்போல நீ சரியாக சொல்வது போல இருக்கு என்கிறீர்களே!  தாங்கள் வலைத்தளத்தைத் திறந்ததைச் சொல்லவே இல்லையே....! தங்களின் வலைத்தள முகவரியைக் கொடுத்தால்தான் என்ன தாத்தா...தா...தா...!

        என்ன...! நிறையப்பாவங்கள் செய்து விட்டதால் எனக்கு வலைத்தள முகவரி கொடுக்க முடியாதா?

       என்ன மானிடப்பிறவியும் கொடுக்க முடியாதா?  எவன் சொன்னான்என்ன இறைவன் சொன்னானா?  

       எங்கே இருக்கிறான்... இழுத்து வந்து என் முன் நிறுத்துங்கள்...! அவனை நான் கேள்வி கேட்க வேண்டும்...?
                                                                   
        எங்கே ஒழிந்து கொண்டு இருக்கிறாய்...நீ உண்மையில் உயிரோடு இருந்தால் முதலில் வெளியே உன்னைக் காட்டு....! நீ இருப்பதாக நீயே சொல்லாத பொழுது... நீ இருப்பதாக இங்குள்ளவர்கள் சொல்வது நியாயமா?  நீ இடைத்தரகர்களாக இராம்பால் போல யாரையாவது சாமியார்களை நியமித்திருக்கின்றாயா?  உன் பேரைச் சொல்லி  உழைக்காமலே கொழுக்கிறார்களே...! பாமர ஏழைகள் உழைத்த பணத்தைக் கொடுத்து ஏமாந்து போகிறார்கள்.... நீ கூட எங்களைப்போல மனிதப்பிறவி எடுத்தாகத்தானே இங்குள்ளவர்கள்  சொல்கிறார்கள்...? இப்பொழுது என்ன பிறவியை நீ எடுத்திருக்கிறாய்... அதே பிறவியை நானும் எடுக்கச் சம்மதமா?!

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.


புதன், 19 நவம்பர், 2014

“வீரமாமுனிவர் வளர்தமிழ் மன்றம்”



                 
தமிழ் வளர்த்த

இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவர் பிறந்தநாள்  8-11-2014 அன்று




“வீரமாமுனிவர் வளர்தமிழ் மன்றம்


திருச்சி, எங்கள் ஆர்.சி.மேனிலைப்பள்ளியில்

தொடங்கப்பட்டது.

தாளாளர் அருட்திரு.A.சூசைராஜ் அடிகளார் அவர்கள்



அறையைத் திறந்து வைத்தார்.







தலைமையாசிரியர் முனைவர்.எம்.குணசேகர் அவர்கள்

. குத்துவிளக்கு ஏற்றினார்.






தமிழாசிரியர் திரு.சு.குணசேகர்
 நிகழ்ச்சியைத் தொகுத்து  வழங்கினார்..

***********************************






தமிழாசிரியர்திரு.இ.மனுவேல்ராஜ்  கவிதை படித்தார். 

“வெளிச்சம் ஏற்றிய வெளிநாட்டு விளக்கு

வீரமா முனிவன்-
இத்தாலித் தாய் பெத்த பிள்ளை
இந்தியத் தாய்க்குத் தத்துப் பிள்ளை
தமிழ்த் தாயின் முத்துப் பிள்ளை...!

வீரமா முனிவன்-
தமிழக இயேசு சபைக்கு விடியல்
தமிழன்னைக்குப் புதையல்...!

காவி கட்டி ஊர் சுற்றிய
காவிய நாயகனே...!
மன்னர்களுக்குத் துதி பாடிய காலத்தில்
மரியன்னைக்குத் துதி பாடியவன் நீ...!
வள்ளல்களைப் புகழ்ந்த தேசத்தில்
வளனாரைப் புகழ்ந்தவன் நீ...!

‘தேம்பாவணி–நீ
தமிழன்னையின்
தாமரைப் பாதங்களுக்கு
மாட்டிவிட்ட தங்கக் கொலுசு...
படிக்கின்ற போதெல்லாம்
பறிபோகுது மனசு...!

உமக்குப் பிடித்தது எல்லாம்
இலக்கணம்...
இறுதிவரை-
உமக்குப் பிடிக்காதது தலைக்கனம்...!
நெற்களஞ்சியங்கள்
நிறைந்த மண்ணில்
சொற்களஞ்சியங்களை
நிரப்பியவன் நீ...!
தங்கத் தமிழை
தரணியெங்கும் பரப்பியவன் நீ...!

நீ கற்றுத் தேர்ந்த
பதின்மூன்று மொழிகளும் உடலானது...
தமிழ்தான்-
உனக்கு உயிரானது...!

‘கமல்ஹாசன்கலைஞானி
வீரமாமுனிவர் தமிழ்ஞானி
இருவரையும் வளர்த்தவள் ‘கலைவாணி
இருவருமே-
தமிழர் நெஞ்சங்களைத் திருடிய ‘களவாணி



கமல்ஹாசன்-
திரையில் தமிழ் வளர்த்தார்...
வீரமாமுனிவர்-
திரைகடல் தாண்டி வந்து
தமிழ் வளர்த்தவர்...!

ஆனால்-
வீரமாமுனிவர் இத்தாலியைத் தவிர
எத்‘தாலியும் அறியாதவர்...!

வீரமாமுனிவன்-
தமிழன்னை தன் வீட்டில்
ஏற்றி வைத்த
வெளிநாட்டு விளக்கு...
அவரது பணிக்கு
இல்லை கணக்கு...!

வீரமா முனிவனே...!
நீ-
இருந்த வரை தலையில்
பாகை சூடினாய்...
இறந்த பிறகு-
தமிழர் நெஞ்சில் வாகை சூடினாய்...!
                                                                  *********************

                                                                     
                                                                           
                            
            வேதமாமுனிவர் பற்றிய வாழ்க்கை வரலாற்றை திரு.J.P.பிராங்க் முதுநிலை ஆங்கில ஆசிரியர் பேசுகையில் ...

            இத்தாலி நாட்டு வெனிஸ் மாகாணத்தில் மான்டுவர் மாவட்டத்தில் காஸ்த்திக்கிலியோன் என்ற சிற்றூரில் டான் கொண்டாப்போ பெஸ்கி, எலிசபெத்து ஆகியோரின் மகனாக்க் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி 1680 ஆண்டு நவம்பர் திங்கள் 8 ஆம் நாள் பிறந்தார்.

            1710 தமிழகத்திற்கு வந்து மதுரையில் காமநாயக்கன்பட்டியில் இயேசு சபையைத் சேர்ந்த குருவான இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் மறைப்பணியைப் பரப்பத் துவங்கினார். இத்தாலியம், கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், போச்சுகீசு, தமிழ், தெலுங்கு சமஸ்கிருதம், பாரசீகம், இந்துஸ்தானி என பத்து மொழிகளை அறிந்திருந்தார்.  தமிழ்நாட்டில் அனேக கிறிஸ்துவ தேவ ஆலயங்களை அமைத்த பெருமை இவரைச் சாரும்.

                                
            இவர் 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறிஸ்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித ஜோசப்பின் வரலாற்யையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப ‘தேம்பாவணிஎன்ற பெருங்காவியமாக இயற்றினார்.

            முதன் முதலாக தமிழ்மொழியில் ‘சதுரகராதியை நிகண்டுக்கு ஒரு மாற்றாக உருவாக்கினார்.  அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம்.  புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும்.  மேலும் குறில், நெடில் விளக்க ‘ரசேர்த்தெழுதுவது வழக்கம்.  “ஆ“ என எழுத “அரஎன 2 எழுத்துகள் வழக்கிலிருந்த்து.  (அ;அர, எ;எர) இந்த நிலையை மாற்றி “ஆ,ஏஎன மாறுதல் செய்தவர் இவர்.

               தமிழ்நாட்டில் 37 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில்  தமது 67ஆவது வயதில் இயற்கை எய்தினார்.  அங்கு அவரை அடக்கம் செய்த கல்லறையும் தெரியாத நிலையில் இருப்பது தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்தியாகும்...
என்று அவரின் வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.           
                                                   
                                                                 
           
            தமிழ் மன்றம் தொடங்கி...தொடர்ந்து செயலாற்ற உள்ளதைப் தலைமையாசிரியர் எம்.குணசேகர் அவர்கள் பெருமையோடு பேசிப் புளகாங்கிதம் அடைந்தார்கள்.

                                                     ************************



                                                                           
                                                                             
                
                               தமிழ் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றி...                                                         முனைவர். உ. ஆரோக்கியசாமி அவர்கள்  விளக்கிக் கூறும் பொழுது...தினமும் செய்தித்தாள்கள்,(தி இந்து(தமிழ்...தினமணி நாளிதழ்) வார இதழ்கள்,(புதிய தலைமுறை, புதியதலை முறை கல்வி, முக்கியமான இலக்கிய நூல்கள், அறிவியல் சம்மந்தமான நூல்கள், போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயனுடைய நூல்கள் அனைத்தும் அறையில் இருக்கும்.  ஆண்டு தோறும் ஒரு தமிழறிஞரின் பிறந்தநாள் விழாவும், ஒரு சமயவிழாவும், (தீபாவளி, இரம்ஜான், கிறிஸ்மஸ்), தமிழர் விழாவும் (பொங்கல்) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அப்பொழுது போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாணவர்கள் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று பேசினார்.

            
            rcveeramamunivar என்ற முகவரியில் முகநூல்  தொடங்கப்படுகிறது என்றும்,
rcveeramamunivar@gmail.com   என்ற மின்அஞ்சல் முகவரியும் தொடங்கப்பட்டுள்ளது.தகவலையும்...அனைவரும் அதில் தங்கள் படைப்பை இடம்பெறச் செய்து பார்முழுக்க பார்த்து பயனடையவும்...தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு இந்த தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சுட்டிக்காட்டிப் பேசினார்.

                                                                    
                              கட்டுரைப் பேச்சுப்போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு, தாளாளர் தந்தை அவர்கள் மன்றம் அளித்த  நல்ல நூல்களைப் பரிசாகக் கொடுத்து....                                          

                                                                            


                               மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி...இதைப் பயனுள்ளதாக ஆக்குவது மாணவர்களாகிய உங்களின் கைகளில்தான் உள்ளது என்று கூறி வாழ்த்தினார்.
                                                  ************************



                                                                      


                                                                      
             தமிழ்மன்றம் தொடங்கப்  பெருமுயற்சி எடுத்து அதில்  ‘வெற்றிகொண்டான்’ தமிழாசியர் திரு.ஜான் பிரிட்டோ அந்தோணி அவர்கள் அனைவரையும்  வரவேற்க... அவரை  அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.








                                                                           


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.